‘தீர்ப்புகளைத் தா! பதவிகளைப் பிடி’ என்கிறீர்களா?

-சாவித்திரி கண்ணன்

நீதிபதிகளை நாம் கடவுளுக்கு இணையாகப் பாவிக்கிறோம்! அரசாங்கமே தவறு செய்தாலும், நீதிமன்றத்தில் நியாயம் பெற்றுவிடலாம் என நம்புகிறோம். ஆனால், நீதிபதிகளோ, அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத கூட்டாளியாக தீர்ப்புகள் தருவதும், அதற்கு பிரதியுபகாரமாக பதவிகள் பெறுவதும் நீதித் துறையின் மீதான நம்பிக்கைகளை சிதைத்துவிடாதா?

அரசியல்வாதிகளைக் கூட தண்டிக்க வழியுண்டு மக்கள் மன்றத்தின் வழியே! ஆனால், நீதிபதிகளை தண்டிப்பது என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நமது அரசியல் சட்டத்திலேயே ஆகச் சிறந்த பாதுகாப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு வசிக்க பங்களா, கார் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகள் மக்கள் பணத்தில் இருந்து செய்யப்படுகின்றன! இத்தகு உரிமைகளையும், சலுகைகளையும் நீதிபதிகளாக உள்ளவர்களுக்கு கேள்விக்கு அப்பாற்ப்பட்டு வழங்கும் இந்தச் சமூகம் அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான்! அது ‘பாரபட்சமற்ற நீதி’ என்பதைத் தவிர வேறில்லை!

ஆனால், நமது தந்திரக்கார அரசியல்வாதிகள் நியாயமாக செயல்படும் நீதிபதிகளைக் கூட நிலை தடுமாறச் செய்யும் வண்ணம், ”ஓய்வுக்கு பிறகு பதவி உண்டு” என்ற பதவித் தூண்டிலைக் காட்டி, சார்பு நிலை கொள்ள வைக்கின்றனர். நீதியைப் புறம் தள்ளி, அநீதியை அங்கீகரிக்க வைக்கின்றனர்! அதுவும், பாஜக இந்த பார்மூலாவை பக்காவாக பரிசோதிக்கின்றனர்! சதாசிவம், ரஞ்சன் கோகாய், அப்துல் நசீர்.. என்று தொடரும் இந்த வரிசை நீதித் துறையின் சுதந்திரத்திற்கும், சுயசார்புக்கும், இறையாண்மைக்கும் மீட்டெடுக்க முடியாத கேடாகி விடும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், காங்கிரஸ் காலத்திலேயே இதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள்! எப்போதோ ஓரிவருக்கு என காங்கிரஸ் தொடங்கி வைத்த இந்த கலாச்சாரத்தை காவிகள் தற்போது கனஜோராக – எந்தவிதக் கூச்ச நாச்சமும் இன்றி – செயல்படுத்தி வருகின்றனர்.

இந்திரா காந்தி, பக்ரூல் இஸ்லாம்

பகரூல் இஸ்லாம் என்ற நீதிபதி பீகார் மாநிலத்தில் ஊழலில் ஊறித் திளைத்த அன்றைய காங்கிரஸ் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவை பாட்னா கூட்டுறவு சங்க ஊழல் வழக்கில் இருந்து விடுவித்தார்! அதற்கு பிரதிபலனாக ராஜ்ய சபா பதவி வழங்கினார் இந்திராகாந்தி!

அதன் பிறகு நரசிம்மராவ் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்கு உரியவரான பாத்திமா பீவி காங்கிரஸுக்கு சாதகமானவராக செயல்பட்ட காரணத்தால், தமிழக கவர்னராக 1992-ல் நியமிக்கப்பட்டார். ஆனால், ஊழலில் சாதனை படைத்த ஜெயலலிதாவின் செயல்பாடுகளுக்கு எல்லாம் அவர் உடன்பட்டு தமிழக மக்களின் நன்மதிப்பை இழந்தார் என்பது வரலாறு!

தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் மத்திய அமைச்சரானார்

தேர்தல் அணையர் பதவி என்பதும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு இணையானது தான்! தேர்தல் ஆணையருக்கான அதிகாரத்தை கறாராகப் பயன்படுத்திய டி.என்.சேஷனுக்கு அடுத்தபடியாக மிக எச்சரிக்கையாக காங்கிரஸ் அரசு எம்.எஸ்.கில் என்பவரை தலைமை தேர்தல் ஆணையராக்கியது! இவர் தான் இன்று பெரும் கேடுகளுக்கு வழிவகுக்கும் ‘எலக்ரானிக் மெஷின்’ ஓட்டுப்பதிவை கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அறிமுகப்படுத்தியவர்! இதற்காக காங்கிரஸ் அரசில் 2008 -ல் மத்திய அமைச்சராக்கப்பட்டார்!

நீதிபதி சதாசிவம்

”காங்கிரஸ் செய்யாததையா நாங்கள் செய்கிறோம்” என பாஜக அரசு சொல்லக் கூடாது! ஏனென்றால், அதற்கு மாற்றாக நேர்மையான அரசாங்கத்தை தருவோம் எனச் சொல்லித் தானே பாஜக மக்கள் நம்பிக்கையை பெற்றது. ஆனால், அந்த நம்பிக்கையை தற்போது தானே சிதைத்து வருகிறது.

தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியானவர் நீதிபதி பி. சதாசிவம்! இவர்  அமித்ஷாவின் உத்தரவின் பேரில் போலி என்கவுண்டர் செய்து கொல்லப்பட்ட சொராபுதீன் வழக்கில் அமித் ஷாவை குற்றப்பத்திரிக்கையிலிருந்து விடுவித்து, நிரபராதியாக்கினார்! இதன் மூலம் அமித்ஷா மீது உள்ள பழிகளைத் துடைத்தார்! அந்த காரணத்திற்காக ஓய்வு பெற்ற பிறகு  நீதிபதி சதாசிவத்திற்கு கேரளாவின் ஆளுநர் பதவியை பாஜக தந்தது!

ரஞ்சன் கோகாய், நரேந்திர மோடி

இதைத் தொடர்ந்து, இந்த சிக்னல் மூலமாக, ‘நீதித்துறையில் எங்களுக்கு சாதகமாக செயல்படக் கூடியவர்களுக்கு நாங்கள் நல்ல வாய்ப்புகளை தருவோம்’ என்பதை பாஜக சூசகமாக உணர்த்தியது!  நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் வேலை பார்த்த ஒரு பெண்ணை வன்புணர்வுக்கு உள்ளாக்க முயன்றதில், பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டார். அந்தப் பெண் துணிந்து நீதிமன்றத்தை நாடினார்! ரஞ்சன் கோகாயைத் தண்டிக்க எல்லா விதமான ஆதாரங்கள் இருந்த போதும், அவரை ஆட்சியில் இருந்த பாஜக அரசு பாதுகாத்தது! இதனால்,  ரபேல் பீரங்கி ஊழல் வழக்கிலும், அலோக் வர்மா என்ற சிபிஐ இயக்குனரை டிஸ்மிஸ் செய்த வழக்கிலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோயில் எழுப்பப்படுவதற்கான அயோத்தியா வழக்கிலும் ரஞ்சன் கோகாய் பாஜக அரசுக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கினார்!

அப்படிப்பட்ட ரஞ்சனி கோகாய் ஓய்வு பெற்ற நான்கே மாதத்தில் ராஜ்யசபாவின் எம் பி ஆக மார்ச் 2020- ல் ஆக்கப்பட்டார்! இதைத் தொடர்ந்து நீதிபதி அப்துல் நசீர் பணமதிப்பிழப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமர்வில்  பாஜக அரசின் படுமோசமாக மக்களை பாதித்த அந்த நடவடிக்கையைக் கூட செல்லும் என தீர்ப்பு அளித்தார்.

நீதிபதிகள் அப்துல் நசீர், ரஞ்சன் கோகாய்

மேலும், அயோத்தியில் பாபர் மசூதியை தரைமட்டமாக்கி ராமர் கோயில் எழுப்படும் நிலப் பிரச்னை வழக்கில் தீர்ப்பு வழங்கிய  அரசியல் சாசன அமர்வில் ஐந்து  நீதிபதிகளில் ஒருவராக இடம்பெற்றார். இவர், அப்துல் நசீர் என்ற இஸ்லாமிய பெயர் தாங்கியாக இருந்தாலும், அதிகார மையத்தின் அனுசரணையாளராகவே தொடர்ந்து செயல்பட்டதாகத் தெரிகிறது!

சர்ச்சைக்குரிய நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்பிடம் வழங்க உத்தரவிட்டார். இதே போல இஸ்லாமிய பெண்களுக்கான முத்தலாக் வழக்கில், ‘தனிநபர் சட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது’ என அப்போதைய தலைமை நீதிபதி கேஹருடன் இணைந்து தீர்ப்பு அளித்தார்.  மற்ற மூன்று நீதிபதிகள் ‘முத்தலாக் சட்டவிரோதம்’ என தீர்ப்பு அளித்த போதிலும், இவர் பாஜக அரசின் நிலைபாட்டை ஆதரித்தார்!

இவர் இந்த வருடம் ஜனவரி 4 ஆம் தேதி ஓய்வு பெறுவதற்கு ஆறுவாரம் முன்னர் தான் அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கினார்! சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ‘அகில பாரதீய ஆதிகா பரிஷத்’ என்ற இந்துத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு, மனுஸ்மிருதியின் முக்கியத்துவம் குறித்து பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே, பாஜகவில் மகளிர் அணித் தலைவியாக செயல்பட்டு, வெறுப்பு, வன்மத்தை தூண்டும் வகையில் பேசிய விக்டோரியா கெளரி என்பவரை தமிழக உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக்கி உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சில நீதிபதிகளால் பல வழக்குகளில் செல்வாக்கான குற்றவாளிகள் தப்பித்து வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்! ஆக, இனி, ‘நீதித் துறையில் தங்களுக்கு சாதமாக செயல்படுபவர்களுக்கு எல்லாம் பதவி காத்துள்ளது’ என்ற செய்தியை பாஜக அரசு சூசகமாக உணர்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

விதியே, விதியே என் செய்ய நினைத்தாயோ, இந்திய திருநாட்டை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time