மோசடி நிறுவனங்கள்… முடிவில்லா தொடர்கதையா?

-செழியன் ஜானகிராமன்

ஆருத்ரா கோல்டு, ஐ.எப்.எஸ்..போன்ற மோசடி நிறுவன வரிசையில் ஹிஜாவு  அசோசியேட்டும் இணைந்துள்ளது. இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள்  சுமார் 40 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆட்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தெரியாமலா இவ்வளவு மோசடிகள் அரங்கேறுகின்றன..?

காலம்தோறும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் முளைத்து வந்து வந்து நம்ப முடியாத அளவு வட்டிப் பணம் தருவதாக விளம்பரபப்டுத்தி வசூல் வேட்டை நடத்துவதும்,பின்னர் வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் நிறுவனத்தின் பெயர் மாறுகிறது. ஏமாற்றும் முறை மாறுகிறது! ஆனால், கடைசியில் பறிபோவது மக்கள் பணம் மட்டுமே.

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.36 ஆயிரம் வீதம் 10 மாதம் பணம் தருவதுடன், 2 கிராம் தங்கக்காசு தருவதாகவும் ஆருத்ரா நிறுவனம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் அந்நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், கூறியபடி அந்நிறுவனம் மக்களுக்கு பணம் வழங்காமல் ஏமாற்றிவிட்டது. இந்த ஆருத்ரா நிறுவன மோசடியாளர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அடைக்கலமாகி, தற்போது டெல்லி அருகே ஓரிடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறார்! தமிழக போலீசார் கப்சிப்பாகி விட்டனர்.

சென்னையில் செயல்பட்ட ஐ.எப்.எஸ். என்ற தனியார் நிதி  நிறுவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வந்தன. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்டன. நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடத்தி லட்சக்கணக்கில் முதலீடுகளும் பெறப்பட்டன. அந்த வகையில் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்டபடி, மாதந்தோறும் வட்டி தொகையை முறையாக வழங்காமல் இழுத்தடித்து அந்த நிறுவன முதலாளிகள் தலைமறைவாகிவிட்டனர். அதன் உயர் பொறுப்பில் இருவர் கைதாகினர்.

புதுக்கோட்டை மாவட்ட சவுந்தரராஜனும், அவரது மகன் அலெக்சாண்டரும் சென்னையில் ஹிஜாவு குழுமம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தியதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாகக் கூறி, கடந்த 4 வருடத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேரிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர். மேலும் முதலீட்டாளர்களைப் பிடித்துக் கொடுத்தால், கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் இந்த நிறுவனத்தில் முகவராகவும் இணைந்து வேலைபார்த்து வந்துள்ளனர்.

ஹிஜாவு முதலாளிகள் செளந்திரராஜன், அலெக்சாண்டர்

இந்த நிறுவனம் துபாய், சிங்கப்பூர் ,மலேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய் கிணறுகள் வைத்திருப்பதாகவும் அதில்  பணத்தை முதலீடு செய்து லாபம் தருவதாகவும் கூறி பொதுமக்களை அவர்கள் கவர்ந்துள்ளனர். இதை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்த  இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டிப் பணம் வராததால் முதலீட்டாளர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அணுகியுள்ளனர். அப்போது, வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட பணம் வருவதற்குக் காலதாமதம் ஆவதால் உங்கள் வட்டியை அசலோடு இணைத்து சேர்த்து, அதற்கும் சேர்த்தே வட்டி தருகிறோம். அதற்கு ஆறு மாத கால அவகாசம் வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இந்த ஹிஜாவு செளந்திரராஜனை பொறுத்த வரை கடந்த 30 ஆண்டுகளாகவே புதுக்கோட்டையில் புதுபெருங்களத்தூரில் இருந்து இப்படி சென்னை வந்து புதிதாக நிறுவனம் தொடங்கி பலரை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி மீண்டும் வந்து, வேறு நிறுவனம் தொடங்கி ஏமாற்றுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார் எனத் தெரிய வருகிறது! அதாவது உலகறிந்த 420 யாக இருக்கும் இவர் இது வரை முறையாக தண்டிக்கப்படவில்லை. மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் தண்டிக்கபடமாட்டோம் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. 38 பேர் உயிரிழந்த நிலையிலும் கூட இவர் மீது இன்னும் குண்டர் சட்டம் பாயவில்லை. ஆட்சியாளர்கள் மட்டத்திலும், காவல்துறை மட்டத்திலும் வலுவான நட்புகள் இவருக்கு இருப்பதாக என சொல்லப்படுகிறது.

