அடித்தட்டு மக்களின் கல்விக் கனவாக இது நாள் வரை திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலையை அடியோடு சிதைத்து, அதை வசதியானவர்கள் மட்டுமே படிக்க முடிந்த இடமாக்கும் சூழ்ச்சி கவலையளிக்கிறது! மத்திய பாஜக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் கல்வித்துறையை எளியோருக்கு எட்டாக்கனியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.தற்போது அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் நிதி உதவியைப் புறக்கணித்துவிட்டு, கல்விக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மாணவர்களிடையே வசூலிப்பதன் மூலமாக நிர்வகித்துக் கொள்ளலாம் என அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா திட்டமிடுவது அதிர்ச்சியளிக்கிறது.
2014ம் ஆண்டில் ஐம்பதாயிரமாக இருந்த பட்டப்படிப்பிற்கான, கல்விக் கட்டணம் 2016 முதல் ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சமாக உயர்ந்தது அனைவரும் அறிந்ததே.அது போல அண்ணா பல்கலையிலும் இனி கல்விக் கட்டணங்கள் நான்கு மடங்கு அதிகரித்துவிடும் ஆபத்து உள்ளது.
அண்ணா பல்கலைக் கழகம், தமிழ் நாடு அரசால் நிறுவப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு சமூகநீதியின் அடிப்படையில் இயங்கி வரும் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்திற்கு மரணம் இல்லை என்பார்கள்.
பல்கலைக் கழகத்தை உருவாக்கி நிர்வகிக்கும் தமிழ் நாடு அரசை மீறி நேரடியாக மத்திய அரசிற்குக் கடிதம் எழுதுகிறார் தற்போதைய அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்.
அக்கடிதத்தில், மாநில அரசு ஒன்றும் கூடுதலாக நிதி தர வேண்டியது இல்லை, வழக்கமாக அவர்கள் தரும் நிதியைத் தொடர்ந்து தந்தால் போதும், மத்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவித்தால், மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்கலைக் கழகம் வசூலிக்கும் கட்டணங்கள் மூலம் பல்கலைக்கழகத்தால் தானே வருடத்திற்கு ரூபாய் 314 கோடி, ஐந்து வருடத்திற்கான ரூபாய் 1570 கோடியைத் திரட்டிக் கொள்ள இயலும் என்று எழுதுகிறார்.
செலவு போக வருடத்திற்கு ரூபாய் 314 கோடி உபரி வருமானம் ஈட்டக் கூடிய அளவிற்கு அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்கிறது என்பது பல்கலைக் கழகத் துணை வேந்தர் கடிதத்தில் இருந்து நமக்குத் தெரிகிறது. மக்கள் வரிப்பணத்தில் உருவான மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகம் செய்யக்கூடிய செயலா இது?.
டாக்டர் M. அனந்தகிருஷ்ணன், டாக்டர் A.P.J. அப்துல் கலாம்,டாக்டர் வி.சி.குழந்தைசாமி, டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை,டாக்டர் சிவன் உள்ளிட்டவர்களைப் போன்று பல்துறை ஆளுமைகளை உருவாக்கி உலகிற்குத் தந்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
பல நாடுகளில் மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்துவரும் இத்தகைய ஆளுமைகளின் சாதனையால் அண்ணா பல்கலைக்கழகம் உலகின் மிக முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு மேல் தான் சிறப்புத்தகுதியைப் பெற வேண்டும் என்ற நிலை இல்லை.
இந்தப் பல்கலைக்கழகம் மேலும் பல சாதனையாளர்களை உருவாக்கி , சமூக மேம்பாட்டிற்குத் தன் பங்களிப்பைத் தொடர்ந்து செய்திட, தேவைப்படும் நிதியையும் , பிற வளங்களையும் தந்திட வேண்டியது, இதை உருவாக்கி நிர்வகிக்கும் தமிழ் நாடு அரசின் கடமையாகும்.
பல்கலைக்கழகத்தை உருவாக்கி, நிர்வகிக்கும் தமிழ் நாடு அரசிடம், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் நிதி, பிற வளங்கள் ஆகியவற்றைக் குறித்த திட்ட அறிக்கைகளை உருவாக்கித் தந்து, உரிய விவாதத்தை அனைத்து மட்டத்திலும் நிகழ்த்தி, பல்கலைக் கழகம், ஏழ்மை நிலையில் இருந்து வரும் மாணவருக்குத் தொடர்ந்து பயன்பட அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வதே பல்கலைக்கழகத் துணைவேந்தர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. அதுவே தமிழ் நாடு மக்களுக்குத் துணை வேந்தர் ஒருவர் செய்யும் மகத்தான சேவையாக இருக்க முடியும்.
தமிழ் நாடு அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட எவருக்கும் இட ஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பு, கிடையாது. ஆனால், மத்திய அரசின் கொள்கையின் படி வருமான உச்சவரம்பு உண்டு.
