பிழைப்புவாத அரசியல், பெண்ணிய அரசியலை வீழ்த்திவிட்டது..!

சாவித்திரிகண்ணன்

தன் அரசியல் எதிர்காலத்திற்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளார் குஷ்பு.

அவரோடு பல ஆண்டுகளுக்கு முன்பே பழகியவன் என்ற வகையில் என்னால் உறுதியிட்டு சொல்ல முடியும் அவர் பாஜகவின் பிற்போக்கு அரசியலுக்குக் கொஞ்சமும் பொருத்தப்பாடில்லாதவர்!

இயல்பிலேயே ஒரு பெண்ணியவாதியாக வெளிப்பட்ட அவர்,பிழைப்புவாத அரசியலுக்காக தன் இயல்புக்கு ஒத்துவராத பிழை செய்துள்ளார்.

யார் ஒருவருக்கும் கட்டிய கணவனோ,மனைவியோ சரியில்லை என்றால்,பொது வாழ்க்கை சறுக்கு பாதையில் தான் பயணப்படும் என்பதற்கு குஷ்புவே நிகழ்கால சாட்சியாகிறார்.

விபரமாகப் பார்ப்போம்…

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அவர் திருமணத்திற்கு  முன்பான பெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஒரு கருத்தைச் சொல்லப் போக,மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்த காலம்!

அப்போது எனதன்பு நண்பர் ஜெயா டிவியின் கே.பி.சுனில்,அது குறித்த ஒரு விவாதத்தில் என்னைப் பேச அழைத்தார். அப்போது கோபி தான் என்னையும், நடிகர் சாருஹாசனையும் ஒரே நேரத்தில் பேசவைத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நாங்கள் இருவருமே பெண்ணிய கருத்தியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்கள் என்ற வகையில் குஷ்புவின் நிலைப்பாட்டை ஆதரித்துத் தான் பேசினோம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குஷ்பு என் தொலைப்பேசி எண் வாங்கி என்னிடம் பேசி,என்னை சந்திக்க விரும்பினார். எங்கள் சந்திப்பில், ஒரு பெண்ணின் ஆளுமையைக் காட்டும் விதத்திலான ஒரு தொலைக்காட்சி தொடர் எழுதிதரக் கேட்டார். நான் எழுதிய அந்தக் கதை ஒரு பெண்ணின் பொது வாழ்க்கையில் குடும்பத்தின் நிர்ப்பந்தங்களைச் சந்திப்பது குறித்ததாகும்! அதில் அவர் மிகவும் இன்வால்வ்மெண்டானார். தமிழில் அதை எடுக்கமுடியா விட்டாலும் மலையாளத்திலாவது செய்வேன் என்றார்.அந்த ஸ்கிரிப்ட்டை பிறகு அவர் என்ன செய்தார் எனத் தெரியவில்லை. இதை எதற்காக சொல்ல வந்தேன் என்றால், கதையின் போக்கு,பாத்திரத்தில் ஆளுமை ஆகியவை குறித்து நாங்கள் இருவரும் நீண்ட நேரம் விவாதித்தோம்.அதில் அவர் ஒரு சுதந்திரச் சிந்தனை கொண்ட பெண்ணியவாதி என்பதை நான் தெளிவாகவே உணர்ந்தேன் என்பதற்காக சொல்ல வந்தேன்.

பாஜகவில் சேர்ந்ததற்காக குஷ்புவைப் பற்றி கடுமையாக எழுதலாம் என்று தான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால்,கிடைத்த தகவல்களை வைத்துப் பார்த்தால் பரிதாபமாக தான் இருக்கிறது!

குஷ்பு பணம்,பதவி,அதிகாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் தான் என்றாலும் இயல்பிலேயே அவர் பாஜகவின் ஜாதிய,மதவாத அரசியலுக்கு எதிரான மன நிலை கொண்டவர் என்பது அவருடன் பழகிய எவருக்கும் தெரியும். பிறப்பிலேயே அவர் இஸ்லாமியர் என்பதால், அவரால் பாஜகவின் ’பார்சியாலிட்டி’ அரசியலை, இஸ்லாமிய துவேஷ அரசியலை ஏற்கமுடியாமல் தான் இருந்தார்.

