பிரபாகரனை உயிர்பிப்பதின் பின்னணி என்ன?

-சாவித்திரி கண்ணன்
National Leader of Tamil Eelam Hon. Velupillai Pirabaharan

நெடுமாறன் ஏன் இப்படிப் பேசுகிறார்? நெடுமாறனை பேச வைத்தது யார்? அவர்களின் நோக்கம் என்ன? யாருடைய தேவைக்கு பிரபாகரன் மீண்டும் உயிர்பிக்கப்படுகிறார்? இலங்கை பிரச்சினையில் பாஜக அரசின் தந்திரோபாயங்கள் என்ன?

2009 ஆம் ஆண்டு நடந்த உக்கிரமான போரின் இறுதியில் சமாதானத்திற்கு அழைக்கப்பட்டு கொடூர முறையில் கொல்லப்பட்டனர் விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர்களும், அவர்களை சார்ந்திருந்த சுமார் 40,000 மக்களும்! இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் அழிவைத் தடுக்க அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்ற தகவல்கள் அன்று வெளிப்பட்டன!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை சர்வதேச சமூகத்திற்கு முன்னணி ஊடகங்கள் புகைப்படங்கள் வழியே படம் பிடித்து காண்பித்தனர். இலங்கை அரசு இறந்தவர் பிரபாகரன் என்பதற்கான டி.என்.ஏ.பரிசோதனைகளை வெளியிட்டது! இப்படியாக பிரபாகரன் இழப்பு உலக அளவில் உறுதிபடுத்தப்பட்ட ஒரு விவகாரமாகும்!

இதன் பிறகும் அன்றே தமிழகத்தில் சிலர் பிரபாகரன் தப்பித்து பாதுகாப்பாக ஓரிடத்தில் இருப்பதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். விடுதலைப் புலி இயக்கத்திற்கு உலகம் முழுமைக்கும் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன! சில கப்பல்கள் இருந்தன! அவை பல தொழில் நிறுவனங்களில் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு இருந்தன! இவற்றை நிர்வகிப்பவர்கள் தாங்களே அதை அபகரித்துக் கொண்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் முதலில் இது போன்ற ஒரு மாயத்தோற்றம் கட்டமைக்கப்பட்டது. பிற்பாடு இந்த தோற்றம் உடைபட்டது. அந்தச் சொத்துக்கள் பலவாறாக பலரால் சூரையாடப்பட்டன! அதை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை. விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்கள் சிலரே சிங்கள அரசுடன் ஒத்திசைந்து பல ஆதாயங்களை அடைந்தனர்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் சில முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் இயக்கங்களுக்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து தந்து வந்த ஊக்கத் தொகை அவர்களின் அழிவுக்குப் பிறகு கொஞ்சம்,கொஞ்சமாகத் தடைபட்டது! ஆகவே, பிரபாகரன் இல்லை என்பதை ஒத்துக் கொள்வதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை என்ற சூழல் உருவானது!

பிரபாகரன் ஏன் உயிரோடு இருக்க முடியாது?

பிரபாகரன் ஒரு சர்வதேச புகழ் பெற்ற போராளிக் குழுவின் தலைவர்! அவர் உயிரோடு இருந்தால் அவர் ஒரு குற்றவாளியைப் போல தன்னைத் தானே ஒளித்து வைத்துக் கொள்ள முடியாது. அவருக்கு ஏதேனும் ஒரு நாடு அடைக்கலம் தந்தால் தான் உயிரோடு இருக்க முடியும்! தலாய்லாமாவிற்கு சீனாவின் சீற்றத்தை மீறி இந்தியா அடைக்கலம் தந்தது போல, அவருக்கு இலங்கை அரசின் பகையை பொருட்படுத்தாத ஒரு நாடு தான் தர முடியும். அப்படித் தரும் போது அது சர்வதேச அளவில் ஒரு விவாதப் பொருளாகும். மேலும் ராஜீவ்காந்தியின் கொலையில் பிரபாகரன் பெயரையும் இந்திய சி.பிஐ சேர்த்துள்ளதால் இந்திய அரசும் பிரபாகரனை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைக்க கோரும் நிலை உருவாகி இருக்கும்.ஐ.நா சபையும் இது தொடர்பாக பேச வேண்டி இருந்திருக்கும்!