உயர்புகழ் நிறுவனம் (Institute of Eminence -IoE) என்ற விதிகளின் படி அண்ணா பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கினால் மத்திய அரசு இட ஒதுக்கீடு கொள்கையின் படி தான் செயல்பட முடியும். அது மட்டுமல்லாமல் கல்விக் கட்டணம் பல மடங்கு உயரும்.
ஒரு பல்கலைக்கழகத்தை உயர் புகழ் நிறுவனம் (IoE) என்று அறிவிப்பதனால் அந்த பல்கலைக்கழகம் உயர் புகழ் நிறுவனம் ஆகிவிடாது. பல்கலைக்கழக ஆய்வுகளின் தன்மையையும், உருவாகும் ஆளுமைகளின் அரிய சாதனைகளுமே ஒரு பல்கலைக்கழகத்தை உயர் புகழ் நிறுவனமாக உலகம் அங்கீகரிக்கும்.
சென்னை, இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி)ல் இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் மூலமும் அறியப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் உயர்பகழ் நிறுவனத் (I o E) தகுதியைப் பெற்றுவிட்டால் மத்திய அரசு சட்டத்தின் படியான இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, செலவுகளை ஈடுகட்ட கல்விக் கட்டணம் மிக அதிக அளவில் உயரும் என்பது நிச்சயம்.
சமூகநீதி அடிப்படையிலான தமிழ் நாடு அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரித்து, கல்விக் கட்டணம் பல மடங்கு உயர வழி செய்வதுதான் ஒரு துணை வேந்தர், பல்கலைக் கழகத்திற்கும், மாநில மக்களுக்கும் செய்யக்கூடிய சேவையா?
மாநில அரசின் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக இருப்பவர், பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயல்பாட்டையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத்தை கொண்டு வர, ஒரு கடிதத்தை மத்திய அரசிற்கு எழுதும் அதிகாரத்தை யார் தந்தது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 246ன் படி பல்கலைக்கழகத்தை உருவாக்க, ஒழுங்குபடுத்த, கலைக்க மாநில அரசிற்கே உரிமையுண்டு என்பதைத் துணை வேந்தர் ஒருவர் எவ்வாறு கவனிக்கத் தவறினார். ஒரு துணைவேந்தரே கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், மக்களாட்சி மாண்பையும் மதிக்கத் தவறினால் மாணவர்கள் எவ்வாறு மதிப்பார்கள்?
Also read
கோயம்புத்தூர், பொள்ளாச்சி பகுதியைச் சார்ந்த இஸ்ரோவின் தலை சிறந்த விஞ்ஞானியாகச் செயல்படும் தமிழர், தன் இளமைக் காலத்தை நினைவு கூரும் போது : அவர் தந்தை பள்ளி ஆசிரியராக இருந்த போதிலும் தங்களைப் படிக்க வைக்க, கூடுதல் வருமானத்திற்காகத் தையல் வேலை பார்த்தார். அவருக்கு உதவியாக, பட்டன் தைத்துத் தருவோம். நான் ஒரு வகுப்பை முடித்த பிறகு, எனக்கு அடுத்த குழந்தைக்கு அந்த வகுப்புப் பாடநூல் பயன்பட வேண்டும் என்பதால், நான் எந்த குறிப்பும் அதில் எழுதக் கூடாது என்று தந்தை கூறுவார், என்று பதிவு செய்கிறார். அத்தகைய ஏழ்மை நிலையில் இருந்தவரை இந்தியாவின் தலைச்சிறந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிகவும் அரிய சாதனைகளைப் படைத்திடும் ஆற்றல் பெற்ற ஆளுமையாகவளர்த்தெடுத்திட முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அரசு உதவியில் இயங்கிய உயர் கல்வி நிறுவனத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் அவரால் பொறியியல் பட்டம் படிக்க முடிந்தது என்பதே.
வருங்காலங்களில் இவ்வாறான ஏழ்மைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகப் போகும் நிலை உருவாகும். என்னதான் தகுதியும், திறமையும் இருந்தாலும் கல்விக் கட்டணத்திற்காகத் தன் சுய கண்ணியத்தை இழந்து பலரின் உதவியை நாடவேண்டிய நிர்பந்தத்திற்கு மாணவர்கள் உள்ளாவார்கள்.
உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளை உருவாக்கித் தந்த அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் நிறுவனமாக (I o E) மாற்றுவது அல்லது அதைப் பிரித்து வெவ்வேறு பெயர்களில் செயல்பட வைப்பது போன்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது.
ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் சட்ட மசோதாவைத் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் தற்போது உள்ள நிர்வாக அமைப்பில் மாநில அரசுப் பல்கலை கழகமாக நீடிக்க வேண்டும். பல்கலைக்கழகம் மேலும் சிறப்புடன் செயல்படத் தேவைப்படும் நிதி, உள்ளிட்ட அனைத்து வளங்களையும் தமிழ் நாடு அரசு தந்திட வேண்டும்.
இவ்வாறு பொதுப் பள்ளிகளுக்கான மாநிலஅமைப்பின் பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Leave a Reply