தனியார் மயத்தால் லாபமா? நஷ்டமா..?

-சாவித்திரி கண்ணன்

தனியார் பேருந்துகளை 1972-ல் அரசுடமையாக்கினார் கருணாநிதி! இன்று அவர் மகன் ஸ்டாலினோ அரசு போக்குவரத்தை படிப்படியாக தனியார் மயமாக்கி வருகிறார்! பொதுத் துறையானதால் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன?  நஷ்டங்கள் என்ன..? தனியார் மயத்தால் நஷ்டங்கள் குறையுமா? தீர்வு கிடைக்குமா?

கருணாநிதி போக்குவரத்து துறையை பொதுத் துறையாக்கிய ஆண்டு 1972. பொன் விழா ஆண்டான 2022 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபையில் அரசு போக்குவரத்தை தனியார்மயப்படுத்தும் கொள்கை முடிவை ஸ்டாலின் அரசு அறிவித்தது. இது மத்திய பாஜக அரசின் பொதுத் துறை அனைத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சிக்கு ஒத்திசைந்த அணுகுமுறையாகும். முன்னதாக மத்திய அரசு பொது போக்குவரத்தை தனியார்மயமாக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதில் தான் பகல் கொள்ளை போல அபராதத் தொகைகளை அதிகப்படுத்தியது. அதைத் தமிழக திமுக அரசு அப்படியே ஏற்றுக் கொண்டு, தமிழகத்தில் அமல்படுத்தி வருகிறது என்பதும் கவனத்திற்கு உரியதாகும்!

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, ”அரசு வழித்தடத்தில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. அப்படி நாங்கள் அனுமதி எதையும் அளிக்கவில்லை. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு எந்த விதமான டெண்டரும் விடப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயக்குவது சரியா, இதன் செயல்பாடு எப்படி இருக்கும், என்பது போன்ற பேருந்து இயக்குவதற்கான சாதக, பாதகங்களை ஆராயவே டெண்டர் விடுக்கப்பட்டு உள்ளது” என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறுகிறார்!

சாதக, பாதகங்களை ஆராய ஆய்வு கூட்டம் நடத்தி தான் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால், அமைச்சரோ தன்னையும் அறியாமல் டெண்டர் விட்டதை மறைக்க முடியாமல் ஒப்புக் கொண்டுள்ளார். ஆகவே, அனைத்து தொழிற்சங்கங்களும் இதை எதிர்த்து களம் கண்டுள்ளன!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்

சென்னையில் தனியார் பேருந்துகளை 500 என்ற எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் பரவலாக கசிந்துவிட்டன! அதாவது, 1,000 பேருந்துகளுக்கான முதல் தவணையாக 500 தனியார் பேருந்துகளை முதல் கட்டமாக இயக்குவதற்காக டெண்டர் விடப்பட்டதாக கூறப்பட்டது! இப்படியாக 25 சதவிகித அரசுப் பேருந்துகளை நிறுத்திவிட்டு, GCC எனப்படும் மொத்த செலவின மாடலின்படி கி.மீக்கு இவ்வளவு தொகை என்ற அடிப்படையில், தனியார் மயமாக்க உள்ளதாக அரசு நிர்வாக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

1972 ஆம் ஆண்டு கருணாநிதி போக்குவரத்துத் துறையை அரசுமயமாக்கிய போது அது பெரும் வரவேற்பு பெற்றது! அதன் பிறகு தான் குக்கிராமங்களுக்கும் பேருந்துகள் சென்றன! அரசுமயமாக்கப்படும் போது தமிழகம் முழுமைக்கும் 3,500 பேருந்துகள் மட்டுமே ஓடின! அதன் பிறகு படிப்படியாக பேருந்துகளின் எண்ணிக்கை கூடின! நிறைய எளிய குடும்பத்து உழைப்பாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது! அரசுக்கும் லாபமும், வரிவருவாயும் கிடைத்தது.குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து சேவையை மக்கள் பெற முடிந்ததால் சற்று தொலைவான இடங்களுக்கு சென்று வேலை செய்யும் சூழலும் அவர்களுக்கு சாத்தியமாயிற்று!

ஆரம்ப காலங்களில் நஷ்டம் என்ற பேச்சு இல்லாமல் லாபத்தில் தான் போக்குவரத்து கழகங்கள் இயங்கின! அதனால் தான் போக்குவரத்து துறை லாபத்தைக் கொண்டு இன்ஞினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி, பாலிடெக்குனிக்குகள் என கல்வி வளர்ச்ச்சியையும் சாத்தியப்படுத்த முடிந்தது! இவற்றில் போக்குவரத்து துறை ஊழியர்களின் பிள்ளைகள் படிக்கும் வாய்ப்பு பெற்றனர்.

