இந்திய இடைத் தேர்தல் வரலாற்றில் இது வரை இல்லாத அளவு இந்த தேர்தலில் பணம் விளையாடுகிறது! ஒரு ஓட்டுக்கு பத்தாயிரமாம்! ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை எதிர்கொள்ள திமுக செய்யும் மெனக்கிடல்களைப் பார்த்தால், 2 2 மாத ஆட்சிக்கு மக்கள் தரவுள்ள ரிசல்டை பார்க்க பயமா? அல்லது பவர் படுத்தும் பாடா?
திமுக ஏன் இத்தனை தீவிரம் காட்டுகிறது? அளவுக்கு மீறிய பணத்தை அள்ளி இறைக்க வேண்டிய அவசியம் என்ன? விளிம்பு நிலை மக்களை எல்லாம் வளைத்துப் பிடித்து தினசரி 500 ரூபாயும் சாப்பாடு, டிபன் கொடுத்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்து செய்யும் கவனிப்புகள் என்ன? அத்தனை அமைச்சர்களுக்கும் தங்கள் இலாகா வேலைகளை செய்யாமல் அங்கு வீடுவீடாகச் சென்று ஓட்டுப் பிச்சை கேட்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? எனில்’ ‘இந்த 22 மாத ஆட்சி குறித்த நல்ல மதிப்பீடு உங்களுக்கே இல்லை’ என்பது தெட்டத் தெளிவாக அம்பலப்பட்டுவிட்டதே? குறைந்தபட்ச நல்லாட்சியாவது தந்திருந்தால் பணமும், பவரும் இவ்வளவு அள்ளி இறைத்து மக்களிடம் கெஞ்ச வேண்டிய இழி நிலை வந்திருக்காதே?
நாம் அறிந்த வரை தற்போதே முதல்கட்ட பணப்பட்டுவாடாவாக ஓட்டுக்கு தலா ரூபாய் 5,000 திமுகவால் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்த பணப்பட்டு வாடாவுக்கும் பக்காவாக கெட்ச் போட்டு உள்ளனராம்! தேர்தல் கமிஷன் செய்வதறியாது திணறுகிறது! துணை ராணுவப் படைகள் தொகுதியில் இறக்கப்பட்ட நிலையிலும் கூட, திமுகவின் ‘அட்ராசிட்டி’ சற்றும் குறையவில்லை என அங்குள்ள மக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தொகுதியில் உள்ள விளிம்பு நிலை மக்கள் போதாது என பக்கத்தில் உள்ள நாமக்கல்லில் இருந்து சுமார் ஐயாயிரம் பெண்களை அழைத்து வந்துள்ளதாம் திமுக! பத்து வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளராம்! இதை பார்க்கும் போது ஈரோடு மக்களுக்கு எவ்வளவு இக்கட்டாக இருக்கும் இந்த இடைத் தேர்தல் என்றே தோன்றுகிறது!
சாதிக்கு ஒரு அமைச்சர் வீதம் வாக்காளர்களின் சாதி அறிந்து, அந்தந்த பகுதிகளில் அமைச்சர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிக்கிறார்களாம்! அதுவுமின்றி, அந்தந்த பகுதியில் உள்ள புரோட்டா கடையில் புரோட்டோ போட்டும், தேனீர் கடைகளில் டீ ஆற்றியும் வேலை பார்க்கிறார்களாம். இப்படியெல்லாம் தரைமட்டத்திற்கு தங்களை நிறம் மாற்றிக் காட்டி ஷோ காட்ட வேண்டிய தேவை ஏன் வருகிறது!
மேலும், வாக்காளர்களில் இருபதாயிரம் பேர் வெளி ஊரில் உள்ளனராம். அவர்களை தொடர்பு எடுத்து அமைச்சர்களே பேசி, வந்து போகும் எல்லா செலவுகளையும் செய்வதாகக் கெஞ்சுகிறார்களாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் நல்ல மக்கள் பணி செய்திருந்தாலே போதுமே! ஓட்டு தானாக விழுமே!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பும் இன்று திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலைக்கு திட்டவட்டமாக வந்துவிட்ட நிலையில், குறுக்கு வழியில் ஓட்டு அறுவடை பண்ணத் துடிக்கிறது திமுக.
