வதந்தியாளர்கள் மீது வெறும் வழக்கு மட்டும் தானா?

-சாவித்திரி கண்ணன்

வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்தான கொடூர வதந்தியை பரப்பியது என்பது ஏதோ தவறுதலாக நடந்தல்ல! வெகு நாட்கள் திட்டமிடப்பட்டு, சிஸ்டமேட்டிக்காக நடத்தப்பட்டதே இது! திமுக அரசு பலவீனமான அரசு என்ற நம்பிக்கையில், பாஜக கையில் எடுத்துள்ள ஆயுதமே பொய்கள், வதந்திகள்! என்ன செய்யப் போகிறது திமுக அரசு?

ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போட்டால் மட்டும் போதாது! கண்டணங்கள் தெரிவித்தால் மட்டும் போதாது! கண்டிப்பாக இவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாகும்!

வட இந்திய தொழிலாலர்கள் விவகாரத்தை எடுத்துக் கொண்டு இங்கு மீண்டும் ஒரு அரசியல் யுத்தம் நடந்து கொண்டுள்ளது! இதில் அரசியல் கட்சிகள் அவரவர் ஆதாயத்திற்கு ஏற்ப பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகமாக வட இந்தியத் தொழிலாளர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனரா..? என்றால், ஆம்! உண்மை தான்! அது குறித்து இங்கு பல விமர்சனங்கள் இருக்கிறதா? என்றால், ஆம், இருக்கிறது!

ஆனால், தமிழக மக்களை பொறுத்த வரை வட இந்திய தொழிலாளர்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை, பகையும் இல்லை. தமிழர்கள், வட இந்தியர்களுக்கான மோதல்கள் என்று எதுவும் இல்லை. சாதரண சண்டை, சச்சரவு, மோதல்கள் என எங்கேயும் இருக்கத் தான் செய்யும். இவற்றில் இன வெறுப்போ, துவேஷமோ கிடையாது!

தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான சட்ட, திட்டங்கள் கறாராக கடைபிடிக்கப் படுவதில்லை. இங்கே இவர்கள் காண்டிராக்டர்கள், புரோக்கர்கள், முதலாளிகள் போன்றவர்களால் சுரண்டப்பட்டு வருகிறார்கள்! இவர்களில் சிலர் ரூ 200 க்கும், 300க்கும் மோசமாக வேலை வாங்கப்படும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம்! பல பிரபல நிறுவனங்களிலேயே இவை நடக்கின்றன! இவர்கள் உயிர் இழந்தால் அதற்கான இழப்பும் சரியாக வழங்கப்படுவதில்லை! இவையாவும் தனி நபர்கள் மற்றும் அலட்சியமான அரசு நிர்வாகத்தின் குறைகள்! வருந்தத்தக்கவை! மாற வேண்டியவை!

ஆனால், தமிழகம் வன்முறை பூமியல்ல! அதுவும் எளியோர் மீது கொடும் தாக்குதல் நடத்தும் சமூக கலாச்சாரம் இங்கே கிடையாது! எந்த ஒரு இயக்கமும் அதற்கு இங்கு துணியாது! அப்படியே துணிந்தாலும், அதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்!

திமுக கட்சி மீது பாஜகவிற்கு உள்ள வன்மமும், வெறுப்பும் உத்திர பிரதேச அளவிலும் உக்கிரமாக கனன்று கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே உ.பியின் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் பரப்பிய வதந்தியாகும்! பொய்களை பேசுவதற்கு என்று ஆளாளுக்கும் பொறுப்பு கொடுக்கும் கட்சி என்றால், அது பாஜகவாகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது. பொய்களை பேசுவதும், வன்முறைகளை உருவாக்குவதும், அதில் அரசியல் ஆதாயம் அடைவதும் பாஜக தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் அரசியல் யுக்திகள்  என்பது நாம் அறியாதது அல்ல!

வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ்!

”12 பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர்” எனப் பேசியதோடு, இந்த வதந்தியை நம்ப செய்வதற்கான சம்பந்தமில்லாத வீடியோ பதிவுகளை வெளியிட்டு பரப்பி உள்ளார் உ.பியின் பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ். ஒரு பொய்யான வதந்தி பல வன்முறைகளுக்கு வித்திடக் கூடியதாகவும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் மாறும் தன்மை கொண்டது! உண்மையல்லாத ஒன்றை ஏன் நாட்டை ஆளும் ஒரு தேசிய கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளார் பேச வேண்டும்? இதன் மூலம் அவர் செய்ய விரும்பியதென்ன?

