யாரை வாழ வைக்க இந்த வேளாண் பட்ஜெட்?

- சாவித்திரி கண்ணன்

தமிழக வேளாண்மை நிதிநிலை அறிக்கை  கண் கவரும் ஜிகினா தோரண அறிவிப்புகளால் களை கட்டுகிறது! இதற்கு இத்தனை கோடி! அதற்கு அத்தனை கோடி! என.. அறிவிப்புகள்! ஆனால், கடைசியில் விவசாயிகள் விழுந்து அழுவதோ.., தெருக் கோடியில்! உண்மையில் யாருக்கானது இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை..?

வெளி நாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லும் திட்டம், ரூ.14 ஆயிரம் கோடி பயிர்கடன், ரூ.1,500 கோடி வட்டிக்கடன், 77 லட்சம் பனங்கன்றுகள் 15 லட்சம் தென்னங்கன்றுகள், பாரம்பரிய நெல் உற்பத்திக்கு ஊக்கம், தரிசு நில மேம்பாட்டு, சிறுதானிய இயக்கம், ராமநாதபுரத்தில் மிளகாய் மண்டலம் கோவையில் கறிவேப்பிலை மண்டலம் என பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

விவசாயத்தை பற்றிய புரிதல் இல்லையா? விவசாயிகளின் விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை அறியாதவர்களா? என்று திகைக்கும் வண்ணமே ஒவ்வொரு ஆண்டும் விவசாய பட்ஜெட் வெளியாகிறது!

இத்தனைக்கும் பட்ஜெட்டிற்கு முன்னதாக அமைச்சரும், துறை அதிகாரிகளும் விவசாயிகளிடம் கருத்து கேட்புகளை எல்லாம் கூட நடத்துகின்றனர். ஆனால், நிதி நிலை அறிக்கையை பார்த்தால் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் எதையும் அறியாதவர்களைப் போல உள்ளது.

இதற்கு இத்தனை கோடி ஒதுக்கீடு, அதற்கு இத்தனை கோடி ஒதுக்கீடு என்று பணத்தை ஒதுக்குவதல்ல பட்ஜெட் என்பது. விவசாயம் செய்வதற்கு உகந்த சூழல்களை உருவாக்கித் தருவதும், தற்கு இருக்கின்ற தடைகளை அகற்றுவதும் தான்!

ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்;

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. என்று அறிவித்து உள்ளார்கள்!

இதைக் கேட்கும் யாருக்குமே  ”ஆகா, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க அரசே முன்வருகிறதே… சபாஷ்” என்று தான் தோன்றும்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

பாரம்பரிய நெல் விதை சேகரிப்பையும், சாகுபடியையும், விற்பனையையும் தமிழகத்தில் பல தனி நபர்களும், அமைப்புகளும் செய்து வருகின்றனர். இதை அரசாங்கம் செய்ய வேண்டியதில்லை! ஆனால், தனி நபர்களால் செய்ய முடியாததை அரசாங்கம் செய்யலாம். ஒரு நெல்லின் பாரம்பரியம் என்பது அது விளையும் நிலத்தையும், அதில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களையும் பொருத்தே அமையும். ஒரே நிலத்தில் இடத்தில் பாரம்பரிய விதைகளை பயிர் செய்து விளைவிப்பதில் பயன் இல்லை. அந்தந்த மண்ணுக்கேற்ற பாரம்பரிய நெல்லை கண்டறிந்து அந்தந்த நிலத்தில் பயிரிட வைப்பதில் தான் அதன் பாரம்பரிய சுவையும், குணாம்சங்களும் கிடைக்கும்.

திருச்சி-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இடையேயான பகுதியை வேளாண் தொழிற் சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) திமுக அரசின் முதல் நிதி நிலை அறிக்கையான 2021 லேயே அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கே ஒ.என்.ஜி.சியின் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதியும் தந்துள்ளது அரசு. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்?

ஆட்சிக்கு வந்து மூன்றாவது விவசாய பட்ஜெட் இது! ஆனால், தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்பட்ட கரும்புக்கு 4,000, நெல்லுக்கு 2,500 என்னவாயிற்று…?

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறோம் என சொல்லிக் கொண்டே ரசாயன முறையில் உருவான செயற்கை அரிசியை ஏழை, எளிய மக்கள் தலையில் கட்டும் அரசாங்கமல்லவா இது?

தக்காளி, வெங்காயம் உற்பத்திக்கு 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதற்கு? இவை தான் தாராளமாக உற்பத்தியாகி கொண்டுள்ளனவே! ஆனால், சில நேரங்களில் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி நடந்து தக்காளியும், வெங்காயமும், விளைவித்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல், கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் ரோட்டில் கொட்டிய சம்பவங்கள் ஏராளம்! இவற்றுக்கு கூடுதல் சந்தையை உருவாக்கி தருவதை விட்டு உற்பத்திக்கு நிதி ஒதுக்குவதை எப்படி புரிந்து கொள்வது..?


குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமாம். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமாம். இவை எல்லாம் இயல்பாக நடப்பவை தாம். இதற்கு நிதி ஒதுக்கி, அது யார் கைகளுக்கு போகப் போகிறது என்பது தெரியவில்லை.

வேளாண்மையை இயந்திர மயமாக்கும் முயற்சியை முன்மொழிந்து இருக்கிறார்கள்.  ”வேளாண் தொழிலில் இருக்கும் கொஞ்ச, நஞ்ச வேலை வாய்ப்பையும் ஒரு அரசே காலி செய்யப் பார்ப்பது தர்மமாகுமா..?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

கரும்பு நிலுவைத் தொகைக்காக போராடும் விவசாயிகள்!