அதன் பிறகு இதில் அரசியல் ஆதிக்கங்கள் அதிகம் ஏற்பட்டதாலும், லஞ்சம், ஊழல், அலட்சியம் போன்றவை தலை தூக்கியதாலுமே நஷ்டங்கள் உருவாயின!

போக்குவரத்து துறை என்பவை கறக்க கறக்க பால் கொட்டும் காமதேனுவை போன்ற காசு கொட்டும் கற்பகத் தருவாகும்! அவ்வளவு லாபகரமான துறை ஏன் இவ்வளவு நஷ்டமாகி போனது  என்ற சுய பரிசீலனைக்கு அரசு தன்னை உட்படுத்திக் கொள்ளவேயில்லை.

கடனுக்கு ஒரே ஒரு பஸ் வாங்குபவர் கூட, லஞ்சம் தந்து தகுந்த ரூல் பெற்று பஸ் ஓட்டி காலப்போக்கில் அசலையும், வட்டியையும் அடைத்து விட்டு படிப்படியாக லாபம் சம்பாதித்து, மேலும் பல பஸ்களை வாங்கி பெரும் பணக்காரர் ஆவதை நாம் காண்கிறோம்! ஆனால், 22,000 சொச்சம் பஸ்களை வைத்துள்ள அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை லாபம் பார்த்து இருக்க வேண்டாமா? ஏன் இந்த நஷ்டம்?

போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு ஆட்சியாளர்கள் நேர்மைக் குறைவே காரணம்! வேலியே பயிரை மேய்ந்தது தான் காரணம்! சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து துறையில் கட்சிக்காரர்கள் ஏராளமான வேலை வாய்ப்புகளை பெற்றனர்! அப்படி அரசியல் செல்வாக்கோடு வேலைக்கு வந்தவர்கள் வேலை பார்க்காமல் சம்பளம் பெற்று முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு பஸ்டெப்போவிலும் சுமார் 15 முதல் 20 கட்சிக்காரர்கள் வேலை பார்க்காமல் சம்பளம் வாங்கிய நிலைமைகள் இருந்தன! தேர்தல் காலங்களில் இவர்கள் கையெழுத்து போட மட்டுமே பணிமனை வருவார்கள்! வேலை நேரங்களில் அந்தந்த கட்சிகளுக்கு முழு நேர கட்சி பணி செய்து கொண்டிருப்பார்கள்!

இவை தவிர, உதிரிபாகங்கள் வாங்குவதில் ஊழல், டயர் வாங்குவதில் ஊழல் என மக்கள் பணம் சூறையாடப்பட்டது! இதனால், காலப் போக்கில் அரசு பணிமனைகளையே தவிர்த்துவிட்டு, தனியார்வசம் பழுதுபார்ப்பு ஒப்படைக்கப்பட்டது! அதிலும் ஊழல் விளையாடியது. எல்லாவற்றுக்கும் மேலாக போக்குவரத்து கழகங்களில் தேவையற்ற பணி இடங்களை உருவாக்கி, அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினர். இந்த பணியிட நியமனங்களில் லஞ்சம் வாங்குவதே இதன் நோக்கமாக இருந்தது. பணம் கொடுத்து வேலை பெற்றவர்கள் வேலை செய்யாமல் ஊழல் செய்தனர்!

இதன் விளைவாக 1989,90 களில் திமுக ஆட்சியின் போது ரூபாய் 186 கோடி நஷ்டத்திற்கு ஆளானது போக்குவரத்து துறை!

அடுத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தனது ஐந்தாண்டு காலத்தில் போக்குவரத்து துறையின் நஷ்டத்தை 530 கோடியாக உயர்த்தினார்! மீண்டும் 1996ல் திமுக ஆட்சிக்கு வந்த போது அந்த நஷ்டத்தை 2,035 கோடி அளவுக்கு அதிகப்படுத்தி விட்டது!

இப்படியே மாறி, மாறி அதிகப்படுத்தி சென்ற அதிமுக ஆட்சி பதவி விலகிய போது மொத்த நஷ்டம் 33,000த்து சொச்சம் கோடியாகிவிட்டது! தற்போதைய திமுக அரசு அந்த நஷ்டத்தை இரண்டே ஆண்டுகளில் 42,000 கோடிகளாக்கிவிட்டது.  தற்போது பஸ்களை இயக்கும் ஒவ்வொரு நாளும் அரசுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது!

இவ்வளவு நஷ்டங்கள் ஏற்ப்பட்டாலும் பொதுவாக கருணாநிதி போக்குவரத்து கழகங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்! 1996 – 2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் நான்கரை ஆண்டுகளில் மட்டும் 9,477 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, 1,468 புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன. கிராமப்புற மக்கள் வேலைக்குச் சென்றுவர வசதியாக மினி பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 2,334 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இப்படியாக தன் ஆட்சி காலங்களில் புதிய வழித்தடங்களை உருவாக்கியும், புதிய பேருந்துகளை வாங்கியும் அவர் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினார்!

