நவ நாகரீக நச்சு வாழ்க்கைக்கு மாறும் பழங்குடிகள்…! சிவசுப்பிரமணியன் நேர்காணல் (பகுதி-1)

நேர்காணல் செழியன்.ஜா

 சமீபகாலமாக காடுகளும்,பழங்குடிகளும் அங்கு அத்துமீறி ஊடுருவிய நகரவாழ்மக்களால் சுரண்டப்படுகின்ற அவலத்தையும்,அங்குள்ள வளங்கள் சூறையாடப்பட்டு,அவர்கள் நகரமக்களின் வாழ்வியல் தேவைக்கேற்ப ஆட்டிவைக்கப்படுவதுமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக காடுகளில் சுற்றி அலைந்து,பழங்குடிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை எழுதி வரும் பத்திரிகையாளர் சிவ சுப்பிரமணியன் அறம் இதழுக்காக ஜா.செழியனுக்கு தந்த நேர்காணல்.

அடிப்படையில் இந்த பூமி காடு,மலைகள் சூழ்ந்ததாகவே இருந்தது. காட்டைப் பண்படுத்தி விவசாய பூமியாக்கினான் மனிதன். காலப்போக்கில் காடு,மலையை விட்டு மனிதன் விலகி வந்து தனக்கான வாழும் பகுதியை  உருவாக்கி  கொண்டான். அவற்றை நகரம் என்றழைக்கிறோம் . அங்கு வாழ்பவன் அறிவு உடையவன், படித்தவன், நாகரிகம் தெரிந்தவன் என்று தன்னை   அடையாளப் படுத்திக் கொண்டான். நகரத்திற்கு வராதவன், காட்டில் மட்டுமே   வாழ்பவன்   பழங்குடி, ஆதிவாசி என்று அடையாளப்படுத்தப்பட்டான். நகரத்தில் வாழ்ந்த மனிதன் அப்படியே வாழ்ந்து இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், மீண்டும் அவன் காடுகளை நோக்கிச் செல்ல தொடங்கினான்.

இப்பொழுது அவன் காட்டை பணம் ஈட்டும்  இடமாகப் பார்க்கிறான். இயற்கையின் விலைமதிப்பில்லா கொடைகள் பலவற்றுக்கு விலையை நிர்ணயித்துக் கொண்டுள்ளான். பசுமை போர்த்திய இடங்களும், அங்கு வாழும் விலங்குகளும் அவன் கண்களுக்கு  வியாபார பொருட்களாகத் தெரியத் தொடங்கியுள்ளது.

காடு இந்த உலகின் நுரையீரல் என்பதை முற்றிலும் மறந்து மேலும் மேலும்  சுரண்டிக் கொண்டு இருப்பதைக்   காட்டுத் தடத்தில் நீண்ட அனுபவம் உடைய, பழங்குடிகளிடம் பழகிய, நான் பார்க்கையில் பதறியுள்ளேன். இந்த நேர்காணலில் நான்  பழங்குடிகளின்  வாழ்க்கைமுறை,அங்கு நகர மக்கள்  செய்கிற நாசவேலைகள், விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக அரசாங்கம் செயல்கள், வீரப்பன் இருந்தபொழுது வேட்டைக்காரர்களின் நிலை  என்று காட்டின் முழு பரிமாணத்தையும் விரிவாகவே விவரிக்க விரும்புகிறேன்.

