‘சத்து சேர்க்கப்பட்ட அரிசியை தருகிறோம்’ என்பதாக செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் அரிசியில் கலந்து தருகிறார்கள்! இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அயோடின் கலந்த உப்புத் திணிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன்கள் என்ன..? என விளக்குகிறார் இயற்கை வேளாண் ஆய்வாளர் பாமயன்.
அது என்ன செறிவூட்டப்பட்ட அரிசி ((fortified rice) இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் ரத்தசோகை, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு உள்ளதால், அவர்களுக்காக அதில் இரும்புச் சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ரசாயனங்களைச் சேர்த்து சத்து உண்டாக்கி செயற்கை அரிசியை உருவாக்கி, அதை ரேஷன் அரிசியோடு கலந்து தருவார்களாம்! இப்படியாக பொது வழங்கல் முறை மூலம், மாநில அரசுகளின் நிதியையும் எடுத்துக் கொண்டு ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது!
இது மட்டுமல்ல, இப்படி செய்யப்படும் அரிசியில் சேர்ப்பதற்கான சத்துக்களை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து முதல் கட்டமாக சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு வாங்கி அரிசியில் சேர்த்துத் தந்து கொண்டுள்ளனர்.
‘சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே’
இப்படியாக கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படையில் அழைக்கின்றார்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பொருநராற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நெல் வகை இப்போதும் அரத்த சாலி என்ற பெயரில் நமது உழவர்களின் முயற்சியால் சாகுபடிக்கு வந்துவிட்டது. நெல்லும் சிவப்பு, அரிசியும் சிவப்பு.
முக்கூடற்பள்ளு, சித்திரக்காலி முதல் புனுகுச் சாம்பா வரையான சத்தான 23 நெல் வகைகளைப் பட்டியலிடுகின்றன. இப்படியாக தொல்காப்பியம் முதலாக முக்கூடற்பள்ளு வரையான பண்டைய இலக்கியங்கள் நெல்லைப் பற்றியும் அதன் தன்மைகள் பற்றியும் குறிப்பிடுகின்றன.
நெல் என்பது தமிழ் மக்களின் மிக முதன்மையானதும் மதிப்பிற்குரியதுமான உணவு. தினை முதலிய சிறுதானியங்கள் இருந்தாலும், நெல் மீதான காதல் தமிழர்களுக்கு அளவிடற்கரியது.
இப்படியாக செந்நெல் என்றும் வெண் நெல் என்பதாகவும் தமிழ் மண்ணில் தழைத் தோங்கிய மிக சத்தான நெல் வகைகளை பசுமை புரட்சி என்ற பெயரில் அழித்து, செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குட்டைரக செயற்கை நெல் விதைகளை திணித்தார்கள்! அதற்காக ரசாயண உரங்களை போட நிர்பந்தித்தார்கள்! இதனால் மண்ணும் மலடானது. அரிசியின் சத்தும் குறைந்தது. ஆக, இதைக் காரணம் காட்டி, தற்போதோ செறிவூட்டப்பட்ட அரிசி!
இம் மாதிரியான கருத்துக்களின் ஊற்றுக்கண் எதுவாக இருக்கிறது என்றால், உலக சுகாதார நிறுவனமும் அதன் துணை அமைப்புகளாகவும் உள்ளன. குறிப்பாக பில் கேட்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கு வழங்கும் நிதிகளின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. முன்னர் அரசுகள் அளித்த நிதியில் ஐ.நா. நிறுவனங்கள் தனித்தன்மையுடன் இயங்கி வந்தன. தற்போது நிதி ஆதாரங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்து இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உண்மையில் இந்த செயற்கை அரிசிக்கு ஒதுக்கும் தொகையை மரபான பாரம்பரிய அரிசிகளுக்கு ஒதுக்கினால் பல நூறு உழவர்களுக்கும் பயன்கிட்டும், மரபு நெல்லினங்களும் பாதுகாக்கப்படும், மக்களுக்கும் சத்தான அரிசி உள்ளூரிலேயே கிடைக்கும்.
ஆனால், ஒன்றிய அரசு 5 பெரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 3,000 கோடி ரூபாய்களை அள்ளி வழங்குகிறது (பார்க்க. டவுண் டு எர்த், செப். 2019).
