ஏழை, பாழைகளின் வயிற்றில் அடிப்பதா..?

-பீட்டர் துரைராஜ்

நூறு நாள் வேலைத் திட்டம் தமிழ்நாட்டில் சரிபாதிக்கும் கீழாகி, தற்போதோ இன்னும் சரிபாதியாக குறைக்கப்பட்டு உள்ளது! பல லட்சம் எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், கிராம பொருளாதாரத்தையும் பாதுகாக்கும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை மெல்ல காலியாக்கும் முயற்சியை பாஜக அரசு செய்கிறது!  இதில் திமுக அரசு மெளனிப்பது ஏன்?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் வருடத்திற்கு நூறு நாட்களாவது வேலை தர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் சராசரியாக, கடந்த நான்கு ஆண்டுகளாக 47   நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது. வேலைநாட்களின் எண்ணிக்கையை  உயர்த்துகிற முயற்சியில் மாநில அரசு,  அரசியல் உறுதியோடு செயல்படவில்லை என்று அடித்தள ஆட்சியியல் நிறுவனம்  (Institute of Grossroots Governance) என்ற அமைப்பும், தன்னாட்சி அமைப்பும் நடத்திய ஆய்வு கூறுகிறது.

ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம். இந்த திட்டம் அமலாகி 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்த சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கான இலக்கை எட்டுவதில் பின்தங்கி உள்ளது என்று  அடித்தள ஆட்சியியல் நிறுவனம்  (Institute of Grossroots Governance) என்ற அமைப்பும் தன்னாட்சி அமைப்பும் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் நேற்று கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற  37 கிராமப்புற மாவட்டங்களில் இந்த திட்டம் குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு கிராம பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து அங்கு ஆகஸ்டு முதல் நவம்பர் வரை நூறுநாள் வேலை திட்டம் குறித்த ஆய்வை அடித்தள ஆட்சியியல் நிறுவனம்  (Institute of Grossroots Governance) என்ற அமைப்பும் தன்னாட்சி அமைப்பும் நடத்தின. அந்த அமைப்பைச் சார்ந்த  வினோத் குமார், பிரபாகரன், குரு சரவணன் ஆகியோர் நேற்று பிப்ரவரி 21 அன்று  பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு 89,400 கோடி ரூயாயை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த ஆண்டு 33 சதம் குறைத்து, அதாவது, 60,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையில் ஆண்டிற்கு  இருபது சொச்சம் நாட்களுக்கு மட்டுமே வேலை அளிக்க முடியும். ஒன்றிய அரசின் இந்த முடிவை கேரளா, ராஜஸ்தான், ஒரிசா, பீகார் மாநில முதலமைச்சர்கள் கண்டித்துள்ளனர். ஆனால், இதுவரை தமிழக முதலமைச்சர் கண்டிக்கவோ, கருத்து தெரிவிக்கவோ இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக  தமிழ்நாட்டில் சராசரியாக 47  நாட்களுக்கு ( 2019- 20 : 44 நாட்கள் ; 2020-21: 50 நாட்கள் 2021- 22: 50 நாட்கள்; 2022-23 44 நாட்கள் ) மட்டுமே தமிழ்நாட்டில் வேலைகள் நடந்துள்ளன. கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் தான், வரும் ஆண்டும் வேலை நடைபெற முன் மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டம்  இன்னமும் அலுவலர்கள் மூலமாக, எந்திரத்தனமாக நடத்தப்படுவது தான் இதற்கு காரணமாகும்.

2006 ல் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு,  ஒன்றிய அரசால் தொடர்ந்து குறைக்கப் படுகிறது. ‘சரிவர கணக்குக் காட்ட வில்லை’ என்ற காரணத்தைச் சொல்லி, கடந்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் விழிப்போடு இருக்க வேண்டிய தமிழ் நாட்டு அரசு, சட்டப்படி பஞ்சாயத்துகள் மூலமாக திட்டங்களை போடாமல், கிராம சபைகளுக்கு விழிப்புணர்வு அளிக்காமல்  அதிகாரிகளைக் கொண்டு திட்டமியற்றி, இந்தத் திட்டத்தை  நீர்த்துப் போகச் செய்து வருகிறது என்று ஆய்வு வருத்தத்துடன் கூறுகிறது.

இந்த திட்டத்தோடு தொடர்புடைய முக்கிய பங்குதாரர்களான பணித்தளப் பொறுப்பாளர்கள், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி செயலாளர், பணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு வினாப் பட்டியல் அளிக்கப்பட்டன. அதன் மூலமாக இந்தக் குழுவினர் இந்த திட்டத்தின் போதாமைகளை  கூறியுள்ளனர்.

என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும் என்பதை அந்தந்த கிராமசபை தான் முடிவு செய்ய வேண்டும். அந்த கிராமத்திற்கு தேவையில்லாத பணிகளை அதிகாரிகளே தேர்வு செய்கின்றனர். இதனால் அந்த கிராம மக்கள் இது தங்கள் கிராமத்திற்கு தேவையான வேலை (community ownership)  என்பதை உணர முடியவில்லை.

