பனை மரத்தை பகை மரமாகப் பார்க்கும் காவல்துறை!

-ம.வி.ராஜதுரை

தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டப்பட்ட வண்ணம் உள்ளன.  பனைமரத்தை மக்கள் பயன்படுத்தவே தடை செய்கிறது காவல்துறை! பனைமரம் ஏறுவதற்கு கூட லைசென்ஸாம்! அதை காவல்துறை ஏற்காதாம்! டாஸ்மாக்கிற்கு விசுவாசம் காட்ட பனைமரத்தை பலிகடாவாக்குகிறார்கள்! சமூக செயற்பாட்டாளர்கவிதா காந்தி ஆவேசம்..!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி. கவிதா காந்தி. பனை மரங்களின் நன்மைகள் குறித்தும், அவை தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதை தடுக்கவும் பனை விதைகளை விதைத்து  அவை வளர்க்கப்படவும்  செயல்பட்டு வருகிறார். சமூக செயற்பாடாளரான கவிதா காந்தி நம்முடைய” அறம்” இணையதள இதழுக்கு அளித்த பேட்டி:

” நான் கடந்த 2011ஆம் ஆண்டில் தென் மாவட்டங்களுக்கு பயணித்த போது, ராமநாதபுரத்துக்கும் சிவகங்கைக்கும் இடையே ஏராளமான பனை மரங்களை வேரோடு அழிக்கப்பட்டதை பார்த்து வேதனைப் பட்டேன். அந்த மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்றேன்‌. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை கூட்டி இது போன்ற அழிவு வேலைகளை அனுமதிக்காதீர்கள்’’ என்று கேட்டுக் கொண்டேன்.

பனை ஆர்வலர் கவிதா காந்தி

இது நமது மாநில அரசின் அடையாள மரம். பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும்- அதாவது அடிமுதல் நுனிவரை மக்களுக்கு பயன்படுகிறது.  அதனால் தான் இதை “கற்பகத்தரு” என்கிறோம்‌

பதநீரைப் போல சத்து உள்ள பானம் கிடையாது.

திருப்பூரில் உள்ள  மில் தொழிலாளர்களின் நுரையீரலை காப்பாற்ற  அவர்களுக்கு கருப்பட்டியை உட்கொள்ளக் கொடுக்கும் வழக்கம்   உள்ளது.  ஆஸ்துமா, வீசிங் பிர்ச்சினை களுக்கு பதநீர் நிவாரணம் அளிக்கிறது . கருப்பட்டி,நுங்கு,பனம்பழம் ஆகிய உணவுப் பொருட்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுத்து உடல் புத்துணர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுவதாக உணவியல் நிபுணர்களும் ஆய்வறிஞர்களும் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பனை உணவுகள்!

பனை  நிலத்தடி நீரை காப்பாற்றும். நீர்நிலைகள் ஓரமாக நிற்கும் பனை மரங்கள் அதன் காவல் அரண்களாக உள்ளன.  திடீரென  இடி- மழை பெய்யும் போது வயல்காட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றும் இடி தாங்கிகள் இவைதான்.

புயல் காற்று மற்றும் சுனாமி காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டு அலைகள்  உயரே எழும்பும்போது மீனவ கிராமங்களுக்குள் கடல்நீர் புகாமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வைக்கிறது.

ஆங்கிலேயர் காலத்தில் அவ்வப்போது நம் தமிழ்நாட்டில்  பஞ்சம் ஏற்படுவது வழக்கம். அப்போதெல்லாம் நம்முடைய மக்களை காப்பாற்றியதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு, நான்கு பனை மரங்களை வைத்திருந்த  குடும்பங்கள் பெரும் பஞ்சத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.

உலகின் மூத்த குடி என்று அழைக்கப்படுகிறது நம்முடைய தமிழ் குடி. இதற்கு காரணம் நம்முடைய முன்னோர்களின் செம்மாந்த வாழ்க்கையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் சங்க இலக்கியங்கள். அந்த இலக்கியங்களை காலம் காலமாக காப்பாற்றி நம்மிடம் கொடுத்து இருப்பது பனை ஓலைகள் தான்..”

பனைமரம் வெட்டப்படுவதற்கு தமிழ் நாட்டில் தடை உள்ளது. ஆனாலும்கூட    பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த விஷயத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கிற பனை மரங்களையாவது காப்பாற்றி அவற்றை பயன்படுத்த வேண்டும்.

கள்ளுக்கு  1987- ஆண்டில்  விதிக்கப்பட்ட தடை  பனிரெண்டு லட்சம் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறி போக காரணமாயிற்று.