மக்களிடம் கொள்ளையடித்து முதல்வரின் நிதிக்கு ஸ்டாலினிடம் பணம் தரும் ஹிஜாவு முதலாளிகள்!

இவ்வளவையும் நடக்கவிட்டு, மோசடிகள் அரங்கேறும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு , மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு குற்றவாளிகளை தேடுகிறது அரசும், காவல்துறையும்!

இது குறித்து விசாரித்து வரும் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார், ஆருத்ரா கோல்டு நிறுவன நிர்வாகிகள் சென்னை மேத்தா நகர் ராஜசேகர், விருதுநகர் மைக்கேல்ராஜ், திருவள்ளூர் முகப்பேர் கிழக்கு உஷா, ஐஎஃப்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேலூர் மோகன் பாபு, லட்சுமி நாராயணன் வேதநாராயணன், ஜனார்தனன், ஹிஜாவு நிறுவனத்தைச் சேர்ந்த செளந்திர ராஜன் மகன் அலெக்ஸாண்டர், மகாலட்சுமி பரந்தாமன், அம்பத்தூர் சுரேஷ், பெங்களூரு இனியா, சென்னை சுஜாதா காந்தா, அடையாறு கவுரி சங்கர்,வேளச்சேரி சந்திர சேகரம் பிரிஸ்டில்லா, கலைச்செல்வி ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர். ஆக, இவர்கள் தேடப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்! ஏமாந்தவர்கள் அவர்களிடம் இருந்து பணம் மீட்டுத் தரப்படுமா… என ஆதங்கத்தில் அலைந்தலைந்து ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிடுவார்கள்!

வங்கியில்  நம் வைப்புத் தொகைக்கு இப்பொழுது 7 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. 1 லட்சம் ரூபாய் வைப்புத் தொகைக்கு மாதம் 580 ரூபாய் வட்டி ஆகும். வருடம் 6960 ரூபாய் வருகிறது. ஆனால் மேற்படி ஹிஜாவு நிறுவனம் நாம்  செலுத்தும் 1 லட்சம் ரூபாய்க்கு மாதம் 15,000 ரூபாய் வட்டியாகக் கொடுக்கிறது. வருடக் கணக்கு பார்த்தால் 1,80,000 (1 லட்சத்துக்கு எண்பதாயிரம் ரூபாய்) ஆகும்.

வங்கியின் 580 ரூபாய் வட்டி, ஹிஜாவு வழங்கும் 15 ஆயிரம் ரூபாய் வட்டி உடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கூட வங்கி வட்டி  ஹிஜாவு நிறுவன வட்டி அருகில் கூட வரவில்லை.

இன்றைய மக்களிடம் தொலைந்த போன ஒரு குணம் காத்திருப்பு. சில மாதங்களிலேயே அதிகப் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று இலக்கு. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், பாமரர்கள் என்று வித்தியாசம் இல்லை. எல்லோரும் சமமாகவே ஏமாறுகிறார்கள்.


மக்களின் இன்றைய  குணமான  வேகத்தைத் தான் மோசடி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கிறது.  வங்கி 25 ஆண்டு 1 லட்சத்திற்கு வட்டி கொடுத்தால்தான் ஹிஜாவு நிறுவனம் கொடுக்கும் ஒரு வருட வட்டி வருகிறது.

மோசடி நிறுவனங்களின் முதல் நம்பிக்கை வார்த்தையே  நீங்கள் ரொக்கமாகக்  கொடுக்க வேண்டாம். எங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள். மாதம் உங்களுக்கு வட்டி தொகையை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம்.

பணம் கொடுக்கும் 99 சதவிகிதம் நபர்கள் எப்படி இவ்வளவு வட்டி கொடுப்பீர்கள் என்று கேட்க மாட்டார்கள். அப்படியே கேட்டாலும், அவர்கள் சொல்லும் எதுவும் இவர்கள் காதில் ஏறாது. காரணம் மாதம் 15000 ரூபாய் வட்டி மட்டுமே மீண்டும் மீண்டும் நினைவில் இருக்கும்.

