இன்னும் எத்தனை காலம் தொடரும் துயரம்!

-சாவித்திரி கண்ணன்

நெல்லா? நிலக்கரியா? எது வேண்டும் தமிழகத்திற்கு? நிலக்கரி இல்லாமல் வேறு பல வழிகளில் மின்சாரம் தயாரிக்க முடியும்! ஆனால், சோறு இல்லாமல் வாழ முடியுமா? கடலூர் மாவட்டத்தை கண்ணீர் பிரதேசமாக மாற்றியுள்ள என்.எல்.சி நிறுவனம், மூன்றாவது சுரங்க திட்டத்தின் மூலம் மக்கள் வாழ்க்கையை முடிக்கத் துடிக்கிறதா..?

என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்து, தனியார் மயமாக்க 2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டது. ஆனால், கடும் மக்கள் எதிர்ப்பும், அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் சேர்ந்து அதை பின்வாங்கிவிட்டனர் என்பது கவனத்திற்கு உரியது. தற்போதும் கூட நில அபகரிப்பை நடத்திவிட்டு, ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்கவுள்ளது பாஜக அரசு!

1956 ல் உருவாக்கப்பட்ட என்.எல்.சி நிறுவனத்திற்காக இதுவரை மொத்தம் 37,256 ஏக்கர் நிலம்  மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அந்நிலங்கள் சுமார் 25,000 குடும்பங்களுக்கு பொய் வாக்குறுதி தந்து வாங்கப்பட்டன. அந்த குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டன. மீதமுள்ள 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களில் வெகு சிலருக்கு அவ்வப்போது ஒப்பந்தக் கூலியாக தற்காலிக வேலை தரப்படுகிறது! தற்போதோ அதுவுமின்றி உயர் நிலை தொடங்கி அடி நிலை வரை முற்ற முழுக்க வட இந்தியர்களை அனைத்து வேலைகளிலும் சுமார் 90 சதவிகித அளவில் நியமித்து வருகிறது என்.எல்.சி நிர்வாகம்! இது குறித்து அனைத்து தமிழக கட்சிகளின் எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, என்.எல்.சி நிர்வாகம்!

தற்போது செயல்பாட்டில் இருக்கும் சுரங்கத்தில் இருந்து வெளி வரும் நச்சு கலந்த கழிவுநீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் விடப்பட்டு பயிர் வளர்ச்சியே பாழாவதாக  அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக புகாரளித்து வருகின்றனர். ஆனபோதிலும் என்.எல்.சி நிர்வாகம் தன் தவறுகளை சரி செய்து கொள்வதாயில்லை.

என்.எல்.சி. நிர்வாகத்தால் அங்கு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அனல்மின் நிலையங்களால் கடுமையான  நிலமும்,காற்றும் பெரும் மாசுபாடு கண்டுள்ளது. சுற்றுவட்டார மக்களின் உடல் நலன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன! ஆஸ்துமா, டி.பி,கேன்சர்.. போன்றவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுரங்க வேலைகளின் போது ஏற்பட்ட விபத்துகளுக்கும், உயிரிழப்புகளும் ஏராளம்! ஏராளம்! மின் உற்பத்திக்கு பிறகு நிலக்கரி முற்றிலுமாக எரிந்து சாம்பலான பின்பு, என்.எல்.சி. நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் சாம்பல் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவை சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாகின்றன! இவற்றை அள்ளிச் செல்லும் லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளும் ஏராளம்!

ஆயுட்காலம் முடிந்தும் கூட அனல்மின் நிலையங்களை இயக்கியதால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் தொடரும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலக்கரி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் பிரகலாத ஜோஷி ஒத்துக் கொண்டதோடு, அதற்கான நிவாரணங்களையும் அறிவித்ததை மறுக்க முடியாது. இற்கையை அழித்த பிறகு தரப்படும் எதுவுமே அதற்கு நிகராகாது.!

நிலக்கரி எடுக்கப்பட்டதால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தற்போது அமையவுள்ள மூன்றாவது சுரங்கமும் 35 ஆண்டுகளில் தன் ஆயுளை முடித்துக் கொள்ளும். ஆனால், அதற்குள் இந்தப் பகுதியே மனிதகுலம் மட்டுமல்ல, உயிரினங்களே வாழமுடியாத அளவுக்கு வறண்டு போயிருக்கும் என்பது தான் சோகம்!

ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து வாழ்வாதாரம் இழந்தோரின் பிரச்சினைகளுக்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், அடுத்த கட்டமாக 49 கிராமங்களில் இருந்து 25,000க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த என்எல்சி நிறுவனம், தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிற சூழல் கடலூர் மாவட்டத்தையே கலவரப்படுத்தி உள்ளது.