பனைமரம் ஏற முன்பெல்லாம் கொடுக்கப்பட்ட லைசென்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இப்போது ஆண்டு தோறும் அதை எடுக்கச் சொல்கிறார்கள். ஏகப்பட்ட  விதிமுறைகள் விதித்து பல தடவை அலைய வைத்துதான் லைசென்ஸ் வழங்குகிறார்கள். இந்த கெடுபிடிகள் எதற்காக? யாரை சந்தோஷப்படுத்த என்பது தான் கேள்வியே?

பனைமரம் ஏறி பனைத் தொழில் செய்ய விரும்புபவர்கள் அவர்களாக வெறுத்துப் போய் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். இதை நான் நேரிலேயே அனுபவித்தேன்.

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்தப் பனை மரங்களில் பதநீர் இறக்கி சென்னை மாநகர மக்களுக்கு வழங்குவதற்கு நண்பர்களும் சேர்ந்து முடிவு செய்தேன்.

இந்தப் பணியில் ஈடுபட பனைத் தொழிலாளர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு அனுமதி வாங்கித் தர முயற்சி மேற்கொண்ட போது,  அரசு அதிகாரிகளுக்கு உண்மையிலேயே இதில் அக்கறை இல்லை என்பது தெரியவந்தது. ‘இங்கு போ, அங்கு போ ” என்று சென்னைக்கும் திருவள்ளூருக்கும், காஞ்சிபுரத்திற்கும்  அலைய விட்டார்கள்.

பனை ஏறும் தொழிலாளர்களின் உரிமை போராட்டம்!

லைசென்ஸ் வாங்க அதிகாரபூர்வ கட்டணம் இல்லை. ஆனால், ரூபாய் 2,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. பனைத் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அதற்கான விண்ணப்பம் ஆங்கிலத்தில் உள்ளது. இந்த விண்ணப்பத்தைக் கூட தமிழில் தர முடியாத அரசுக்கு பேர் தமிழக அரசா..?

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொன்னால், அரசின் பிற துறைகளும் காவல் துறையும் இந்த விவகாரத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பது புரியும்.

அரசிடம் உரிய லைசன்ஸ் பெற்று மரக்காணம் பகுதியில் பனைமரம் ஏறச் சென்ற ஒரு தொழிலாளியை காவல்துறையினர் மடக்கினர். அவர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் மரக்காணம் இன்ஸ்பெக்டரிடம் பேசினேன்.” சார் அரசிடம் தான் அனுமதி பெற்றாகிவிட்டதே” என்றேன். அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியை தந்தது.

“அவன் பதநீர் இறக்க ஏறுகிறானா..?  அல்லது கள் இறக்க ஏறுகிறானா யாருக்கு தெரியும்.? இதையெல்லாம் அருகே இருந்து பார்ப்பதுதான் போலீசின் வேலையா?. என்று கோபத்துடன் பேசினார்.

அப்போது  காவல்துறையின் கட்டுப்பாடு தேர்தல் ஆணையர் கையில் இருந்தது. நான் உடனே தேர்தல் ஆணையரை அணுகி, அரசு அனுமதி பெற்று பணி செய்ய வரும் ஒருவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமையை செய்யாமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் பணியை போலீஸ் செய்கிறது” என்று முறையிட்டு, ”லைசென்ஸ் உள்ள தொழிலாளர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டேன்.

இதே போல டிஜிபி இடமும் புகார் கொடுத்தேன். இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தபோதும், பனைத்தொழிலாளர்கள்  சந்தித்துவரும் அவலம் மேற்சொன்னவாறு தொடர்கிறது. பனைத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல,  பனை மரங்கள் உள்ள இடத்து சொந்தக்காரர்களுக்கும் பிரச்சினை கொடுக்கிறார்கள்! பனை வளர்ப்பதே பாவச் செயலோ..என நினைக்கும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்!

”பனைமரம் வெட்டுவது என்றால், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும்” என பட்ஜெட்டிலேயே அறிவித்தது தமிழக அரசு! ஆனால், அது வெறும் காகித அறிவிப்பாகவே உள்ளது! பனைமரம் வெட்டப்படுவது தொடர்பாக காவல்துறை கண்டு கொள்வதே இல்லை! பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு வெட்டப்பட்ட வண்ணம் உள்ளன! இந்த இயற்கையின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்.

ஆட்டோ ஓட்டுவதற்கு சென்னையில் எடுக்கும் உரிமத்தை வைத்து நாடு முழுவதும் ஓட்ட முடியும் ‌. பனை ஏறுவதற்கு உரிமை பெறும் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற முடியும்.

