பி பி சி நிறுவனத்தில் வருமான வரித்துறையின் ‘ரெய்டு’ பயனற்று போய்விட்டது! பாஜக அரசின் கோழைத்தனம் அகில உலக அளவில் அம்பலப்பட்டுவிட்டது! ஆனால், இந்த ரெய்டை எத்தனை இந்திய ஊடகங்கள் கண்டித்தன? ஆட்சியாளர்களுக்கு ஆலவட்டம் சுற்றும் மீடியாக்களே மோடியாக்களின் பலமாகிவிடுகிறதா..?
இந்த சர்வேயின் முடிவில் தன் முகத்தில் ‘கரி’ பூசப்பட்டுள்ளதை மறைக்க வருமான வரித்துறை ஒரு ” சமாளிப்பு” அறிக்கையை வெளியிட்டுள்ளது.
”பி.பி.சி நிறுவனம் ‘வரி ஏய்ப்பு’ செயத்தற்கான ஆதாரங்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளோம். கிடைத்த ஆதாரங்களை மீண்டும் பரிசீலித்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுப்போம்” என்ற பொத்தாம் பொதுவான “அறிக்கையை ” இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
பி. பி. சி. மீது ஏவிவிடப்பட்ட இந்த நடவடிக்கை ‘ஒரு மிரட்டல்’ நடவடிக்கையே என்பது பச்சிளம் பாலகர்களுக்கும் தெரியும் . குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கை , பி. பி. சி. ஆவணப்படமாக வெளியிட்டதன் விளைவே, இந்த சீற்றம் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. ஆனால் ஊடகங்கள்- தினசரி நாளிதழ்கள் , தொலைகாட்சி சானல்கள் – இந்த சர்வே வருமான வரித்துறை திடீரென்று “வரி ஏய்ப்பை” மோப்பம் பிடித்து அதனடிப்படையில் நடவடிக்கையில் இறங்கியதை போன்று சித்தரித்து “அரசு” கூறும் அப்பட்டமான பொய்யை சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் செய்தி வெளியிட்டு வருகின்றன!
விலை போன ஊடகங்கள் -முக்கிய தினசரி நாளிதழ்களும் சரி, செய்தி ஊடகங்களும் சரி – இந்த அப்பட்டமான உண்மையை – பழி வாங்கும், மிரட்டல் நடவடிக்கையை – வெளியில் கொண்டு வராமல், அரசு ஏதோ சட்டபூர்வமாக செயல்படுவதை போன்ற தோற்றத்தை முன்னிறுத்துகின்றனர்.
ஆனால், இந்த பாய்ச்சலுக்கும் பி.பி.சி. யின் “மோடி” ஆவணப்பட வெளியீட்டிற்கும் சம்பந்தம் உள்ளது என்பதை சங்கிகள் மறைக்கவில்லை!
பா.ஜ.க செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா புது தில்லியில் , “சர்வே” ஆரம்பித்த காலையிலே செய்தியாளர்களை சந்தித்து, பி. பி. சி. உண்மையில் பிரஷ்ட் , பக்வாஷ் கார்ப்பரேஷன் ( ஊழல் மலிந்த நேர்மையற்ற போலி நிறுவனம் பி.பி.சி.) என்றும் .இவர்களுக்கு – மோடியை கேள்வி கேட்கும் பி. பி. சிக்கு- எதிரான இந்திய அரசின் ” நடவடிக்கை” யை பா.ஜ.க. வரவேற்கிறது என்றும் பேசினார்.
அந்த படம் – இந்தியா : தி மோடி கொஷ்டின் என்ற ஆவணப்படம் கோத்ரா கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியின் பங்கு குறித்து விலாவாரியாக பல்வேறு ஆதாரங்களுடன் விவாதிப்பதை பொறுக்காமல் இந்திய அரசு கூச்ச நாச்சம் ஏதுமின்றி அப்படத்தை தடை செய்தது.
ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்று மார் தட்டிய மோடி அரசு நேர்மையான கேள்விகளுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்டவனையே சிறை வைப்பது போல் இந்த ஆவணப்படத்தை தடை செய்தது.
ஜனநாயகத்திற்கு எதிராகவும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராகவும் மோடி அரசின்அடாவடி செயல்களை பக்கம் பக்கமாக பட்டியலிடலாம் அது ஒரு தொடர்கதையாகவே இன்றும் தொடர்கிறது.
“ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண், அதன் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும்” என ஆம் ஆத்மியின் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். “பாஜக வுக்கு எதிராக யார் பேசினாலும், அவர் கள் பின்னால் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை நிறுத்துகிறார்கள். இதன்மூலம் நாட்டின் ஜனநாயக அமைப்பை நசுக்கி, ஒட்டு மொத்த நாட்டையும் தனது அடிமையாக மாற்ற பாஜக விரும்புகிறதா?” என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்!
உண்மையை பேசும் பத்திரிக்கை குழுமங்களின் மேல் அடக்குமுறைகளை ஏவிவிடும் மோடி அரசு பத்திரிக்கையாளர்களை சிறையிலடைப்பதும், தாக்குவதும் பொய்க் குற்றசாட்டுகளை அடுக்கி பொய் வழக்குகள் போடுவதும், மோடி ஆட்சியின் அடையாளமாக தொடர்கிறது.
வருமான வரித்துறை, இ.டி. சி. பி. ஐ. ஆகியவைகளை ஏவி தி வயர் , தி நியூஸ்கிளிக் , டைனிக் பாஸ்கரன் , நியூஸ் லாண்றி போன்ற வலை இதழ்களை மிரட்டுவதும் முடக்குவதும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.