உலகம் முழுவதும் இந்த மாதிரியான செயற்கை ஊட்டமேற்றும் முறைக்கு எதிர்ப்புகள் உருவாகி வருகின்றன. அனைத்து மக்களும் உண்பார்கள். யாருக்கு என்ன சிக்கல் ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. ரசாயனங்களை உணவில் சேர்க்கும்போது அளவுக்கு அதிகமானால் அதுவே நஞ்சாக மாறிவிடும். என்று அமெரிக்கன் சர்னல் ஆப் கிளினிக்கல் நுட்ரீசியன் தெரிவிக்கிறது.
(https://academic.oup.com/ajcn/article-abstract/114/4/1261/6329768?redirectedFrom=fulltext)
இப்படிக் கோடி கோடியாக அள்ளித் தந்து வைட்டமின் பி-12 என்ற சத்தை வாங்குகிறார்களாம்! அரிசியை பழைய சோறாக்கிச் சாப்பிட்டால், அல்லது நீராகாரம் குடித்தால், ஏன் கேப்பைக் கூழ், கம்பங்கூழ் குடித்தால் வைட்டமின் பி-12 சாதாரணமாகக் கிடைக்கும்! இதை நாம் சொல்லவில்லை. அரசு உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.

பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தையும் கூழ் குடிக்கும் பழக்கத்தையும் நம்மிடம் இருந்து இழிவுபடுத்தி விரட்டியது யார்? அதற்கு எதற்கு 3000 கோடி ரூபாய்கள்? அந்தப் பழக்கத்தை மீட்டு விட்டாலே போதுமல்லவா?
அடுத்தாக இரும்புச் சத்தை செயற்கை அரிசி (செறிவூட்டப்பட்ட அரிசி) மூலம் தரப்போகிறோம் என்கிறார்கள்.
பொதுவாக தீட்டாத அரிசியில் இரும்புச் சத்து உண்டு, அதிலும் சிகப்பரிசி யாவற்றிலும் இரும்புச் சத்து இன்னும் கூடுதல் உண்டு, கருப்பு நெல்லிலும் உண்டு. கருங்குறுவை என்ற அரிசியில் மற்ற அரிசியைவிட ஆறு மடங்கு இரும்பச் சத்து கூடுதலாக உள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக, பழைய சோற்றுக்கு மாறினால் 3,000 கோடி ரூபாய் மிச்சம். இந்தச் தொகையை மரபு நெல்லினங்களைப் பாதுகாத்து, உண்மையிலேயே இயற்கை சத்து கொண்ட அரிசியைப் பெறப் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக, முருங்கைக் கீரையில் இவர்கள் கூறும் அனைத்துச் சத்துகளும் உள்ளன. இதற்கு எந்த இறக்குமதியும் செய்ய வேண்டாம். ஒரு கிலோ அரிசியில் 28 மி.கி இரும்புச் சத்து உள்ளது. ஆனால், முருங்கை கீரையில் ஒரு கிலோவிற்கு 54.9 மி.கி. இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
(பார்க்க: https://ejmcm.com/pdf_2965_60490be228805e96a5f29fbb7010be58.html)
தீர்வுகளை எத்தனையோ செலவில்லாத இயற்கையான வழிகளில் தேடுவதை விட்டு, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் லாபம் தரும் முறையைக் கையாளுவது நாட்டிற்கு நல்லதல்ல. ஜெர்மனியின் பிஏஎஸ்எப், சுவிட்சர்லாந்தின் லான்ட்சா, பிரான்சின் அடிசியோ முதலிய ஐந்து நிறுவனங்களுக்கு மட்டும் பெரும் நிதி அளிக்கப்படவுள்ளன.
‘ஒற்றைமயத்தின்’ கூறான ‘ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு’ மூலம் சில பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பெறப் போகின்றன. ஆனால், அல்லும் பகலும் உழைத்து, சத்தான மரபின பாரம்பரிய நெல்லை உருவாக்கும் பரந்துபட்ட மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை.
இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல் உணவுப் பொருளில் வலிவூட்டும் முறையை கடுமையாக எதிர்த்துள்ளது. அதன் மேலாண்மை இயக்குநர் ஜோதி இதழ்களில் பேட்டியளித்துள்ளார். அதற்காக இந்த நிறுவனத்தை FSSAI மிரட்டிய செய்திகளெல்லாம் வந்தன.

டெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்து அறிவியல் நிறுவனத்தைச்( எய்ம்ஸ் நிறுவனம்) சார்ந்த டாக்டர் உமேஷ் கபில் என்ற மருத்துவ நிபுணர், ”செறிவூட்டப்பட்ட உணவை எடுத்துக் கொள்வதால் சத்துக் குறைபாடு சரியாகும் என்று எந்த மெய்ப்பிக்கக்க ஆய்வுகளும் இல்லை” என்று கூறுகிறார். (Dr. Umesh Kapil of the department of gastroenterology and human nutrition unit at the All India Institute of Medical Sciences, Delhi)
அனைத்துத் திட்டங்களையும் மையப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தையும் ஒன்றிய அரசு நோக்குவதாகத் தெரிகிறது. இதனால் மாநிலங்களின் தனித்த உணவுப் பண்பாட்டிற்கு ஊறு ஏற்படும்.
அனைவரையும் ஒரேமாதிரியான உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. தமிழர்கள் அரிசி உண்கிறார்கள் என்பதற்காக உலகில் உள்ள அனைவரும் அரிசிதான் உண்ண வேண்டும் என்று அடம்பிடிக்கலாகாது.

ஒன்றிய அரசை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையான சுதேசி சாக்ரன் மஞ்ச் என்ற அமைப்புமே கூட இந்த செறிவூட்டும் அரிசிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
அனைத்தையும் சந்தையாக்குவது என்பது ஆபத்தானது, குறிப்பாக உணவும், உடல்நலமும் அறமற்ற சந்தைக்குள் வரும்போது, அது சீர் செய்ய இயலாத ஆழமான கேடுவிளைவுகளை ஏற்படுத்தும்.
குறிப்பிட்ட காலத்தில் செய்து முடித்துவிட்டு, அடுத்த வேலைக்குப் போவதற்கு இஃது எழுத்தறிவு போன்ற திறன் கொடுக்கும் திட்டமல்ல, தொடர்ந்து தர வேண்டிய பணியாகும். இதில் தற்சார்பும் நன்னலமும் மிக முதன்மையானவை.
இந்தச் செயற்கை அரிசியை இருப்பு வைக்கும் போது அதிலுள்ள வைட்டமின் போன்ற சத்துக்கள் நாளடைவில் குறைவதை கம்போடியாவில் செய்த ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த செயற்கை அரிசி சத்துகளின் ஆயுட்காலம் 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் மூன்று மாதத்தில் காலாவதியாகும் பொருளை எப்படி ரேசன் கடைகளில் வழங்க முடியும்? இதற்கெல்லாம் பதில் இல்லை

அரிசி, பால், கோதுமை, சர்க்கரை என்ற மக்களின் அத்தியாவசியமான உணவுகளை சத்துக்களை சேர்க்கிறோம் என்ற பெயரில் பெரும் வணிக நிறுவனங்களின் கைகளில் சேர்ப்பதானது நமது உணவு இறையாண்மையை இல்லாமல் ஆக்கிவிடும்.
இப்படியாக எளிய மக்களின் உணவு மற்றும் உடல் நலனை அபகரிக்கும் பணியில் சர்வதேச நிறுவனங்களான PATH, பில்கேட்டிசின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசன் போன்ற அமைப்புகள் ஈடுபடுகின்றன..
இவை உலகம் தழுவிய கருத்தியலை, தங்களுக்கான தரவுகளை உருவாக்கிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக டால்பெர்க் (Dalberg) என்ற நிறுவனம் இந்தியாவில் 70 விழுக்காடு மக்கள் சத்துக்குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்று தெரிவிக்கிறது. ஐஜேஎம்ஆர் கட்டுரையில் எங்கும் அந்தத் தகவல் இல்லை. அதன் முன்னுரையில் முன்பு இருந்த சத்துக்குறைபாட்டு அளவான 50-60 விழுக்காடு குறைந்து கொண்டு வருகிறது என்றுதான் குறிப்பிடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டு குழந்தைகளில் கடும் சத்துப் பற்றாக்குறை 1% அளவிற்கே உள்ளது. ஆனால், ஓரளவு சத்துக் குறைபாடு 40 முதல் 50 வரை உள்ளது. இப்படியாக தரவுகளை தங்களுக்கு ஏற்ப மாற்றி, ஒரு கருத்தை உறுதி செய்ய முனையும் அமைப்புகள் அரசுக்கு ஆலோசனை கொடுத்து நிர்பந்திக்கின்றன!
