விலை பேசப்படும் தேசம்! கொள்ளை போகும் நிலங்கள்!

-சாவித்திரி கண்ணன்

அரசின் வசம் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிலங்கள், சொத்துக்களை கண்டறிந்து தனியாருக்கு தாரை வார்க்க பாஜக அரசு என்.எல்.எம்.சி என்ற புதிய அமைப்பை தோற்றுவித்து உள்ளது! இனி இந்தியா என்பது மக்களுக்கானதில்லை! சில தனி முதலாளிகளின் சொத்து என்பதே பாஜவின் செயல் திட்டமான என்.எல்.எம்.சி!

ஆட்சியில் அமர்ந்தது முதல் பாஜக அரசு நம் முன்னோர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை செய்து வருவது நம் எல்லோருக்கும் தெரியும். அது போல தற்போது அரசிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள உபரி நிலங்களை விற்று பணமாக்குவதற்காக, ‘நேஷனல் லேண்டு மானிடிஷேசன் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் நோக்கம், பொதுத்துறை நிறுவனங்களின் வசம் உள்ள உபரி நிலங்கள் மற்றும் உபயோகத்தில் இல்லாத கட்டிடங்களை விற்று பணமாக்குவதாகும்! இதற்காக தனி அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

தேசிய நில பணமாக்கல் கழகம் (என்.எல்.எம்.சி) எனப்படும் இந்த புதிய அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை சென்ற ஆண்டே ஒப்புதல் அளித்துவிட்டது. இதன் மூலம், பொதுத்துறை நிறுவனங்களின் உபரி நிலங்கள், பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை விற்பது அல்லது குத்தகைக்கு விட்டு பணமாக மாற்றி, அரசுக்கு  கூடுதல் வருவாய் ஈட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது!

இது உண்மையிலேயே பேரதிர்ச்சி தருவதாக உள்ளது! நம் தேசத்தை உருவாக்கிய அண்ணல் காந்தி, வ.உ.சிதம்பரனார், ஜே.சி.குமரப்பா, ராம்மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் வெள்ளையரிடம் போராடி பாடுபட்டு வாங்கிய சுதந்திர தேசம், தற்போது தனியார் சிலரின் கைகளுக்கு படிப்படியாக விற்கப்பட்டு வருகிறது!

அரசின் சொத்துக்கள் என்பவை விலை மதிக்க முடியாதவை! அவை தேசத்தின் சொத்து! ஒட்டுமொத்த மக்களின் சொத்து! சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இவை விதை நெல்லை ஒத்தவையாகும்! எவ்வளவு வறுமை வந்தாலுமே கூட, விவசாயி விதை நெல்லை வேகவைத்து தின்னமாட்டான்! ஏனென்றால், அடுத்த விளைச்சலுக்கான ஆதாரமே அவை தாம்!

இந்த தேசம் பலரது தியாகத்தாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது! இந்த நாட்டில் பொதுத் துறை நிறுவனங்கள் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்துள்ளனர்! மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களாட்சி உருவாக்கப்பட்டதால், மன்னராட்சியின் அனைத்து நிலங்களும் அரசுக்கு சொந்தமாயின!

அப்படி அரசுக்கு சொந்தமாக நிலங்கள் இருந்த காரணத்தால் தான் ரயில்வே துறை உருவானது! தேசிய நெடுஞ்சாலைகள் உருவாயின! தொலை தொடர்புத் துறை உருவாயின! மின்சார உற்பத்தி கேந்திரங்கள் உருவாயின! அரசுத் துறை ஆயில் உற்பத்தி நிறுவனங்கள் உருவாயின! அப்படி உருவாக்கப்பட்டவை தான் தற்போது படிப்படியாக தனியார் வசம் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன!

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் சென்னையை ஒட்டியுள்ள பரந்தூரில் உள்ள மக்களின் விளை நிலங்கள், குடியிருப்பு, ஏரிகள், பள்ளிக்கூடம் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறிக்க திட்டமிடுகிறார்கள்! நாட்டின் வளர்ச்சிக்காக இதை கேட்பதாகச் சொல்கிறார்கள்! இப்படியாக விளை நிலங்களைப் பிடுங்கி உருவாக்கப்படும் விமான நிலையங்களை அதானியிடம் அல்லவா கொடுத்து வருகிறது, பாஜக அரசு!

மக்களின் விளை நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்காக பறித்து எடுத்து தரும் பாஜக அரசு!

