தீர்ப்பு கிடைத்தது! தீர்ந்ததா பிரச்சினை அதிமுகவிற்கு?

-சாவித்திரி கண்ணன்

உண்மையை உறுதிபடுத்த எத்தனை வாய்தாக்கள், இழுத்தடிப்புகள், மேல் முறையீடுகள் தடைகள்! ஒருவழியாக தீர்ப்பு வந்தாலும், அதிமுக  இக் கட்டுகளில் இருந்து முழுமையாக மீண்டு விட்டது எனச் சொல்ல முடியுமா? பாஜகவும், திமுகவும் ஒபிஎஸை அப்படி முழுமையாக கைவிட்டுவிடுவார்களா?

பொதுக் குழு உறுப்பினர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், கட்சி எம்.எல்.ஏக்களில் 66 இல் 62 பேர், ராஜ்யசபா எம்.பிக்களில் அனைவருமே எடப்பாடி அணி பக்கம் தான் உள்ளனர் என்பதை சீர்தூக்கிப் பார்த்தும் கூட, ஏனோ தீர்ப்பு வெளியாகுமா? அல்லது வருடக் கணக்கில் தொங்களில் விடுவார்களா..? என குழப்பம் இருந்தது என்னவோ உண்மை தான்!

ஆனால், எதிர்பாராத தீர்ப்பு அல்ல! இன்னும் சொல்லப் போனால் இது காலதாமதமே! உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்திவிட்டது என்பதால், எடப்பாடியின் தலைமையிலான அதிமுக இனி நிம்மதியாக இயங்க முடியும் என்று உத்திரவாதம் கிடையாது! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது. ஆனால், அது முழுமையாக விலகியதாக சொல்ல முடியவில்லையே!

பன்னீர் செல்வம் செல்வாக்கில்லாதவர் என நன்கு தெரிந்திருந்தும் கூட அவரை பாஜக தூக்கி சுமந்து பலமுள்ளவர் போல நடத்திய சம்பவங்களை மறக்க முடியாது. எடப்பாடியும்- ஒபிஎஸும் சம பலமுள்ளவர்கள் என்ற மதிப்பீட்டில் இருவரையும் நடத்தியதை கடந்து போய்விட முடியாது! ஒ.பி.எஸுக்கு பாஜக தூண்டுதலில் பல ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் தந்ததை அலட்சியப்படுத்த முடியாது.

 

அதிமுக பொதுக்குழு நடந்து கொண்டிருந்த பின்னணியில் அதிமுக அலுவலகத்தை நோக்கி ஒபிஎஸ் ஊர்வலமாக வந்ததும், அங்கே நின்று கொண்டிருந்த அதிமுக தொண்டர்களை போலீஸ் துணையுடன் விரட்டி அடித்ததையும், அதிமுக அலுவலகத்தை ஒபிஎஸ் கொள்ளையடித்து செல்வது வரை தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததையும் அந்தக் குற்றச் செயலுக்கு இன்று வரை ஒ.பி.எஸ் தண்டிக்கப்படாததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சட்டமன்றத்தில் 66 உறுப்பினர்களில் 62 பேர் எடப்பாடி அணியில் இருந்த போதும் அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் பொறுப்பை சபாநாயகர் அப்பாவு வெறும் மூன்று எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கும் ஒ.பிஎஸ்க்கு தந்த அழிச்சாட்டியத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை எல்லாம் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள மிக உச்சபட்ச அதிகார மையங்களின் அனுசரணை ஒ.பிஎஸுக்கு பரிபூரணமாக இருந்தது என்பதற்கான அத்தாட்சிகளாகும்!

பன்னீர்செல்வம் என்ற பகடைக்காயை சும்மா கையில் வைத்துக் கொண்டிருக்க பாஜக ஒன்றும் பதிவிரதா கட்சியல்ல! திமுகவுக்கும் பன்னீர் செல்வம் பயன்படுவார்.

