பாரதி புகழ் பாடும் பன்முகத் தொகுப்பு!

-சாவித்திரி கண்ணன்

எத்தனை மேதமை! என்னே ஒரு புலமை! வியக்கதக்க பன்முகத் தன்மை…! என  பற்பல விதங்களில் நமக்கு பாரதியை அறியத் தருகிறது இந்த நூல்! பாரதி எழுத்துக்களை  படிப்பதிலும், ரசிப்பதிலும் நமக்கு ஒரு தேர்ந்த பயிற்சியை தருகின்றன இந்தக் கட்டுரைத் தொகுப்பு! படிக்கப் படிக்கத் திகட்டாத தேனாக ஆனந்தம் தருகின்றன யாவும்!

பாரதி பக்தனாகவும், பாரதியை பேசுவதிலும், எழுதுவதிலும் பித்தனாகவும் உள்ள கடற்கரய் மத்த விலாச அங்கதம் ‘யாமறிந்த புலவன்’ என்ற பெயரில் பாரதியை பற்றிய நூற்றாண்டு கால விமர்சனக் கட்டுரைகளை தொகுத்துள்ளார்.

பாரதியைக் குறித்து ஏராளமானோர் எழுதியுள்ளனர்! அப்படி எழுதப்பட்டவற்றை தொகுப்பாக கொண்ட நூல்களும் முன்னமே வெளியாகியுள்ளன! எனினும், இந்த தொகுப்பு நூலில் உள்ளது போன்ற வெளியீட்டு விபர அட்டவணையோடு, எந்தந்த காலகட்டத்தில் யாரால், எந்த இதழில் அந்தக் கட்டுரை வெளியானது என்ற குறிப்புகளோடு வெளியிட்டு இருப்பதில் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.

1918 வ.வே.சு ஐயர் சுதேசமித்திரன் வருட மலரில் எழுதியது தொடங்கி, பி.ஸ்ரீ, ரா.பி.சேதுப் பிள்ளை, புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, சோமசுந்தர பாரதியார், ம.பொ.சி, ,மு.வரதராசனார், ரா.அ.பத்மநாபன், கி.வ.ஜ., அகிலன், சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், க.நா.சு, தொ.மு.சி.ரகுநாதன், மு.கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன், ஆர்.சூடாமணி, ராஜம்கிருஷ்ணன், பெ.சு.மணி, மார்க்சிய அறிஞர்கள் எஸ்.தோத்தாத்திரி, ஆர்.கே.கண்ணன் இன்றைய தலித்திய சிந்தனையாளர் ஸ்டாலின் ராஜாங்கம் வரை என 135 ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளார்.

இந்த ஆளுமைகளின் சிந்தையில் பாரதியார் என்னவிதமான தாக்கம் ஏற்படுத்தியுள்ளார்? இவர்கள் எவ்வாறெல்லாம் பாரதியிடம் இருந்து தங்களுக்கான ஆகர்ஷண சக்தியை பெற்றுள்ளனர் என அறிவது சுகமாயுள்ளது! அத்துடன் ஒவ்வொருவரும் விதவிதமாக பாரதி படைப்புகளை சுவைத்தும், ரசித்தும் கொண்டாடும் போது நமக்கும் அந்த கொண்டாட்டம் தொற்றிக் கொள்கிறது!

சோவியத் யூனியனில் பாரதி ஆராய்ச்சி என விதாலி பூர்னிகா எழுதிய கட்டுரையும், கார்த்திகேசு சிவத் தம்பியின் பாரதியின் மகா கவித்துவ சாதனை என்ற கட்டுரையும் இந்தியாவிற்கு வெளியில் உள்ள தமிழ் அறிஞர்கள் பாரதியை பற்றி எழுதியதாகும்.

