மனிதம் பேசும் மகத்தான திரைக் காவியம்!

திரு.வீரபாண்டியன்

இன்றைய இந்தியாவிற்கு தேவையான ஒரு அற்புதமான திரைப்படம் இது! ஆயிரம் மேடை போட்டு சொன்னாலும் இவ்வளவு உன்னதமான மனித நேயத்தை உணர்த்திவிட முடியாது! ஒரு   நிஜ சம்பவம் நெஞ்சைத் தொடும் திரைக் காவியமாகி உள்ளது! யதார்த்ததுடன் நுட்பமான கலை வடிவம் கண்டுள்ளது!

வட இந்தியாவைச் சேர்ந்த அயோத்தியில் இருந்து புறப்பட்ட ஒரு பழமைவாத இந்துக் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வருகிறது. விமானத்திலிருந்து இறங்கிக் காரில் ராமேஸ்வரத்திற்குப் பயணம் செய்கின்றனர். வழியில் ஏற்படும் விபத்தில் அந்தக் குடும்பம் பேரிடரைச் சந்திக்கிறது. தகப்பனும் மகளும் மகனும் பெருத்த காயங்களோடு தப்பிக்க அவர்களோடு வந்த அந்தத் தாய் மட்டும் நினைவிழந்து போகிறாள். அவளை அவசரம் அவசரமாக எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறது அந்தக் குடும்பம்.

தமிழ் மொழி அறியாத அந்த இந்திக் குடும்பம் தங்கள் பிரச்சினையைச் சொல்லி யாரை அணுகுவது என்று தவித்து நிற்க, இதைக் கேள்விப்பட்ட தமிழ் இளைஞர்கள் சிலர் அவர்களுக்கு உதவ அங்கும் இங்குமாகப் போராடிக் கடைசியில் இறந்து போகிற அந்த அம்மாவைப் போஸ்ட்மார்ட்டம் செய்து விமானத்தில் ஏற்றி வைப்பது வரை தான் அயோத்தி திரைப்படத்தின் கதை. உதவி செய்கிற இளைஞர்களின் தலைவனாக சசிகுமார் வருகிறார். அந்தக் குடும்பத்தின் தகப்பனாகவும், தாயாகவும், மகளாகவும் இந்தி நடிகர்கள் நடிக்கின்றனர். இது படக் கதையைப் பற்றிய ஒரு முன்னுரை‌.

படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி இல்லை; சண்டைக்காட்சி இல்லை; மலைப்பாதைகளில் காரைக் கார் விரட்டும் கிளைமாக்ஸ் இல்லை: ஹோட்டல் டான்ஸ்- குத்துப் பாடல்கள் எதுவும் இல்லை. எடுத்த கதையை எடுத்துக்கொண்டு கதாசிரியர் எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனாலும் நாம் நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து கொள்கிறோம். இது படத்திற்கான முதல் வெற்றி!

மருத்துவமனையிலும், பிணக் கிடங்குகளிலும் என்னென்ன அக்கிரமங்கள் நடக்கின்றன என்பதை வெகு இயற்கையாக நேரடிக் காட்சியாகக் காட்டுகின்றனர்‌.  அப்படியே நாம் மருத்துவமனைகளில் நின்று பார்த்துக் கொண்டிருப்பது போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. இறந்த ஒரு உடலை விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு என்னென்ன சடங்குகளை நிறைவேற்ற வேண்டும்… எத்தனை சான்றிதழ்களைப் பெற வேண்டும்… அதற்கு எங்கெங்கே ஓட வேண்டும்….யார் யாருக்குக் கையூட்டு கொடுக்க வேண்டும், எவ்வளவு செலவாகும்..? என்பதெல்லாம் வெகு அழகாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. கொண்டு வந்த பணத்தைக் கரைத்து விட்டு, அந்த வட இந்தியக் குடும்பம் தவிக்கும் போது, நமது தமிழ் இளைஞர்கள் எப்படி எல்லாம் உதவுகின்றனர் என்கிற மனிதாபிமான செயல்பாடுகள் அழகாகச் சித்திரிக்கப்படுகின்றன.

இந்த திரைப்படத்திற்கு மூலகாரணமான சம்பவம் 2011 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் தான் நடந்தது! விபத்தில் சிக்கிய வட இந்திய குடும்பத்தைக் குறித்த தகவல் பீகாரில் இருந்த வங்கித் தோழர்களால் பாண்டியன் கிராம வங்கித் தோழர்களுக்கு சொல்லப்பட்டு உதவி கேட்கப்படுகிறது! அதையடுத்து நிஜத்தில் நடந்த மனித நேயச் செயல்பாடுகளே மிகச் சிறந்த திரை வடிவம் கண்டுள்ளன!

இந்து மதச் சடங்குகளிலும் ஆச்சாரங்களிலும் ஊறிப் போய்க் கிடக்கிற அந்தக் குடும்பத்தின் தகப்பன் தன் ”மனைவியின் உடலில் ஒரு பிளேடைக் கூட வைத்துக் கீறக் கூடாது; போஸ்ட் மார்ட்டமே செய்யக்கூடாது” என்று அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். எல்லோரிடமும் தகராறுக்குப்  போகிறார். ஆனாலும், அதையும் மீறி போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் உடலை விமானத்தில் ஏற்ற முடியாது என்று கண்டிப்பு காட்டி விடுகின்றனர் அதிகாரிகள். இதைத் தாண்டி எல்லாவிதமான பண உதவிகளையும் செய்து, போஸ்ட்மார்ட்டத்தையும் முடித்து பசித்துக் கிடக்கும் அந்தக் குழந்தைகளுக்கு உணவும் வாங்கிக் கொடுத்துப் போராடுகின்றனர் தமிழ் இளைஞர்கள்.