ஆனால்,சுந்தர்.சி கவுண்டர் என்பதால்,எடப்பாடி கட்சிக்குள் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு வாழ்த்து சொல்லி டிவிட்டரில் குஷ்புவைப் பதிவிட வைத்தார். அமித்ஷா உடல் நலமில்லாமல் இருந்த போதும் அமித்ஷா குணமாக வாழ்த்துச் சொல்ல நிர்ப்பந்தித்தார்!

குடும்பத்திற்குள் இருக்கும் ஒரு பெண்ணால் சுயேச்சையாக இயங்க முடியாது…எவ்வளவு அறிவு,ஆற்றல் இருந்தாலும் சுயத்தை அடகு வைத்து கணவர், குடும்ப நெருக்கடிகளுக்கேற்பத் தான் முடிவெடுக்க முடியும் என்பது குஷ்பு விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது.

குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியையும்,  சினிமாவில் கணவருக்கேற்பட்ட இழப்புகளையும் சரிக்கட்டச் சுந்தர்.சி தந்த நெருக்கடிகளால் தான் குஷ்பு இந்த நிலையை எடுத்திருப்பதாகவே தெரிய வருகிறது.

அரசியல்,பொது வாழ்வுக்கு வருபவர்கள் தங்கள் குடும்ப இணையரையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். சுந்தர்.சி குஷ்பு திமுக சென்ற போதும் சரி,காங்கிரஸ் சென்ற போதும் சரி கூடவே வந்தவரல்ல! ஆனால், பாஜக விவகாரத்தில் அவரே மனைவியை அழைத்துக் கொண்டு டெல்லி சென்றுள்ளார். முன்னதாக எல்.முருகனை சில நாட்களுக்கு முன் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுமுள்ளார்.தனது மனைவிக்கு சுமார் நான்கு மாதமாகவே நெருக்கடி தந்துள்ளார் எனத் தெரிய வருகிறது.ஆனால்,பாஜகவில் சரியான ’ரெஸ்பான்ஸ்’ இல்லாத காரணத்தால், அதை சாக்காக வைத்து வடசென்னை காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்று காங்கிரஸில் தன் இருப்பை உறுதிப்படுத்தினார் குஷ்பு. மேலும் காங்கிரஸ் தலைவர் அழகிரி குஷ்பு வீட்டிற்கு நேரடியாகச் சென்று குஷ்பு காங்கிரஸ் நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேசி வந்தார். சரி,இத்துடன் பாஜக விவகாரத்தை கணவர் கைவிடுவார் என எதிர்பார்த்தார். ஆனால், சுந்தர்.சி விடாமல் களத்தில் இறங்கி தீவிரம் காட்டுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை.

சென்ற வாரம் அவர் பெரம்பூரில் பேசிய கூட்டத்தில் அனலாய் தகித்தார். பாஜகவையும், மோடியையும் உண்டு,இல்லை எனக் கிழித்தார்…! அதன் சிறு துளியை கீழே தந்துள்ளேன்.

’’ஜாதி,மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறீர்களே…எங்க செஞ்சு பாருங்க…தமிழ் நாட்டிலே அது எடுபடாது…கேவலாமாயில்ல உங்களுக்கு..? ஜாதி,மதம் இதை வச்சுக்கிட்டு எவ்வளவு நாள் அரசியல் பண்ணுவீங்க…வெட்கமாயிலையா பிஜேபிக்கு…?’’

’’உத்திரபிரதேசத்துல எங்க தலைவர் ராகுல் ரோட்டுல இறங்கி மக்களை காப்பாற்றப் போராடுகிறார். மோடி இங்க வரமுடியாது…இங்க ஜாதி,மதத்தை பேஸ் பண்ணிப் பேசிப்பாருங்க…பாஜகவிற்கு அந்த தைரியம் இருக்கா….’’

ரபேல் பத்தி பேசக் கூடாதா?

ஜி.எஸ்.டி பற்றிப் பேசக் கூடாதா?

டிமானிடேசன் பற்றிப் பேசக் கூடாதா?

ஏன் அப்படி ஒரு பயம்…?

பிரைம்மினிஸ்டர் பண்ட்ங்கிறாங்க…என்ன அது,எங்கிருந்து பணம் வருகிறது? எவ்வளவு வருகிறது.ஏன் பதில் பேசமாட்டேங்கிறீங்க..ஆர்.டி.ஐ ஆக்ட்ல கூட கேட்கமுடியாதாம்…!

ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அநீதி நடந்திருக்கு..பிஜேபியில பெண் தலைவர்களே இல்லையா? ஸ்மிருதி ராணி எங்க…? நிர்மலா சீதாராமன் எங்க…?’’

இப்படியெல்லாம் பேசி,ஒரே வாரத்தில் பாஜகவில் சேர்ந்துள்ளார் குஷ்பு.

சேர்ந்தார் என்பதை விடவும் கணவர் தந்த அழுத்தத்தால் ’’சோர்ந்தார்’’ என்பதே சரியான பொருள் தரும்.

பாஜகவில் குஷ்புவுக்கு இன்று சரியான ’ரெஸ்பான்ஸ்’ கிடைக்கவில்லை. ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் சேர்வதற்காகத் தான் டெல்லி சென்றார். காலையில் சுந்தர்.சி நட்டாவின் வீட்டிற்கும் அழைத்துச் சென்றார். ஆனாலும் அவரால் தமிழக பாஜக பொறுப்பாளரான ரவி என்பவர் முன்னிலையில் தான் சேர முடிந்தது.ஆக, ஒரு வகையில் அவருக்கு இது முதல் ஏமாற்றம் தான்!

இனி அடுத்தடுத்து பல ஏமாற்றங்களை குஷ்பு சந்திக்கக் கூடும்! கூட்டம் சேராத வெற்று மைதானத்தில், ஆளில்லாத சேர்களைப் பார்த்து பேச வேண்டியிருக்கும்! மறந்த நிலையில் மோடியைத் தாக்கிப் பேசுவது அல்லது பாஜகவின் மதவாத அரசிலை எதிர்ப்பது கூட நடக்கும்…!

ஏனெனில், கடந்த பத்தாண்டு கால அவரது அரசியல் என்பது பாஜகவிற்கு எதிரான அரசியல் தான்! திமுகவிலிருந்த போதும் பாஜகவின் மதவாத அரசியலை அவர் கடுமையாக எதிர்த்து வந்தார்.அதனால் தான் 2014 ஆம் ஆண்டு பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த நிலையில் அவர் பாஜகவில் சேர்வதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்த போது கூட பொங்கி எழுந்தார். பெண்கள் விஷயத்தில் பாஜக படு பிற்போக்குத்தனமான கட்சி என பலமுறை அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஒரு சில மாதங்களைத் தவிர்த்து அவரது பத்தாண்டுக்கால அரசியலில் அவரது பேட்டிகள்,மேடைப் பேச்சுகள் எதையும் நாம் பரிசீலித்தால் அவர் பாஜகவிற்கு பொருந்திப்போகக் கூடியவரல்ல என்பது தெரியும்.

வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதித்திருப்பார்.ஆனால்,தேவைகள் அதிகம் கொண்ட ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டால், கொள்கைப்படி யாராலும் வாழமுடியாது என்பது சினிமா கலைஞர்களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பொருந்தக் கூடியதாகும்!

குஷ்புவிற்கு என்ன ஓட்டு வங்கி இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுக்கும்.எது பேசினாலும் மக்களைச் சென்றடையும் அவ்வளவே! ஆனால், ஒருவருக்கு தான் பேசுவதிலேயே ’கமிட்மெண்ட்’ இல்லாமல் போகுமானால்,அவர் பேச்சுக்கு மரியாதை என்பது மருந்துக்குக் கூட இருக்காது! ஏற்கனவே நான் அக்டோபர் ஆறாம் தேதி தான் எழுதி இருந்தேன். குஷ்புவின் தடுமாறும் அரசியல் பயணம் என்ற தலைப்பில்! குஷ்புவின் பாஜக ஆதரவு அரசியல் என்பது குடும்ப பொருளாதாரத்திற்கான சமரசம்,அவ்வளவே!

பிரபலங்களை நம்பி அரசியல் கட்சிகள் பிழை செய்கின்றன – அவை ஓட்டுக்களாக மாறுவதில்லை எனத் தெரிந்தாலும் ஒரு கவன ஈர்ப்புக்காக!

அதே போல தங்கள் பிரபலத்தைக் கொண்டு, பிழைப்புவாத அரசியல் செய்கிறார்கள் சினிமா கலைஞர்கள்! மக்களுக்கு இவர்கள் பேசுவதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு என்பதைக் கடந்து வேறொன்றுமில்லை!

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time