நலம் தரும் தர்பூசணியை விஷமாக்குவதா..?

- சாவித்திரி கண்ணன்

பார்த்தவுடன் சாப்பிடத் தூண்டும் கோடையின் கொடை தான் தர்பூசணி! சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உட்கொள்ளும் இந்த தர்பூசணி நீர்சத்து நிறைந்தது! வெயிலுக்கு இதமானது! ஆனால், இதில் தற்போது கொட்டப்படும் அளவுக்கு அதிகமான ரசாயன மருந்துகளால் உண்பவர்களுக்கு கேடு தரும் என்பது உறுதி!

”கோடையின் அற்புதமான கொடையாகப் பார்க்கப்படும் தர்பூசணி பல உஷ்ண நோய்களை தடுக்கும் இயற்கை ஆற்றல் கொண்டதாகும்! வெயில் காலத்தில் நம் உடலில் வியர்வை மூலம் வெளியேறும் தண்ணீரை ஈடுகட்ட இந்தப் பழம் பெரிதும் உதவுகிறது. ‘சிறு நீரகச் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவும்’ என கருதப்பட்ட தர்பூசணி தற்போது அதில் கொட்டப்படும் அதிகமான ரசாயண உரங்கள், மருந்துகள் காரணமாக சிறுநீரக பாதிப்பை உருவாக்க வல்லதாக மாறி நிற்பது தான் கொடுமை’’ என்கிறார் விவசாயி நாராயணன்.

என் அருமை நன்பர் கல்பாக்கம் விவசாயி நாராயணன் போன் செய்தார்! அவர் இயற்கை விவசாயத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர். தற்போது விவசாயத்தில் நிலவும் சில மோசமான போக்குகள் குறித்து அவர் என்னிடம் குமுறித் தீர்த்துவிட்டார். அவற்றை தற்போது அப்படியே வாசகர்களுக்கு சொல்லிவிடுகிறேன்.

அண்ணா.. விவசாயம் ரொம்ப விஷமாகப் போய்க் கொண்டு இருக்குதுங்க அண்ணா! பொதுவாக ஜனவரி தொடங்கி மார்ச், ஏப்ரல் வரை தர்பூசணியை விவசாயிகள் சாகுபடி செய்வர். விதைத்தாலே போதும் பெரிதாக செலவு ஏதுமின்றி இயற்கையாகவே செழித்து வளரக் கூடிய பழம் தான் தர்பூசணி! ஆனால், ‘இதில் தங்களால் எதுவும் லாபம் பார்க்க முடியவில்லையே… ‘என உர வியாபாரிகளும், அவர்களின் கூட்டாளியான அரசு வேளாண் அதிகாரிகளும் எப்படியாவது தங்கள் வலைக்குள் விவசாயிகளை வீழ்த்த திட்டமிட்டனர். பல இடங்களில் அரசு அதிகாரிகளே பினாமியாக உரக் கடையை நடத்துகின்றனர்.

இதன் விளைவாக மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு வரையிலும் தழை உரம், மாட்டுச் சாணம் ஆகியவற்றை மட்டுமே உபயோகித்து இயற்கை முறையில் விளைவித்த தர்பூசணி பழங்கள் தற்போது ரசாயன மழையில் தான் தழைத்தோங்கி வளர்கின்றன! ”அதிக விளைச்சல் தரும்” என ஆசையை காட்டி, ‘அதிக எடையை தருவதற்கான சூட்சுமத்தைச் சொல்லி’, விவசாயிகளை மெல்ல, மெல்ல வீழ்த்தி, இன்றைக்கு ஏகப்பட்ட ரசாயன உரங்களை போட வைத்து விட்டனர். ”பணம் இல்லை, வேண்டாம்” என்றாலும், ”அறுவடை முடிந்து லாபம் எடுத்த பிறகு பணம் தந்தால் போதும்” என ஏகப்பட்ட ரசாயன உரங்களை வயல் வெளிக்கே கொண்டு வந்து இறக்கி விடுகின்றனர்.

இந்தப் பழத்தின் ஆரம்ப பருவத்தில் இருந்தே – அதாவது விதை பருவத்தில் இருந்தே – விஷ மருந்துகளின் ஆதிக்கம் தொடங்குகிறது. விதைகளின் வீரியத்தை அதிகரிக்க, அவற்றை ஆரம்பத்திலேயே செயற்கை மருந்தில் முக்கி எடுக்கப்படுகிறது. அதன்பின் கொடியின் வளர்ச்சிக்காக ஒரு சொட்டு மருந்து கூட வீணாகாமல் சென்றடைய ‘டிரிப்பிகிரேசன்’ எனப்படும் சொட்டு நீர்பாசன முறையில் செலுத்தப்படுகிறது. அதன் மூலம் அனைத்து மருந்துகளும் கொடியின் வழி உறிஞ்சப்பட்டு, நேரடியாகப் பழத்தை சென்றடைகிறது. ஒரு ஏக்கருக்கு அடி உரமாக யூரியா 50 கிலோ, பொட்டாஷ் 65 கிலோ, டி.ஏ.பி 85 கிலோ, அசோசஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா தலா 10 கிலோ போட நிர்பந்திக்கபடுகிறார்கள்!

