எளிய மாணவர்கள் படிப்பது பொறுக்கவில்லையா..?

-ஏர் மகாராசன்
பிளஸ் 2  அரசுப் பொதுத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை! இந்த அதிர்ச்சிகர தகவலின் பின் இருக்கும் உண்மைகளை பார்க்கவோ, உணரவோ அதிகார மையத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை! இதற்கு பல சமூக, பொருளாதாரக் காரணங்கள்  இருந்தாலும், இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது..
மிகப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வெழுதாமல் போனதற்கு ஒரு ஆசிரியராக, சமூக ஆய்வாளராக இங்கே நான் பல காரணங்களைச் சொல்ல முடியும். குடும்பச் சூழல்கள், குடும்ப வருவாய்க்காக உழைப்பில் ஈடுபடுதல், பெற்றோரின் அறியாமை, பெற்றோர்களை இழந்திருத்தல், மது, கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கம், சமூகக் குற்றவாளிகளுடன் சேர்க்கை, அதிகமான செல்பேசிப் பயன்பாடுகள்,  லும்பன்கள் எனப்படும் உதிரிக் கலாச்சார மனப்போக்கு, அளவுக்கு மீறிய சுதந்திரப் போக்கு என, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
ஆனால், இவை எல்லாவற்றையும் விஞ்சிய முக்கியமான காரணம், தற்போதைய கல்வித் திட்டமும், அதீத பாடச் சுமைகளுமே!  இது தான் பெருவாரியான மாணவர்களைக் கல்விச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி வைத்துவிட்டது.
பொதுவாக, கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். மாணவர்களின் வயது, உடல், உளவியல், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ப அறிவுசார் நோக்கங்களை அடைய வைப்பதற்கான கற்பித்தல்- கற்றல் செயல்பாடுகள் தான் கல்வி எனப்படுகிறது. அதற்கேற்பத் தான் கல்வித் திட்டமானது காலந்தோறும் உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்களுக்கு உகந்த, பெருவாரியான மாணவர்களைப் பங்கேற்கிற வகையில் தான் கடந்த காலத்தியக் கல்வித் திட்டங்கள் அமைந்திருந்தன.
முன்பெல்லாம் ஒவ்வொரு கல்வித்திட்டமும் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பங்கேற்கும் விதமாக அமைந்திருந்தன. அதாவது, திறமையான மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என மூன்று வகைப்பட்ட மாணவர் தரப்பினர் கல்விச் சூழலுக்குள் இருப்பர். மேற்குறித்த மூன்று தரப்பினரையும் மனதில் வைத்துக் கொண்டு தான் – அவர்கள் அனைவருக்கும் ஏற்றவாறு தான் கல்வித் திட்டப் பாடப் பொருண்மைகள், கற்பித்தல் பயிற்சிகள், வினாத்தாள்கள், தேர்வுகள் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதனால், திறமையான மாணவர்களும், சராசரி மாணவர்களும், மெல்லக் கற்போரும் கற்றல் நோக்கங்களுக்கேற்ப உயர் கல்விக்கான வாய்ப்புகளை எட்டிப் பிடித்து வந்துள்ளனர்.
ஆனால், அண்மையில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் நவீனக் கல்விப் பாடத்திட்ட அமைப்பானது, புதிய பாடத்திட்டம் எனும் பெயரில் மிக அதிகப்படியான பாடப் பொருண்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டிருப்பதாகவே மாணவர்களும், ஆசிரியர்களும் கருதுகின்றனர். தலையணை அளவுக்கான ஐநூறு, ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்கள், மிக விரிவான ஆராய்ச்சி கட்டுரைகளைப் போன்ற பாடங்கள் மாணவர்களை மிரள வைக்கின்றன! சின்னஞ்சிறு குருவி தலையில் பூசணிக்காயைச் சுமக்க வைத்திருப்பதைப் போலத் தான் மாணவர்கள் உணர்கிறார்கள். அதே போல, பத்து வண்டிகளில் ஏற்றும் பாரத்தை, ஒரே வண்டியில் ஏற்றி வைத்து, அந்த வண்டியை இழுத்துச் செல்லமுடியாமல் முக்கித் தவிக்கும் வண்டி மாட்டின் பரிதாப நிலையில் தான் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களை உணருகிறார்கள்.