அதையே வாக்குமூலமாக எடுத்துக் கொண்டு, சட்ட சபையையே கிடுகிடுக்க வைத்துள்ளது பாஜக! ”தமிழ் நாட்டிலே பீகாரிகள் வெட்டிக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில், பீகாரின் துணை முதல்வர் தேசஸ்வி யாதவ் தமிழக முதல்வர் ஸ்டாலினோடு கேக் வெட்டிக் கொண்டிருந்தார்..!” என பீகார் பாஜக தலைவர்கள் கொந்தளித்துள்ளனர்!

அரசியல்வாதிகள் தான் உள் நோக்கங்களோடு செயல்படுகிறார்கள் என்றால், தைனிக் பாஸ்கர் என்ற அதிகம் விற்பனையாகும் பிரபல ஹிந்தி நாளேடும் இது போன்ற பொய் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளது.” மார்ச் 20க்குள் தமிழகத்தில் உள்ள இந்தி தொழிலாளர்கள் வெளியேற வில்லை என்றால் கொல்லப்படுவார்கள்! தமிழ்நாடு வேலை தமிழருக்கே போய்விடுங்கள்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாக செய்தி வெளியிட்டு உள்ளது. அதே இதழில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்தியநாத் அவர்களும், இந்த சம்பவங்களை கண்டிப்பதாகவும், ’இந்தி தொழிலாளர்கள் இங்கு வரலாம் நாங்கள் பாதுகாப்பு தருவோம் என சொன்னதாகவும்’ பிரசுரித்துள்ளனர். ஒரு முதலமைச்சரே ஒரு சம்பவம் என்ன? அதன் உண்மைத் தன்மை என்ன? என்று தெரியாமல் பேசுகிறார் என்பதும் ஆச்சரியமளிக்கிறது.

இதன் விளைவாக, ‘தமிழகத்தில் வேலை செய்யப் போன தம் பிள்ளைகள், கணவன்மார்கள் கதி என்ன ஆனதோ…’ என லட்சக்கணக்கான பீகாரி பெண்களும், பெற்றோர்களும் எப்படி கலங்கி துடித்திருப்பார்கள்..என்பதின் வெளிப்பாடே இங்குள்ள பீகாரி தொழிலாளர்கள் கொத்துக்,கொத்தாக ரயில் நிலையங்களில் குவிந்ததாகும். ஒரு பொய் பல ஆயிரம் கொலைகளுக்கு சமானமாகும்!

இப்படிப்பட்ட வதந்தியை பரப்பிய உத்திரபிரதேச பாஜக தலைவர் இந்த நேரம் அந்தக் கட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால், அது யோக்கியமான கட்சியாகும். அத்துடன் அவரை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து சிறையில் அடைக்கலாம். இப்படி கூசாமல் அணுகுண்டைப் போல பொய்களை வீசுபவர்கள் சமூகத்திற்கு பேராபத்தானவர்களாகும். நல்ல வேளையாக பீகார் அரசால் அனுப்பட்ட அதிகாரிகளே இங்கு வந்து பார்த்து விசாரித்து, உண்மையை வெளிப்படுத்தி தமிழக அரசின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால், இங்குள்ள பாஜக தலைவர் அண்ணாமலையோ வாய்துடுக்காக திமுக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் பாய்ந்து குதறியுள்ளார்! பொய் செய்தி பரப்பிய தன் கட்சிக்காரனால் எவ்வளவு பெருந்துயரம் விளைந்துள்ளது என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் பேசும் அண்ணாமலை மீதும்  வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல், இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது!

ஆக, இந்த வதந்தி பரவல் விவகாரத்தில் ஐவர் மீது இது வரை வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால், இவர்கள் அனைவருமே தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு தமிழ்நாட்டு அரசால் உத்திரவாதம் தர முடியாது என்றே தோன்றுகிறது. வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சாதாரண பஞ்சாயத்து தலைவர் முத்தையாவையே கைது செய்து தண்டிக்கவில்லையே திமுக அரசு! இப்படியான பலவீனமான ஒரு அரசு தமிழகத்தை ஆட்சி செய்யும் சூழலில், அடுத்தடுத்து தன் சூழ்ச்சி திட்டங்களை பாஜக அமல்படுத்திக் கொண்டு தான் இருக்கும். மக்களாகிய நாம் விழிப்புணர்வுடன் இருப்போமாக!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time