கருணாநிதியின் பேனா சாதித்தது என்ன?

-சாவித்திரி கண்ணன்

விருப்பு, வெறுப்பின்றி கருணாநிதியின் படைப்புகளை மதிப்பீடு செய்யலாம்! இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடம் என்ன? திரைத்துறை சாதனையாளர்கள் வரிசையில் கருணாநிதியின் இடம் என்ன? அவரது படைப்புகளில் காலத்தால் மறையாத இலக்கியம் என்று சொல்லத் தக்கவை என்ன..? 

கருணாநிதிக்கு கடலுக்குள் பேனாச் சின்னம் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது!

திராவிட இயக்க படைப்பாளிகளில் கருணாநிதியின் இடம் என்ன? பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, சி.பி.சிற்றரசு, எஸ்.எஸ்.தென்னரசு ,ஏ.கே.வில்வம், ராதாமணாளன், டி.கே.சீனிவாசன்.. என்ற வரிசையில் இவர்களை விஞ்சியவராக கருணாநிதியைச் சொல்ல முடியுமா? காலவெள்ளத்தில் கரைந்து போக முடியாத படைப்பாளியாக கருணாநிதியை எவராவது ஒத்துக் கொள்வார்களா? இன்றைய இளம் வாசகர்கள் எத்தனை பேர் கருணாநிதியின் படைப்புகளை  தேடி விரும்பி வாங்குகின்றனர்!

பெரியாரின் பேனா தமிழ்நாட்டின் தலை எழுத்தை திருப்பிப் போட்டது என்பதற்கு இன்றும் அவர் எழுத்துக்கள் தீவிரமாக வாசிக்கப்படுவதே சாட்சியாகும்! வார்த்தை ஜாலங்களிலோ, மொழி ஆளுமைத் திறனிலோ பெரியார் கவனம் செலுத்தியவரல்ல. யாரும் பேசத் துணியாத சமூக பிரச்சினைகளை உண்மையான அக்கறையோடு அணுகினார். அந்த உண்மை தான் அவரது எழுத்தின் மாபெரும் வலிமை ஆயிற்று! சமூக மாற்றங்கள் சிலவற்றை சாதித்தது!

பாரதிதாசன் பேனா தமிழ்ப் பற்றையும், சுயமரியாதை உணர்வையும் ஆழமாக விதைத்தது!

பெரியாரும், அண்ணாவும், பாரதிதாசனும் உருவாக்கிய பகுத்தறிவு சித்தாந்த இலக்கிய உணர்வுகளை உள்வாங்கி, கருணாநிதி பேனா பல வெற்றிகரமான நாடகங்களை, திரைக் கதை வசனங்களை எழுதினார்.

அவரது திரைக் கதை வசனங்கள் கூர்மையானவை!

மொழி ஆளுமை கொண்டவை! வசீகரமானவை!

ஆனால், ஒரு திரைப்படம் காலம் கடந்தும் நிலைபெறுவதற்கு வசனம் ஒன்றே போதுமானதல்ல! கதாபாத்திரங்களின் யாதார்தத்தை மீறிய தூக்கலான வசனங்களை காலப் போக்கில் மக்கள் புறந்தள்ளிவிட்டனர். கதையின் இயல்புக்கு இடையூராக வசனங்கள் ஆட்சி செலுத்தும் நிலைமை விரைவில் காலாவதியாகிப் போனது!

திரைக்கதை வசனங்களில் சாதனை படைத்தவரா கருணாநிதி என்றால், 1966க்கு மேல் கருணாநிதி எழுதிய மிகப் பெரும்பாலான படங்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டவையாக, கவனம் பெறாமலே திரை அரங்குகளை காற்றாட வைத்தன! அவர் திரைக்கதையில் வெளியான 75 படங்களில் 30க்கும் குறைவானவையே மக்கள் கவனம் பெற்றவை! 1967 தங்கத் தம்பி, வாலிப விருந்து தொடங்கி 2010 ல் வெளியான உளியின் ஓசை, பொன்னர் சங்கர் வரை அவர் திரைக்கதை வசனம் எழுதிய சுமார் 40க்கு மேற்பட்ட படங்கள் படுதோல்வியைத் தழுவின! ஆக, இந்த வகையில் பார்த்தாலும் ஆயிரம் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆரூர்தாஸ் போன்றவர்களுடன் கூட கருணாநிதியை ஒப்பிட முடியாது.

கருணாநிதி 15 நாவல்கள் எழுதியுள்ளார். 15 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

இந்த நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டா? என்றால், இவற்றில் ஒரு சில மட்டுமே தேறும். காரணம், நாவலாகட்டும், சிறுகதையாகட்டும் அவற்றில் அவர் தன்னுடைய மொழி வித்தகத்தை வெளிப்படுத்த எத்தனிப்பதால் அவற்றின் அழகும், அமைவும் கெட்டுவிடுகின்றன! மேலும், அவரது கருத்திற்கு வலு சேர்க்கும் பிரச்சார தொனி எழுத்துகள் அவரது அரசியலுக்கு வளம் சேர்த்தனவே அன்றி, இலக்கியத்திற்கு வளம் சேர்க்கவில்லை! புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன், பொன்னீலன்.. போன்ற சமகால இலக்கியவாதிகள் வரிசையில் இடம் பெறத்தக்கதல்ல கருணாநிதியின் நாவல்களும், சிறுகதைகளும்!

