சைபீரியப் பனி நிலம்! வியக்கதக்க அதிசயங்கள்!

- வானதி பைசல்

சைபீரியா என்றால் தூங்கும் நிலம் என்று பொருள். உண்மையில் தன்னுள் ஆயிரம் ஆயிரம் அதிசயங்களை மறைத்து வைத்து, இந்நிலம் தூங்கிக் கொண்டுள்ளது. அதை எழுப்பி விடாமல் இருப்பதே மனிதர்களுக்கு நல்லது..! அதை ஒரு வேளை எழுப்பிவிட்டால், அவ்வளவு தான்…! மனிதகுலம் பூமியில் வாழ்வதே சவால்! ஏன்?

சைபீரிய உறைபனி நிலத்தை உலகின் மிகப்பெரிய ஃபிரீசர் என்றே கூறலாம். ஏனெனில், தன்னுள் புதைந்துள்ள தாவர மற்றும் விலங்கு படிமங்களை பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக, இந்நிலம் மிக அழகாக பதப்படுத்தி வைத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்துவிட்ட பெரு வெப்பத்தினால் சைபீரிய உறை பனி நிலம், தன்னுள் புதைந்துள்ள தாவர மற்றும் விலங்கு படிமங்களை தற்போது வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. மண்ணுக்குள் புதைந்திருக்கும் பல விலங்குகள் முழுவதுமாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்து வருகின்றன.

உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் 65% நிலம் பெர்மோஃபிராஸ்டால் (Permofrost) ஆனது. இதில் பெரும்பாலான பகுதி சைபீரியாவில் வருகிறது. பெர்மோஃபிராஸ்ட் என்பது விலங்கு மற்றும் தாவரங்களை உள்ளடக்கிய உயிர்ம பொருட்களுடன், மண், பாறை மற்றும் பனி சேர்ந்து உருவான உறை பனி நிலமாகும். பூமிக்கடியில் 3 அடி முதல் 3,281 அடி ஆழம் வரை இந்நிலப்பகுதி நீண்டுள்ளது.

புதைப்படிம ஆய்வாளர்களுக்கு கிடைத்த வரம்

சைபீரியாவில் கிடைத்த பதப்படுத்தப்பட்ட படிம விலங்குகளில் மிக அபூர்வமானதாக கருதப்படுவது, போரிஸ் மற்றும் ஸ்பார்ட்டா ஆகிய இரண்டு குகைச் சிங்கக் குட்டிகளின் படிமங்களும் தான். அவற்றின் வயது முறையே 44,000 மற்றும் 28,000 ஆண்டுகள். ஸ்பார்ட்டா சிங்க குட்டியின் உடம்பில் கடைசியாக குடித்த பால் கூட பதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கம்பளி யானை, குகை கரடி, கம்பளி காண்டாமிருகம், பனியுக குதிரை, ஒநாய் போன்ற சில விலங்குகள் முடி, தோல், எலும்பு, பல், சதை, உள் உறுப்புகள், இரத்தம் என முழுவதுமாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்துள்ளன.

இதுவரை படிம விலங்குகளின் எலும்புகளை சேகரித்து அதை வைத்தே பழங்கால விலங்குகளின் தோற்றத்தை கணித்து கூறி வந்த புதை படிம ஆராய்ச்சியாளர்கள், முழுமையான பதப்படுத்தப்பட்ட விலங்குகள் கிடைப்பதை ஒரு வரமாகவே எண்ணுகின்றனர்.

பனி தங்கம்

ரஷ்ய உறை பனி நிலத்தின் கீழே 10 லட்சத்துக்கும் அதிகமான கம்பளி யானை தந்தங்கள் புதைந்திருப்பதாக கூறுகின்றனர். இதுவரை கிடைத்த கம்பளி யானை படிமங்களில்  80% சைபீரியாவில் கிடைத்தது தான். ஒவ்வொரு வருடமும் பனி உருகும் கோடை காலத்தில், கம்பளியானை வேட்டைக்காரர்கள் பெருமளவில் தந்த வேட்டைக்காக அங்கு கூடுகின்றனர். பனி உருகுவதால் வெளிப்படும் கம்பளி யானை தந்தங்களை எடுப்பதை ரஷ்ய அரசு சட்டபூர்வமாக்கி அவர்களுக்கு உரிமமும் அளித்துள்ளது.

 தந்த வேட்டையர்கள், கம்பளி யானை தந்தங்களை பனி தங்கம் என்றே கூறுகின்றனர். யானை தந்தங்களின் ஏற்றுமதிக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளதன் காரணமாக சீனர்களும், வியட்னாமியர்களும் இப்பொழுது கம்பளியானை தந்தங்களின் மேல் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதே இதற்கு காரணம். வரவேற்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, உருகாமல் இருக்கும் உறை பனி நிலத்தின் மேல் மிக சக்தி வாய்ந்த  கருவிகளைக் கொண்டு துளையிட்டும், மோட்டார்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் உறை பனியினை உருக்கி கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இப்பகுதியில் வெளிப்படும் ஹைட்ரோ கார்பனின் அளவு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் ஹைட்ரோ கார்பனால், சமீபகாலமாக சைபீரிய பகுதிகளில் காட்டுத்தீ பரவலின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோடைகாலத்தின் அளவு அதிகமாகவும், குளிர்காலத்தின் அளவு குறைவாகவும் ஆகிவிட்டது.

