பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள இந்தியா!

-ச.அருணாசலம்

பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மூன்றாண்டுகளில் மூன்று லட்சத்து 44 ஆயிரம் பேர்  தற்கொலை செய்துள்ளனர்! இதில் கூலித் தொழிலாளிகள், குடும்பத் தலைவிகள், சிறு தொழில்முனைவோர், மத்திய தரவர்க்கத்தினர், வேலை இல்லாதோர், மாணவர்கள், விவசாயிகள் அனைவரும் அடக்கம்! பாஜக அரசு கட்டமைக்க விரும்பும் தேசம் இது தானா?

அன்றாடங் காய்ச்சிகள் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் அமைப்பு சாரா பல கோடி தினக் கூலி தொழிலாளிகளைக் கொண்டது நம் தேசம்! இது தவிர சிறு, குறு தொழில்களில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களானாலும், மெத்த படித்தவர்களாக இருந்தாலும் மொத்தத்தில் நிரந்தரமற்ற பணிகளில் உள்ளோரே இங்கு அதிகம்!

மளிகைக் கடை தொடங்கி வணிக கூடங்கள் வரை பணிபுரியும் இலட்சக்கணக்கான இளந்தொழிலாளர்கள் ஆகியோர் அடங்கிய மக்கள் திரளே ‘அர்பன் இந்தியா’ என்றழைக்கப்படும் இந்திய நகரங்களின் அடித்தட்டு சமூகமாகும். இவர்களின் பொருளாதாரம் சமீப காலமாக மிகவும் சரிந்து கொண்டுள்ளதையே தற்கொலைகள் படம் பிடித்து காட்டுகின்றன!

நகர மக்கள் தொகையில் அறுதி பெரும்மான்மையாக உள்ள இவர்கள் வாழ்வில் 2016 இறுதியில் “இடி” யாக இறங்கியது பண மதிப்பிழப்பு என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு.

நிலைகுலைந்த பொருளாதாரத்தினால் செய்வதறியாமல் வாழ்வை பறிகொடுத்த மக்கள் அந்த தாக்குதலில் இருந்து மீள்வதற்குள் ” பொது முடக்கம் ” என்ற முரட்டு அறிவிப்பால், கொஞ்ச நஞ்சம் துளிர்விட்ட வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டன.


2019 முதல் 2022 வரை மூன்றாண்டுகளில் 1.12 லட்சம் கூலி தொழிலாளர்கள் தற்கொலை என்ற அரசு குறிப்பு  நாட்டின் பொருளாதார நிலையும் நாட்டு மக்களின் அவல நிலையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

2021-ம் ஆண்டு -இந்திய நாடு பெருந்தொற்றின் பிடியில் இருந்த போது- 1.6 லட்ச நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் இதில் 42,000 நபர்கள் தினக்கூலி தொழிலாளிகள் என்றும் தேசீய குற்ற ஆவண காப்பகம் கூறுகிறது.  இந்த எண்ணிக்கை மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமானது.

அந்த ஆண்டு மட்டும் (2021) உயிரை மாய்த்து கொண்டவர்களில் 1.18 லடசம்பேர ஆண்கள் என்றும் , அதில் தினக்கூலிகள் 37,751 பேரும், சுய தொழில் புரிவோர் 18,803 பேரும் , வேலையில்லாதோர் 11,724 பேரும் அடங்கும் . இது தவிர 45,026 பெண்களும் தற்கொலை மூலம் தங்களது உயிரை இந்த ஆண்டில் மாய்த்துக் கொண்டனர் என்று அந்த புள்ளிவிவரம் கூறுகிறது. பதிவான எண்ணிக்கையை விடவும், பதிவாகதது அதிகம் இருக்கலாம்!

இதே கதைதான் 2021-2022 ம் ஆண்டிற்கும் இப்போதும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொண்டால், உயிரை மாய்த்தவர்கள் வெறும் எண்ணிக்கையாக நமக்கு தோன்றாது. நம்மில் ஒரு பகுதியை இழந்த வலி நம்மை உறுத்தும் .

இந்த நிலை விவசாயத்துறையில் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவர்.விவசாயிகள் தற்கொலையில் . மகாராஷ்டிரம் (37.3%) முதலிடத்திலும் கர்நாடகம் (19.9%) இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து ஆந்திரா (9.8%) மத்திய பிரதேசம் (6.2%) ஐந்தாவது இடத்தில் தமிழ் நாடு (5.5%) ம் இருந்து வருகிறது.தமிழ் நாட்டில் பெருக்கெடுத்து ஓடும் டாஸ்மாக் சாராயம் குடும்ப வறுமை, வன்முறை இரண்டுக்கும் காரணமாகிறது.


2020 ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டு தற்கொலை செய்தவர்கள் எண்ணிக்கை 7.2% சதவிகிதம் கூடியுள்ளதாக தேசீய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது.

இந்த தற்கொலை சாவுகளில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் மாநிலங்கள் முறையே வரிசைப்படுத்தலில் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம்,கர்நாடகம் ஆகும்.

ஏன் இத்துணை பேர் தங்கள் இன்னுயிரை இவ்விதம் மாய்த்து கொள்கின்றனர் என்று ஆராயத் தலைபட்டால் மூன்று காரணிகள் முதன்மையாக நமக்கு தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவை சமூக காரணிகள், பொருளாதார காரணிகள், மற்றும் அரசியல் காரணிகளாகும்.