சமீபத்திய வரலாற்றில் கல் உப்பிற்கான தடையைப் பற்றிப் பார்ப்போம். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பே கல் உப்பை விற்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். ஆங்கிலேயர் உப்பிற்கு வரி விதித்தபோது, அதை முறியடிக்க உப்புக் காய்ச்சும் போராட்டத்தை காந்தியடிகள் முன்னெடுத்தார். அவரது பெயரால் விடுதலை பெற்ற இந்தியா, கடலில் இருந்து சாதாரண மக்கள் உப்பைக் எடுத்து விற்க முடியாத நிலைக்கு போனதை நினைத்து அழுவதா? சிரிப்பதா என்று தெரியவில்லை.

இந்தியாவின் தேவையான 60.5 லட்சம் டன்னில் 59.7 லட்சம் டன் உப்பில் அயோடின் சேர்த்து சந்தையில் விற்கப்பட்டு வருவதாக உப்பு ஆணையர் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. ஆக, நாம் சந்தையில் வாங்கி சாப்பிடும் கல் உப்பில் ஏறத்தாழ 99 விழுக்காடு அயோடின் கலக்கப்பட்ட உப்பு தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியானால், இந்தியாவில் மக்களுக்கு அயோடின் பற்றாக்குறை அறவே இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இந்தியாவில் அயோடின் பற்றாக்குறை இல்லாத ஒரு மாநிலம் கூட இல்லை என்று தேசிய குடும்பநலக் கணக்கீடு தெரிவிக்கிறது. இது மட்டுமின்றி, இந்த அயோடின் கலந்த உப்பை உட்கொள்வதன் மூலம் பல புதிய உடல் நலப் பிரச்சினைகள் மக்களுக்கு உருவாகியுள்ளன!
கடந்த 11 ஆண்டுகளாக சட்டம் போட்டு சாதாரண உப்பை மக்கள் உண்பதை தடுத்து விட்டார்கள். உப்பு விற்பனையில் ஆண்டுக்கு 1,080 கோடி ரூபாய்கள் வரை சாதாரண உப்பளத் தொழிலாளர்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு பெருந்தொழிற்சாலைகளுக்கு கைமாற்றப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
Also read
அயோடின் உப்பைப் பற்றிய வழக்கு உச்சநீதி மன்றத்தில் வந்தபோது ‘கல் உப்புக்கு தடை’ என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. சாதாரண உப்புடன் அயோடின் சேர்ப்பது கலப்படம் என்று நீதிமன்றம் கூறியது. அது செறிவூட்டப்பட்ட அரிசிக்கும் பொருந்தும். சாதாரண அரிசியை வாங்குவதற்கான உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு. அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு, அனைத்து மக்களும் வாங்கும் பொது வினியோகத் திட்ட அரிசியில் ஊட்டம் சேர்க்கிறேன் என்ற பெயரில் ‘கலப்படம்’ செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.
நாம் தீர்வுகளை நம்மிடமிருந்து தேடுவதைவிட்டுவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தேடுகின்றோம். இது தற்சார்புக்கு வழி வகுக்காது!
கட்டுரையாளர்; பாமயன்
இயற்கை வேளாண் ஆய்வாளர், எழுத்தாளர், முன்னோடி இயற்கை விவசாயி.
மக்கள் போராட்டத்தால் கலவரப் படும் அரசில்லையே.
The information about fortification of rice and salt process systematically implemented by govt.
Knowingly the traditional nutrious rice and stone salt is neglected.
Good awareness creation among pupil by reading “Aram online”
Thanks,awaits more awarness information wattsup 9382617000
டேய் கண்டாரோலி… மொதோ திமுகவ எதிர்த்து ஒரு கேள்வி கேக்க துப்பிருக்கா நாயே
மிகவும் உபயோகமான பதிவு
இது போன்ற விழிப்புணர்வு கட்டுரைகள் மிகவும் அவசியம்
Super
மதமாற்றி நாயி கு பேரு அறம்
Nammala sagadikirathe intha government tha