சமீபத்தில் ஓடிப்போன வேலூர் International Financial Service நிறுவனம் பல ஆயிரம் கோடி சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டது. இந்த நிறுவனத்தில் தெரிந்த, படித்த  நண்பர்கள் கூட முதலீடு செய்து ஏமாந்து உள்ளனர்.  இந்த நிறுவனம் மக்களிடம் பெரும் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தை உங்களுக்கும் வட்டியாக கொடுக்கிறோம் என்று சொல்லி பணம் பெற்று உள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த  International Financial Service நிறுவன விளம்பரம் நாணயம் விகடன் பத்திரிகையில் தவறாமல் இரண்டு பக்க அளவில் பல மாதங்கள் வெளியிட்டார்கள்.

விளம்பரம் எப்படி இருக்கும் என்றால்?

இந்திய  பங்குச்சந்தை அடுத்து எப்படிச் செல்லும்? எங்கள்  International Financial Service நிறுவனம் பங்குச் சந்தை குறித்துக் கணித்த செய்திகளை விளம்பரமாக வெளியிடுவார்கள். இதன் வழியாகப் பணம் பெற்று உள்ளனர்.

இந்த நிறுவனம் உண்மையில் அப்படித்தான் இயங்குகிறதா? ஒவ்வொரு வாரமும் இவ்வளவு பணம் கொடுத்து நமக்கு விளம்பரம் கொடுக்கிறார்களே இவர்கள் அப்படி என்ன செய்கிறார்கள் என்று ஒரு முறை கூட நிறுவனத்தைக் குறித்து நாணய விகடன் ஆராயாமல் விளம்பரம் வெளியிட்டு வந்தனர்.

ஆனால், நிறுவனம் மாட்டிக் கொண்ட பிறகு அதே நாணய விகடன்  International Financial Service போலி நிறுவனம், நிறுவனத்தை நம்பி போட்டவர்கள் பணம் சுருட்டிவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டு மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று செய்தி போட்டு, அந்த இதழையும் விற்று லாபம் பார்த்துக்  கொண்டார்கள். இந்த மோசடி நிறுவனத்தின்  விளம்பரம் வெளியிட்டதற்கு வருத்தம் கூட நாணயம் விகடன் தெரிவிக்கவில்லை.

ஹிஜாவு நிறுவனம்  உங்கள் பணத்தை வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்து வரும் லாபத்தில் 15,000 ரூபாய் மாதம் கொடுப்போம் என மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது

பங்குச் சந்தையே என்ன என்று தெரியாத பணம் போட்டவர்களுக்கு, எண்ணெய் கிணறு என்று சொன்னவுடன் நமக்குத் தெரியாத தொழில் அவர்கள் செய்து சம்பாதித்து நமக்குத் தருகிறார்கள் என்று நண்பர்கள், உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள் என்று அனைவரையும் பணம் போட வைத்து உள்ளனர்.மிகப் பலர் பிள்ளைகளின் படிப்பிற்கும், திருமணத்திற்குமாக சிறுகச் சிறுக வங்கியில் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் துடைத்து எடுத்துப் போட்டுள்ளனர். இன்று நிராதரவாக தெரிவில் நிற்கின்றனர். இவர்களில் இன்னும் சிலர் கூட தற்கொலைக்கு தள்ளப்படலாம் எனத் தெரிய வருகிறது!

30 வருடங்கள் முன்பு 1992-1998) அனுபவ் குழு(Anubhav Plantations) நிறுவனம் மக்களிடம் தேக்கு மர திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்று சொல்லிக் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் சுருட்டிக்  கொண்டு ஓடியது. இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய பண மோசடி நிறுவனம்  ஆகும். ஹிஜாவு போன்ற மோசடி நிறுவனங்களுக்குத் தொடக்கம் அனுபவ் குழுமம் ஆகும்.

பொதுவாக புதிய மோசடி நிறுவனங்கள் உருவாவதற்கு  முக்கிய காரணம் குற்றவாளிகள் முறையாக தண்டிக்கபடாதது மட்டுமின்றி, அவர்கள் அனைவரையும் ஏமாற்றும் வரை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பது தான்! இது போன்ற நம்பமுடியாத வட்டியை தருவதாக ஒரு நிறுவனம் களத்தில் இறங்கியவுடனே அவர்களை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் ஏன் கொண்டு வருவதில்லை?

