பாசாங்குத் தனம் ஏன்? பகிரங்கப்படுத்துங்கள் உறவை!

-சாவித்திரி கண்ணன்

நேரடியாக பார்க்கும் அரசியலுக்கும், திரை மறைவு அரசியலுக்குமான இடைவெளியை மறைத்து, நம்மை மயக்கத்திலேயே ஆழ்த்தி வைப்பது அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை! மத்திய பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத செயல்திட்டங்களும் தமிழகத்தில் தங்கு தடையின்றி அமலாகிறதே எப்படி? உதயநிதியை அறிவிக்கப்படாத நிழல் முதல்வராக ஏற்கிறதா பாஜக?

ஒரளவுக்கு நேர்மையான ஆட்சி என்று தில்லி மக்களால் மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களை பாஜக கைது செய்து வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் வரலாறு காணாத ஊழலை செய்து கொண்டுள்ள திமுகவை எந்த தொந்தரவும் செய்வதில்லை பாஜகவின் அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும், சி.பிஐயும்!

சமீபத்திய ஈரோடு இடைத் தேர்தலில் திமுக மித மிஞ்சிய பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகங்களை செய்தது! புது யுக்தியாக இருபது நாட்களும் வாக்காளர்களை அழைத்துச் சென்று அடைத்து வைத்து பணம் வழங்கியது! இதை பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது! மக்களின் புகார்களை பொருட்படுத்தவில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மியின் முக்கிய அமைச்சர்கள் சந்தியேந்தரும், மணீஸ் சிசோடியாவும் கைது செய்யப்படுகிறார்கள்! மணீஸின் கைது மதுபான விவகாரமாம்! இங்கு தமிழக டாஸ்மாக்கிலே கொள்முதல் தொடங்கி விற்பனை வரை அனைத்துமே ‘கோல்மால் பிராக்டிஸ்’ தானே! திமுக அரசு மீது ஒரு சிறு துரும்பளவு கூட நடவடிக்கை இல்லையே! இத்தனைக்கும் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினரே அமைச்சரின் ஆட்கள் ‘கரூர் கம்பெனி’ என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டி, பணம் பறிக்கின்றனர் என பல முறை புகார்கள் தந்துள்ளனர்.

பாஜகவின் மக்கள் விரோத சட்ட, திட்டங்களை எல்லாம் திமுக அரசு எந்த எதிர்ப்புமின்றி, இயல்பாக நிறைவேற்றித் தருகிறது!

மக்களை பெரிதும் பாதிக்கும் மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தில் அமலாகி சிறு,சிறு தவறுகளுக்கு எல்லாம் மக்களிடம் போக்குவரத்து போலீசார் கர்ண கொடூரமான அபராதங்களை போட்டு பணம் பிடுங்குகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை பள்ளிகளில் அமலாக்கப்படுகின்றது. அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சி வலை மெல்ல,மெல்ல பின்னப்பட்டு வருகின்றன!

மக்களின் உடல் நலனுக்கு மிகக் கேடு விளைவிக்கும் செயற்கை அரிசியான செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்தும் பி.பி.சியின் ஆவணப்படத் திரையிடலை தமிழகத்தில் திமுக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது.

100 நாட்கள் வேலை திட்டம் 25 நாட்களாக சுருக்கப்படுவது பற்றி திமுக அரசு முணுமுணுக்கக் கூட மறுக்கிறது!

தமிழக கவர்னரின் அத்துமீறிய – சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் – பேச்சுகள் குறித்து திமுகவின் தோழமை கட்சிகள் தாம் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால், திமுகவோ போராட்டம் நடத்த அஞ்சுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடங்கி அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் …என அனைத்து வகையிலும் தொழிலாளர் விரோத போக்கையே வலுவாக செயல்படுத்தி வருகிறது திமுக அரசு!

பாஜகவின் முக்கியஸ்தர் நடத்திடும் பள்ளி என்பதால் கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற சட்ட விரோத செயல்பாடுகளை காவல்துறையைக் கொண்டே செய்கிறது திமுக அரசு!