மேலும், அரசின் சமூகநல நோக்கங்களை நிறைவேற்றுவதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முன்னோடியாகச் செயல்பட்டு வருகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு இலவச பேருந்து சலுகை என்பது தமிழகத்தில் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணை செய்தது. ஆனால், காலப் போக்கில் இந்த இலவச பேருந்து பயணம் என்பது ஓட்டு வேட்டையாடுவதற்கான அரசியலாக மாறி போக்குவரத்து கழகங்களை பெரும் நஷ்டத்தில் தள்ளின!

தற்போது தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 22 ஆயிரத்து சொச்சம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அரசுப் பேருந்துகளில் அன்றாடம் 2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர்.  ஆக, மிக லாபகரமாக இயங்க வேண்டிய நிறுவனம் நேர்மையற்ற, முறைகேடான நிர்வாகத்தின் காரணமாக நஷ்டத்தில் இயங்குகிறது! நஷ்டங்களைத் தவிர்க்க தனியார் மயமே தீர்வு என்பது பாஜக பாலிசி! அதையே இன்றைய மு.க.ஸ்டாலினின் திமுக அரசாங்கமும் செயற்படுத்துகிறது!

ஆனால், இதற்கு தனியார்மயமாக்கல் என்பது தீர்வைத் தருமா? என்று பார்ப்போம்!

தனியார்மயமானால், பேருந்துகள் தூய்மையாக இருக்கும். சரியான முறையில் பராமரிக்கபடும். சரியான நேரத்திற்கு பேருந்துகள் விடப்படும். தற்போதைய அலட்சியங்கள் தவிர்க்கப்பட்டு, ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள் என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன!

இதை நாம் மறுக்கவில்லை! அதே சமயம் தனியார்மயமாவதால் கட்டணங்கள் அதிகரிக்கும். எளியவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலை உருவாகும். அனைத்து சமூக நலத் திட்ட செயலாக்கங்களும் கைவிடப்படும். நல்ல லாபம் வரும் ரூட்டுகளில் மட்டுமே பேருந்துகளை அவர்கள் இயக்குவார்கள். இதனால் சில,பல இடங்களுக்கு பேருந்து வசதி இல்லாத நிலை ஏற்படும்! எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போதைய முறைகேட்டைவிடவும் அதிக முறைகேடுகள் நடந்து போக்குவரத்து துறை நஷ்டம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிடும். ஏனெனில், தனியாரிடம் ஒவ்வொரு ரூட்டுக்கும் ஆட்சியாளர்கள் பெரும் கையூட்டு வாங்குவார்கள்! இன்னும் சொல்வதென்றால், அப்படி வாங்கவே தனியார்மயப்படுத்துகிறார்கள்!

அதுவும் GCC முறையில் இந்த திட்டம் செயல்படும் போது தனியார் ஒரு கீ.மிக்கு இவ்வளவு கட்டணம் என்றால், அதை ஆட்சியாளர்கள் தயங்காமல் கொடுப்பார்கள்! அதிலும், கமிஷன் பார்ப்பார்கள்! அதற்கு உதாரணம் சொல்வதென்றால், மின் உற்பத்தியில் தனியாரை அனுமதித்தார்கள்! அரசு மட்டுமே மின் உற்பத்தி செய்த போது மின்சாரத் துறையின் நஷ்டம் 10.000 கோடிகளாக இருந்தது! ஆனால், தனியாரிடம் கொள்முதல் செய்யத் தொடங்கிய பிறகு மின்சாரத் துறையின் நஷ்டம் என்பது தற்போது ஒரு லட்சத்து 80.000 கோடிகளாகிவிட்டது!

ஆகவே, போக்குவரத்து துறையில் தனியாரை அனுமதிப்பதன் வாயிலாக  நஷ்டம் பல மடங்கு கூடிவிடும். அதுவும், இது உலக வங்கி நிர்பந்தத்தால் செய்வதால் நம்முடைய கடன் இன்னும் அதிகரித்து ஆறு லட்சம் கோடிகளைக் கடந்துவிடும். கடன் சுமையும் நம் தலையில் தான் ஏற்றப்படும். ஆட்சியாளர்கள் தனியார்களிடம் கையூட்டுக்கு மேல் கையூட்டுகள் பெற்றுக் கொண்டு, தங்களை வளப்படுத்திக் கொள்வார்கள்! ஆகவே, தனியார் மயம் என்பது தீர்வல்ல, மக்களையும், தொழிலாளர்களையும் தீர்த்துக் கட்டும் முயற்சியே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time