முதல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக 9 கிராமங்களில் இருந்து 3,000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் கையகப்பட்டு வருகின்றன!; இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக 25 கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து 15 ஆண்டுக்கு முன் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட 10,000 ஏக்கரும் இப்போது பறிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தற்போதைய சுற்றுச் சூழலின் மிகப்பெரிய ஆபத்தாக புவி வெப்பமயமாதல் உருவெடுத்துள்ளது. அதற்கு அதிக அளவில் பங்களிப்பவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதிலும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால், சுற்றுச்சூழலுக்கு அதிக கேட்டை தரவல்லது. புவி வெப்பமடைதலைத் தடுக்க  இந்திய அரசு நிலக்கரி அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட புதை படிம எரிசக்தியைக் கைவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த வேண்டும்’’ என பல முறை வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் போதெல்லாம் நமது பிரதமர் நரேந்திர மோடி, ”காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா இனி சுரங்க செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டு, புதுப்பிக்கதக்க ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக” வாக்குறுத்தி தந்து வந்துள்ளார்! உலக அரங்கில் உத்தமனைப் போல பேசிவிட்டு, உள்ளூரில் மக்கள் வாழ்வை சூறையாடும் இது போன்ற கேடான செயல்பாடுகளை செய்யலாமா? என்பதே நமது கேள்வியாகும்!

மூன்றாவது சுரங்கத்திற்காக சாத்தபாடி, தர்மநல்லூர் ,கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தன! சின்ன நெற்குணம், கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஒட்டிமேடு, வலயமாதேவி கீழ்பாதி, கோட்டுமுளை, சிறுவரப்பூர், புதூர், சாத்தப்பாடி, அகரலாம்பாடி, பி.ஆதனூர், தர்மநல்லூர், பெரிய நெற்குணம், விளக்கப்பாடி, யு.அகரம், எறும்பூர், வளையமாதேவி மேல்பாதி, யு.ஆதனூர், கோபாலபுரம், யு.கொளப்பாக்கம், கம்மாபுரம், சு.கீனணூர், குமாரமங்கலம், வீரமுடையான்நத்தம் உள்ளடக்கிய 30 கிராமங்கள் இத்திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.

என்.எல்.சியால் கடலூர் மாவட்டத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து மிக விரிவானா ஆய்வுகள் எவ்வளவோ வெளிவந்துள்ளன!. ஒரு காலத்தில் 6 முதல் 10 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 முதல் 1,200 அடிக்கும் கீழே சென்று விட்டது என்பது ஒன்றே  சுரங்கத்தின் மிகப் பெரிய பாதிப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அதுமட்டுமின்றி, வெள்ளக் காலங்களில் என்.எல்.சி. நிறுவனம் எதைபற்றியும் கவலை கொள்ளாமல், அடாவடியாக சுரங்கங்களில் சேர்ந்த நீரை ராட்சத குழாய்கள் மூலம் அதிக அளவில் வெளியேற்றுகிறது. இதனால், வெள்ளப் போக்கு அதிகரித்து, மிக அதிக அளவில் பயிர்கள் சேதமடைகின்றன என்பது மட்டுமின்றி, உயிர்களும் பலியாகின்றன!

தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திமுக, தற்போது மாநிலத்தை ஆளும் நிலையில் மத்திய அரசுக்கு ஆதரவாக கண்ணை மூடிக் கொண்டு, கருமமே கண்ணாக மக்களிடம் இருந்து நிலத்தை பறித்தெடுக்கும் வேலையைச் செய்கிறது! இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகளே இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ளன! அதன் விளைவாக மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி எதிர்ப்பு தெரிவித்ததோடு, முதல்வரை சந்தித்து வலியுறுத்தியும் உள்ளன! பாட்டாளி மக்கள் கட்சி சமீபத்தில் ஒரு மாபெரும் கடை அடைப்பு போராட்டம் நடத்தி, தன் எதிர்ப்பை வலுவாக காட்டியுள்ளது. இழப்பீடாக தரும் பணத்தை அதிகரித்து கொடுத்தாலுமே கூட, இழக்கப் போகும் இயற்கைக்கு அது ஒரு சிறிதும் மாற்றாகாது.

மின் உற்பத்திக்கு மாற்று வழிகள் ஏராளமாக உள்ள இந் நாட்களில் மக்களை கடுமையாக பாதிக்கும் இத்தகு திட்டங்களை கைவிடுவது ஒன்றே சிறந்த தீர்வாகும்! பழைய திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், மேன்மேலும் புதிய சுரங்க முயற்சிகளை செய்யாமல் – கடலூரை இன்னுமின்னும் பாழ்படுத்தாமல் – என்.எல்.சியை முற்றிலுமாக மூடிவிட வேண்டும். இதனால், இழப்பொன்றும் இல்லை. பசுமை பூமியே மக்களை வாழ வைக்கும்!

”ஏற்கனவே சுரங்கம் அமைத்ததால் சும்மா விடப்பட்டுள்ள பெரும் நிலப்பதியை கடலில் சேரும் காவிரி நீரை தேக்கி வைக்க பயன்படுத்தினால் மிக உபயோகமாக இருக்கும்” என்பது மக்கள் எதிர்பார்ப்பாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time