பாளையின் நுனியை தினமும் மூன்று வேளை மரத்தில் ஏறி  சீவிவிட்டால் தான் அதிலிருந்து பதநீர் கலயத்தில் சொட்டும். இல்லாவிட்டால் பாளையின் நுனி காய்ந்து விடும்.  திடீரென உடல்நிலை குறைவு மரம் ஏறும்  தொழிலாளிக்கு ஏற்பட்டால் வேறு பகுதியில் இருந்து ஒரு தொழிலாளியை வரவழைத்து ஏற வைக்க முடியாது. ஒரு பனைத் தொழிலாளி தமிழகம் முழுமையும் எங்கு வேண்டுமானாலும் சென்று தன் தொழிலை செய்யும் உரிமையை அரசு தடுக்கக் கூடாது.

பனை மரங்களின் எண்ணிக்கை அறிய நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பலமுறை விண்ணப்பம் செய்து விட்டேன். அது பற்றிய விவரம் இல்லை என்று அரசு  தெரிவித்து விட்டது.

ஆனால், லைசன்ஸ் கேட்டு  விண்ணப்பிக்கும் போது, பனை மரங்கள் நிற்கும் இடத்து உரிமையாளரின் அனுமதி மற்றும் அவரை பற்றிய விவரங்களையும் கேட்டு வாங்குகிறார்கள்  அவர்களுக்கும் சேர்த்து தொல்லை கொடுப்பதற்கு!

சென்னை புறநகர் பகுதியில் என்னுடைய முயற்சியால் தற்போது 15 தொழிலாளிகள் பனை மரம் ஏறி பதநீர் இறக்குகிறார்கள். இவர்களில் மருது என்ற பிசிஏ பட்டதாரி இளைஞரும் ஒருவர். இவர் மனைவி பொறியியல் பட்டதாரி, காவல்துறையில் பணியாற்றுகிறார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த மருது   மகிழ்ச்சியுடன் பனையேறும் தொழில் செய்கிறார். ”இதில் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் வேறு தொழிலில் கிடைக்காது” என்கிறார். இந்த யதார்த்தத்தை தமிழக அரசு புரிந்து கொண்டு இந்த தொழிலுக்கு ஊக்கம் தர வேண்டும். பல்லாயிரம் இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். மக்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களும் கிட்டும்‌.

தமிழ்நாட்டில் வருவாய்துறை, காவல்துறை, டாஸ்மாக்  போன்ற அரசு நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து பனைத் தொழிலை அடியோடு நசுக்கி வைத்துள்ளன.

எனக்குத் தெரிந்து பல்லாயிரம் பனைத் தொழிலாளர்கள் கேரளா சென்றுவிட்டார்கள். கணிசமானோர் வெளி நாடுகளுக்கு சென்று கிடைத்த வேலையை செய்துவருகிறார்கள். ”தமிழ்நாட்டில் பனைத் தொழில் செய்வதற்கு சுமுகமான சூழல் ஏற்பட்டால் உடனே வந்து விடுவோம்” என்கிறார்கள். பட்டதாரி வாலிபர்கள் கூட இதற்காக காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பனை ஏறும் தொழிலாளி தவறி கீழே விழுந்து இறந்தால் ஒரு லட்சம் தான் இழப்பீடாக தருகிறார்கள். கேரளாவிலோ ரூபாய் 5 லட்சம் கொடுக்கிறார்கள்.

நம்முடைய பனைத் தொழில் விவசாயிகளோ, ”கேரளா போல  ஐந்து லட்சம்  இழப்பீடு தர வேண்டாம் , பனைமரம் ஏற லைசென்ஸ் எல்லாம் தேவையில்லை என அரசு அறிவித்தாலே போதுமானது! ஏனென்றால், பனைமர விவகாரத்தில் இது போன்ற அடக்குமுறைகள் தமிழகம் தவிர உலகில் எங்குமே கிடையாது. எனவே, தொந்தரவு செய்யாமல் எங்களை வாழவிட்டாலே போதும்”, என்கிறார்கள்.

“கள் ” மீதான தடை நீக்கப்பட்டு, பனைத்தொழிலுக்கு  ஊக்கம் அளிக்கப்பட்டால், உண்மையான கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு அது வழி வகுப்பதோடு, பொது மக்களுக்கும் ஆரோக்கியமான இயற்கை பானம் கிடைக்கும்.

மக்கள் நலனுக்கான இந்த நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எடுக்குமா?

கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை

மூத்த பத்திரிகையாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time