பாரதி அறிந்த மொழிகள் என்ற தலைப்பில் பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாதராஜா 1982 ல் ஜனசக்தியில் எழுதிய கட்டுரை பாரதிக்கு சமஸ்கிருதம் போலவே பிராக்கிருதம் மொழியிலும் புலமை இருந்ததையும் அதை தன் ஞானரதத்தில் பாரதியே வெளிப்படுத்தி உள்ளதையும் குறிப்பிடுகிறார். மேலும், தெலுங்கில் நல்ல புலமை பெற்று இருந்ததால் தான் பாரதி இசை பிரக்ஜையுடன் கவிதைகள் எழுதியுள்ளார் என்றும், தெலுங்கு மொழியாளர்களுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம் குறித்தும் எழுதியுள்ளார். காசியில் தங்கி இருந்த வகையில், பாரதிக்கு இந்தியும் நன்கு தெரிந்திருந்தது. மேலும், பாரதிக்கு வங்காளம் சிறப்பாக தெரிந்திருந்தது. தாகூரின் கவிதைகளை அவர் அதன் மூல மொழியான வங்களாத்திலேயே வாசித்து ரசித்து இருக்கிறார். அரவிந்தர் போன்ற வங்காளி நண்பர்களும் அவருக்கு நிறைய இருந்துள்ளனர். இதே போல, மராட்டியத்திலும் நன்கு புலமை பெற்று இருந்துள்ளார். இவ்வாறாக பாரதியாருக்கு ஏழெட்டு மொழிகள் நன்கு தெரிந்துள்ளன’ என ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார்!

பாரதிக்கு ஆங்கிலத்தில் அளப்பறிய அறிவு இருந்த போதிலும், அதை தன் பிழைப்பு மொழியாக்கி கொள்ள விரும்பாமல் தமிழிலேயே தான் உழன்றார் என்பது கவனத்திற்கு உரியதாகும். தனது தம்பி ஆங்கிலத்தில் தனக்கு கடிதம் எழுதிய போது இனி தமிழிலேயே எழுது என கண்டிப்புடன் கூறிய செய்தியும் இதில் இடம் பெற்றுள்ளது.

பாரதி ஒரு பத்திரிகையாளர் என்ற சி.என்.கிருஷ்ணபாரதி எழுதிய கட்டுரை ஒரு பத்திரிகையாளனாக இந்த தமிழ்ச் சமூகத்திற்கு பாரதியார் செய்த தொண்டுகளையும், அதில் அவர் பட்ட துயரங்களையும், அலைச்சல்களையும் நன்கு எடுத்தியம்புகிறது!

இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதத்தில் பாரதியின் பன்முகத் தன்மைகளை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன! எதைச் சொல்வது, எதை விடுவது என்ற திணறல் தான் உண்டாகிறது. இதை அவரவரும் அனுபவித்து தான் உணர வேண்டும்

இந்த தொகுப்பு எந்த பேதமும், இல்லாமல் மூலப் பிரதிகளை ஒப்பிட்டு தொகுக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது.

கட்டுரைகளை மட்டும் தொகுக்காமல், பாரதி குறித்து அறிஞர் அண்ணா, பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவா, பாரதிதாசன், அவ்வை டி.கே.சண்முகம் உள்ளிட்டவர்களின் உரையும் இதில் இடம் பெற்றுள்ளது. அண்ணா எப்படி அணுவணுவாக பாரதியை ரசித்துள்ளார் என்பது பரவசம் தருகிறது. அதிலும், அண்ணா பாரதி குறித்து ஆங்கிலத்தில் பேசியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், இதில் பாரதி மகள் சகுந்தலா பாரதியின் வானொலி நேர்காணல் முதலில் அவர் பேசுவதாகத் தொடங்கி, பிறகு அவர் குறித்து யாரோ பேசுவது போல இருப்பது புரிபடவில்லை.

பாரதி அன்பர்களுக்கு நல் விருந்தாக இந்த தொகுப்பை கொண்டு வந்துள்ளார் கடற்கரய்!

நூல்; யாமறிந்த புலவன்

ஆசிரியர்; கடற்கரய் மத்த விலாச அங்கதம்

வெளியீடு; பதிகம் பதிப்பகம்

பம்மல்,சென்னை 75

பக்கங்கள்; 1360

விலை; 1,500

தொலைபேசி; 87785 02585

நூல் விமர்சனம்; சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time