வீராப்பு அண்ணாமலை! விலகிச் செல்லும் அதிமுக!

-சாவித்திரி கண்ணன்

அரைவேக்காட்டு அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம்  கண்டுள்ளது. அதன் அடையாளமாகவே அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக் கொண்டுள்ளனர். தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு கனிந்துள்ளதா..?

ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வருவதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து பகை அரசியல் செய்கிறார்! இதனால் இரு கட்சி அணிகளும் பகைக்களம் கண்டுள்ளன!

ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சிலர் மாறிச் செல்வதும், தன்னை பாதிப்புக்கு ஆளாக்கிய தலைமை மீது குற்றம் சாட்டுவதும் புதிதல்ல! காலம்காலமாக நடப்பது தான்! ஆனால், அண்ணாமலை காலத்தில் தான் ஏராளமானவர்கள் பாஜகவில் இருந்து விலகிய வண்ணம் உள்ளனர். தமிழகத்தை பொறுத்த அளவில் அப்படி பாஜகவில் இருந்து விலகியவர்கள் சேர முடிந்த ஒரே கட்சியாக அதிமுக தான் இருக்க முடியும். தங்களின் ஜென்மப் பகைவனாகக் கருதும் திமுகவிற்கோ, காங்கிரசிற்கோ அவர்கள் செல்வதற்கு அதிக வாய்ப்பில்லை. அரசியலுக்குள் அதிரடியாக நுழைந்த அண்ணாமலை இன்னும் எதையுமே கற்கவில்லை. ஆனால், எல்லாம் தெரிந்தவர் போலப் பேசி அனைவரையும் பகையாளியாக ஆக்கிக் கொள்கிறார்!

எடப்பாடி பழனிசாமி படத்தை எரிக்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்!

பாஜகவிலேயே கூட, தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அனைவருமே அண்ணாமலையிடம் இருந்து சற்று விலகியே இருக்கின்றனர். அண்ணாமலையைச் சுற்றி சில்லறை தலைவர்களான கிரிமினல்களே வலம் வருகின்றனர். அண்ணாமலைக்கு பாஜகவை வளர்க்கும் நோக்கம் அறவே கிடையாது! தன்னை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே குறியாக உள்ளார். பொதுவாக எந்த தேசியக் கட்சியும் இது போன்ற நபர்களை நீண்ட நாட்கள் அனுமதிக்காது! பாஜக தலைமை அண்ணாமலையை பீஸ் பிடுங்கப்பட்ட பல்ப்பாக எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிந்துவிட வாய்ப்புள்ளது.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில் இணைந்ததைத்தொடர்ந்து, பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில முன்னாள் செயலாளர் எஸ் வி கிருஷ்ணன். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு, திருச்சி புறநகர் மாவட்டத் துணைத் தலைவர் டி விஜய் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் ஐடி.பிரிவினர் 13 பேர் என பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்!

அதிமுகவில் இணைந்த பாஜகவின் ஐ.டி.விங்கினர்!

இது குறித்து அண்ணாமலை கூறுகையில், ”பாஜகவின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுத்து வருகின்றன திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை தான் காட்டுகிறது! திராவிட கட்சிகளில் சார்ந்து தான் பாஜக வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இன்று பாஜகவிலிருந்து ஆட்களை எடுத்துச் சென்றால்தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது தான். அப்போது தான்  புதியோர்களுக்கு பதவி வழங்க முடியும். பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறது! பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை இருக்கும்” என்கிறார் அண்ணாமலை.

இந்தப் பேச்சு சாமார்த்தியமாக இருக்கலாம்! சாகஸமாகக் கூட இருக்கலாம்! ஆனால், சமநிலை பேணுவதற்கு குந்தகமாகிவிடும் என்பதை அண்ணாமலையால் உணர முடியவில்லை! உண்மையில் அண்ணாமலையின் முதிர்ச்சியற்ற அரைவேக்காட்டுத்தனத்திற்கான ஆகச் சிறந்த உதாரணம் தான் இந்தப் பேச்சு!

பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறதாம்! தமிழகத்தில் அதிமுகவின் உயரம் என்ன? பாஜகவின் உயரம் என்ன..? அதிமுகவின் உயரம் இமயமலை என்றால், பாஜகவின் உயரம் பரங்கிமலை தான்! பரங்கி மலையில் இருந்து சில கற்களை எடுத்துப் போட்டுக் கொண்டு இமயமலை வளர்ந்துவிட்டதாக காட்ட முயற்சிக்கிறதாம்..!