இதையெல்லாம் பார்க்கும் போது அங்கு நடப்பது தேர்தல் பிரச்சாரமா? ஓட்டுகளை பெறுவதற்காக மக்களுக்கு தரப்படும் தேர்தல் பிரஷரா? என்ற சந்தேகம் பலப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, திமுகவின் இந்த பதற்றத்திற்கு முக்கிய காரணம் இந்த 22 மாத ஆட்சியில் அது அனைத்து துறைகளிலும் செய்து கொண்டிருக்கும் இமாலயச் சுருட்டல்கள் தாம்! திமுக ஆட்சியில் எந்த ஒரு துறையிலுமே நேர்மையான நிர்வாகம் இல்லை!
முதலமைச்சர் நிர்வகிக்கும் காவல்துறை, ‘குற்றவாளிகளுக்கும், அயோக்கியர்களுக்கும் பாதுகாப்பு தரும் துறையாகிவிட்டது’ என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம், கள்ளக்குறிச்சியும், வேங்கை வயல் நிகழ்வுகளுமே!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை கற்பழித்து, கொன்று போட்ட கயவர்களை பாதுகாக்க திமுக அரசு செய்து கொண்டிருக்கும் தகிடு தத்தங்களை பட்டியலிட்டாலே தெரிய வரும், இந்த ஆட்சி யாருக்கான ஆட்சி என்பது!
ஏறி நிற்கவே முடியாத இடத்தில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்துவிட்டதாக சொன்ன வடிகட்டிய பொய்யை, இன்னும் கூட இந்த ஆட்சியாளர்களால் அம்பலப்படுத்த முடியவில்லை!
”போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது தங்களுடைய மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும்” என்ற எளிய வேண்டுகோளை, மிக மூர்க்கமாக இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன?
இதற்கு முன்பே இந்தப் பள்ளியில் சில கொலைகள் நடத்தி பழக்கப்பட்ட இந்த பள்ளி முதலாளிக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் உள்ள நெருக்கம் என்ன?
மாணவி இறப்பன்று அந்த நாள் இரவில் பள்ளியில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி காவல்துறை கமுக்கமாக இருப்பது ஏன்?
தடய அறிவியல்துறை, ‘மாணவி எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் உண்மையல்ல’ என ரிப்போர்ட் தந்த பிறகும், அதை மறைத்து வைத்திருக்கும் காரணம் என்ன?
பள்ளி முதலாளியை ஜாமீனில் வெளியே விட எதிர்க்காதது ஏன்? நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் புகைப்பட நிருபர் மீது நடத்திய தாக்குதலுக்கு மீண்டும் இவர்களை கைது செய்யாதது ஏன்?
குற்றம் இழைத்த பள்ளி ஓனர்கள் ரவி, சாந்தி ஆகியோரின் செல்போனை கேட்டு வாங்காமல், இறந்து போன மாணவி ஸ்ரீமதி எப்போதோ பயன்படுத்திய செல்போனை கேட்டு, அவரது தாய் செல்வியை நிர்பந்தித்தது ஏன்?
மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மீது அவதூறாகப் பேசிய கார்த்திக் பிள்ளை என்பவர் மீது காவல்துறைக்கு கொடுத்த புகார் மீது இன்று வரை ஏன் நடவடிக்கை இல்லை ஏன் ?
குற்றம் நடந்து 200 நாட்களைக் கடந்தும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பது ஏன்? இந்த இடைத் தேர்தலுக்கு முன்பாக அந்த குற்றப் பத்திரிகையை வெளியிட்டால் ஈரோடு கிழக்கில் ‘டெபாசிட்’ கூட வாங்க முடியாது எனப் பயந்து காலதாமம் செய்து வருகிறீர்களா?
ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் இடையிலேயே பள்ளிக் கூடத்தை எரித்தது யார்? அங்கிருந்த போராட்டக்காரர்களின் நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை எரித்தது யார்?
குற்றத்திற்கு சம்பந்தமே இல்லாத – அதுவும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகப் பார்த்து அப்பாவி இளைஞர்கள் – சுமார் அறுநூறு பேரை கைது செய்து அவர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிய ஆட்சி எது?
Also read
இதே போல, வேங்கைவயலில் தாழ்த்தப்பட்டவர்களின் குடி நீர் தொட்டியில் மலத்தை கலந்த கொடியவனை மூடி மறைத்து பாதுகாக்கும் ஆட்சி எது? எந்த ஒரு குற்றவாளியையும் கண்டறியவோ, தண்டிக்கவோ துப்பில்லாமல் அப்பாவிகளை பிடித்து பழி போடத் துடித்தது எந்த ஆட்சி?
நாளும்,பொழுதும் வட இந்தியர்கள் வந்து குடியேறி தமிழ் நிலப்பரப்பையெல்லாம் ஆக்கிரமித்து வருகிறார்கள்! ஆனால், இதில் எது பற்றியும் கவலை இல்லாமல், டாஸ்மாக் வியாபாரத்திலேயே கண்ணும், கருத்தும் செலுத்தி, தமிழக இளைஞர்களை நடை பிணங்களாக்கி வரும் ஆட்சி எது?
இதற்கு காரணமானவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வாய்ப்பாக இந்த இடைத் தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் பயன்படுத்துவார்கள் என நாம் நம்புவோம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
திமுக என்னும் கட்சியையும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியையும் எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்னும் தங்களின் வெறித்தனமான இலட்சியம் நிறைவேற வாழ்த்துகள்…
அந்த இடத்தில் யாரை கொண்டுவந்து வைக்கப் போகிறீர்கள்..?
பிஜேபியையா? நாம் தமிழரையா?
நடுநிலை பேசிக்கொண்டு திமுக என்றாலே காழ்ப்பு உணர்ச்சி கொள்வது ஒரு தனிக் கலை
தோழர் சாவித்திரி கண்ணன் அவர்களே! தாங்கள் திமுக ஆட்சியின் மீது கூறிய குற்றச்சாட்டுகள் உண்மைதான். விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரித்த அதிமுகவை விமர்சிக்காதது ஏன்? அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை விமர்சிக்காதது ஏன் ? நீட் தேர்வு வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டங்கள் போன்றவற்றை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்த்து போராடுகின்றன. அதிமுக மதவெறி பிளவுவாத பாஜகவோடு கூட்டணி வைத்து மேற்கண்ட மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து போராடாமல் பதுங்குகின்றன. திமுக கூட்டணி தோற்பது சரியா? சனாதனத்தை சமரசமின்றி எதிர்க்கும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும் என்று தங்களுக்கு தோன்றாதது ஏன் ?.. பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்கிறீர்களா? இந்தத் தேர்தல் முறை நீடிக்கும் வரை பணம் பட்டுவாடா செய்யும் கட்சிகள் மட்டுமே வெற்றி பெற முடியும். கட்சிகள் பெறும் வாக்குகள் விகித அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் கட்சிகளுக்கு பதிவாகும் மொத்த வாக்குகளை அந்தந்த மாநிலங்களின் எம்எல்ஏ எம்பி களின் எண்ணிக்கயால் வகுத்து வரும் ஈவு வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் எம் எல் ஏ எம்பி க்களை தேர்வு செய்யும் விதமாக விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நம் நாட்டிற்கு ஏற்றவாறு கொண்டு வர மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் தான் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பணம் பட்டுவாடாவை தடுக்க முடியும். அது மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகள் ஜாதி மத அடிப்படையில் அரசியல் செய்வது தடுக்க முடியும். அதற்காக நேர்மையான பத்திரிக்கையாளர்களும் அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் போராடாமல் இது சாத்தியமாகாது .வாழ்க ஜனநாயகம்.
எஸ்.சுந்தரம்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி