ஆன்லைன் ரம்மியும், அத்துமீறும் ஆளுநர் ரவியும்!

-ஹரி பரந்தாமன்

அடுத்தடுத்து என 44 மனித உயிர்கள் பலியாகியுள்ளன! பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன! தமிழக சட்டசபை ஒருமித்து நிறைவேற்றிய ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. ”இது அரசமைப்புச் சட்டப்படி சரியான செயல் தானா..?” என அலசுகிறார் ஹரிபரந்தாமன்.

பத்திரிகைகளில் காணும் தகவல்களின்படி, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கூறும் மையமான காரணம், ‘இந்த மசோதா சட்டமானால், இது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை நடத்தும் முதலாளிகளின் தொழில் செய்யும் அடிப்படை உரிமையை தடை செய்வதாக உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை நடத்தும் தொழிலை செய்வதற்கு அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19(1)(g) உரிமை அளிக்கிறது. அந்த அடிப்படை உரிமையில் தலையிடுகிறது இந்த சட்டம்’ என்பதே ஆளுநரின் மைய கருத்து.

ஆளுநரின் இந்த கருத்து தவறானது. அரசமைப்பு சட்டம் கூறு 19 (1)(g) ஜி வழங்கும் உரிமையில் தலையிட்டு கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அரசமைப்பு சட்டத்தின் கூறு 19 (6) அரசுக்கு வழங்குகிறது. அதன் அடிப்படையில் தான் சூது கவ்வும் இந்த விளையாட்டால் சூறையாடப்பட்டு வரும் மக்களை பாதுகாக்க இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியது.

1930-ஆம் ஆண்டில் வெள்ளையர்கள் ஆண்ட போது சென்னை மாகாண அரசால் ஒரு சட்டம் போடப்பட்டது. அச்சட்டம்  பொது நலன்களுக்கு கேடு செய்யும் ஆபத்தான சில விளையாட்டுகளைத் தடை செய்தது.

அதாவது, நாம் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த போது கூட, நமக்கான ஒரு மாகாண அரசால், இப்பொருள் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மறுக்கப்படவில்லை. எனில், அடிமை இந்தியாவில் இருந்த சுதந்திரம் கூட இன்றைய மாநில அரசுகளுக்கு இல்லாமல் போய்விட்டதா? என்ற கேள்வி எழுதுகிறது.

சுதந்திரம் பெற்ற பிறகான அரசமைப்பு அவையில் விவாதம் நடந்த பொழுது, சில அவை உறுப்பினர்கள், ”சூதாட்டம் சம்பந்தமான பொருள் பற்றி சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம்
ஏற்கெனவே  மாநிலங்களின் பட்டியலில் இருப்பதை நீக்கிவிடலாம்” என்ற கருத்தை கூறினார்கள். ஆனால், அம்பேத்கர் அதை மறுத்து. ”சூதாட்டம் பற்றி சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று கூறி மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் சேர்த்தார்!

முந்தைய அதிமுக அரசு, ஆன்லைன் விளையாட்டுகளில் பலர் பெரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்ததை ஒட்டி, மேற்சொன்ன 1930-ஆம் ஆண்டு சட்டத்திற்கு ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. இந்த சட்டம் ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்த சட்டமாகும். பிப்ரவரி 2021-இல் அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

ஆன் லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு  இயற்றிய  சட்டத்தை ரத்து செய்யக் கோரி  ஆன்லைன் ரம்மி உட்பட்ட விளையாட்டுகளை நடத்தும் ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அதன் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன்,ஆகிய செல்வாக்கான வழக்கறிஞர்கள் ‘’இது திறமைகளுக்கான விளையாட்டு, சூதாட்டம் இல்லை.” என்று வாதிட்டனர்.


இந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 2021 ல் அளித்த தீர்ப்பில், ‘’தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது, உரிய விதிகள் இல்லாமல் ஆன் லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடியாது. ஆகவே, உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை” என்று கூறி தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ரத்து செய்தது.

மேலும், Game of Chance- ஐத்தான் தடை செய்ய முடியும் என்றும்,  Game of Skils-ஐ அரசு தடை செய்ய இயலாது என்றும் அந்த தீர்ப்பில் கூறியது. ”ஆன்லைன் ஆட்டங்கள் மட்டுமன்றி, நேரடியாக விளையாடும் விளையாட்டுக்களையும் இந்த சட்டம் தடை செய்வதால் இதை ரத்து செய்வதாக கூறியது. இந்த சட்டத்தின் மூலம் பந்தயம் கட்டினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக IPL போன்ற கிரிக்கெட் விளையாட்டுகள் உட்பட மற்ற விளையாட்டுகளையும் தடை செய்யலாம் என்றும், எனவே இச்சட்டத்தை ரத்து செய்வதாக கூறியது. இந்த சட்டத்தை தமிழக சட்டசபை நிறைவேற்றுவதற்கு முன் இந்த அரசு எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை, எந்த தகவல்களையும் திரட்டவில்லை” என்று கூறியது கவனத்திற்குரியது.

இந்த தீர்ப்பில் தமிழ்நாடு சட்டசபைக்கு இப்பொருள் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் கூறியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது! இந்த வழக்குகளை தாக்கல் செய்த ஆன்லைன் விளையாட்டு தொழில்களை நடத்தும் நிறுவனங்களே தமிழ்நாடு அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருப்பதை ஒத்துக் கொள்வதாக இத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலே சுட்டிக்காட்டியது போல 2021 இல் கவர்னராக இருந்தவர் அப்போதைய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்போது, இப்போது இருக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுப்பது ஏன்? அப்போதைய அதிமுக அரசு பாஜக அரசுக்கு மிகவும் அனுசரணையாக இருந்தது என்பதால் ஒப்புதல் அளித்தாரா ஆளுநர்?