அவரது சிறுகதை ஒன்று காமத்தின் வேகத்தை அடக்க முடியாத தகப்பன் மகளையே புணர்வதாக எழுதப்பட்டு கடும் எதிர்ப்புகளை பெற்றது. பெண்ணின் உடலை, ‘மேடு, சமவெளி, பள்ளம்’ அவர் வர்ணித்து எழுதியது பெண்களின் கடும் எதிர்ப்பை பெற்றது. சங்கத் தமிழில் ‘பல்லியின் சொல்லுக்கு பலனுண்டு’ என எழுதி பகுத்தறிவாளர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டார்!

அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ எனப்படும் தன் வரலாறு, புனைவுகள் நிரம்பிய பொய்களை கொண்டதாகும். தன்னைத் தானே ‘பில்டப்’ செய்து கொண்டு, தனி நபர் துதிபாடும் அரசியலுக்கு வலு சேர்க்கும் எழுத்தாகும்!

அவரது கவிதைகள் எனப்படுபவை வசனக் கவிதை வகையில் சேர்க்கத்தக்கவையே அன்றி, காலத்திற்கும் நிற்கும் பாரதியார், கண்ணதாசன் கவிதைகள் போன்றவையல்ல!

அவரது குறளோவியம் கவனிப்பாரற்று போயிற்று! திருக்குறள் தெளிவுரை விரும்பும் யாருமே இன்றைக்கும் டாக்டர் மு.வரதராசனார், வ.உ.சிதம்பரனார், தேவநேயப் பாவாணர், வ.சு.மாணிக்கம், திருக்குறள் வீ.முனிசாமி போன்றோர் உரைகளையே வாங்கி படிக்கின்றனர்.

அவரது தொல்காப்பியப் பூங்கா அது வெளிவந்த காலத்திலேயே கடும் விமர்சனங்களை சந்தித்தது! இது பற்றி அந்தக் காலத்திலேயே நான் புலவர் நக்கீரன் அவர்களை பேட்டி எடுத்து எழுதினேன். ”மொழி இலக்கணம் பற்றி சொல்லும் தொல்காப்பியத்தில் இலக்கணமே அறியாத தற்குறியாக கருணாநிதி வெளிப்பட்டார்” என்பதே நக்கீரன் வைத்த குற்றச்சாட்டு! உதாரணத்திற்கு, ‘அவை’ என்ற வார்த்தையே பன்மை தான்! ஆனால், கருணாநிதி ‘அவைகள்’ என எழுதினார்! அதே போல பன்மை வர வேண்டிய இடங்களில் ஒருமை எழுத்துகளை எழுதினார்! உதாரணத்திற்கு ‘பூக்கள் மலர்கின்றன’ என சொல்ல வேண்டிய இடத்தில் ‘மலர்கிறது’ என்பது பிழையாகும். ‘பன்னிரண்டு’ எனக் குறிக்க வேண்டிய இடத்தில் ‘பனிரெண்டு’ என எழுதினார். ‘நாள்கள்’ என்பதற்கு மாற்றாக ‘நாட்கள்’ என எழுதினார்! நாட்கள் என்றால், ‘அன்று இறக்கிய கள்’ என்று அர்த்தமாகும்! இது மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஒற்றுப் பிழைகளும் அந்த நூலில் இருந்தன!

கன்னியாகுமரியில் 134 அடி உயரத்தில் இருக்கின்ற பாறையின் மேல் தான் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பப்பட்டது. ஆகவே அது எதிர்ப்பை பெறவில்லை.

ஆனால், சென்னையில் கடலுக்குள் பாறைக் கற்களை கொட்டி செயற்கையாக கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைப்பது என்பது – அதுவும் திருவள்ளுவர் சிலையை விட மூன்று அடிகள் கூடுதலாக வைப்பது என்பது – திருவள்ளுவரை விட கருணாநிதியை உயர்வானவராக காட்டும் முயற்சியாகும்! வள்ளுவரை மிஞ்சியவராகவோ அல்லது அவருக்கு இணையான படைப்பாளியாகவோ கருணாநிதியை சித்தரிக்க முயல்வது அகந்தையிலும் அகந்தையாகும். கருணாநிதி  தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். அவரது எழுத்துகள் திமுக என்ற அரசியல் கட்சிக்கு வலு சேர்த்து, அவர் அரசியலில் கோலோச்ச உதவியது என்பதை மறுக்க முடியாது.

எடுத்தற்கெல்லாம் திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்கும் பாஜகவினர் இதில் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்? எப்படி மத்திய பாஜக அரசின் சுற்றுச் சூழல் அமைப்பு இதை அனுமதிக்கிறது! சென்னை கடற்கரையை வருங்காலத்தில் மிகப் பெரும் சுற்றுலா தளமாக்கி அங்கேயுள்ள மீனவக் குப்பங்களை காலி செய்துவிட்டு அம்பானிகளும், அதானிகளும் ஏராளமான ரிசார்டுகளை உருவாக்கி கொழுக்கவே, ஸ்டாலினின் பேராசைக்கு பாஜக துணை போகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time