அதிகார துஷ்பிரயோகத்தால் அடக்குவதா எதிர் கட்சிகளை?

-ஹரி பரந்தாமன்

கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை வாசகர்களுக்கு கவனப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன். இவை முன்றும் இந்தியாவில் இன்று ஜனநாயகம் சந்திக்கும் சவால்களை நமக்கு உணர்த்துகின்றன! அதிகாரத்தால் எதிர்கட்சிகளை ஒடுக்கும் பாஜக அரசின் அதிகார துஷ்பிரயோகங்களை வெளிச்சமிட்டு காட்டுகின்றன!

23 பிப்ரவரி  அன்று மூத்த காங்கிரஸ் தலைவர் பவன் கேரா டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்குள் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் சிசோடியா 26 பிப்ரவரி  அன்று கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை கூட்டுவதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மறுத்துள்ளார். இவை மூன்றைக் குறித்தும் இங்கே நான் சற்றே அலச விரும்புகிறேன்.

சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்காவில் இருந்து வெளி வந்த இண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் பங்கு மோசடி பற்றி பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா, ‘‘நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மோடி பயப்படுவது ஏன்? முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் போன்றவர்கள் எல்லாம் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அமைத்தனர். இதில், நரேந்திர கவுதம்தாஸுக்கு என்ன பிரச்சினை? மன்னிக்கவும், தாமோதர்தாஸுக்கு என்ன பிரச்சினை? எனக்கு உண்மையிலேயே இதில் குழப்பம் ஏற்படுகிறது. பெயர் தாமோதர்தாஸ், ஆனால் வேலை எல்லாம் கவுதம்தாஸ் போல் உள்ளது’’ எனக் கூறினார். கௌதமதாஸ் என்பது அதானியை குறிப்பதாகும்!

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

ஆனால், இது ஒரு கொலை குற்றமா என்ன? அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி வரச் செய்து விசாரிக்கும் அளவுக்கு கூட ஆட்சியாளர்களுக்கு பொறுமை இல்லையே! காங்கிரஸ் கட்சி மாநாட்டிற்காக சட்டீஸ்கர் பயணம் செய்து கொண்டுள்ள ஒரு தலைவரை விமானத்தில் வைத்து கைது செய்யுமளவுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆத்திரம் நிதானத்தை கடந்துள்ளதை பார்க்கும் போது, ‘உண்மை சுடும்’ என்பது எவ்வளவு சாஸ்வதமான உண்மை என  நினைத்துப் பார்க்கிறேன்!

இதைவிட எனக்கு அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை படிக்கும் போது சிரிப்பே வந்துவிட்டது..! அவரின் பேச்சு தேச ஒற்றுமைக்கு விரோதமானதாம்! நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளையும் வகையில் பேசினாராம்! கிரிமினல் சதி செய்தாராம்! அடேங்கப்பா! இத்தனை கடுமையான குற்றச்சாட்டுகளா..?

அசாம் போலீஸ் அவரை டெல்லியில் விமானத்தில் கைது செய்தது போதாது என்று அசாம் மட்டுமன்றி, உத்தரப்பிரதேசத்தில் சில காவல் நிலையங்களில் கூட இந்த காரணத்திற்காக  குற்ற வழக்குகள் அவர் மேல் பதிவு செய்யப்பட்டன!

காங்கிரஸ் தலைவர்களின் தர்ணா போராட்டம்

நல்ல வேளையாக உச்ச நீதிமன்றம் அவருக்கு அன்றே இடைக்கால பிணை வழங்கியது. அவர் கைது செய்யப்பட்ட போது அதே விமானத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால், விமானம் 4 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டது. ஆட்சியாளர்களின் நிதானமின்மை பல பயணிகளுக்கு அன்று குந்தகமாகிவிட்டது! இதற்கிடையில் மேற் சொன்னபடி பிணை கிடைத்தது, ஒரு வகையில் ஆறுதலே!

மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) , டெல்லியின் துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவை 26 பிப்ரவரி 2023 அன்று கைது செய்தது. 2021 -2022 ஆம் ஆண்டு கலால் கொள்கை மூலம் ஊழல் நடந்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் துணை முதல்வர் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2022 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில் நடந்த புலன் விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்வதற்கு முன் ஏழு மணி நேரம் மத்திய புலனாய்வு அமைப்பு அவரை விசாரணை செய்தது.

ஆம் ஆத்மியின் டெல்லி துணை முதல்வர் மணிஸ் சிசோடியா கைது

இந்த கைது நடவடிக்கையை கிட்டத்தட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. ”அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்பு பயன்படுத்தப்படுகிறது” என்று  எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ”மக்கள் மன்றத்தில் வெல்ல முடியாத ஆம் ஆத்மியை அதிகார பலத்தைக் கொண்டு நசுக்க பார்க்கிறது ஒன்றிய அரசு” என்ற பேச்சை பரவலாக கேட்க முடிந்தது.

கைது செய்யப்பட்ட சிசோடியாவிற்கு பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. விசாரணை நீதிமன்றம் அல்லது டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டது. ‘பத்திரிகையாளர்கள் அர்ணாப் கோஸ்வாமி மற்றும் துவா ஆகியோருக்கு பிணை அளிக்கப்பட்டதானது கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டதை ஒட்டி தரப்பட்டதாகவும், எனவே அந்த வழக்குகளை ஊழல் சம்பந்தப்பட்ட இந்த வழக்குடன் ஒப்பிட முடியாது’ என்றும் உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்தது.

