யார், யாரோ பலனடைய விவசாயிகள் அழியணுமா..?

-அ.வை.தங்கவேல்

விவசாயத்திற்கு இரண்டு இலட்சம் கோடி உர மானியம் அரசு தருகிறது! ஆனால், இதன் பலன் விவசாயிக்கு கிடைப்பதில்லை! உரச் செலவும், பூச்சி மருந்து செலவும் பாடுபடும் விவசாயியை எப்போதுமே கடனாளியாக்குகிறது! நவீன விவசாயத்தால் பலனடைவது உரக் கம்பெனிகள், உரக்கடைகள், பூச்சி மருந்து தயாரிப்பாளர்களே! கொஞ்சம் சுதாரிச்சுக்கிடலாமா..?

கொஞ்சம் சுதாரிச்சுகிட்டா இந்த நச்சு வலைப் பின்னலில் இருந்து விலகி, சுகமாக செலவு குறைந்த விவசாயம் பண்ணலாம் என்பது எங்க அனுபவம்!

விவசாயத்தில் நச்சுக்களே உரங்கள்-பூச்சிக் கொல்லிகள்-களைக்கொல்லிகள் என்ற பெயரில் விதைக்கப்படுகின்றன! இந்த நச்சு இன்னும் எத்தனை காலம் நாம் தொடர்வது? நிலத்தை மலடாக்கி, பயிரை நச்சாக்கி, நம் உடலை நோயாக்கிக் கொள்ளும் இந்த வலைப் பின்னலை அறுத்தெறிந்தால் மட்டும் போதாது. ‘நாம் கடனாளியாகக் கூடாது’ என்பதற்காகவும் தான் இதை சொல்கிறேன்.

”பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை விவசாயத்தில் இந்தியா கவனம் செலுத்துவதாக”  பிரதமர்  பறைசாற்றிய வேளையில், தேசிய வேளாண் அறிவியல் அகடமியின் விஞ்ஞானிகளோ, ”முறையான அறிவியல் சரிபார்ப்பு இல்லாவிட்டால்,  அரசாங்கம் பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டிய அவசியமில்லை” என, ஒரு பெரிய குண்டையும்  தூக்கி போட்டனர்.

விஞ்ஞானிகள் கூறுவது போல்,  இயற்கை விவசாயம்  அவ்வளவு அறிவியல் சிக்கல் நிறைந்ததில்லை.ரொம்ப எளிமையானது!

கிணற்று  பாசணம், ஆற்றுப்பாசணம், மானாவாரி எனும் மேடுகாட்டு வெள்ளாமை எனப்படும்  மூன்று வகை  விவசாயத்திலும், இரசாயனத்தை பயன்படுத்துவோர், அடி உரம் மற்றும் மேல் உரத்தை  விசிறிவிட்டு, களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும்  குறிப்பிட்ட  ஒரு உற்பத்தி இலக்கை அடைகின்றனர். இதனை சுலபமான வேலையாகவும் பார்க்கின்றனர். ஆனால், இதில் ஒரு ஏக்கருக்கு எப்படியும் ரூபாய் ஐயாயிரம் செலவு செய்ய வேண்டியதாகிவிடுகிறது.

அதேசமயம்  இம்மூன்று வகை  விவசாயத்திலும், இதேபோன்று குறைந்த வேலைப்பழுவில், அதே உற்பத்தி இலக்கை,  இயற்கை விவசாயத்திலும் எட்ட முடியுமா  என்கிற தயக்கம் விவசாயிகள் மத்தியில் பெருமளவு ஏற்படுவதாலயே, இயற்கை விவசாயம்  மீதான ஈர்ப்பு விவசாயிகளிடம் சுத்தமாக   ஏற்படவில்லை.

ஆனாலும், இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளுபவர்களையும்  ஆங்காங்கே காணமுடிகிறது. இருந்தபோதும்,   தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு  மார்க்கெட்டிங்  வைத்திருப்பவர்கள் மட்டுமே இயற்கை விவசாயத்தை தொடருகின்றனர் என்பதையும் நாம் மறுக்கமுடியாது.

