ஈரோடு கிழக்கில் தோற்கடிக்கபடும் ஜனநாயகம்!

-சாவித்திரி கண்ணன்

அள்ளிச் சென்று அடைத்து வைக்கப்படும் பெருந்திரள் மக்கள் கூட்டம்! ஒவ்வொரு நாளும் விருந்து, ஒவ்வொரு நாளும் பண மழை, பரிசு பொருள்கள்! ஒவ்வொரு நாளும் கேளிக்கை நிகழ்ச்சிகள்! பல்லில்லாத பாம்பாக தேர்தல் ஆணையம்! மத்திய பாஜக அரசு இதை ஏன் வேடிக்கை பார்க்கிறது? இது தேர்தலா? என்ன நடக்கிறது ஈரோட்டில்?

ஒவ்வொரு வாக்காளருக்கும் 15 ஆயிரம் வரை செலவு செய்யத் துணிந்து விட்டனர்! வெள்ளிக் கொழுசு, குக்கர் .. எல்லாம் விநியோகிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளது! அமைச்சர் நாசரோ ஈரோடு ஆவின் ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு தர உத்தரவிடுகிறார்..! தங்கள் துறைகளில் பணி இடமாறுதலுக்கு சில லட்சம் லஞ்சம் கேட்கும் அமைச்சர்கள் செலவில்லாமல் அதை செய்கிறார்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும்!

இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகள் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்ததில்லை!

பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்திலேயே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு சட்டசபை தேர்தல்களில் ஒன்றில் முதல்வர் பசவராஜின் சொந்த மாவட்டத்திலேயே காங்கிரஸிடம் பாஜக தோல்வியை சந்தித்தது!

இதே போல சமீபத்தில் நடந்த ஒடிசா தாம்நகர் தொகுதியில் ஆளும் பீஜு ஜனதாதளம் தோல்வி கண்டது!

அதற்கு முன்னதாக பாஜக ஆண்ட இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆளும் பாஜக மூன்று சட்டமன்ற தொகுதிகளை காங்கிரசிடம் பறி கொடுத்தது.

இடைத் தேர்தல்கள் இயல்பாக நடந்தால் தான் ஆளும் கட்சி தன்னுடைய ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீட்டை உணர்ந்து கொள்ள வாய்ப்பாகும்! மக்களின் மதிப்பீட்டை எதிர்கொள்ள அஞ்சுவதும், தந்திரமான வழிமுறைகளில் வாக்குகளை பறிக்கத் துடிப்பதும் கோழைத்தனமின்றி வேறல்ல!

ஈரோட்டில் திமுக அமைச்சர்களின் தேர்தல் பிரச்சாரம்!

உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, 2010 நவம்பரில் அமெரிக்காவில் செனட் உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான ஒபாமாவின் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை பெற்றது. ஆனால், அதை படிப்பினையாக ஒபாமா எடுத்துக் கொண்டு சுதாரித்ததால் தான் 2012ல் நடந்த அதிபருக்கான தேர்தலில் மீண்டும் வெற்றிவாகை சூடினார்.

மியான்மரில் 20ஆண்டுகளாக ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வந்த சூழலில், அதுவும் அதை எதிர்த்து போராடிய தேசியலீக் கட்சித் தலைவர் ஆங் சாண் சூயி பல ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த சூழலிலும்  மியான்மரில் ஏப்ரல் 2012 நடந்த இடைத் தேர்தலில் மொத்தமுள்ள 45 தொகுதியில் 44ஐ ஆங்சாண் சூயின் கட்சி வென்றது. இரும்பு கரங்களைக் கொண்டிருந்தாலும் இந்த இடைத் தேர்தல்களில் இராணுவ ஆட்சியாளர்கள் வெற்றிக்காக எந்த தில்லுமுல்லுவையும் செய்யவில்லை. செய்திருந்தால் அதை யாரால் தடுத்திருக்க முடியும்!

ஆனால், தமிழகம் மட்டும் இதில் என்னவோ ஒரு விசித்திரமான விதிவிலக்காக உள்ளது!

2005ஆம் ஆண்டு முதல் இங்கு நடைபெறும் எந்த இடைத்தேர்தலிலும் ஒரு முறை கூட ஆளும்கட்சி தோற்றதில்லை.

மே -2005- காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத்தேர்தலில் பெரும்வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய ஆளும்கட்சி அ.தி.மு.க வெற்றிபெற்றது. இந்த இடைத் தேர்தலில் தான் லட்டுக்குள் மூக்குத்தியை வைத்துக் கொடுத்தது அதிமுக! ஆனால், ஒராண்டுக்கு பிறகு 2006ல் நடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதிகளை அ.தி.மு.க இழந்தது.