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க பிரபாகரனால் சும்மா இருக்க முடியாது. அவர் பல்லாண்டுகள் போர்க்களத்தில் அயராது சமர் புரிந்தவர். சமாதானத்திற்காக சந்திரிகாவும், ரணில் விக்கிரம சிங்கேவும் மன்றாடிய போதும் கூட – அவரை வட கிழக்கு மாகாண முதலமைச்சராக ஏற்க முன் வருவதாகக் கூறிய போதும் கூட சமாதானத்தை ஏற்காமல் சமர் புரிந்தவர்! அவருடைய தளபதிகளான மாத்தையா, கருணா போன்றவர்கள் சமாதானத்தை ஏற்கலாம் என்ற போது அந்த கோரிக்கையோடு அவர்களையும் சேர்த்தே நிராகரித்தவர். ‘ஒரு முறை அமைதி வாழ்க்கைக்கு திரும்பிவிட்டால் பிறகு ஆயுதம் தூக்கும் மனநிலை மாற்றம் அடைந்துவிடும்’ என்பதால் இடைவிடாது போர் புரிந்து கொண்டே இருந்தவர். அப்படிப்பட்டவரால் எப்படி இத்தனை நாள் தன்னைத் தானே ஒளித்துக் கொள்ள முடியும்? அப்படி முடங்குவதை அவர் பேரவமானமாகத் தான் அவர் கருதுவார். ஆனால், அவரால் பிழைப்பு நடத்தியவர்கள், தங்கள் பிழைப்புக்காக அவருக்கு அவ்வப்போது உயிர்கொடுத்து ‘சீன்’ காட்டுகிறார்கள்!

ராஜபக்சேவை வெறுத்து விரட்டிய இலங்கை மக்கள்!

இன்றைய இலங்கையின் நிலைமை முற்றிலும் மாறிக் கிடக்கிறது! விடுதலைப் புலிகளை அழித்தற்காக எந்த சிங்கள மக்கள் ராஜபக்சேவைக் கொண்டாடினார்களோ, அந்த மக்களே இன்று ராஜபக்சேவை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக வெறுத்து நாட்டைவிட்டே விரட்டிவிட்டனர். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்படுத்திய விளைவால், இன வெறுப்பை ஏற்படுத்தும் சிங்கள அரசியலுக்கு சிங்கள மக்கள் மத்தியிலேயே அங்கு வரவேற்பு கிடையாது. இனவெறுப்பால் உருவான போரும், ராஜபக்சேவின் சுரண்டலும் அவர்களை விழிப்படைய வைத்துவிட்டது.

அதனால், தமிழர்களோடு இணைந்து செயல்பட்டு தமிழர்கள் தரப்பிலும், சிங்களர்கள் தரப்பிலும் உள்ள சுயநல அரசியல்வாதிகளை புறக்கணித்து ஒரு அமைதியான சமத்துவமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் என தற்கால தலைமுறையினர் இலங்கையில் கருதத் தொடங்கியுள்ளனர்! இந்த நிலையில் பிரபாகரனின் தேவையும் இலங்கை தமிழர்களுக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது. பிரபாகரனே உயிரோடு வந்துவிட்டாலும் பழைய போர்ச் சூழலையும், தன் படைக்கான இளைஞர்களையும் கண்டடைய முடியாது. காலத்தின் தேவையாக உருவான அவரது மாபெரும் சகாப்தம் முடிந்துவிட்டது!

நன்றி; u.k tamil news

மற்றொருபுறம், இலங்கையை சீனா படிப்படியாக ஆக்கிரமித்து இன்று பாதி இலங்கை, சீனாவின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது! இலங்கை துறைமுகங்கள் அனைத்தும் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன!  பெரும் தொழில் நிறுவனங்களை அங்கு சீனா ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சேவை கைக்குள் போட்டுக் கொண்டதன் காரணமாக, பல ஒப்பந்தங்கள் வழியாக இலங்கையைச் சீன அரசு சுரண்டிக் கொழுக்கிறது. ஏகப்பட்ட கடன்களை அள்ளித் தந்து, மிகப்பெரிய கடனாளியாக இலங்கையை உருவாக்கி விட்டது! இந்தச் சூழ்நிலையில் சீனாவிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கும், சீனாவை எதிர்த்து  போராடவும் ஒரு ஒன்றுபட்ட போராட்டம் இலங்கையில் தேவைப்படுகிறது!