இந்த அதிகார மையங்களின் மறைமுக அரவணைப்பில் பன்னீர் செல்வம் தனிகட்சி தொடங்க வைக்கவும் வாய்ப்புள்ளது. அவர் மூலம் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா வாக்கு வங்கியையும், முக்குலத்தோர் வாக்கு வங்கியையும் பாஜக வசம் மடை மாற்ற முயற்சிப்பார்கள்! காலமெல்லாம் பாஜகவின் பாதந்தாங்கியாக இருந்து பணிவிடை செய்வதையே பாக்கியமாக நினைக்கும் பன்னீர் செல்வம் மாற்று அரசியல் பேசலாம், புனித வேடம் போடலாம்! தேர்தல் காலத்தில் பன்னீர் கட்சிக்கும் சேர்த்தே சீட் ஒதுக்கச் சொல்லி பாஜக எடப்பாடியின் அதிமுகவை நிர்பந்திக்கும்! ஆக, காலமெல்லாம் பாஜகவிற்கு கட்டுப்பட்டே அரசியல் செய்வதில் எந்த மாற்றமும் அதிமுகவில் ஏற்பட்டுவிடும் என நம்புவதற்கில்லை!

அதிமுகவின் அரசியல் என்ன?

அது திராவிட அரசியலா?

தேசிய அரசியலா?

இந்துத்துவா அரசியலா?

மொத்தத்தில் முதுகெலும்புள்ள அரசியலா?

திமுக எதிர்ப்பு அரசியல் என்று சொன்னால் அதற்கும் அதிமுக லாயக்கில்லை. கள்ளக் குறிச்சி தொடங்கி, வேங்கை வயல் வரை எந்த பிரச்சினையிலும் நீங்கள் ஆளும் திமுகவின் கையாலாகத்தனத்தை கேள்வி கேட்டதில்லை! ஒவ்வொரு துறையிலும் அவரம்பு மீறி கொள்ளையடிக்கும் ஆளும் திமுகவின் அராஜக ஊழல்களை நீங்கள் கேள்வி கேட்கவே முடிவதில்லை! ஏனென்றால், உங்கள் ஊழல்களுக்கு நீங்கள் தண்டிக்கப்படாமல் இருக்க திமுகவிடம் பேர அரசியல் செய்துவிட்டீர்கள்!

திமுக பல விவகாரங்களில் பாஜகவின் கொள்கைகளை அமுல்படுத்துவதையாவது தட்டிக் கேட்கும் துணிச்சல் அதிமுகவிற்கு இருக்கிறதா? மக்கள் உடல் நலனுக்கு கேடு தரக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரித்த செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷனில் தருவதையாவது தடுத்து மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியுமா எடப்பாடியின் அதிமுகவால்?

உண்மையைச் சொல்லப் போனால், தமிழகத்தில் அதிமுகவின் நான்கு அணிகள் மட்டுமின்றி திமுகவுமே கூட பாஜகவிற்கு பணிந்ததொரு அரசியலைத் தான் செய்து கொண்டுள்ளன. பாஜகவை முற்றிலும் புறம் தள்ளி மக்களுக்கு ஆதரவான அரசியல் செய்வதற்கான பலமான கட்சியே தமிழகத்தில் இல்லையே. அதற்கு அதிமுகவை தகுதிபடுத்தும் துணிச்சல் உண்டா எடப்பாடி பழனிச்சாமிக்கு?

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியைக் காட்டிலும், பொதுநலனை விடவும்  தன் சொந்த சாதியின் நலன்களே முக்கியம் என்பது பகிரங்கமாக அம்பலப்பட்டுவிட்டது!

அதிமுக உயிர்த்திருப்பதற்கு ஆதாரமான திமுக எதிர்ப்பயையும் இவர்களால் வலுவாக செய்ய முடியாது! தங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் பாஜகவிடம் இருந்தும் விடுபட முடியாது! பொது நலன் சார்ந்து இயங்கும் மன நிலையும் முற்றிலும் கிடையாது! சேர்த்த பணத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் அதிகாரமாக மட்டுமே உங்களுக்கு அதிமுக தேவைப்படுகிறது!

ஆக, தீர்ப்பு வந்துவிட்டதே என மகிழ்ந்து கொண்டு தங்கள் நிலைமையை குறித்து அதிமுக தலைமை சுய பரிசீலனை செய்ய வேண்டும்.

பொதுவாக அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பை எடப்பாடி வளர்த்துக் கொள்வாரா என்பது தெரியவில்லை. பன்னீர் செல்வத்துடன் இருக்க முடியாதவர்கள் காலப்போக்கில் தாய் கட்சிக்கு வந்தால் தயங்காமல் அரவணைப்பாரா என்பதையும் போகப் போகத் தான் பார்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time