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவைத் தொகை ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக உள்ளது! அதை விவசாயிகளுக்கு பெற்றுத் தர துப்பில்லாத அரசாங்கமாகத் தான் இது தொடர்கிறது! ஆரூரான் சர்க்கரை ஆலையை ஆளும் கட்சியின் குடும்ப அங்கத்தினர் ஒருவரே பினாமி பெயரில் வாங்கிவிட்டு, இன்னும் கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு தராமல் மிரட்டுவதும், இழுத்தடிப்பதும் எந்த விதத்தில் நியாயம்?

தமிழகத்தில் திமுக அரசாங்கம் பொறுப்பேற்றது முதல் எத்தனை குவாரிகளுக்கு புதிதாக அனுமதி தந்துள்ளீர்கள்? அதன் மூலம் எத்தனை விவசாய நிலங்கள் விரக்தியினால் கைவிடப்பட்டு உள்ளன? ‘கிரஷர்’ கழிவுகளால் எத்தனை ஏக்கர்களில் விவசாய நிலங்கள் பாழ்ப்பட்டு கிடக்கின்றன? ‘’ஐய்யோ எங்கள் விவசாய நிலங்கள் பறிபோகிறதே…’’ என்ற அலறல்களுக்கு இந்த ஆட்சியில் கடுகளவேனும் கருணை காட்டப்பட்டு உள்ளதா?

வேளாண் நிலங்களில் கல் குவாரிகள் எப்படி அனுமதிக்கபடுகின்றன?

லட்சக்கணக்கிலான பனை விதையை விவசாயிகளுக்கு கொடுக்கப் போவதாக நிதி ஒதுக்கிடு செய்கிறார்கள்! இதை ஏராளமான தனி நபர்கள் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்! நாம் கேட்பதெல்லாம் டாஸ்மாக் சரக்கு விற்பனைக்காக பனை மரப் பயன்பாடுகளுக்கு லைசென்ஸ் போன்ற தடைகள் ஏற்படுத்தாதீர்கள் என்பது தான்! இருக்கிற பனை மரங்களே அரசாங்க கெடுபிடிகளால் பயன்பாடு இன்றி ஆயிரக்கணக்கில் வெட்டி வீழ்த்தப்படுகின்றன! இந்த விதை கொடுப்பது, நிதி கொடுப்பது எதுவும் தேவையில்லை. என் பனை என் உரிமை என வாழும் சுதந்திரத்தை விவசாயிகளுக்கு உத்திரவாதப்படுத்தும் திரானியுண்டா இந்த அரசுக்கு? பனை மரத்தை பகை மரமாக பார்க்கும் அதிகார மையங்களின் மன நிலை மாற்றங்கள் ஒன்றே விவசாயிகள் வேண்டுவதாகும். அப்புறம் அரசுக்கு வரியை பனை விவசாயிகளே கொட்டிக் கொடுப்பார்களே?

பாதுகாப்பற்ற நிலையில் அழியும் நெல் மணிகள்!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் நிலையங்களின் அவலங்கள் ஆண்டாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டுள்ளன! ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கிலான நெல் மூட்டைகள் வெயிலும், மழையிலும் வீணாகி அழிகின்றன! இதை தடுப்பதற்கு மேற் கூரைகளுடன் கூடிய நெல் கொள் முதல் நிலையங்களை கட்டித்தர மனத் திட்பம் இல்லாத இந்த அரசாங்கத்திற்கு பட்ஜெட் என்ன வேண்டி கிடக்கிறது. பாடுபட்டு உருவாக்கப்பட்ட நெல்மணிகளை பாதுகாக்க துப்பில்லாத நிலையில் போடப்படும் பட்ஜெட் என்பது எல்லாம் யாருக்கானது?

எல்லாவற்றையும் விட படு அயோக்கியத்தனம் விவசாய பயிர் காப்பீடுகளுக்காக 2,400 கோடியை தனியார் காப்பீடு நிறுவனத்திற்கு மாநில அரசு தருவதாகும். இந்த நிறுவனங்கள் விவசாயிகளிடமும் காப்பீட்டிற்கு என பணம் அரசு வங்கி மூலம் கட்டாயப்படுத்தி பெறுகிறார்கள். ஆனால், இவை அனைத்துமே பக்கா பித்தலாட்ட நிறுவனங்களாகும். இதற்கு தமிழகம் முழுமையும் நடக்கும் போராட்டங்களும், வழக்குகளுமே சாட்சியாகும். இந்த நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை அள்ளித் தந்து, விவசாயிகளையும் பலியாடாக அவர்களிடம் ஒப்படைப்பதற்கு எதற்கு அரசாங்கம்? இதை அரசு காப்பீட்டு நிறுவனங்களே செய்யலாமே!

உரக் கம்பெனிகள், பூச்சி மருந்து கம்பெனிகள் சம்பாதிக்கவும், இன்சூரன்ஸ் என்ற பெயரில் பகல் கொள்ளையாளர்கள் விவசாயிகளை சுரண்டவுமான பட்ஜெட் தயாரிக்கும் அளவுக்கு தான் அரசாங்களுக்கான அதிகாரம் இங்கு உள்ளது என்பது மீண்டும், மீண்டும் நிருபணமாகிறது! பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல் என்ற நாடகம் தானே இந்த நிதி நிலை அறிக்கை…!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time