‘ஒட்டுமொத்த நாடும் நன்றாக ஒற்றுமையாக இருந்தால் தான் அனைவரும் வாழ முடியும்’ என மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர். இந்தச் சூழலில் ‘பிரபாகரனை உயிர்பிக்க முனைவது, மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட ராஜபக்சேவின் தேவையையும் அங்கே சேர்த்தே உருவாக்கிவிடும்’ என்ற ஆபத்தையும் நாம் உணர வேண்டும். நெடுமாறனின் இந்த பேச்சால் தற்போது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை அரசின் தேவையில்லாத நெருக்கடிகளுக்கு ஆட்படவும் வாய்ப்புள்ளது!

பெயர் பலகைகளில் தமிழுக்கு மாற்றாக சீன மொழி

இது இது ஒரு புறம் இருக்க, சீனா பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய கடற்படை தளங்களை உருவாக்கி கடற்படை ராணுவத்தை விரிவு படுத்திக் கொண்டிருப்பதை சர்வதேச நாடுகள் அச்சுறுத்தலாக பார்க்கின்றனர்!  சீனாவின் கடற்படை என்பது உலகின் எந்த நாட்டுக் கடற்கரையை விடவும் மிகப்பிரமாண்டமானது! அமெரிக்காவைக் காட்டிலும் பல மடங்கு வலிமையானது! ஆகவே, சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன! அப்படி கட்டுப்படுத்த விரும்பினால் அதற்கு இலங்கை அரசாங்கத்தினுடைய ஒத்துழைப்பு அவசியம்.

ஆனால், இலங்கை அரசோ சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது! எனவே,  இலங்கை அரசுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இலங்கை அரசை இந்தியாவிற்கு சார்பாக மாற்றுவதற்கு – சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை தடுப்பதற்கு – இந்தியா விரும்புகிறது. ஆகவே, ‘மீண்டும் இந்தியா நினைத்தால் தமிழர் பிரச்சனையை இலங்கையில் தோற்றுவிக்க முடியும், பிரபாகரனுக்கு உயிர் கொடுக்க முடியும்’ என்பதை இலங்கைக்கு புரிய வைக்கும் ஒரு முயற்சியாக இந்திய உளவுத் துறையின் தூண்டுதலால் தான் நெடுமாறன் இவ்வாறு பேச வைக்கப்பட்டுள்ளார்! சமீப காலமாக அவர் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளது யாவரும் அறிந்ததே! சமீபத்தில் இலங்கைக்கு பாஜக தலைவர்கள் அண்ணாமலையும், எல்.முருகனும் சென்று வந்த பிறகு நெடுமாறன் இவ்வாறு பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

நன்றி, srilanga Gardian

அவரது இந்த பேச்சில் உள்ள அர்த்தம் யாருக்கு புரிந்ததோ, இல்லையோ இலங்கை அரசுக்கு புரிந்திருக்கும்! ஆனால், இந்த விவகாரத்தில் நெடுமாறனின் பெயர் மிகவும் கெட்டுவிட்டது. கடந்த காலத்தில் அவர் சம்பாதித்திருந்த நற்பெயர், மீட்டெடுக்க முடியாத அளவுக்கு சிதைந்து விட்டது!  மற்றபடி இது, அவர் துணிந்தே சொல்லிய பொய்யாகும்! தன்னோடு இணைந்து பிரஸ்மீட் தர வைகோவையும் நெடுமாறன் அழைத்திருந்தார். ஆனால், வைகோ மறுத்துவிட்டார்.

பழ.நெடுமாறன் சில  பொருளாதார தவறுகளை விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கடந்த காலங்களில் செய்து விட்டதன் காரணமாக, இந்திய உளவுத்துறையின்   நிர்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாரோ, என்னவோ தெரியவில்லை! ஆயினும், மக்களால் ஏற்கவே முடியாத, ஒரு பொய்யை கூறியதன் மூலம் தன்னுடைய நீண்ட நெடிய பொது வாழ்க்கையில் அவர் சேர்த்து வைத்த அனைத்து நற்பெயரையும் இழந்துவிட்டார் என்பது தான் நிஜம்.

நியாயப்படி இப்படிப் பேசிய நெடுமாறன் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தஞ்சை முள்ளி வாய்க்காலைச் சுற்றிலும் நெடுமாறனுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது கவனத்திற்கு உரியது. மேலும், நகைப்பிற்கு உரிய நெடுமாறனின் இது போன்ற பேச்சை கடந்த காலங்களில் அலட்சியம் காட்டி வந்த இந்து தமிழ் திசை, தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் தற்போது முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக போட்டுள்ளன என்பதே இதில் பாஜக அரசின் பின்னணி இருப்பதை உறுதிபடுத்துகிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time