மேற்சொன்ன உயர் நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகளை நோக்கி, ஓய்வு பெற்ற முன்னாள் நீதி அரசர் திரு.சந்துரு தலைமையில் ஒரு குழுவை திமுக அரசு நியமித்தது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ரம்மி உட்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை மட்டும் தடை செய்து தமிழ்நாடு அரசின் சட்டசபை சட்டம் இயற்றியது. முந்தைய சட்டத்தைப் போலவே இந்த சட்டமும் அனைத்து தரப்பினராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன் தமிழ்நாடு சட்டசபை கூடாத நிலையில் ஒரு அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அந்த அவசர சட்டத்தில் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார் இப்போதைய ஆளுநர் ரவி. ஆனால், இதே அவசரச் சட்டம் நிரந்தர சட்டமாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஒப்புதல் தர மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார்!

தமிழ்நாடு சட்டசபை இயற்றும் எந்த சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் ஆளுநர். எட்டு கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்நாடு சட்டசபையை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒற்றை மனிதரான ஆளுநர் புறக்கணிக்கிறார்.

இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து உயிரிழப்பவர்கள் பற்றியோ, பணத்தை இழந்த குடும்பங்கள் நிர்கதியாக வீதிக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்தோ கவர்னருக்கு அக்கறை இல்லை. ஆன்லைன் சூதாட்ட தொழில் நடத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையிலும், அவர்களின் பொருளாதார நலன்களிலும் தான் அவருக்கு அக்கறை உள்ளது.


அரசமைப்புச் சட்டம் இந்த மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைத்தாலும் தான் அவ்விதம் அழைக்க முடியாது என்று அடாவடியாக பேசினார். எழுவர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவை முடிவெடுத்து இருந்தாலும், அதை ஏற்க மறுத்தார் ஆளுநர். உச்ச நீதிமன்றம் தலையிட்டு எழுவர் விடுதலை சாத்தியமாயிற்று. நீட் விலக்கு கேட்டு இயற்றப்பட்ட  சட்டத்திற்கும் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. திமுக அரசு உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி உள்ளது. எப்போது உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் திறக்கும் என்று தெரியாது. அதாவது வழக்கு எப்போது முடியும் என்பது தெரியாது.

ஆளுநர் அவரது அதிகார வரம்பை தாண்டி செயல்படுகிறார். அவர் ஒரு எதிர்க்கட்சியை போலச் செயல்படுகிறார். இந்த நிலை பாஜகவிற்கு எதிர் நிலை கொண்ட கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் தொடர்கிறது.

மத்திய பாஜக அரசாங்கம் இதில் 28 சதவிகித ஜி.எஸ்.டி வரி போட்டு வருமானம் பார்க்க தான் ஆசைப்படுகிறது! இது தம் சொந்த மக்களின் வாழ்க்கையை சூறையாடிப் பெறும் பணம் என்ற குற்ற உணர்ச்சி ஒரு அரசுக்கு வேண்டாமா? . ”இதை மத்திய அரசே தடுத்துவிட்டால் மிகவும் நல்லது” என பல மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி கெஞ்சியும் பயனில்லை.

ஆன்லைன் வர்த்தக சூதாட்ட வணிகத்தில் பல கோடி ரூபாய்கள் புழல்கிறது. மிக பலம் பொருந்திய பெரிய முதலாளிகள் இதில் ஈடுபட்டு பெரும் லாபம் சம்பாதிக்கின்றனர். அந்த முதலாளிகளுக்கு இடையே ஒரு கூட்டமைப்பும் உள்ளது. இந்த முதலாளிகளின் நலன்களை காப்பதற்கு தான் இன்றைய மத்திய பாஜக அரசு உள்ளது. எனவேதான் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை செய்யும் தமிழ்நாட்டு அரசின் சட்டத்திற்கு கவர்னரின் மூலம் முட்டுக்கட்டை போடுகிறது பாஜக மத்திய அரசு.

இதன் மூலம் இந்த பெரு முதலாளிகளிடம் இருந்து தேர்தலுக்காக பெரிய நிதியை ஆளும் பாஜகவினர் பெறலாம். தேர்தல் பத்திரம் என்ற Electoral bonds  திட்டத்தின் மூலம் பெரிய தொகையை இது போன்ற முதலாளிகளுக்கு சேவை செய்வதன் மூலம் பாஜக பெறுகிறது என்ற குற்றச்சாட்டை சிவில் சமூகம்  சுமத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெறும் நிதியை யார் கொடுத்தார்கள் என்பது எவருக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம். நிதி கொடுப்பவர் விவரம் இரகசியமாக இருக்கும் என்பதே இந்த Electoral Bonds திட்டம் இந்த திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.


ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விரோதமானது. ஜனநாயக கோட்பாட்டிற்கு விரோதமானது. மக்கள் நலனுக்கு எதிரானது! பாஜகவைத் தவிர தமிழகத்தில் எந்தக் கட்சியும் இந்த விஷயத்தில் கவர்னரை ஆதரிக்கத் தயார் இல்லை. எனவே, ஆளுநரைக் கண்டித்து மக்கள் திரள வேண்டும். மக்கள் திரள் அளிக்கும் நிர்பந்தத்தில் இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி, சமூக செயற்பாட்டாளர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time