வேங்கை வயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலக் கழிவுகளை கொட்டிய தீயவர்களை கைது செய்ய அஞ்சும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸுக்கு அடி பணிந்ததொரு ஆட்சியை நடத்தி வருகிறது!

மேற்படி இரண்டு சம்பவங்களிலும் குற்றம் செய்யாத எளிய தாழ்த்தப்பட்ட இளைஞர்களை பலிகடா கொடுக்கத் துணிகிறது இந்த ஆட்சி!

இவையாவும் நாம் திராவிட மாடல் என நம்பும் இரண்டு இடது சாரி கட்சிகளாலும், காங்கிரசாலும், விடுதலை சிறுத்தை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சி போன்ற பாஜக எதிர்ப்பு நிலை கொண்ட கட்சிகளால் ஆதரிக்கப்பட்டு வரும் திமுக ஆட்சியில் நடக்கிறது என்பது தான் வேதனை!

இதற்கெல்லாம் பிரதியுபகாரமாகத் தான் கடல் சார்ந்த அனைத்து சுற்றுச் சூழல் விதிகளையும் புறம் தள்ளி,கடலுக்குள் கருணாநிதி பேனா சிலை நிறுவ பாஜக அரசு துணை போகிறது!

ஒருவேளை பாஜகவே தமிழகத்தை நேரடியாக ஆட்சி செய்திருந்தாலுமே கூட, இவற்றை எல்லாம் அவர்களால் அமல்படுத்த முடிந்திருக்காது. காரணம், இங்குள்ள எதிர்கட்சிகள் மக்களை திரட்டி கடுமையாக எதிர்ப்பார்கள்! அவர்கள் முதல் அடி வைத்து நகரும் போதே மக்களால் முறியடிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், திராவிட ஆட்சி என்ற போர்வையில் இந்த அனைத்து மக்கள் விரோத சய்யங்களையும், செயல்பாடுகளையும் எந்த எதிர்ப்புமின்றி கமுக்கமாக நடைமுறைப்படுத்தி விடுகின்றது, திமுக அரசு!

இவ்வளவும் போதாது என்று முதல்வரின் மருமகன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து நட்பு பாராட்டி வருவது எந்த கேள்வியுமற்று பார்க்கப்படுகிறது!

தமிழகத்தின் ஒரு சாதாரண புதிய அமைச்சரை டெல்லியில் பிரதமரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும், ஊரகத் துறை அமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் இன்ன பிற உயர் அதிகார மையங்களும் நேரம் ஒதுக்கி சந்திப்பதையும் – வாரிசு அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதையும் எப்படி புரிந்து கொள்வது? உதயநிதியின் டெல்லி விசிட் உணர்த்தும் உண்மைகள் அசாதாரணமானவை! அது, திமுகவுக்கும் – பாஜகவிற்குமான வெளிப்படுத்த முடியாத நெஞ்சார்ந்த புரிதலுக்கான சமிக்சையாகும்.

மக்களை பாஜகவின் பாசிச அணுகுமுறைகளில் இருந்து காப்பாற்ற வந்த ஆபத்பாந்தனாக தோற்றம் காண்பித்துக் கொண்டே, நய வஞ்சகமாக பாஜகவுடன் கள்ள உறவை வலுவாக கட்டமைத்து செயல்படுவது, இருப்பதிலேயே அதி ஆபத்தானதாகும்!

திமுகவின் தோழமை கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகளும், காங்கிரசும் தற்போது காட்டி வரும் மெளனம் திமுகவின் துரோகத்திற்கு துணை போவதாகத் தான் அமையும். ஆகவே, தங்களின் பாசாங்குதனத்தை தூக்கி எறிந்து, யதார்த்தத்தை வெளிப்படுத்தி, திமுகவின் உண்மை சொரூபத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, நாட்டை அழிவுப் பாதையில் இருந்து காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

நீங்கள் திமுகவை இன்று தூக்கி எறியவில்லை என்றால், மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time