பஞ்சகாவ்யா, மீன் அமிலம், திறன்மிகு நுண்ணுயிர் (இ.எம்) கரைசல், கடுக்காய் ஊறவைத்த கோமியம் மற்றும் தயிர் கரைசல்  ஆகிய  ஐந்தை மட்டுமே பயன்படுத்தி, இயற்கை உரம் தயாரிக்கலாம். இதற்கு மிகக் குறைந்த செலவே ஆகிறது! இவை, பயிரின் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் அடிப்படையான தழை – மணி – சாம்பல் சத்துக்கள் அதன் பிறகான நுண்ணூட்ட-பேரூட்ட   சத்துக்களைத் தருகின்றன! இவற்றை தண்ணீர் பாய்ச்சும் போதே, சிறுகச் சிறுக பயிர்களுக்கு வழங்க வேண்டும்.

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீ.அன்னலட்சுமி வீரமலை! இவர் நான்கு ஏக்கரில் இய்ற்கை விவசாயத்தை சிறப்பாக பண்ணுகிறார்! ஒரு ஏக்கர் நிலத்துல 1,800 கிலோ நெல்லை அறுவடை செய்கிறார்!  தங்களது  கிணற்றுப்பாசன   விவசாயத்தில், பயிரின் வளர்ச்சிக்கு தேவையான நஞ்சில்லா இடுபொருட்களை பாசன நீரில் கலந்து கொடுப்பதற்கு வசதியாய் வெஞ்சூரியன் எனும் உபகரணத்தை  அமைத்துள்ளார்.

புகைப்படத்தில் உள்ள தொட்டியில்  ஊற வைத்திருக்கும் இயற்கை உரங்களான நஞ்சில்லா இடுபொருட்களை, மின்மோட்டார் ஓடும்போது உறிஞ்சி, வெளியேறும் தண்ணீரோடு சேர்த்து  வெளியேற்றுவதே இதன் வேலை.இதன் மூலம் மிகச் சிறப்பாக இரண்டு போகம் நெல் விவசாயமும், மல்லிகை பூ விவசாயமும் செய்து வருகிறார்.

பாரம்பரிய நெல் ரகங்களான  தூயமல்லி, வாசனை சீரக சம்பா, கருப்பு கவுனி,  பூங்கார் மட்டுமின்றி, அப்பகுதியில் வுிளைவிக்கப்படும் அட்சயப் பொண்ணி, ADT- 36  போன்ற நெல் ரகங்களையும் பயிரிட்டு, அப்பகுதி விவசாயிகளுக்கு இணையான மகசூலையும் பெற்றுவருகிறார். மேலும் நெல் விவசாயத்தில் கடைசி உழவுக்கு முன்பு, ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் கழிவு சிதைப்பான் (Waste Decomposer) கரைசலை பயன்படுத்தி களைகளையும் கட்டுப்படுத்துகிறார்.

பூச்சிக் கொல்லி மருந்துகளால் தோல் பாதிப்பு

இப் புகைப்படத்தில் நாம் காண்பது இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்த மல்லிகை செடிகளில்,  பூ எடுத்தமையால் ஏற்பட்ட அலர்ஜி கொப்பளங்களை கொண்ட ஒரு பெண்ணின் கை ஆகும்.  மல்லிகை பூ விவசாயத்தில்  இரசாயன உரங்களை தரைவழியாகவும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் அப்பகுதிவிவசாயிகளுக்கு மத்தியில்,  ஐவகை புண்ணாக்குத்தூளை தரைவழிக்கும், தண்ணீர்- பஞ்சகாவ்யா- உயிர்வழி திரவமான பேசில்லஸ் சப்டிலஸ் ஆகியவற்றை  50:1:0.25 என்கிற விகிதத்தில் கலந்து வாரம் ஒருமுறை தெளித்தும்  பூக்களை அறுவடை செய்கிறார் இப்பெண் விவசாயி .

அரசு தரப்பில் ஒரு ரூபாய்கூட  எந்த உதவியும் பெறாமல் இயற்கை விவசாயத்தில் தன்னிறைவு விவசாயியாய் தலைநிமிர்ந்து நிற்கிறார் அன்னலட்சுமி! ”இயற்கை விவசாயத்தின் பக்கம் போகாது இருந்திருந்தால், நான் என்னைக்கோ அழிஞ்சிருப்பேன். கொஞ்சம் சுதாரிச்சதால பிழைத்துக் கொண்டேன்!  நீங்களும் சுதாரித்தால் தான் தப்ப முடியும்’’ என்கிறார் அன்னலட்சுமி!

மாட்டிலிருந்து கிடைக்கும் ஐவகை பொருள்களில் பஞ்ச காவ்யா!

தன்னிறைவு விவசாயியின் சொல்லை செயலாக்குவோம்! இவரைப் போல கிணற்று பாசனம் செய்வோர் அதாவது யார் யாரெல்லாம் மோட்டார் பம்ப் வைத்து விவசாயம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவருக்குமே இயற்கை விவசாயம் எளிதானது  என்பதே உண்மை! கடனில்லா விவசாயமே சுகமானது!

ஆற்றுப்பாசண விவசாயத்தில்,  கிணற்று பாசனம் போல் வெஞ்சூரியன் உபகரணத்தை அமைத்து நினைத்தபோது நஞ்சில்லா இடுபொருட்களை பயிருக்கு கொடுக்கமுடியாது.  இவ்வகை விவசாயிகள் அடி உரம்,  மேல் உரம் மற்றும் தெளிப்பு எனும் மூன்று நிலைப்பாட்டை எடுத்தே ஆக வேண்டும்.

நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மீன் அமிலம் சத்தான உரமாகும்!

அடி உரமாக தொழுஉரம் தவிர, தயிர் கரைசல் கலந்த மண்புழு உரம் அல்லது  ஐவகை புண்ணாக்குத்தூள் (தற்காலிகமாக   உயிர்வழி   திட வடிவ உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா) ஆகியவற்றை அடி உரம் மற்றும் மேல் உரமாக பயன்படுத்தி பஞ்சகாவ்யாவை தெளித்து வந்தாலே,  அவர்களது அறுவடை இலக்கை அடையலாம். மானாவாரி எனும் மேடுகாட்டு வெள்ளாமையை பொறுத்தவரை அடி உரமாக தொழு உரம் அல்லது தயிர் கரைசல் கலந்த மண்புழு உரம் தவிர பஞ்சகாவ்யா மற்றும் திறன்மிகு நுண்ணுயிர் (இ.எம்) கரைசல் மட்டுமே போதுமானது.

ஒரே ஒரு மாடாவது வைத்திருப்பது விவசாயத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் மாடு வைத்திருப்பவர்களால் மட்டும்தான் இயற்கை விவசாயம் செய்யமுடியும் என்பதெல்லாம் கிடையாது. அது  தன்னிறைவு விவசாயியை மேம்படுத்த உதவும் அவ்வளவுதான். இயற்கை விவசாயத்தை  ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மகசூல் குறைவு  என்கிற கருத்தும் உண்மையல்ல.

ஒட்டுமொத்த இயற்கை விவசாயத்திற்கு பஞ்சகாவ்யாவானது பயிரின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி பூச்சிகளை அண்டவிடாமல் அடிக்கும் கவச குண்டலமும்  ஆகும்.

மிகப்பெரிய கட்டமைப்பாய் ஆட்சியாளர்களால் அடையாளபடுத்தப்பட்ட  மகளிர் சுய உதவி குழுவினரை நூறு சதவிகித தொழில் முனைவோர்களாக தரம் உயர்த்தாமல், வட்டிக்கு பணம் வாங்குபவர்களாகவும்,  அரசியல் கூட்டங்களுக்கு கூட்டம் சேர்க்கும் படலமாகவும் தமிழக ஆட்சியாளர்களால் இன்றைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இயற்கை விவசாயத்திற்கு தேவையான  மண்புழு உரம், பஞ்சகாவ்யா, மீன் அமிலம் மட்டுமின்றி உயிர்வழி   திட திரவ வடிவ இடுபொருட்களை உற்பத்தி செய்யும் வேலைவாய்ப்பினை  இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால், எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் மக்கள் இயக்கமாக வலுப்பெறும்.

ஒரு விவசாயி உரக்கடைக்கு செல்ல வேண்டியதில்லை என்னும் தன்னிறைவு நிலையை எட்டிவிட்டால், அது அவனுக்கு மட்டுமில்லாமல், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது.

கட்டுரையாளர்; அ.வை.தங்கவேல்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time