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொலை தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்லை படிப்படியாக அழித்து வருவதை நாம் அறிவோம். தற்போது பி.எஸ்.என்.எல் வசம் உள்ள சுமார் 25,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்களை கண்டறிந்து, அதை அம்பானிக்கும், அதானிக்கும் விற்க முடிவு செய்துள்ளது.

அதே போல ரயில்வே துறையில் அரசின் வசம் தற்போது 11 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பது பாஜக அரசின் கண்களை உறுத்தி வந்துள்ளது. இதில் எந்த அளவுக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்றும் அல்லது எந்த அளவுக்கு இருந்தால் போதுமானது கண்டறிய அதிகாரிகள், ஊழியர்களை களத்தில் இறக்கி சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கரை தனியாருக்கு தர திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

பாஜகவின் ஆட்சியே இந்த தத்துப் பிள்ளைகள் போஷாக்குடன் வளர்வதற்குத் தான்!

இதே போல இந்தியாவின் பாதுகாப்புத் துறை எனும் ராணுவத்திற்கு 17.95 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன! ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஏக்கர் மிலிட்டரி கண்டோண்மெண்ட் வசம் உள்ளன! வெட்ட வெளியில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன! ‘இவற்றில் எந்த அளவுக்கு எடுத்து தனியாருக்கு தாரை வார்க்கலாம்’ என ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்காகவே ரூபாய் ஐயாயிரம் கோடியில் ‘என்.எல்.எம்.சி’ எனப்படும் ‘தேசிய நில பணமாக்கல் கழகம்’ உருவாக்கப்பட்டு, அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வேலை ஜரூராக நடந்து கொண்டுள்ளன! இப்படி ஒவ்வொரு துறை வாரியாக நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன! இதன் மூலம் பாஜகவிற்கு தேர்தலுக்கு நிதியை அள்ளித் தரும் முதலாளிகளுக்கு அவற்றை விரைவில் தந்து தங்கள் விசுவாசத்தை காட்ட உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் நில உச்சவரம்பு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன! தேசிய நில சீர்திருத்தக் கொள்கை வரைவு, மாநிலங்கள் நில உச்சவரம்புகளைக் குறைத்து, நிலமற்ற ஏழைகளுக்கு உபரி விவசாய நிலங்களை விநியோகிக்க பரிந்துரைத்தது. ஆனால், பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது தொடங்கி பல மாநிலங்கள் தங்கள் நில உச்சவரம்பு சட்டங்களை மத்திய அரசு தந்த நெருக்கடியால் தொழில்துறைக்கு ஆதரவாக திருத்தியுள்ளன! கடந்த சில ஆண்டுகளில் நமக்குத் தெரிந்து ஆறு சட்டங்கள் திருத்தப்பட்டு உள்ளன!

ஏனெனில், நிலம் என்பது மாநிலம் சார்ந்த ஒரு பொருளாக இருப்பதால், ‘மாநில அரசுகள் மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு உட்பட்டவை அல்ல’ என்ற போதிலும், மாநில அரசுகளுக்கு பாஜக அரசு தரும் கெடுபிடிகளால் மாநில அரசு வசம் உள்ள நிலங்களுமே கூட இந்த என்.எல்.எம்.சி வசம் போவது தான் ஆகப் பெரிய வேதனையாகும்!

ஒரு மக்கள் நல அரசு என்பது அரசின் சொத்துக்களை  மக்களுக்காக எப்படிப் பயன்படுத்துவது? அதன் மூலம் தொழில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதோடு, பொருளாதாரத்தை விருத்தி செய்வது…. என்றே யோசிக்கும். ஆனால், பாஜக அரசானது எல்லாவற்றையும் ரூபாய் நோட்டுகளாவே பார்க்கிறது! மற்றும் ‘சில தனி முதலாளிகளை வளப்படுத்த என்ன செய்யலாம்’ என்றே அனைத்தையும் அணுகுகிறது!

இந்த தேசத்தின் உண்மையான சொத்தே  தேசத்தின் மீதான மக்களின் விசுவாசமும், உழைப்பாற்றலும் தான்! ஆனால், இதையும் தனியார் பக்கம் திசை திருப்பி, மக்களை திருவோடு ஏந்தும் பிச்சைக்காரர்களாக்க பாஜக அரசு திட்டமிட்டு பணியாற்றுகிறது. இனி இந்த நாடு என்னாகுமோ,,,? என மக்கள் விதிர்விதித்து நிற்கிறார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணை இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time