எழுத்தாளர் என்ற பிம்பத்தில் எதையும் செய்வதா..?

இலக்கிய வெளியில் சில எழுத்தாளர்கள், இப் பிரச்சினையை எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள். சிலர் எதிர்ப்பது போன்று பாசாங்கு காட்டுகிறார்கள். இதனால் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட, ‘பிரபலமான எழுத்தாளர்’ என்ற பிம்பத்தை துணிவுடன்  பயன்படுத்தி வருகிறார்…!

மூத்த எழுத்தாளர் கோணங்கி இளைஞர்கள் சிலரிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விவகாரம் சமீபத்தில் வெளியாகியது. அந்த அப்பாவி இளைஞர்களின் அனுபவ வெளிப்பாடுகள், அவர்கள் சந்திக்க நேர்ந்த மன உளைச்சல்கள் படிப்போரை உலுக்கி எடுத்தன! எனினும், நிராதரவான அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக வெகு சிலரே குரல் கொடுத்தனர். இந்தச் சூழலில் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்பதாக 43 பேர் இணைந்து காத்திரமான எதிர்வினை ஆற்றியுள்ளனர். கீழ்கண்டவாறு இவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்;

பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது, அவருடைய தம்பி முருகபூபதியின் மணல் மகுடி குழுவில் நாடகம் பயில வந்த மாணவர்களில் சிலர், பாலியல் வன்முறைக்  குற்றச்சாட்டை பதிவிட்டது சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும்  வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் சட்டபூர்வமாக காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளதாகத் தெரியவில்லை. எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தார்மீக ரீதியாக விளக்கம் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

எந்த ஒரு பிரபலமானவரோ, எழுத்தாளரோ அல்லது கலைஞரோ – பாலியல் வன்முறையாளராக இருப்பதை ஏற்கவே முடியாது. நூற்றாண்டு கால போராட்டங்களின் விளைவாக முன்னேறி வரும் சமூகத்தை அடிமைக் காலத்திற்கு பின்னோக்கித் திருப்புகிற, சுதந்திரமான வாழ்வியல் உரிமையைப் பறிக்கிற,  பாலியல் வன்முறை என்ற கொடுமையை முறியடித்தே ஆக வேண்டும்.

பாலியல் வன்கொடுமை எங்கு, யாரால் நிகழ்ந்தாலும் அதனைக் கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அவசியம்  உள்ளது. வேறு சில கலை இலக்கியவாதிகள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டு சமூக வலை தளங்களில் வெளிவந்துள்ளது. கடந்த காலத்திலும்,  பிரபல எழுத்தாளர்கள் மீது இதுபோன்ற பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடும் எதிர்ப்புகளோ, குற்றப் பதிவுகளோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய தார்மீக ஆதரவோ இல்லாததால், பிரபல பாலியல் குற்றவாளிகள்  எந்த தண்டனையும் இன்றி தப்பி விட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள்  தான் அவமதிப்புக்கும் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகியுள்ளனர்.

பொதுவாக சமூக அங்கீகாரம், சாதி ஆணவம், அதிகாரம், பதவி, பண பலம், புகழ், குடும்பத்தினர் மீதான வரம்பற்ற அதிகாரம் ஆகியவை பாலியல் வன்முறையின் ஊற்றுக் கண்களாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள், பழங்குடிகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றவர்கள் காலந்தோறும் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். இது போன்ற குற்றங்கள் குறித்துப் பேசினால், தங்களது பெயரும் பொது வெளிக்கு வருமே என்று அஞ்சி புகார் தெரிவிக்காமல் மௌனித்து அடங்கிப்போவோர் மீது எளிதாக பாலியல் வன்முறை பாய்கிறது. இத்தகைய கொடுமைகளில் பிரபல எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஈடுபடுகிறார்கள் என்பது தமிழ்ச் சமூகத்தின் பேரவலம்.

பாலியல் சீண்டல், அத்துமீறல், வன்முறை ஆகியவை குறித்து பொது வெளியில் விவாதிப்பதுடன் நின்றுவிடாமல், நமது கல்வித் திட்டத்தில் இடம் பெறாத பாலியல் விழிப்புணர்ச்சிக்கான கல்வியை வயதுக்கேற்றவாறு குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் உடனடியாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.  பாலியல் வன்கொடுமை என்பது பாதிக்கப்பட்டவர்களின் இயல்பான அறிவு வளர்ச்சியைத் தடை செய்வதுடன், உளச் சிதைவையும் ஏற்படுத்தி அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கிறது. எனவே, பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தின் (Syllabus) ஒரு பகுதியாக பாலியல் கல்விப் பாடத்திட்டமும் நிபுணர்களால் உருவாக்கப்பட  வேண்டும். மூன்று முதல் பதினெட்டு வயது வரை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே பாலியல் கல்வி   கற்பிக்கப்பட வேண்டும். அதுதான் குழந்தைகளும், இளைஞர்களும் பிரபலங்களையோ,  உறவுகளையோ, நண்பர்களையோ கண்டு அஞ்சி பாலியல்  வன்முறையில் சிக்காமல், உடனடியாக புகார் அளித்து, நிவாரணம் பெறும் தைரியத்தை அளிக்கும்.

