நம்பகத்தன்மையற்ற ஆதரவற்றோர் இல்லங்கள்!

-சாவித்திரி கண்ண

இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் கைவிடப்பட்ட அநாதைகளாக உள்ளனர். இதில் குழந்தைகளே மிக கணிசமானவர்கள்! இவ்வாறு ஆதரவற்றோர் அதிகரிக்க அரசாங்கம் செய்யும் பார்முலாக்கள் என்ன? தொண்டு நிறுவனங்களில் தொடரும் அநீதிகள்! மர்ம மரணங்கள்! உடல் உறுப்புகள் களவு! இவற்றுக்கு துணை போகும் அரசு நிர்வாக இயந்திரங்கள்!

இந்த நாடு எவ்வளவு பாதுகாப்பற்றதாக உள்ளது, சுயநலமாக உள்ளது என்பது மீண்டும், மீண்டும் நிருபணமாகி வருகிறது! ஆதரவற்றோர் இல்லங்கள் எல்லாம் அராஜகக் கூடங்களாக மாறியுள்ளன! இங்கே உள்ள அநாதைகளின்  பசிக்கும் வயிறுகளுக்கும் உத்திரவாதமில்லை, படுகொலைக்கும் பஞ்சமில்லை என்பது தான் சோகம்!

சமீபத்தில் விழுப்புரம் குண்டல புலியூரில் அன்பு ஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லம் குறித்த செய்தியில் காணாமல் போனது வெறும் 16 பேர் எனத் தெரிய வந்துள்ளது. ஆனால், கடந்த 18 வருடங்களில் சுமார் 4,800 பேருக்கும் மேலாக இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள் என்பதே உண்மை!

இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான பேபிஜான் தம்பதிகள் கைதாவதற்கு சற்று நாள்களுக்கு முன்பு ‘யூவர் ஸ்டோரி டாட் காம்’ என்ற இணைய இதழுக்கு தந்த பேட்டியில், ” 2005 தொடங்கி  நாங்கள் சுமார் 5,000 பேர்களுக்கு சேவை செய்துள்ளோம்” என்றும், ”அதில் மனநிலை பிறழ்ந்த சுமார் 2,000 பேரை குணப்படுத்தி அவரவர் வீடுகளுக்கே அனுப்பி வைத்துள்ளோம்” எனவும், ”சுமார் 1,500 பேரை ராஜஸ்தானில் உள்ள அப்நாகர் என்ற நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்” எனக் கூறியதோடு, ”இறந்து போன முன்னூறு பேரை நாங்களே புதைத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்கள்!

அன்புஜோதி இல்லத்தாரால் புதைக்கப்படும் பிணங்கள்!

வீடுகளுக்கு அனுப்பட்ட இரண்டாயிரம் பேர் யார்,யார்? எந்தெந்த முகவரிக்கு அனுப்பி உள்ளனர். ராஜஸ்தான் அனுப்பப்பட்டவர்களின் நிலை என்ன? புதைக்கப்பட்டவர்கள் யார்,யார் என்பதற்கான விவரங்கள் அவர்களிடம் விசாரிக்கப்பட வேண்டும்.அத்துடன் இறந்தவர்களை அரசாங்க அனுபதி இன்றியும், பொது  மயானத்திற்கு கொண்டு வராமலும்  தாங்களே புதைக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் தந்தது…? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில், இவர்களை பொறுத்த வரை மனநிலை பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் குறித்து தகவல் சொல்ல ஏஜெண்டுகளையே வைத்திருந்தனர். அப்படியானவர்களை அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி வலிந்து தூக்கி வந்துள்ளனர். ‘பிடிவாதம் காட்டுபவர்களை அடக்கி கூட்டி வந்துள்ளதாக’ அவர்களே தெரிவிக்கின்றனர்.

இப்படியானவர்களின் சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை விற்று இவர்கள் லாபம் பார்த்துள்ளனர்! மேலும் சற்று அழகான பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்துதல், மறுப்பவர்களை கடுமையாகத் தாக்குதல் ஆகியவை இங்கே நிகழ்ந்துள்ளன. இவற்றை கேட்கும் போதே நம் நெஞ்சு பதைக்கிறது.

அன்பு ஜோதி இல்ல ஆதரவற்றோர்களை விசாரிக்கும் அதிகாரிகள்

ஆனால், 18 ஆண்டுகள் இவர்களை அரசின் நிர்வாக அமைப்புகள், குறிப்பாக காவல்துறை எப்படி கவனிக்காமல் இருந்திருக்க முடியும்?. காவல்துறையினர் இந்த நிறுவனத்தை பற்றிய புகார்களை விசாரிக்க மறுத்த காரணத்தால் தான் நீதிமன்றம் தலையிட்டு, இந்த உண்மைகள் வெளிவந்தன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆக, காவல்துறையில் இவர்களுக்கு ஒத்துழைத்த கறுப்பு ஆடுகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், காஞ்சிபுரம் சாலவாக்கம் பாலேஸ்வரத்தில் ‘கருணை இல்லம்’ நடத்திய  கயவர்கள் ஒரு பிணத்தை காய்கறி ஏற்றும் வண்டியில் ஏற்றி, அதில் அன்னம்மாள், செல்வராஜ் என்ற முதியோர்களையும் ஏற்றிய போது, அன்னம்மாள் அலறியதால் வெளி உலகுக்கு அது கருணை இல்லம் அல்ல, கர்ண கொடூர இல்லம் எனத் தெரிய வந்தது. அந்த நிறுவனத்தினரும் ஏராளமானவர்களை கொன்று புதைத்துள்ளனர். தமிழக அரசின் கீழ் உள்ள சமூக நலத்துறையின் செயல்பாடற்ற தன்மை அதில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இன்னும் அது தொடர்வதையே தற்போதைய சம்பவமும் காட்டுகிறது! வெளியில் தெரிய வருவது இது போன்ற ஒன்றிரண்டு நிறுவனங்கள் மட்டுமே!

சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

இந்த தொண்டு நிறுவனங்களை நடத்துவர்களில் 98 சதவிகிதமானவர்கள் அடுத்தவர்கள் தரும் பணத்தில் தான் நடத்துகின்றனர். தங்களால் இது போல உடல் உழைப்பையும், நேரத்தையும் செலவழித்து தொண்டு செய்ய முடியாத நடுத்தரவர்க்கத்தினர் இது போன்ற தொண்டு நிறுவனங்களைத் தேடி உதவுகிறார்கள்!

மக்கள் செய்யும் உதவியினால் தான் இவை போன்ற தொண்டு நிறுவனங்கள் செழித்தோங்கி வளர்ந்து பயிர்களையே மேய்ந்து விடுகின்றன. எனில், அரசே மக்களிடம் இருந்து நிதி பெற்று சிறப்பாக இது போன்ற ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தாலாமே! அதே சமயம் ஏற்கனவே உள்ள அரசு தொண்டு நிறுவனங்களில் போதுமான பணியிடங்களை நிரப்பாமல், மிகவும் சீர்கேடாக நடத்துவதையும் காண முடிகிறது! அரசாங்கம் தனியார் நிறுவனங்களையும் கண்காணிக்கவும் மாட்டார்கள், தாங்களும் முறையாக செய்யமாட்டார்கள் என்பது தான் வேதனையளிக்கிறது. அரசாங்கம் திருந்த முன் வருவதைத் தவிர, வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகரித்துக் கொண்டே உள்ளது! அதுவும், தற்போது பாஜக அரசாங்கம் அந்த இடைவெளியை இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு அதிகரிக்க வைத்துக் கொண்டுள்ளது. வறுமை அதிகரித்தால் மனச் சிதைவுகளும் அதிகரிக்கும். ஆதரவற்றோர் பெருகுவர்.

மது, சூதாட்டம் போன்றவைகள் அரசாங்க ஆதரவு பெற்றவையாக மாறியுள்ள சூழலில், குடும்பங்கள் நிர்கதிக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகரித்து விடுகின்றன! அதுவும், தமிழ்நாட்டில் அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகளால் கடந்த இருபதாண்டுகளில் பல லட்சம் இளம் விதவைகள் அதிகரித்ததும், ஆண்களின் உழைப்பு சக்தி உறிஞ்சப்பட்ட நிலையில், வட இந்திய இளைஞர்களின் வருகை பல்கி பெருகியுள்ளதும் கண்கூடு! குடிபோதைக்கு அடிமையான தகப்பனைக் கொண்ட  குடும்பங்களின் குழந்தைகள் தான் அநாதைகளாகின்றனர். ஆன்லைன் லாட்டரி பல லட்சம் குடும்பங்களை சிதைத்துவிட்ட நிலையிலும், அதை தடை செய்ய மத்திய அரசு மறுக்கிறது. இந்தப் பின்னணியில் நாம் கைவிடப்பட்டவர்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெற்ற குழந்தையை காப்பாற்ற வழியின்றி, சாக்கடையில் எறிந்துவிட்டு செல்லும் தாய்மார்கள் நிறைந்த நாடாக இது உள்ளது. ஜெயலலிதா தொடங்கிய தொட்டில் குழந்தை திட்டமும் தற்போது செயல்படுவதில்லை. இவ்வாறாக மிகப் பெரும் எண்ணிக்கையில் கைவிடப்பட்டவர்கள் அதிகரிக்கும் போது, அவர்களை பாதுகாப்பதற்கான தொண்டு நிறுவனங்களின் இன்றியமையாத தேவை எழுகிறது! அதையும் பொறுப்பெடுக்க அரசுகள் தயங்கும் பட்சத்தில் அந்த வெற்றிடத்தை தனியார்கள் வெகுவேகமாக இட்டு நிரப்ப தொண்டு நிறுவனங்களைத் தொடங்கினார்கள்! காளான்கள் போல தொண்டு நிறுவனங்கள் முளைத்து, பற்பல சமூக விரோத செயல்களை சத்தமில்லாமல் செய்து வருகின்றனர்.

துர்அதிர்ஷ்டமாக தொண்டு நிறுவனங்களில் நல்லவர்கள் மிகக் குறைவாகவும், அயோக்கியர்கள் மிக அதிகமாகவும் உள்ளனர் என்பதே யதார்த்தம். என்னுடைய 37 வருட இதழியல் துறை அனுபவத்தில் நான் சந்திக்க நேர்ந்த தொண்டு நிறுவனங்களில் 90 சதமானவர்கள் சரியில்லாதவர்களே! அதுவும் நல்லவர்கள் போலத் தோற்றம் காட்டும் அயோக்கியர்கள் நிறைந்ததே இந்தக் களம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time