2000-2010 ஆண்டுகளில் காந்த படுக்கை மோசடி-ஈமு கோழி மோசடி, மதுரை MRDT நிறுவன பண மோசடி சமீபமாக ஆருத்ரா மோசடி, வேலூர் இன்டர்நேஷனல் பைனான்சியல் நிறுவன மோசடி யைத் தொடர்ந்து சில நாட்கள் முன்பு ஹிஜாவு அசோசியேட் மோசடி.  இவை எல்லாம் பல ஆயிரம் கோடி ஏமாற்றிய பெரிய நிறுவனங்கள்.

இதைத் தவிர சில லட்சங்கள் சுருட்டும் சிறிய நபர்கள் அதிகம் வெளியே தெரியாமல் மறைந்து கொள்கிறார்கள். இன்னும் பணத்தைப் பல கிராமங்களில் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹெல்மெட் போடாமல்  தொலை தூரத்தில் வரும்போதே போக்குவரத்து காவலர் நம்மைக் கவனித்துக் மடக்கி அபராதம் விதிக்கிறார்கள். இத்தகைய போலி நிறுவனங்கள் சில வருடங்கள் வெளிப்படையாக இயங்குகிறது. அரசும் இத்தகைய நிறுவனங்களைக் கவனிக்காமல் நிறுவனம் மூடி தலைமறைவான பிறகு தான் தேடுகிறார்கள். அதற்குள் பல ஆயிரம் கோடி சுருட்டி இருப்பார்கள். பாமர மக்களிடம் ஹெல்மெட்டுக்கு உடனே பணம் வாங்கும் அரசு இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து வருடம் வருடம் பணத்தைச் சுருட்டி ஓடிக் கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஹிஜாவு தான் கடைசி நிறுவனமா? என்றால் இல்லை. இன்னும் பல நகரங்களில், கிராமங்களில் நூற்றுக்கணக்கில் சிறிதும்-பெரிதுமாக போலி நிறுவனங்கள் மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். புகார் வந்த பிறகுதான் நடவடிக்கை என்றால் ஒவ்வொரு ஆறு மாதமும் மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கப் போவது  உறுதி.


ஒவ்வொரு போலி நிதி நிறுவனங்களும் வெளிப்படையாகப் பெயர்ப் பலகை மாட்டியே பணத்தைப் பெறுகிறார்கள். ஒரு முறையாவது அரசு சார்பாக இந்த நிறுவனங்களில் சென்று சோதனை போட்டு இருந்தாலும் மக்களின் பணத்தைக் காப்பாற்றி இருக்கலாம். ஒருபோதும் தர இயலாத இத்தனை அதிகமான வட்டி தருவேன் என்பதையே சட்டப்படியே குற்றமாக அறிவித்தால் என்ன..?

மக்களும் தொடர்ந்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் போலி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மக்களின் கண்ணீர் கதைகளைப் படித்து எச்சரிக்கையாக இல்லாமல்  உழைப்பில்லாமல் பணக்காரராக வேண்டும் என்று இத்தகைய மோசடி நிறுவனங்களில் மீண்டும் பணத்தைக் கொண்டு சென்று போடுகிறார்கள்.


குற்றம் நடப்பதற்கு முன்பே அரசும் வேகமாக செயல்பட வேண்டும். மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த மோசடி நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சத்து 25,000 பேருக்கும் மேல் ஏமாந்துள்ளனர். மொத்தம் பத்தாயிரம் கோடிகள் சுருட்டப்பட்டுள்ளன! இதில் அதிகார மையங்களுக்கு போன பங்கு என்ன என்று யாருக்கு தெரியும்..? ஹிஜாவு அஸோஸியேட் தான் கடைசி நிறுவனம் அல்ல. இன்னும் பல மோசடி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன!

திமுக ஆட்சியில் மோசடி நிறுவனங்கள் ஒன்றையடுத்து ஒன்றென அதிகரித்துச் செல்வதும், பாதிக்கப்படும் மக்களின் அழுகுரல்களும் சற்று அதிகமாகவே உள்ளன! எப்படியாவது முதல்வர் ஸ்டாலின் குற்றவாளிகளை தண்டித்து, தங்கள் பணத்தை மீட்டுத் தருவார் என மக்கள் பெரிதும் நம்புகிறார்கள்! ஆனால், முதல்வரோ இது வரை மெளனத்தையே பதிலாக தந்து கொண்டுள்ளார். மெளனம் கலைவாரா…?

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time