நாம் பொருளாதார காரணிகளை சற்று உற்று நோக்கினாலே அரசியல் காரணிகளும் தொடர்ந்து வரும் . தற்கொலைக்கான காரணங்களில் முக்கியமானதாக ஆவணங்களில் குறிக்கப்படுவது ‘வீட்டு பிரச்சினை’ அல்லது ‘உடல் நலமின்மை’ ஆகியவை தான். இவை இரண்டும் சேர்ந்து மொத்த தற்கொலையில் 51 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டுள்ளன. உண்மையில் இதன் பின்னணியில் இருப்பது, எளிய மக்களின் மீள முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளே!


அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டம் 2008 ல் வந்தாலும் 2016 பணமதிப்பிழப்பால் யால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் இப்பிரிவினரே என்றாலும், மோடி அரசு இந்த நிலை மக்களுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை என்பதே நிதர்சனமாகும். இந்தகு சூழலிலும் எளிய மக்களை சுண்டி இழுத்து சாகடிக்கும் ஆன்லைன் லாட்டிரியை தடை செய்ய பாஜக அரசு மறுக்கிறது.

வேலையின்மை ஒருபுறம் வேலைக்கு செல்லும் நாட்கள் குறைவதும் வேலைக்கான கூலி குறைவதும், பெற்ற ஊதியத்தின் வாங்குந்திறன் விலையேற்றத்தால் குறைவதும் ஏழைகள் சந்திக்கும் பிரச்சினையாகும்! ஊட்டச் சத்து பற்றாகுறையால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.


நல்ல காலம் வரப்போகிறது நல்ல காலம் வரப்போகிறது என்று ” குடு குடுப்பை ” காரன் போல் ஆருடம் கூறி ஆட்சியில் அமர்ந்த மோடி அரசு ஏற்கனவே இருந்த பாதுகாப்பிற்கும் வேட்டு வைத்ததை பார்த்தோம் . இன்றும் ஊரக வேலை வாய்ப்பிற்கான நிதி ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்காகாக குறைத்து ஒதுக்கியதிலும்” வேட்டு ” வைக்கப் படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். எண்ணற்ற வரிகள் மற்றும் ஸெஸ்கள் மூலம் பெட்ரோல் டீசல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் யாரை அதிகம் பாதிக்கிறது?

பொது சுகாதாரத்தையும், பொதுக்கல்வியையும் அளிக்க வேண்டிய அரசுகள் அவற்றை தனியாருக்கு தாரைவார்த்து வருவதால் இந்த அவலம் மேலும் மோசமடைகிறது.

பொது மருத்து மனைகள் மற்றும் மருத்துவ சுகாதார வசதிகளை கொடுக்க மறுக்கும் அரசுகள் பொதுக் கல்வியையும் மக்களுக்கு மறுக்கிறது.

தரமான கல்வியையும், தரமான சுகாதாரத்தையும்  மக்களுக்கு வழங்க மறுக்கும் மோடி அரசும், அதற்கு துணை நிற்கும் பொருளாதாரக் கொள்கைகளுமே இந்த அழிவுக்கு காரணிகள் என்பதை புரிந்து கொண்டாலே இதற்கான ” மாற்றை”  தேட முடியும்.


ஜி டி பி வளர்ச்சி , கட்டுமான முன்னேற்றம் ட்ரில்லியன் எக்கானமி என்பதெல்லாம் வெற்று கோஷங்களே ! மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தையும் சுற்றுப்புற சூழலின் மேம்பாட்டையும் மக்களின் கல்வியறிவு மற்றும் சுகாதார நல்வாழ்வு ஆகியவற்றை புறக்கணித்த
எந்த ” வளர்ச்சியும்” உண்மையான வளர்ச்சி இல்லை .

அகன்றுவிரிந்த சாலைகளும் அடுக்குமாடி கட்டிடங்களும் ஒருபுறமிருக்க ஒதுக்கப்பட்ட சேரிகளும் சுகாதாரங்கெட்ட குடியிருப்புகளும்  அழிந்து போன நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்ட ஆறுகளும் திரை போட்டு மறைக்கமுடியாத அவலங்களாக மறுபுறமும் இருப்பது உண்மையில் வளர்ச்சியா?

சமூக வளர்ச்சிக்கும் அதன் மேம்பாட்டிற்கும் – கல்வி, சுகாதாரம் , வேலைவாய்ப்பு – நிதியை ஒதுக்காமல்  கட்டுமான வளர்ச்சிக்கு ஏராளமான நிதியை ஒதுக்குவதும் அவற்றை எல்லாம் ஒரே முதலாளிக்கு வாரியிறைப்பதுமே இன்று மோடியால் நடத்தப்பட்டு வரும் திட்டங்கள் செயல்கள் .

இந்திய நாட்டின் வளத்தையும் இந்திய மக்களின் தலைவிதியையும் தனி ஒருவனிடம் அடகு வைக்க பாஜக அரசு முயல்வதை இன்று இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டு, சட்டம் இயற்றி வறுமையை ஒருபுறம் பெருந்திரள் மக்களிடையே அதிகரிக்கவும், வளமையை ஒரு சிறு கூட்டத்திற்கு தாரை வார்ப்பதையும் பாஜக அரசு செய்கிறது.

இதில் உயிரை மாய்த்துக் கொண்டோர் வெறும் நம்பர்களாகவும், மீதிப் பேர் நடை பிணங்களாகவும் இந்த நாட்டில் உலாவுகின்றனர் .

விடிவு எப்போது வரும்?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time