அண்ணாமலைக்கு எதிராக களம் கண்ட அதிமுகவினர்!

தன் இயலாமைகளை மறைத்துக் கொண்டு, தன்னை வீரன்  போலக் காட்டிக் கொள்ள முயன்றாலும், அண்ணாமலையின் எல்லை மீறிய பேச்சுக்கள்  அவர் ஒரு கோழை என்பதை நிர்தாட்சயண்யமின்றிச் சொல்லிவிடுகின்றன!

அதே சமயம் அதிமுகவில் வழிகாட்டு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம், இளம் பெண்கள் பாசறை நிர்வாகி அரவக்குறிச்சி செந்தில்நாதன், மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்த போது எடப்பாடி பழனிசாமி இப்படி எல்லாம் புலம்பவில்லை! இது போதாது என்று செங்கோட்டையின் மகன் கதிர் ஈஸ்வரனையும் அண்ணாமலை இழுத்துக் கொண்டு இருப்பதும் அதிமுக தலைமைக்கு தெரியாதது அல்ல! அனைத்துக்கும் மேலாக பாஜக கொடுக்கின்ற ஆதரவினால் தான் பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சலுக்கு மேல் குடைச்சல் தருகிறார் என்பதை அதிமுகவில் அனைவருமே உணர்ந்துள்ளனர். இவ்வளவையும் தாங்கிக் கொண்டு. தெரிந்தும் தெரியாதது போல ஒரு அரசியலை அதிமுக தலைமை செய்து கொண்டிருப்பதில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு பெரிய ஜித்தன், வில்லனுக்கு வில்லன் என்பதை உணர வேண்டாமா..?

அரசியலில் தவளை போல தன் இருப்பை அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கும் நோக்கில் கத்திக் கொண்டிருந்தால், பாம்பின் வயிற்றுக்குத் தான் இரையாக வேண்டி இருக்கும்! அண்ணாமலை பரமசிவன் கழுத்து பாம்பு என்ற நினைப்பில் கருடனைப் பார்த்து கனைக்கிறார்!

பாமகவும் பாஜகவிடம் இருந்து விலகி வருகிறது! தேமுதிகவும் விலகிவிட்டது! திமுகவோ கூட்டணி பலத்தோடு, ராஜபலத்தையும் கொண்டுள்ளது! இந்த நிலையில் ஒன்றிரண்டு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டு வேண்டும் என்றால் கூட, அதிமுக நிழலில் ஒதுங்குவதைத் தவிர, வேறு நாதியற்ற நிலையில் தான் தமிழக பாஜக உள்ளது. அப்படி இருக்க, அந்த அதிமுகவையும் பகைத்து ஒற்றை மரமாக பாஜகவை நிற்க வைக்க அண்ணாமலை விரும்பினால், ஒரு வகையில் அதுவும் தமிழகத்திற்கு நல்லது தான்! மேலும், எடப்பாடியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு பன்னீர் செல்வத்தை பாஜகவில் இணைத்துக் கொண்டால், அதைவிட மகிழ்ச்சி அதிமுகவிற்கு இருக்க முடியாது! பாஜகவிடம் இருந்து விலகிக் கொள்ள அதிமுகவிற்கு வசதியாகிவிடும்!

பாஜகவின் டெல்லி தலைமை அதிமுகவுடன் கூட்டணி பேச இனி அண்ணாமலையை அனுப்ப முடியாது! அனுப்பினால், அதற்கு நல்ல பலன் கிடைக்காது!

”அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை அதிமுக-பாஜக கூட்டணி சாத்தியமில்லை” என அதிமுக தலைமை சொன்னால், அண்ணாமலையை ஓரம் கட்டுவதைத் தவிர, டெல்லித் தலைமைக்கு வேறு வழி இருக்காது. இல்லை என்றால், ஏதாவது ஒரு கட்டத்தில், ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை, பாஜகவிடம் இருந்து விலகி நிற்க, அண்ணாமலையின் வாய்க் கொழுப்பை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளலாம்’ என அதிமுக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்!

இப்படி எல்லாம் நடக்கும்பட்சத்தில், ‘தங்களை பிடித்த எல்லா பீடையும் தாங்களாகவே விலகிக் கொண்டன…’ என அதிமுகவினர் மகிழவே செய்வர்.

அவசரக் குடுக்கை அண்ணாமலை அரசியலில் இருந்தே அடியோடு சொந்தக் கட்சியாலேயே தூக்கி எறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்படி நடந்தால் தமிழக அரசியல் களம் சற்றேனும் ஆரோக்கியமடையும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time