இது தவிர, 25 ஆம் நாளில் மேலும் 40 கிலோ யூரியா, 45 நாளில் மேலும் 40 கிலோ யூரியா 100 கிலோ அம்மோனியம் சல்பேட்..! இத்துடன் விட்டார்களா… என்றால், அது தான் இல்லை. பயிர் பாதுகாப்புக்கு என்று டிரையோசோபாஷ், மாலத்தியான், தையோமீதாக்சம், குளோபிரிட் போன்றவற்றை தெளிக்கிறார்கள்!

அய்யோ, அய்யோ என்ன சொல்வேன்…? இந்த பூமி தாங்குமா..? இதை சாப்பிடும் நம்ம உடல் தான் தாங்குமா..? நான்கு ஏக்கர் வைத்துள்ள ஒரு விவசாயி 45 வது நாளில் மட்டுமே வயலில் போடுவதற்காக 28 ஆயிரம் ரூபாய்க்கு உரக் கடையில் மருந்து வாங்கியதை நானே நேரில் பார்த்து திகைத்து விட்டேன். இதற்கு முன்பும் உரம் வாங்கி இருப்பார்!

இவ்வளவு அதிகமாக செலவு செய்வதால் தான் முன்பு போல நியாயமான விலைக்கு தர்பூசணியை விற்க முடிவதில்லை. கிலோ ரூபாய் 25 முதல் 30 வரை விற்கப்படும் அளவுக்கு தர்பூசணி விலையையும் அதிகரித்துவிட்டனர். இப்படி தர்பூசணி அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டு நில உரிமையாளர்கள் முன்பெல்லாம் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஆண்டு குத்தகையாக 5,000 முதல் 7,000 வரை வாங்கி வந்தனர். ஆனால், தற்போது மூன்று மாத விளைச்சலுக்கே ரூபாய் 25,000 குத்தகை பணமாக கேட்கிறார்கள்! அதாவது, வேளாண் துறை அதிகாரிகளின் சுய நலம் விவசாயிகளை எப்படி எல்லாம் ஆட்டிப் படைப்பதோடு, அதன் தொடர் நிகழ்வாக நுகர்வோரையும் பாதிக்கிறது என்பதை நீங்கள் இதன் மூலம் உணரலாம்.

குறைந்த செலவில் ஏதோ ஒரு நிறைவான லாபம் பார்த்த விவசாயியை ‘அக்கிரி டிபார்ட்மெண்ட்’ சுயநலவாதிகள் பேராசை காட்டி, திசை திருப்பி இன்றைக்கு செலவு அதிகமாகும் விவசாயமாக மாற்றியதோடு அல்லாமல்,  நலம் தரும் தர்பூசணியை நோய் தரும் தர்பூசணியாக மாற்றி விட்டனர்.

கோடைக் காலங்களில் மக்கள் இதைத் தான் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இன்றைக்கு அப்படி வாங்கும் மக்களின் கதி என்னாகும்? இதை சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் வரலாம். கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது! சக்கரை நோய் தொடங்கி சகல நோய்களும் இன்றைக்கு மனித குலத்தை பிடித்து உலுக்குவதற்கு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அளவுக்கு அதிகமான ‘கெமிக்கல்ஸ்’ தான் காரணம். இங்கே நான் கூறி இருப்பது ஒரே ஒரு பயிரைத் தான்! ஒவ்வொரு பயிருக்கும் விவசாயிகள் என்னென்ன மருந்துகளை பயன்படுத்தி உண்வை விஷமாக்கி வருகின்றனர் என விளக்க ஆரம்பித்தால், மலைப்பு தான் ஏற்படும். இந்த அனைத்து தீமைகளும் உர உற்பத்தி நிறுவனங்களை கொழுக்க வைக்க அரசு நிர்வாக இயந்திரங்கள் செய்யும் சூழ்ச்சியானால் தான் அரங்கேறுகின்றன என்பது தான் சோகத்திலும், சோகமாகும்!

இயற்கை விவசாயம் செய்யும் நாராயணன்

தெளிவான புரிதலுடன், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் அழுத்தமாக சொல்ல வேண்டி இருக்கிறது…” என்றார் நாராயணன்

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time