 பழங்குடிகளின் வாழ்வியல்

பழங்குடிகள் இயற்கையோடு இயைந்த மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள். இயல்பாகவே ஆரோக்கியமாகத் திகழ்பவர்கள்.குறிப்பாக அறிவு பெற்றதாகக் கருதிக் கொள்ளும் படித்த மனிதர்களிடம் இருக்கும் அகம்பாவத்தை அவர்களிடம் காணமுடியாது. அவர்கள் சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் தங்களை முடக்கி கொள்ளமாட்டார்கள் என்பதற்கு ஒன்றைச்   சொல்லலாம். கணவனை இழந்த பெண்ணுக்கு உடனே மறுமணம் செய்து வைப்பார்கள்.   பெரும்பாலும்  50 வயதிற்குள் உள்ள கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வார்கள்.. அதற்கு மேற்பட்ட வயது உள்ள பெண்கள் மறுமணம் செய்து கொள்ள விரும்பு வதில்லை.  இவை அந்த மக்களின் அனைத்து இனத்திலும் பார்த்து உள்ளேன்.. இதை மிகச் சிறந்த வாழக்கைமுறை என்று சொல்லலாம். பல ஆயிரம் வருடங்களாக இந்த முறை உள்ளது. ஆனால் நாகரிக மனிதர்கள் உலகில் 50 வருடங்கள் முன்பு வரையிலும் கூட இப்படி மறுமணம் செய்வது என்பது கடினமே. ஏன் இப்பொழுதும் கணவனை இழந்தவர்களுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களா என்பதும் கேள்விக் குறியே? தனக்கான போலி மதிப்பீடுகளை உருவாக்கத் தெரியாத  பழங்குடி சமூகத்தைப் பார்த்துத் தான் நாம் காட்டுமிராண்டி என்று சொல்கிறோம்.

 இன்னும் ஒரு சிறப்பான பண்பு என்னவென்றால், பெண் வீட்டார்  மாப்பிள்ளை  வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டாம். பையன்  நல்லவனா  என்று பார்ப்பார்கள். பொருளாதார அளவுகோல் அவர்களிடமில்லை. என்ன ஒரு சிந்தனை பாருங்கள். கூடவே, இன்றைய படித்த நாகரிக உலகம் நிலைமையை   நினைத்துப் பாருங்கள்… இவையெல்லாம் பழங்குடிகளின் சிறந்த பண்பிற்கு ஒரு சில எடுத்துக்காட்டு  மட்டுமே. பழங்குடி மக்களின் வாழ்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவே அதிகம் உள்ளன.

மாடுதான் பழங்குடிகளின் சொத்தாகும். ஆறு, எட்டு மாடுகள் இருந்தால் அந்த குடும்பம் முழு வாழ்க்கையும் இந்த மாடுகளை வைத்தே வாழ்ந்து விடும்! பழங்குடிகளுக்குப் பால் பயன்பாடு மிகக் குறைவே. மாட்டின் பால் கன்றுகளுக்கு மட்டுமே என்ற உயர்ந்த கொள்கையை வைத்து உள்ளார்கள். பாலை கறந்து விற்பதோ, பயன்படுத்துவதோ கிடையாது. வேண்டுமென்றால்,  சிறிது பாலை பயன்படுத்துவார்கள். நாம் சென்றால் நமக்குத் தேநீர் கொடுக்க பாலை பயன்படுத்துவார்கள். மற்றபடி பால் கன்றுக்கே என்பதில் உறுதியாக இருப்பார்கள். பாலை வியாபார பொருளாக, பணமாகப் பார்ப்பதில்லை. ஒரு மாடு வருடம் ஒரு கன்று ஈனும். இப்படி அவர்களிடம் இருக்கும் ஆறு, ஏழு மாடுகள் சுழற்சியில் முறையில் கன்று ஈனும். அவை வளர்ந்து சந்தையில் விற்பனை செய்வதன் வழியாக வரும் வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்கையை  நடத்தி விடுவார்கள்.

மாடு வளர்ப்பையடுத்து ஆடு வளர்ப்பில் அதிகம் கவனம் வைப்பார்கள். தாங்கள் பயிர் செய்யும் சோளம், ராகி, கம்பு போன்றவற்றை தங்களின் உணவு   தேவைக்குப் போக மீதியைக் கால்நடைகளுக்கு போடுவார்கள்.

திருட்டு என்பதே இல்லை..

