ஏன் தடுக்கவில்லை ஈரோடு இடைத் தேர்தலை?

- சாவித்திரி கண்ணன்

பிரச்சாரத்தின் கடைசி நாளான்று வீட்டுக்கு வீடு தங்கக் காசு பட்டவர்த்தனமாக வழங்கப்பட்டு வருகிறது! தாங்கள் என்ன செய்தாலும் தேர்தல் ஆணையம் தடுக்காது என்பதால், கடைசி நாளான்று விதவிதமான யுக்திகளை கையாள்கிறது திமுக! பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது ஏன்? பின்னணி என்ன?

இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் வாக்காளர்களை விலை பேசும் வகையில் தினம், தினம் பண மழையிலும், பரிசு மழையிலும் குளிர்வித்து வருகிறது திமுக. இதைவிடவும் புது யுக்தியாக தொகுதி வாக்காளர்களை கொத்து,கொத்தாக அள்ளிச் சென்று பெரிய கொட்டகையில் வைத்து சினிமா மற்றும் கலை நிகழ்ச்சிகளை காண்பித்து விருந்து தந்து , கையில் பணமும் தந்து வருகிறது. கிட்டத்தட்ட இருபது நாட்களாக இத்தனை காரியங்களும் பகிரங்கமாக நடந்தும், தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகுவிற்கும், இந்திய தலைமை தேர்தல்  ஆணையத்திற்கும் ஏராளமான புகார்கள் குவிந்தும் பெயரளவுக்கு ஒரு சில நடவடிக்கைகளை எடுப்பதோடு விட்டு விடுகின்றனரே அன்றி, உறுதியான நடவடிக்கை இல்லை. அதுவும் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு ஆட்சியில் இருப்பவர்கள் யாரோ, அவர்களுக்கு அனுசரணையாக செயல்படாற்று அமைதி காப்பத்தில் கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி கைதேர்ந்தவராக உள்ளார்.

ஆட்சி பலத்தின் துணையோடு திமுக  பணம் மற்றும் பல்வேறு பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடுகள் தோறும், வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, திமுக சார்பில் ஒரு வாக்கிற்கு தினசரி ரூ 500 தந்தது போக ரூ 3000-ம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி டம்ளர், ஹாட் பேக், வீட்டு உபயோகப் பொருட்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் சிஸ்டமேட்டிக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிக்குள் திமுகவின் 30 அமைச்சர்கள் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு என்று குறிப்பிட்ட பகுதி டார்கெட்டாக தரப்பட்டு உள்ளது. இது வரை மட்டுமே திமுக தரப்பில் பல நூறு கோடிகள் செலவழிக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அந்தப் பகுதியில் அதிகபட்சம் யார் அதிக வாக்குகளை வாங்குகிறார்கள் என்பதில் அவர்களுக்குள் போட்டி இருப்பதால் பரிசு பொருட்கள் விதவிதமாக சென்ற வண்ணம் உள்ளன. தனது தேர்தல் பிரச்சாரத்தில் இது ’பெரியார் மண்’ என பெருமைப்பட்டுள்ள ஸ்டாலின், அந்த மண்ணிலே இந்த அளவுக்கு அநீதிகளை நிகழ்த்தி மக்களையும் விலைபேசியிருப்பது குறித்த எந்த குற்றவுணர்வுமின்றி வளைய வந்துள்ளார்.

பணம்,பரிசு பொருட்களை இறக்கி தேர்தலை சந்திக்கும் ஸ்டாலின்

திமுக அளவு தர முடியாத நிலையில், அதிமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 2000-ம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அதோடு, அகல்விளக்கு, வெள்ளி டம்ளர், பேண்ட், சட்டை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளனவாம்.

இதனால் வெறுத்துப் போன தேமுதிகவினர் தேர்தலில் மிக மோசமாக பணம் விளையாடுவதால் இந்த இடைத் தேர்தலை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது. மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் இந்த இடைத் தேர்தலை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் தடை செய்ய மறுத்துவிட்டது.

தமிழகத்தில் திமுக அரசு செய்யும் ஒவ்வொரு சிறு தவறுகளை மட்டுமின்றி, செய்யாத தவறுகளையும் கூட இட்டுகட்டி அடிக்கடி குற்றம் சாட்டி பேசும் தமிழக பாஜகவினர் திமுகவின் இந்த திருவிளையாடல்களை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறார்கள் என்ற கேள்வி அனைவர் மனதிலும் மேலோங்கியுள்ளது. அதுவும், ஈரோட்டில் அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை வலுவாக கண்டிக்கவில்லை.

ஒரு வேளை பாஜகவின் கட்டளைக்கேற்ப எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் செல்வத்தை கட்சியில் இணைத்து கொள்ளாததால் தோற்கட்டும். படு தோல்வி அடையட்டும். அதைக் கொண்டு அவரை பணிய வைக்க இந்த தோல்வியை பயன்படுத்தலாம் என பாஜக திட்டமிடுகிறதோ என்னவோ? அதாவது, அதிமுகவை பலவீனப்படுத்தும் தன் செயல்திட்டத்திற்கு திமுகவின் அராஜகங்களை அனுமதித்து பயன்படுத்திக் கொள்கிறது பாஜக!

இப்படி சொந்த கணக்குகளை போட்டு, ஆதாய அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கும் பாஜக அரசுக்கும், அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் ஈரோட்டில் ஜனநாயகம் சிதைத்து சின்னாபின்னப்படுவது பற்றி சிறிதளவும் கவலை இல்லை.

இந்திய வரலாற்றிலேயே இது வரை இல்லாத படுமோசமான இந்த தேர்தலை தடுத்து நிறுத்தாமல் அனுமதித்தால், அது பாஜகவிற்கும் – திமுகவிற்குமான மறைமுக கூட்டணியைத் தான் நமக்கு புலப்படுத்துகிறது! திமுக வெற்றி பெறலாம். ஆனால், அது ஜனநாயகத்தின் படுதோல்வியில் கிடைத்த வெற்றியாகத் தான் இருக்க முடியும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time