பாடத்திட்டத்தை நவீனப்படுத்துவதையும், தரவேற்றம் செய்வதையும் குறையாக  கருதவில்லை. அதே வேளை, அது யாருக்கானது? என்ன தரமுடையது? என்ன பலமுடையது? என்ன விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது? எல்லோருக்குமான வாய்ப்புகள் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே ஒரு தலைமுறைக்கான பாடத்திட்டம்/கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
ஆனால், புதிய பாடத்திட்ட உருவாக்கமானது, எல்லோருக்குமான வாய்ப்பை வழங்குவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலை உருவாக்கித் தந்திருக்கிறது.
அதாவது, இப்போதைய புதிய பாடத்திட்டப் பொருண்மைகளும், அதையொட்டிய தேர்வு முறைகளும் அதி திறமை மிக்க மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பை வழங்குகின்றன. சராசரி மாணவர்கள் கூட திக்கித் திணறிக் கற்கும் சூழலில் தான் இருக்கின்றனர். மெல்லக் கற்கும் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டப் பொருண்மைக்குள்ளும், தேர்வு முறைகளுக்குள்ளும் நுழைந்து  பார்த்தாலும், நுழையவே முடியாமல் அடிபட்ட பந்து போல வேகமாக பின்வாங்குகின்றனர்.
கல்லூரியிலும், பல்கலைக் கழகத்திலும் வைத்திருக்க வேண்டிய பாடத் திட்டங்களை, பள்ளி மாணவர்களின் பாடப் திட்டகளாக வைக்க வேண்டிய தேவை தான் என்ன? பெருமளவு எளிய மாணவர்களை பள்ளிக் கல்வியோடு முடக்கும் நோக்கமா..? என்ற சந்தேகம் தவிர்க்க இயலாமல் ஏற்படுகிறது.
இதனால் தான் பெருமளவு மாணவர்கள் கல்விப் புலத்தில் இருந்தே அந்நியப்படத் தொடங்குகிறார்கள். மெல்லக் கற்கும் மாணவர்களை, குறைந்தளவு மதிப்பெண் எடுத்தாவது தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலைதான் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. பாடங்கள் முழுவதையும் படிக்க வைத்தால் தான், அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க முடியும். மெல்லக் கற்கும் மாணவர்களைப் பாடங்கள் முழுவதையும் படிக்க வைக்க முடியாத சூழல்தான் ஆசிரியர்கள் முன்னிருக்கும் சவால்.
மெல்லக் கற்கும் மாணவர்கள், தம்மால் பாடங்கள் முழுமையையும் முற்றும் முழுதாகப் படிக்க முடியாது; இயலாது எனத் தெரிந்த பின்னரும், அடுத்தடுத்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும் பல்வேறு பாடங்களில் நேரப் போகும் தோல்விகளை எதிர்கொள்வதற்கு அம்மாணவர்கள் விரும்புவதில்லை. அதனால், பள்ளிக்கும் வருவதில்லை; வகுப்புக்கும் வருவதில்லை; தேர்வுக்கும் வருவதில்லை எனத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்கும், தேர்வுக்கும் வராமல் போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்களே! 9 ஆம் வகுப்பு வரை சிரமமின்றி கட்டாயத் தேர்ச்சி தரப்பட்டு மாணவர்கள் , 10 ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறித் தான் தேறுகின்றனர்.
11ஆம் வகுப்பிலும், 12ஆம் வகுப்பிலும் இருக்கின்ற பாடநூல்களின் அதீதச் சுமை, குறைந்தளவுத் தேர்ச்சிகூடப் பெறுவதற்கு வழியில்லாமல் போவதால் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு கற்றலில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. புதிய பாடத் திட்டக் கூறுகள் மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் நோக்கிலேயே இருக்கின்றன!  இதனால்தான், அதிகளவிலான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றவை நிகழ்ந்திருக்கின்றன.