திருட்டு என்பது அவர்களின் வாழ்கையில் இல்லை. வீட்டைப் பூட்டுவது கூட இல்லை.  அப்படி பூட்டவேண்டும் என்றால் நாய் போன்ற விலங்குகள் வீட்டிற்குள் செல்லாமல் இருக்கவே பூட்டுவார்கள். தங்கம் வாங்குவது. அதற்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பது. வாங்கிய தங்கத்தைக் கொண்டு மாப்பிள்ளை வீட்டாருக்கு  வரதட்சணையாகக் கொடுப்பது எல்லாம் படித்தநாகரிக 

சமூகத்திற்குத்தான். கொஞ்சம் வரதட்சணை குறைந்தாலும் நிறையத் திருமணங்கள் நின்றும் உள்ளது. இந்த தங்க மோகம் இல்லாத மக்கள்தான் பழங்குடிகள் சமூகமாகும். காரணம் வரதட்சணை என்பதே அங்கு இல்லை.

நம்மைப் போல் நாள் முழுவதும் பொருளீட்டுவதற்கான அலைச்சல், சொத்து சேர்க்க வேண்டும் என்ற முனைப்பு வருடம் முழுவதும் வீட்டிற்குக் கூட அதிகம் வராமல் வியாபாரத்திலே குறியாக இருப்பது, கடனால் ஏற்படும்  பதற்றம், தற்கொலை போன்றவை பழங்குடிகளின் வாழ்க்கையில் இருப்பதில்லை. உணவுத் தேடல் அதற்கான உழைப்பு, மாடு, ஆடு மேய்தல் என்பதே தின வாழ்க்கை முறையாகும். படத்தில் இருப்பவரின் சிரிப்பைப் பாருங்கள் முகத்தில் கவலை ரேகையே இருக்காது.

 விலங்குகள், பறவைகளுக்கு வாழ்க்கை எப்படி உள்ளதோ அதே போன்றே  பழங்குடிகளும் சுதந்திரமான ஒரு வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். அதாவது, இயற்கை வாழ்க்கை முறை. நான்கு முதல் ஆறு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் இரண்டு, மூன்று குழந்தைகள் இறந்துவிடும். இறந்த குழந்தைகளை முறையாக அடக்கம் செய்து விட்டு சில நாட்களிலேயே தின வாழ்க்கையில் கவனம் செலுத்துகிறார்கள். நினைவு தினம் அனுசரிப்பது, படம் மாட்டி வழிபடுவது என்பது எல்லாம் இல்லை. இறந்தவர்களை நினைத்தே பல வருடங்கள் வாழ்கையை கடத்துவதில்லை.அதாவது ரொம்ப பிராக்டிகலானது அவர்கள் வாழ்க்கை!

 எளிமையான வாழ்க்கை முறை 

பெண்ணாகரம் மக்கள் தங்கள் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராகக் கடுகை விளைவிப்பார்கள். காட்டில் உள்ள விறகுகளை முறையான அனுமதியுடன் வெட்டி குதிரை மீது வைத்து சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வார்கள்.  அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வார்கள். குதிரை பராமரிப்பு என்றெல்லாம் அதிக செலவு செய்வதில்லை. காட்டில் மேய விட்டு விடுவார்கள். தேவையான உணவைக் குதிரை மேய்ந்து சாப்பிட்டு அப்படியே காட்டை சுற்றி வரும்.

 ராகி பத்து 

உணவுப் பொருட்களை விட இன்று மிகப் பெரிய விற்பனை பொருள் மருந்துகள், மருத்துவம் ஆகும். நகர மனிதர்கள் 50 வயதிற்குப் பின்பு  மருத்துவமனைக்குச்  செல்வதே முக்கிய வேளையில் ஒன்றாகும். பழங்குடிகளின் மருத்துவம் மிக எளிமை. 90 சதவிகிதம் அவர்களே காட்டில் இருக்கும் மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் பார்த்துக் கொள்கிறார்கள். எலும்பு முறிவு ஏற்பட்டால் மட்டுமே பெரும்பாலும் மருத்துவர்களைத் தேடி சமவெளிக்கு வருகிறார்கள். பெண்மணி ஒருவர் தன் குழந்தைக்குத் தலையில் ராகி பத்து போட்டு இருந்தார். இது எதற்கு? என்று  கேட்டதற்குக் குழந்தைக்குக் காய்ச்சல், அதனால் ராகி பத்து போட்டு  இருக்கேன்.ஒரே நாளில் குணமாகிவிடும் குழந்தை என்றார். இந்த பதில் ஆச்சரியமாக இருந்தது. நாம் இவற்றையெல்லாம் நினைத்துக் கூட   பார்த்திருக்கமாட்டோம். இதுதான் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையாகும். நுகர்வு கலாச்சாரம் இல்லாமல் முழு இயற்கை சார்ந்த கலாச்சாரம் உடையவர்கள்.