மீத்தேன் வெடிகுண்டு

புவி வெப்பமயமாதல் என்றாலே நாம் கார்பன்-டை-ஆக்சைடை மட்டும்தான் நினைக்கிறோம் ஆனால் அதைவிட ஆபத்தானது மீத்தேன். கார்பன்-டை-ஆக்சைடை விட 84% அதிக வெப்பத்தை மீத்தேனால் தக்க வைக்க முடியும். சைபீரிய உறை பனி நிலப் படுகைகள் மட்டுமின்றி, கடலில் ஆழத்தில் உள்ள சில இடங்கள் மற்றும் நம்முடைய தஞ்சை டெல்டா பகுதியிலும் நிலத்துக்கடியில் மீத்தேன் அளவுக்கதிகமாக உள்ளது.

 

சைபீரியாவில் உறைப்பனி நிலங்கள் உருகுவதன் காரணமாக பூமிக்கடியிலுள்ள மீத்தேன் வெளிப்பட தொடங்கி விட்டது. பசுமை குடில் வாயுவான மீத்தேனால் புவியின் வெப்பம் அதிகரிக்கிறது. அதிகரிக்கும் இவ்வெப்பம் மேலும், மேலும் பனிப் பாளங்களை உருக்கி, முன்பை விட அதிகளவு மீத்தேன் வெளியேற காரணமாகிறது. அதிவேகமாக நடைபெறும் இந்த சங்கிலி தொடர் நிகழ்வையே மீத்தேன் வெடிகுண்டு என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர்!

சைபீரியாவில் உள்ள சுண்ணாம்பு பாறை படிவுகளுக்குள்ளும் மீத்தேன் பொதிந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் தரவுகளின் படி, பனி உருகலின் காரணமாக வெளிப்பட்ட சைபீரிய சுண்ணாம்பு பாறைகள்  மிக அதிகளவு மீத்தேனை வெளியிட்டுள்ளன. இக்காரணத்தால் இயல்பை விட கிட்டத்தட்ட 11⁰ பாரன்ஹீட் வெப்பம் அப்பகுதியில் அதிகரித்துள்ளது.

இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உறைப்பனி நிலத்துக்குள் இன்று நம் வளிமண்டலத்தில் உள்ளதை போல் இரு மடங்கு அதிக அளவு கார்பன் புதைந்துள்ளது. இயல்பாக உறை பனி நிலத்துக்குள் இருக்கும்  மீத்தேனும், ஹைட்ரோகார்பனும் வெளிப்பட பல காலம் ஆகும். புவியின் சுழற்சியில் அதுவும் ஒரு நாள் நடக்க தான் செய்யும். ஆனால் அந்நிகழ்வை நாம் மிகவும் துரிதப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். புவி வெப்பமயமாதலை குறைப்பது மட்டுமே இந்நிகழ்வை ஒத்தி போட நம்மிடம் இருக்கும் ஒரே வழி.

உயிர்த்தெழும் நுண்ணுயிர்கள்

பல்லாயிரம் ஆண்டுகளாக தாவர விலங்கு படிமங்களோடு நுண்ணுயிர்களையும் உறைபனி நிலங்கள் புதைத்து வைத்துள்ளன. பனிப்பாளங்கள் உருகும் போது வெளிப்படும் நுண்ணுயிர்கள், மறுபடி உயிர்த்தெழுந்து அதனுடன் இருக்கும் உயிர்ம பொருட்களை உண்ணத் தொடங்கும். இதன் காரணமாக இந்த நுண்ணுயிர்கள் அளவுக்கதிகமான கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேனை வெளியேற்றும். உறை பனி நிலங்களிலிருந்து சேகரித்த நுண்ணுயிர்கள் மீத்தேனை வெளியிடுவதை ஏற்கெனவே ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்து விட்டனர்.

இப்படி வெளியான நுண்ணுயிர்கள் வெறும் மீத்தேனை மட்டும் வெளிவிடும் என்று சொல்வதற்கில்லை. பழங்காலத்தில் வாழ்ந்த பல விலங்குகளின் இனம் முற்றிலும் அழிந்ததற்கு பனியுக முடிவினால் ஏற்பட்ட காலநிலை மாற்றமும், ஆதிமனிதன் வேட்டையாடியதும் மட்டும் காரணமாக இருந்திருக்க இயலாது. அந்த நேரத்தில் உண்டான பெரு நோய்களும் காரணமாக இருந்திருக்கலாம். அதற்கு காரணமான நுண்ணுயிர்களும் உறை பனி உருகலினால் மறுபடி உயிர்த்தெழலாம் அல்லவா..?

இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நுண்ணுயிர்கள் உயிர்த்தெழுமா என்னும் சந்தேகம் நம்முள் எழுவது இயற்கையே. அதற்கும் சில அஞ்சத்தக்க சான்றுகளை இயற்கை நமக்கு அளித்து விட்டது. சைபீரியாவில் தொல்பொருள் ஆய்வின்போது கிடைத்த டெல்லாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) ஒன்று தன் நீண்ட குளிர்கால தூக்கத்திலிருந்து உயிர் பெற்று வாழத் தொடங்கிவிட்டது. அந்த நீண்ட தூக்கத்தின் வயது 28,000 ஆண்டுகள்.

30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, அமீபாக்களை தாக்கியுண்ணும் இரண்டு வைரஸ்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டு வைரஸ்களும் இன்றும் அமீபாக்களை தாக்கும் வல்லமையுடன் உயிர்ப்புடன் உள்ளது. தற்போது உள்ள வைரஸ்களை விட அளவில் பெரியதாகவும் இவை உள்ளன.

நுண்ணுயிர்கள் மட்டுமல்லாது தாவரங்களும் உயிர்த்தெழுகின்றன. சைபீரிய உறை பனி நிலத்தடியிலிருந்து கிடைத்த செலின் ஸ்டெனோஃபிலா (Silene stenophylla) என்ற சிறிய பூக்கும் தாவரத்தின் விதை ஆய்வகத்தில் மறுபடி முளைத்துவிட்டது. 32,000 ஆண்டுகளுக்கு முன்பான இவ்விதை, படிமமாக மாறிய அணிலின் குழியிலிருந்து கிடைத்தது. நுண்ணுயிர்களுக்கும், தாவர விதைகளுக்கும் உறை பனி நிலமானது மிக நீண்ட குளிர்கால தூக்கத்தை மட்டுமே கொடுத்துள்ளது என்பதை இவற்றிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?

பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் பனி உருகல்

2012 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஏமல் பகுதியில் ஏற்பட்ட ஆந்த்ராக்ஸ் தொற்றினால், 2000 கலைமான்கள் பாதிக்கப்பட்டதோடு பத்துக்கும் மேற்பட்ட மனிதர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மிக வேகமாக பரவிய இந்நோய்க்கு, உறை பனி நிலம் உருகியதால் வெளிப்பட்ட கலைமான் சடலத்திலிருந்து உயிர்தெழுந்த வைரசே காரணமென்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராக்ஸ் நோயினால் இறந்த கலைமானின் சடலம் அது.

இத்தோடு இந்த விஷயம் முடிவதாக இல்லை. சமீபத்தில் உருகிய உறை பனி நிலத்திலிருந்து, ஸ்பானிஷ் ப்ளூ நோயினால் இறந்து புதைக்கப்பட்ட மனிதர்களின் சடலங்களையும் கண்டறிந்துள்ளனர். 1918 ஆம் ஆண்டு கொள்ளை கொள்ளையாக மனிதர்களின் உயிரைப் பறித்த நோய் அது.

 

மேற்கூறிய அனைத்துமே இயற்கை நமக்கு  கொடுக்கும் எச்சரிக்கை என்றே கருத வேண்டும். பனியுகத்தின் போது வாழ்ந்தவையனைத்தும் கொடும்பனியை தாங்கி வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினங்கள். அந்த பிரம்மாண்ட உயிரினங்களையே அழித்த நுண்ணுயிர்களை, சாதரண குளிருக்கே சளி பிடிக்கும் மனிதர்களாகிய நம்மால் எதிர்கொள்ள இயலுமா? ஒரு கொரானாவுக்கே மனித இனம் திணறி விட்டது..!

தூங்கும் நிலம்..?

புவி வெப்பமயமாதல் என்பது இன்று தொடங்கிய பிரச்சினை கிடையாது. பனியுகம் முடியும்போது, பூமியின் சாய்வு நிலை மாறியதால் அதிகரித்த வெப்பத்தின் காரணமாகவே உலகம் முழுவதும் போர்த்தியிருந்த பனி உருகி, புவி இன்றுள்ள நிலையை அடைந்துள்ளது. அன்றிலிருந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே தான் வருகிறது.

நம் பூமிக்கு இது புது நிகழ்வும் கிடையாது. பூமியின் சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் இதுவரை ஐந்து பனியுகங்கள் வந்துள்ளதை நாம் அறியலாம். எனவே பூமி தன்னை புதுப்பித்துக் கொள்ளும். மனிதர்களாகிய நாம்..?

கட்டுரையாளர்;  வானதி பைசல்

முனைவர்

விலங்கியலாளார்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time