இங்கே அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுவது, பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலோ அல்லது பாஜகவை ஆதரிக்கும் கட்சி ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலுமோ எந்த அமைச்சரும் ஊழல் குற்றச்சாட்டுக்காக ஏன் கைது செய்யப்படவில்லை என்பதைத் தான். சென்ற அதிமுக ஆட்சி ஊழலில் உச்சத்தை தொட்ட போது கூட, பாஜக அதை கண்டு கொள்ளவில்லை என்பது கவனத்திற்கு உரியது. இந்த நேரத்தில் முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவர்கள் 100 நாட்களுக்கும் மேல் பிணையின்றி சிறையில் வைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் இப்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக உள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்த போது அவர் இங்கே கவர்னராக இருந்தார். அப்போது அவர் வரம்பு மீறி பலமுறை செயல்பட்டார். தமிழ்நாடு அரசின் பல துறைகளும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்வதாக கூறி, அவர் தமிழ்நாடு முழுவதும் சென்று, அவர் ஆய்வு என்பதின் பெயரில் அழிச்சாட்டியம் செய்தார்.

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்

அந்த பன்வாரிலால் தான் தற்போது பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத் தொடருக்காக மார்ச் மாதம் மூன்றாம் தேதி சட்டப் பேரவையைக் கூட்டுமாறு பஞ்சாப் அரசு கேட்டுக் கொண்டதை செவி சாய்க்க மறுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தை பாஜகவிற்கு பிடிக்காத ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது. பிப்ரவரி 22 அன்று பஞ்சாப் மாநில அமைச்சரவை கவர்னரை அணுகி  சட்ட சபை கூட்டப்படுவது பற்றி விண்ணப்பித்த போது, ‘சட்ட ஆலோசனை கேட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் அவர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது’ தான் ஹைலைட்டே! ஆக, எது எதற்குத் தான் சட்ட ஆலோசனை என்பதற்கு விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது பாருங்கள்!

இந் நிலையில் இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது ஆம் ஆத்மி அரசு! பாருங்கள், ஒரு மாநிலத்தில் சட்ட சபை கூட்டம் நடத்துவதற்கு கூட உச்ச நீதிமன்றம் சென்று போராட வேண்டிய நிலையில் தான் இங்கு மாநிலங்களின் உரிமைகள் உள்ளன! பிப்ரவரி 28 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கவர்னர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ”மார்ச் மூன்றாம் தேதி சட்டசபை கூட்டப்படும்” என்று கூறி சமாளித்தார்.

‘சட்ட சபை கூட்டுவது தொடர்பாக சட்ட ஆலோசனை கேட்டிருப்பதாக’ கவர்னர் கூறுவது எல்லாம் அரசமைப்பு சட்டத்தை மீறிய செயல்! அரசமைப்புச் சட்டத்தின் கூறு 174 இன் படி, மாநில அரசு கேட்டுக் கொண்டால், சட்டசபையை கூட்ட வேண்டியது கவர்னருக்கு இடப்பட்டுள்ள பணி’ என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. கவர்னர்  அரசமைப்புச் சட்டத்தின் படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும், ‘கவர்னர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர்’ என்று கூறியுள்ளதை எல்லாம் நினைவுபடுத்தியது.

பஞ்சாப் முதல்வர் பகவத் மான், கவர்னர் பன்வாரிலால் புரோகித்

பிப்ரவரி 2023 இல் பஞ்சாப் அரசு , பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர்களை பயிற்சிக்காக சிங்கப்பூர் அனுப்பியது. இந்த விவகாரத்தில் வலிந்து மூக்கை நுழைத்த கவர்னர் பன்வாரிலால் இதற்கு ஆட்சேபனை செய்தார். அதற்கு பதில் அளித்த அந்த மாநில முதல்வர், பஞ்சாப் மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்களே அன்றி, மத்திய அரசு நியமித்துள்ள கவர்னருக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அல்ல’’ என்று கூறினார்.


எதிர்க் கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் இருக்கும் கவர்னர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகத் தான் செயல்படுகின்றனர். மாநில ஆட்சிகளுக்கு குடைச்சல் தருவதே அவர்களின் வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் பெயரை தமிழ்நாடு என்று அழைக்கவே மறுக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் நமது மாநிலம் தமிழ்நாடு என்றே கூறப்பட்டுள்ளது . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இயற்றியுள்ள சட்டங்கள் பலவற்றுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் தற்போதைய பாஜக அரசு, கவர்னர்களையும், தேசிய புலனாய்வு அமைப்பையும், வருமான வரித்துறையையும் மற்றும் தனித்துவம் கொண்ட அனைத்து உயர் அமைப்புகளையும் எவ்வாறெல்லாம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தி வருகின்றது என்பதற்கான உதாரணங்களாகும்! குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்  அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதற்கு பயன்படுத்துகிறது. இது ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகமே! தெளிவாக சொல்வதாக இருந்தால், இது சர்வாதிகாரம் அன்றி வேறல்ல.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி, சமூக செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time