மலையில் ஏற்பட்ட பயிர் மாற்றங்கள் 

பழங்குடிகளின் மலைப்பயிர்களை நிறுத்தச் செய்து, சமவெளி மக்களின்   பயிர்களைப் பயிரிடச் செய்த நகர மனிதர்கள். அதனால் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது என்று பார்ப்போம். 

இன்று தாளவாடி மலையில் முட்டைகோஸ், உருளை, தக்காளி, கத்திரி பயிர் இடத் தொடங்கி விட்டார்கள். தருமபுரி பகுதியில் உருளை அதிகம் பயிரிடுகிறார்கள்.  கல்வராயன் மலை, கொல்லி மலையில் மரவள்ளி  பயிரிடுகிறார்கள். இப்படி பழங்குடிகளின் பயிர்கள் குறைந்து நகர மனிதர்களின் பயிர்கள் அதிகம் ஆகிவிட்டது. விரும்பி இந்த பயிர்களைப் பயிரிடவில்லை நாம் அவர்களின் இடங்களுக்குச் சென்று அந்த இடங்களை வாங்கி அங்கு வாழும் மக்களை  நம் பணியாளர்களாக மாற்றிவிட்டோம். மற்றும் அந்த இடங்களுக்கே உரித்தான மலைப் பயிர்களை மாற்றி, சமவெளி பயிர்களை அறிமுகப்படுத்தியதன் விளைவே அங்கும் நோய்கள் வருவதாகும்.

மலைவாழ் மக்கள் சமவெளி மக்களைக் கீழ் நாட்டினர் என்று அழைப்பார்கள். கீழ் நாட்டு மக்கள் வந்துவிட்டார்கள் என்றே பேசுவார்கள். இவர்களால் தங்களுக்கு ஆபத்து என்று நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இருந்தாலும் பலவித செயல்கள் வழியாக அவர்களின் மொத்த வாழக்கையில் மாற்றங்களை உருவாக்கி விட்டோம்.

 உணவில் வந்த மாற்றங்கள்…

ராகி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவையே மலை மனிதர்களின் முக்கிய உணவு. இந்த பயிர்களையே பயிர் செய்தும் வந்தார்கள். இவற்றை முதன்மையான உணவாகச் சாப்பிட்டு வந்த பழங்குடி மனிதர்களின் இன்றைய உணவு அரிசி.. மற்றும் அவர்களுக்குத் தொடர்பு இல்லாத வாழை-மஞ்சள்-கரும்பு-தக்காளி-கத்திரி  பயிரிடத் தொடங்கிவிட்டார்கள். இந்த வகை பயிர்கள் அந்த  இடத்திற்குச்  சொந்தம் இல்லை. அவன் இயற்கையான மனிதன். காட்டில் விளைந்த   உணவுப்  பொருட்களைச் சாப்பிட்டவன். அவனையுமே அரிசிக்கு, மஞ்சள், வாழை, கரும்பு பயிருக்கு மாற்றியது நகர மனிதர்களே. எந்த உணவைப் பல ஆயிரம்  வருடங்களாகச் சாப்பிட்டு வந்தார்களோ அதில் நகர மனிதர்களின் உணவு கலந்துவிட்டது. இவை நல்ல உணவு தானே என்று நாம் கேட்டால் நாமே இல்லை என்று சொல்லிக் கொள்வோம். இன்று பெருநகரங்களில்   இயற்கை வேளாண்  பொருட்களுக்குத் தான் அதிக தேவை இருக்கிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடு

பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்கள் பின்பற்றி வந்த உணவு கலாச்சாரமே அவர்களை இது நாள் வரை  ஆரோக்கியமாக வைத்திருந்தது.ஆனால்,அந்த உணவு பண்பாடு உருக்குலைய ஆரம்பித்ததின் விளைவாக இன்று பழங்குடி