இலக்கிய வெளியில் மதிப்புடையோராக உள்ள சில எழுத்தாளர்கள், இப்பிரச்சினையை எளிதாகக் கடந்து போய்விடுகிறார்கள். சிலர் எதிர்ப்பது போன்று பாசாங்கு காட்டுகிறார்கள். இதனால் பாலியல் வன்கொடுமைையில் ஈடுபட பிரபலமானவர்,  எழுத்தாளர், கலைஞர் என்ற பிம்பத்தை துணிவுடன் நெடுங்காலமாக ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அநீதியை முறியடிக்க, பிற பிரச்னைகளைப் போலவே பாலியல் வன்முறைகள் குறித்தும் பொதுவெளியில் எழுத்தாளர்களால் விவாதிக்கப்பட வேண்டும். நம் குடும்பத்தில் ஒருவருக்கு நிகழ்ந்ததுபோல் கருதி, பாலியல்  வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   ஆதரவளித்து, ஆற்றுப்படுத்த வேண்டும்.  பாலியல் குற்றங்களை விசாரித்து,  குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ள, பொறுப்பான சமூக அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பிரபலங்கள்,   எழுத்தாளர்கள், கலைஞர்கள் தமது சமூக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் இழைக்கும்   பாலியல் வன்முறைக் குற்றங்கள் சட்டப்படி தண்டனைக்குரியவை என்பதை உறுதிப்படுத்தி, அவற்றை எதிர்கொள்வோர் அச்சமின்றி பொதுவெளியில் பேசுவதற்கு, எழுத்தாளர்களும் கலைஞர்களும் தான் நம்பிக்கையை   ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே பாலியல் வன்முறைக் குற்றங்கள் இழைக்கும் பிரபலங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் யாராயினும் அவர்கள் மீது தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஆகிய நாங்கள் கடுமையான கண்டனத்தை திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.

கூட்டறிக்கையில் இணைந்த தோழர்கள் :

1..எஸ்.வி.ராஜதுரை, மூத்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
2. முனைவர் ம. ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.
3. டிராட்ஸ்கி மருது, மூத்த ஓவியக் கலைஞர், எழுத்தாளர்.
4. திலீப் குமார், மூத்த எழுத்தாளர்.
5. பொன்.தனசேகரன், மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர்.
6. எஸ். பாலச்சந்திரன், எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர்.
7. கலைச்செல்வன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
8. பொ.வேல்சாமி, தமிழ் இலக்கிய, பண்பாட்டு ஆய்வாளர், எழுத்தாளர்.
9. சாவித்திரி கண்ணன், மூத்த பத்திரிகையாளர்,எழுத்தாளர்.
10. க. சந்திரசேகரன், மூத்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர்.
11. “நிழல்” திருநாவுக்கரசு, எழுத்தாளர், பத்திரிக்கையாளர், திரைத்துறை அறிஞர்.
12.கண. குறிஞ்சி, சமூக செயல்பாட்டாளர், பத்திரிக்கையாளர்.
13.. செங்கோடன் (வசந்த குமார்) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
14. பேரா. சு. வேணுகோபால், எழுத்தாளர்.
15. பேரா. சு. ராமசுப்பிரமணியன், எழுத்தாளர்.
16. அமரந்த்தா, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
17. ஜமாலன், எழுத்தாளர்.
18. பா. வெங்கடேசன், எழுத்தாளர்.
19. நடராசன், சமூக செயல்பாட்டாளர்.
20. கருணா பிரசாத், நாடகக் கலைஞர், பதிப்பாளர்.
21. திருமுருகன் காந்தி, எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்.
22. பேரா. திலீப் குமார், நாடகவியலாளர்.
23.  பி.சி. பீர் முகம்மது, பத்திரிக்கையாளர்.
24. சாலை செல்வம், எழுத்தாளர்.
25. அகிலா, எழுத்தாளர், உளவியல் ஆலோசகர், கோவை
26. நளினி மோகன், உளவியல் ஆலோசகர், சென்னை.
27. செந்தில் குமார், இளந்தமிழகம். எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்.
28. சுபஸ்ரீ, பத்திரிக்கையாளர்.
29. ம. இலட்சுமி, எழுத்தாளர்.
30. பரிமளா,  ஐ.டி. துறை தொழிற்சங்க செயல்பாட்டாளர்.
31. ஆடி. வெங்கடேசன், நாடகவியலாளர், (தஞ்சை)
32. ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குனர், பழங்குடிகளுக்கான செயல்பாட்டாளர்.
33. செந்தில், சமூக செயல்பாட்டாளர், (பெங்களூர்).
34. வேட்டை எஸ்.கண்ணன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
35. க. சீனிவாசன், சமூக செயல்பாட்டாளர் (சேலம்) .
36. ஆ. பாஸ்கர், நாடக செயல்பாட்டாளர்.
37. ரெஜின் ரோஸ், நாடகவியலாளர்.
38. தீபா ராஜ்குமார், அக்குபங்சர்  சிகிச்சையாளர்.
39 யாழினி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
40. ஜா. தீபா, எழுத்தாளர்
41. கொ.முகம்மது ரியாஸ், கவிஞர்
42. கே. பாலகிருஷ்ணன், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
43. டி.கோபாலகிருஷ்ணன், மனித உரிமை செயற்பாட்டாளர்.
44. சினிவாச ராமானுஜம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
ஒருங்கிணைப்பாளர்கள் :
1. நடராசன், சமூக செயற்பாட்டாளர்
2. எஸ்.  பாலச்சந்திரன், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர்
3. க.சந்திரசேகரன், எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
4. அமரந்த்தா, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time