இறந்து போன அந்த அம்மாவின் பிணத்தைச் சவப்பெட்டியில் வைத்து விமானத்தில் ஏற்றும் வரை-அந்தக் குடும்பத்தினர் அந்த விமானத்தில் ஏறும் வரை உதவி செய்து கொண்டிருக்கிற இளைஞன் யார் என்பதைப் படம் பார்ப்பவர்களுக்கும் சொல்லவில்லை; அந்த வட இந்திய குடும்பத்துக்கும் சொல்லவில்லை. புறப்படப் போகிற போது அந்தத் தகப்பன் ஓடிவந்து “தம்பி உன் பெயரைக் கேட்காமல் போய்விட்டேனே… உன் பேர் என்னப்பா…” என்கிறார். உதவி செய்த அந்த இளைஞன், “தன் பெயர்  இன்னதென்று சொல்லும் போது அவர் அதிர்கிறார்! அந்த நொடியில் அரங்கமே எழுந்து நின்று தியேட்டர் அதிர அதிரக் கைதட்டுகிறது. இயக்குநர் அங்கே தான் இமயமாக உயர்ந்து நிற்கிறார்.

கண்ணீரோடு அந்தக் குடும்பம் விடைபெற்றுப் போகிறது. கடைசிக் காட்சியில் அந்த இளைஞனிடம் கிழிந்த புடவையோடு ஒரு ஏழைத்தாய் ”என் கணவனின் பிணத்தை அடக்கம் செய்ய இயலாமல் தவிக்கிறேன்” என்கிறார். அந்தத் தாயை அழைத்துக் கொண்டு போய் அந்தப் பிணத்தையும் எரிக்க ஏற்பாடு செய்து  எரிகிற சடலத்தோடு நின்று கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். படம் நிறைவடைகிறது.

வட இந்தியாவில் இருந்து வந்த இந்தி பேசும் தந்தையாக நடித்த யாஸ்பால் ஷர்மா- தாயாக நடித்த அஞ்சுஅஸ்ரானி- மகளாக நடித்த ப்ரீத்தி அஸ்ரானி-மகனாக நடித்த சிறுவன் அத்வைத்- இவர்களோடு படத்தை முன்னெடுத்துக் கொண்டு செல்கிற கதாநாயகனாக வருகிற நமது தமிழ்க் கலைஞன் சசிகுமார் இத்தனை பேரையும் நாம் உச்சி மோந்து பாராட்ட வேண்டும். அவர்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

படத்தில் ஒரு காட்சியில் கூட பிரச்சார நெடி இல்லை. “ஏனப்பா உங்களுக்கு இந்த மதவெறி…!” என்று யாரையும் கேட்கவில்லை. மதவாதம் பற்றியோ சமய நல்லிணக்கம் பற்றியோ செக்யூலரிசம் பற்றியோ பிரச்சார முழக்கங்கள்  இல்லை. கதாபாத்திரங்களை தன் இயல்பு போலப் போக வைத்து அவர்களின் நடவடிக்கையிலேயே மானுடத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார் திரைப்பட இயக்குநர். மிகச் சிறந்த திரைக்கதை அமைப்பு- கன கச்சிதமான வார்த்தைகள்- வழவழா என்று பேசாமல் கதாபாத்திரங்கள் தங்கள் குணாதிசயங்களை முகபாவங்களிலேயே வெளிப்படுத்துகிற நுட்பம்- ஆகச் சிறந்த கிளைமேக்ஸ்- என்று படம் தூள் பரப்பி இருக்கிறது.

அயோத்தி படத்தை இந்தியாவெங்கும் போட்டுக் காட்டினால், இந்திய தேசம் மகாத்மா காந்தியின் மகத்தான பூமி என்பதை மக்கள் உணர்வர். அன்பு கூர்ந்து சான்றோர்களும், சிந்தனையாளர்களும் இந்தப் படத்தை எங்கெங்கும் கொண்டு செல்ல வேண்டும். இன்றும் மகாத்மா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக இந்தப் படம் புதிய வடிவம் எடுத்துப் புறப்பட்டு வந்திருக்கிறது. ஆயிரம் பொதுக் கூட்டங்களால் சாதிக்க முடியாததை இரண்டு மணி நேரப் படத்தில் சாதித்துத் காட்டியிருக்கிறார் இந்தப் படைப்பாளி மந்திரமூர்த்தி.

பொது நலன் சார்ந்த அறிவு ஜீவிகள் அனைவரும் ஒன்றாகக் கூடி, இது பற்றிப் பேச வேண்டியதும், இதை பரப்ப வேண்டியதும் தார்மீகக் கடமையாகும். இது போன்ற இன்னும் மேன்மையான நல்ல படைப்புகளைத் தருவதற்காக இந்த இளைய கலைஞன் திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தியை உச்சி மீது வைத்துக் கொண்டாடுங்கள். புறப்படுங்கள்… அயோத்தி படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் திரையரங்குகளுக்கு! ரகுபதி ராகவ ராஜா ராம்.!

திரை விமர்சனம்; திரு.வீரபாண்டியன்

மூத்த ஊடகவியளாளர், கவிஞர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time