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதனால் வளர்ச்சி   தடைபெறுகிறது என்று ஆவணப்படமும் வந்துள்ளது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. பல ஆயிரம் வருடங்களாகச் சாப்பிட்டு வந்த உணவை நாம் தான் சென்று மாற்றி அவர்களின் பயிர்களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டோம். இனி எப்படி அவர்களின் குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளாக வளரமுடியும்?. சிறிது யோசனை கூட இல்லாமல் அந்த மக்களின் வாழ்வியலைக்  கேள்விக்குட்படுத்தி நம் வாழ்வியலுக்கு அவர்களை இழுத்து வந்து கொண்டுள்ளோம்.

 சந்தை விற்பனை பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் 

ஆரம்பக்காலத்தில் பழங்குடிகள் சந்தையில் காட்டுப் பொருட்களை முதன்மையாக விற்பனை செய்து வந்தார்கள்.  அவை சந்தனக்கட்டை, பலாப்பழம், தேன், மிளகு, கடுக்காய், விளக்குமாறு, மெழுகு, மயில் தோகை, மாவலி கிழங்கு, புளி  போன்றவையாகும். நகர மனிதர்கள் அங்கு ஏற்படுத்திய பயிர் மாற்றங்களில் சம வெளி மக்களுக்குத் தேவையான தக்காளி, கத்திரி, மஞ்சள் என்று இன்னும்  நிறையப் பொருட்கள் விற்பனை ஆகிறது. இது கொஞ்சம்  கொஞ்சமாகக்  காட்டு வாழ் மனிதர்களின் வாழ்வியலை மாற்றிய நிகழ்வு ஆகும்.

தாளவாடி மலையிலிருந்து பல லாரிகளில் தக்காளி,கத்திரி,உருளை போன்ற   காய்கறிகள் சமவெளி சந்தைக்குத் தினமும் வருகிறது. இவை  தடைப்பட்டால் கீழ் நாட்டு மக்கள் பாதிப்பு அடைகிறார்கள் என்று இன்னும் விளைச்சலை  அதிகப்படுத்துகிறார்கள். நம் உணவுக்குப் பாதிப்பு என்று மலையில் அதிகம் பயிரிட வைக்கிறோம். அவர்கள் உணவு பயிரிடும் மலையில் நம் பயிர்களை விளைவிப்பது குற்றமென சிறிது கூட யாரும்  நினைத்துப்  பார்க்கவில்லை.

 பெரும் நிறுவனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு

கிணற்று நீரை அல்ல, மழை நீரை நம்பியே பழங்குடிகள் விவசாயம் செய்கிறார்கள். இன்று அவர்கள் பயிர்களுக்கு நீர் இல்லாமல் போனதால் நகரங்களைத் தேடி வேலைக்கு வந்து விடுகிறார்கள்..  இது எப்படி நிகழ்ந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தமிழக கர்நாடக எல்லைகளை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் சோளகர் சமூக மக்களாகிய இவர்களின் இடங்களை நாம் வாங்க முடியாது. ஆனால்  லிங்காயத்து சமூகம் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவதால் அவர்களின் இடங்களை வாங்கி அங்கு நகர மனிதர்கள் பல மாற்றங்களை உருவாகிவிட்டனர். அந்த இடத்தில் போர் போடுவது, அங்குத் தொடர்பில்லாத புதிய பயிர்களை வளர்ப்பது, பெரிய கட்டங்களைக் கட்டுவது,  தேயிலைத் தோட்டம், மலைக்குத் தொடர்பு இல்லாத யூகிளிப்டிஸ் மரங்கள் வளர்ப்பு என்று  செயல்பட்டார்கள்.