ஒருகாலத்தில், சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியால் நடைமுறைப்படுத்தினர். தற்போதோ, சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையைப் பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் செய்கின்றன.
பெருவாரியான மாணவர்களின் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், அதி திறமையான மாணவர்களுக்கு மட்டுமே உரியதாகப் பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்படாமல், மெல்லக் கற்கும் மாணவர்களையும் உள்ளடக்கியப் பாடத்திட்டங்களும், தேர்வுமுறைகளும் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குரிய கல்வித்திட்டச் சீரமைப்புகளைக் கல்வித்துறை உடனடியாகச் செய்திடல் வேண்டும். இத்தகையச் சீரமைப்பில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கும்படியான சுதந்திரமான சனநாயக அமைப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளை அளித்திடல் வேண்டும்.
கல்வித்திட்டச் சீரமைப்பின் முதற்கட்டமாக, எல்லா வகுப்புகளிலும், எல்லாப் பாடங்களிலும் பாடப் பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய பிறகு, மறுபடியும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர் கொள்வதில் நிறைய உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால், 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முறையை இரத்து செய்து, 12ஆம் வகுப்பிற்கு மட்டுமே பொதுத் தேர்வாக நடத்திட கல்வித் துறை நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.
தேர்வு முறைகளில் வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) என்கிற ஒரு நடைமுறை இருந்து வந்தது. அந்த நடைமுறை புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின்போது நீக்கப்பட்டது. இதனால், ஒரு பாடத்தில் எங்கிருந்து கேள்வி கேட்பார்கள்? எத்தனை மதிப்பெண்கள் எந்தெந்தப் பாடங்களில் கேட்பார்கள்? எதைப் படிக்க வேண்டும்? புத்தகப் பயிற்சி வினாக்களில் (Book back Questions) எத்தனை மதிப்பெண்கள் வரும்? புத்தக உள்நிலையிலிருந்து (Interior Questions) எத்தனை மதிப் பெண்கள் வரும்? என்கிற வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) ஆசிரியருக்கும், மாணவருக்கும் தெரிவதில்லை. அவை தெரிந்தால் மட்டுமே, அதற்கேற்றவாறு மூவகைப்பட்ட மாணவர்களையும் பயிற்சி பெற வைக்க முடியும். குறிப்பாக, மெல்லக் கற்கும் மாணவரையும் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். ஆகையால், உடனடியாக வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print Method) நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
இவற்றோடு, ஆசிரியர்களைச் சமூகமும், கல்வித்துறையும், அவமதிப்புக்கு உள்ளாக்காத வகையில் முழுமையான பணிப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும். மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
அடிக்கடி பள்ளிகளில் பல நிகழ்வுகளை நடத்தச் சொல்லி நிர்பந்திப்பது, கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு நிகழ்வுகளில் ஆசியர்களின் கவனத்தை சிதறடிப்பது போன்ற்வற்றை தவிர்த்தால் கற்பித்தலில் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அலுவல் காரணங்களுக்காகவும், தரவுகள் பதிவேற்றங்களுக்காகவும் வெகு தீவிரமாகப் புழக்கத்திலிருக்கும் செல்பேசிப் பயன்பாடுகளை பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பதை உடனடியாகத் தடைசெய்திடல் வேண்டும். கற்றல், கற்பித்தல் சார்ந்த கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம் திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவுமான கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். இதெல்லாம் நடந்தால், ஓரளவுக்கேனும் கல்வித்துறை சீரமைய வாய்ப்பிருக்கிறது.
கல்விச் சூழல் குறித்து கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மனம் திறந்து பேசவும், எழுதவும், உரையாடவும் வேண்டிய நேரமிது. தங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாக மட்டுமே ஆசிரியர்களையும், தலைமை ஆசிரியர்களையும் பார்க்கும் நிலையில் இருந்து  கல்வித் துறை அதிகாரிகள் விடுபட வேண்டும்.
கட்டுரையாளர்:  ஏர் மகாராசன்,
முனைவர்,
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
மக்கள் தமிழ் ஆய்வரண்,
தமிழ்நாடு.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time