மறுபுறம் செய்தி ஊடகங்கள் (டிவி. சானல்கள்) பத்திரிக்கைகளை அதானி அம்பானி மூலம் விலைக்கே வாங்கி, அவற்றை மோடி அரசின் பொய்களை பரப்பும் ஊதுகுழல்களாக மாற்றுவதும் தொடர்கிறது எனலாம்.
அவ்வாறு “வாங்கப்பட்ட” செய்தி இதழ்கள் மற்றும் டி.வி. சானல்களில் பணிபுரியும் ஆசிரியர்களை, உதவி ஆசிரியர்களை, நிருபர்களை, வழிக்கு கொண்டு வர முயலுவதும் வழிக்கு வராதவர்களை தூக்கியடித்து விரட்டுவதும் ” புதிய நடைமுறையாக” பரிணமித்து வருகிறது.
இதன் மூலம் மோடி அரசின் ” மகிமையை” மட்டுமே இந்திய மீடியாக்கள் பரப்பிக் கொண்டிருந்த வேளையில், ஊடக சுதந்திரம் என்பது அரசை கேள்வி கேட்பதல்ல பாராட்டுவது மட்டுமே என்ற புதிய இலக்கணத்தை மோடி அரசு இங்கு நிலை நாட்டியது.
இந்த அமிர்த கால சூழலில் குட்டையை குழப்புவது போல்,
வெளி நாட்டை சேர்ந்த பி. பி. சி. நிறுவனம் மோடியை பற்றிய கசப்பான உண்மையை ஆவணப்படம் மூலம் இந்திய மக்களுக்கு நினைவூட்டுவதை மோடியால் பொறுக்க முடியுமா?
தடையை எதிர்த்து சிலர் உச்ச நீதி மன்றம் சென்றுள்ளனர்.
இதற்கிடையே மற்றொரு குண்டாக அதானி மோடி ஊழல் பற்றி ‘ஹின்டன்பர்க்’ அறிக்கை வெளிவந்தது.
எதிர்கட்சிகளும், ராகுல் காந்தியும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ” ஜனநாயக காவலர்” மோடி , அவைத் தலைவர்கள் மூலம் ராகுல் காந்தி கேட்ட கேள்விகளையே , கார்கே பேச்சின் ஒரு பகுதியையே அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்தார்!
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் மோடி கும்பலுக்கு பி.பி. சி.யின் ஆவணப்படத்தின் இரண்டாவது பகுதி வெளியீடு மேலும் பல விரும்பத்தகாத கேள்விகளை – மோடிக்கு- எழுப்பியது.
நவீன கால நீரோ- Modern day Nero – என்று மோடியை உச்ச நீதி மன்றம் வருணித்ததை எல்லாம் மறைத்து விட்டு, கோத்ரா கலவரம் சம்பந்தபட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றிய உச்சநீதி மன்ற தீர்ப்பை மறந்துவிட்டு, சரியாக காய்களை நகர்த்தி , சரியான ஆட்களை பிடித்து தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னுக்கு நிறுத்தி பிரதமராகவும் ஆகிவிட்ட மோடி மீது இப்பொழுது குறை கூறுவதா?’ என்று கொதிக்கின்றனர் சங்கிகளும் அவர்களின் தலைவர் மோடியும்.
உள்நாட்டில் மிரட்டல் உருட்டல் மூலம் உண்மையை சில காலம் மறைக்கலாம் ! ஆனால் உலகாத்தார் அனைவரையும் எத்தனை காலம் ஏமாற்றலாம்?
மோடி பற்றி இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பி.பி.சி. யின் ஆவணப்படம் கேள்விகள் எழுப்புகிறது.
அதானியின் பகல் கொள்ளையையும் அதற்கு துணை போகின்ற மோடி பற்றியும் ஹின்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் போட்டுடைத்துள்ளது.
இவ்விரு வெளிநாட்டு அமைப்புகளும் இந்தியர்கள் அறிந்திராத அல்லது இந்திய நாட்டு மக்கள் எழுப்பாத கேள்விகளை , குறைகளை அல்லது குற்றச்சாட்டுகளை புதிதாக எழுப்பவில்லை. உள்நாட்டில் எழுப்பபட்ட கேள்விகளை மதச்சாயம் பூசி வெறுப்பை விதைத்து நீர்த்து போக வைத்த மோடி கும்பல் இன்று அத்தகைய கேள்விகளை வெளிநாட்டு அமைப்பிகள் கேட்கும் பொழுது அவர்கள் மீது பாயத்துடிக்கிறது. அதன் வெளிப்பாடே இந்த வருமானவரி சோதனை, ரெய்டு அல்லது சர்வே!
Also read
எல்லா அரங்குகளிலும் தனது கோரமுகமான சர்வாதிகார போக்கையும் மதச்சார்பையும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்ட இன்றைய ஆட்சியாளர்களுக்கு இனி இரண்டு முகம் தேவையில்லை. எல்லாம் அப்பட்டமானபிறகு இனி ஆர்ப்பாட்டம் தான். ஒளிவதற்கு இடம் ஏதுமில்லை, மோடி அரசுக்கு.
ஆனால், அவர்கள் தங்கள் அரசின் முரட்டு பலத்தை பெரிதும் நம்பியுள்ளனர் என்பது கண்கூடு. ஆனால் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் . டொமினோ எபக்ட் என்பது இயற்கை விதிகளில் ஒன்று , அதை எதிர்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்பது தான்! உங்கள் செயல்பாடுகளுக்கான அடுத்தடுத்த எதிர்வினைகளை நீங்கள் சந்தித்தே ஆக வேண்டும்.
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
கண்டிப்பாக இன்றைய காவிகளின் செயல்களுக்கு வரும் காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்