போர் போடுவது என்பது  நகரத்தில் மிகச் சாதாரணமான செயல். அனைத்து வீடுகளிலும்,தோட்டங்களிலும் போர் இருக்கும். ஆனால் காட்டில், மலையில் இயற்கையான நீரை, மழை நம்பிய வாழ்கை தான்! எந்த பழங்குடி மக்களும் தங்கள் வாழ்விடத்தில்  போர் போட்டுக்  கொள்வதில்லை. ஓடை, குளம், குட்டை போன்றவற்றில் நீர் எடுத்துக் கொள்வார்கள். பல பன்னாட்டு நிறுவனங்கள் இன்று காட்டுப் பகுதியில் பெரிய திட்டங்களை அமைத்து  நீரைச் சுரண்டி வருகிறார்கள்.

 இப்படிப் போர் போட்டு நீரை உறுஞ்சிவதால் இயற்கையான நீர்ப் பகுதிகள் ஓடை, குளம் குட்டை பகுதிகள் நீர் அற்ற பகுதிகளாக மாறிவிட்டன.  இந்த  நீர்ப்  பற்றாக்குறை அங்கு வாழும் பழங்குடிகளுக்கு முக்கிய பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது..அவர்கள் பயிர் வைக்க நீர் இல்லாமல் போகிறது. இது பழங்குடிகளுக்கு மட்டுமில்லாமல் அங்கு வாழும் விலங்கு, பறவை, பூச்சிகள் அனைத்திற்கும் பெரிய பாதிப்பாகும். இதனால் விலங்கு, பறவை போன்ற மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அடுத்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த பெரு நிறுவனங்கள், தாங்கள் பயிரிடும் நிலத்திற்கு வேலை செய்ய அங்கு உள்ள பழங்குடி  மக்களைப் பயன்படுத்தி கொண்டார்கள். இன்னும்  சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் இயற்கையான வாழ்வியல் அழிக்கப்படுவதால்   வேலை செய்வதற்குப்  பழங்குடி மனிதர்கள் நகரங்களைத் தேடி வரும் நிலை உருவாகியுள்ளது..

 இங்கிருந்துதான் அவர்களின் தின வாழ்க்கையில் பல தேவையில்லாத மாற்றங்கள் உருவானது. கீழ் நாட்டு மனிதர்களைப் பார்த்து எதற்கு அஞ்சினார்களோ அவை நடந்தே விட்டது.  நாம் டாஸ்மாக் குடியை அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டோம்.அதனால் தினமும் குடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தினக் கூலியைக் குடிக்குப் பயன்படுத்த தொடங்கினார்கள். இதனால் அமைதியான  விட்டுச் சூழல் அழியத் தொடங்கியது.  சிகரட் பிடிக்கும் வழக்கம் இல்லை ஆனால் பீடி,கஞ்சா போன்றவை புகைக்கும் பழக்கம் இருந்தது. இன்று பீடியிலிருந்து  சிகரட் புகைக்கும் பழக்கதிற்கு மாறியுள்ளார்கள். கஞ்சாவை ஒரு உணவாக சமையலில் சேர்க்கும் பழக்கமும் அவர்களுக்குண்டு!

பழங்குடிகளைத் திருடனாக கட்டாயப்படுத்தி மாற்றிய சம்பவங்கள், வனத்துறை, மூன்று மாநில அரசாங்க செயல்பாடுகள், காட்டுயிர்களின் நிலை, வீரப்பன் காட்டு வாழ்க்கை போன்றவை அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்…

சிவ சுப்பிரமணியன்

30 ஆண்டுக்கால பத்திரிகையாளர், எழுத்தாளர் ,மனித உரிமைச் செயற்பாட்டாளர். வீரப்பனை முதன்முதலில் காட்டுக்குச் சென்று சந்தித்து எழுதியவர்.பழங்குடி சமூக மக்களின் பல பிரச்சினைகளை அடிக்கடி எழுதிக் கவனப்படுத்தி, சில தீர்வுகளுக்குக் காரணமானவர்.

 # பொய் வழக்கும்,போராட்டமும்

 # அழகிய தமிழ் பெயர்கள்   ஆகிய நூல்களின் ஆசிரியர்.

’வீரப்பன் வாழ்ந்ததும்,வீழ்ந்ததும்’ என்ற நூலை விரைவில் வெளியிட உள்ளார்.

தொடரும்…

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time