இதற்கு பிறகு 2006ல் ஆட்சிக்கு பொறுப்புக்கு வந்த தி.மு.க 11தொகுதிகளில் இடைத் தேர்தல்களை சந்தித்தது. இதில் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக செய்த அத்துமீறல்களை திருமங்களம் பார்முலா என ஊடகங்கள் வியந்தோதின! அதன் பிறகு மதுரை மத்திய மற்றும் மேற்கு தொகுதிகள், பெண்ணாகரம், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பர்கூர், வந்தவாசி, இளையான்குடி, திருச்செந்தூர், கம்பம் என அனைத்து  இடைத் தேர்தல்களிலும் தி.மு.கவே அதுவும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது. ஆயினும் 2011 பொது தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவு பெரும் தோல்வியை கண்டது.

இதே போல் 2011ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க திருச்சி மேற்குதொகுதி, சங்கரன் கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு  போன்ற பல  இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகான ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பணபலம், ஆள்பலம் இரண்டும் இருந்தால் போதும் ஆளும் கட்சியையே தோற்கடிக்கலாம் என டி.வி.வி.தினகரன் நிருபித்தார்! இந்த இடைத் தேர்தலில் திமுக டெபாசீட் பறிகொடுத்தது என்பதை மறக்க முடியாது! அன்று டெபாசீட் பறிகொடுத்த அந்த தொகுதி இன்று திமுகவின் வசம் தான் உள்ளது. ஆகவே இடைத் தேர்தலைக் கண்டு இவ்வளவு அச்சப்படுவானேன்?

மீண்டும், மீண்டும் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்

இது வரையிலும் வந்த தகவல்கள்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் 200 கோடிகளுக்கும் மேல் செலவிட்டதாகச் சொல்கிறார்கள்! மேற்கொண்டு ஒரு நாநூறு கோடிகளை செலவழிக்க போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது! ஆகவே பதிலுக்கு அதிமுகவும் சளைக்காமல் இவர்களுக்கு ஓரளவேனும் போட்டியாக செலவழிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை!

அதுவும் திமுக பத்து, பதினைந்தாயிரம் சதுர அடியில் மிகப் பெரிய தேர்தல் பணிமனைகளை அமைத்து, அங்கே தினசரி மக்களை பேருந்துகளில் அழைத்து வந்து உட்கார வைத்து சினிமா திரையிடல், மற்றும் கலை நிகழ்வுகளை நடத்தி சாப்பாடும் போட்டு, தினசரி 500 தருகிறார்கள் என்பது இந்த இடைத் தேர்தல் மற்றொரு புதிய பரிமாணத்தை எட்டி இருப்பதை உணர்த்துகிறது! இப்படி தொடர்சியாக சுமார் 50,000 மக்களை அழைத்து திருவிழாவைப் போல திரைப்படங்களை திரையிட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தி, பணமும் கொடுக்கும் செயல் பகிரங்கமாக நடப்பதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி வேடிக்கை பார்க்கிறது!

இவ்வளவு பெரிய செட் போடுவது, இவ்வளவு பேரை ஓரிடத்திற்கு பேருந்துகளில் சிஸ்டமேட்டிக்காக அழைத்து வருவது, மணிக்கணக்கில் அவர்களை வைத்திருந்து பணம் பட்டுவாடா செய்வதை ரகசியமாக செய்ய முடியாது. இவை குறித்து பலன் பெற்ற மக்களே காட்சி ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர். டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமான குற்றச்சாட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளன! ஆனால், இதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்! டெல்லி மாநகராட்சி தேர்தலில் நேர்மையான முறையில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியை பதவி ஏற்று பணி செய்யக் கூட அனுமதிக்காத பாஜகவினர், எந்த பதைபதைப்புமின்றி ஈரோடு கிழக்கில் இவ்வளவு அட்டூழியங்கள் நடந்தும் வேடிக்கை பார்ப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் அமலாக்கத் துறை ஈரோடு கிழக்கு தேர்தலில் நடப்பவை குறித்து விரிவான அறிக்கை ஒன்றை டெல்லி தலைமைக்கு தந்தும் இது வரை எந்தப் பலனுமில்லை.

இந்த தேர்தலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இடைத் தேர்தல் வெற்றி, தோல்வி என்பது இருக்கட்டும். மக்களை பிச்சைக்காரர்களாக, சோம்பேறிகளாக, உழைக்காமல் வரும் செல்வத்தின் மீது பற்றுள்ளவர்களாக மாற்றும் இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும். ”நிறைய பணத்தை அள்ளி இறைக்கிறாங்க என்றால், நிறையவே கொள்ளை அடிக்கிறாங்க தானே…” என்றே மக்களும் புரிந்து கொள்கிறார்கள்! ஆகவே, நீங்கள் பணம் கொடுப்பதன் மூலம் அம்பலப்படுகிறீர்கள்! 22 மாதகால உங்கள் ஆட்சியை பற்றி நீங்களே இவ்வளவு வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டீர்கள்!

இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், அது ஆளும் கட்சியை பக்குவப்படுத்தும்! ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும்! ஒரு வகையில் நன்மையே! ஆனால், இடைத் தேர்தலே ரத்தாவது ஆளும் ஆட்சிக்கே இழுக்கு! இது ஜனநாயகத்தின் மீது படிந்த அழுக்கு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time