ஒன்றிய அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ‘செயலி’ மூலமாக வருகைப் பதிவை பதிவு செய்ய போவதாக கூறியுள்ளது. இதனால், இணையப் பிரச்சினை  காரணமாக   காலை ஆறு மணிக்கு வேலைக்கு வர மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். வராதவர்களுக்கு வேலை இல்லை என்பது இதன் பொருளாகும். ஆனால், ஆறு மணி முதல் 11 மணி வரை எப்போது வேண்டுமானாலும் வருகைப் பதிவு எடுக்கலாம். இன்னமும் இணைய வசதி இல்லாத கிராமங்கள் உள்ளன. இதைக் குறித்தெல்லாம் ஒன்றிய அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

“கேரளா  போன்ற முன்னேறிய மாநிலங்களே இந்த திட்டத்தின் பலனை அனுபவிக்கிறார்கள். பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் இன்னமும் வறுமை ஒழிப்பு நடைபெறவில்லை. எனவே, இந்த திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய போகிறோம்” என்று ஒன்றிய அரசின் முன்னாள் மூத்த அதிகாரியும், குழுவின் தலைவரான அமர்ஜித் சின்ஹா கூறுகிறார். இந்த திட்டம் ‘வறுமை ஒழிப்பு’ என்று சொல்லவில்லை; ”கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது” என்றுதான் இந்த சட்டம் கூறுகிறது. எனவே, இந்த சட்டம் அடிப்படை நோக்கில் இருந்து திசை மாறுகிறதோ என்று அஞ்சுகிறோம்.

இது குறித்த புரிதல் பயனாளிகளுக்கு, பஞ்சாயத்துகளுக்கு, அதிகாரிகளுக்கு  இல்லை. எனவே, மாநில அரசு இவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கான பயிற்சி உபகரணங்களை  உருவாக்க வேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ் 266 வகையான வேலைகளைச் செய்ய  முடியும். என்ன வேலை செய்வது, எப்போது வேலை செய்வது என்பதை அந்தந்த கிராம சபைகளே முடிவு செய்தால், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். உள்ளூர் கிராமத்திற்கு தேவையான சமூக சொத்துகளை உருவாக்க முடியும். ஆனால், தங்கள் அதிகாரம் என்ன என்பது உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்களுக்கே தெரியவில்லை. வட்டார வளர்ச்சி அதிகாரிகளே உள்ளூர் பஞ்சாயத்துகளுக்குத் தெரியாமல் வேலை அளிக்கிறார்கள். ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தலையீடும் இருக்கிறது. இந்த திட்டத்தின் நிர்வாகச் செலவிற்காக 6 சதம் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. இதில் 2 சதம் அந்த பஞ்சாயத்துகளே செலவு செய்யலாம். இதனை அதிகாரிகளே வட்டார அளவில் செலவழித்து விடுகிறார்கள். இந்த தொகையைக் கொண்டே பயிற்சி அளிக்க முடியும்.

இந்த சட்டமானது வேலை என்பது ஓர் உரிமை என்று கூறுகிற முற்போக்கான சட்டமாகும்; மக்களை அதிகாரப்படுத்தும் ஒரு சிறந்த சட்டமாகும்;  பஞ்சாயத்துகளை வலிமைப்படுத்தும் ஒரு சட்டமாகும். எனவே, இதனை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

திட்ட முன்மொழிவு, திட்ட அமலாக்கம், தணிக்கை என அனைத்து நிலைகளிலும் சரி செய்ய வேண்டிய பிரச்சினைகள் உள்ளன. வேலை கேட்பு முகாம் நடைபெறுவதில்லை. இந்த சட்டத்திற்காக உள்ளூர் பஞ்சாயத்துகளுக்கு  ஒரு இணைய தள வசதி உள்ளது. இதனை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி தலைவர்களுக்குத் தெரியாமலேயே, அவர்களுடைய  பயனர், கடவுச் சொற்களை  வட்டார அளவில் கணினி ஆபரேட்டர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த கிராமத்திற்கு முன்மொழியும் திட்டங்களுக்கும் சம்மந்தப்பட்ட கிராம மக்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. இந்த சட்டத்தின் கீழ் உள்ள குறைதீர்ப்பு அலுவலர் குறித்து உரிய பயனாளிகளுக்கு தெரியவில்லை. இந்த திட்டத்தின் கீழ் தரப்படும் தகவல் கீழேயுள்ள கிராமங்களைச் சென்றடையவில்லை. சமூக தணிக்கை சரிவர நடைபெறுவதில்லை.

தமிழ்நாடு, இந்த திட்டத்தை நன்கு செயல்படுத்தும் ஐந்து மாநிலங்களில் ஒரு மாநிலமாகும். தமிழக அரசு வெறும் 46 வேலை நாட்களுக்கே வேலை வேண்டும் என்று கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளது. இது தேவையைப் பொறுத்து ஒதுக்கீடு கோரும் திட்டமாகும். எனவே தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களே இப்படி பின்தங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இலட்சக்கணக்கான மனித வளம் புழங்கும் இந்த சட்டம் குறித்து வினாப்பட்டியல் தயாரித்து, தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய இந்த இளைஞர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஒரு அரசு செய்யவேண்டிய பணியை இவர்கள் செய்துள்ளனர். அதானி போன்ற தொழில் அதிபர்களுக்கு பல ஆயிரம் கோடிகள் எல்.ஐ.சி சேமிப்பு பணத்தையும், மக்களின் வங்கி பணத்தையும் அள்ளித் தந்து வரும் பாஜக அரசு, பல கோடி ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கான திட்டத்திற்கு கொஞ்சூண்டாக கிள்ளிக் கொடுப்பது என்பதை எப்படி ஏற்பது? ஏழை, பாழைகளின் ஒரு வேளை கஞ்சிக்கும் உலை வைக்கும் பாஜக அரசின் பாசிச போக்கு குறித்து மெளனிப்பது தமிழக அரசுக்கு அழகல்ல! தமிழக அரசு இது குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாதிரி  பேசுகிற திமுக அரசு, மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time