குற்றவாளிகளின் புகலிடமா அரசியல்?

-ஹரி பரந்தாமன்

குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. தேர்தலுக்கு தேர்தல் குற்றவாளிகளின் அரசியல் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எந்தக் கட்சிக்குமே இதில் ஆர்வம் இல்லையா..? நீதிமன்றங்கள் இதில் சாதித்தது என்ன..? அலசுகிறார் ஹரி பரந்தாமன்.

குற்றப் பின்னணி உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதை கணக்கில் கொண்ட உச்ச நீதிமன்றம்,அவர்களின் வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கில் 2017 இல் உத்தரவிட்டது.

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி புரிவதற்காக வழக்குரைஞரை நியமித்து, அந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து அப்போதைக்கப்போது பல உத்தரவுகளை அளித்து வருகிறது உச்ச நீதிமன்றம். சமீபத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கில் உதவி புரியும் வழக்குரைஞர் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட போதும் நிலுவையில் இருந்து வழக்குகள் எண்ணிக்கை 4,112 இல் இருந்து 5,112 ஆக கூடியுள்ளது என்ற உண்மையை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

இத்தருணத்தில், அரசியல் குற்றமயமான விவரத்தை பார்க்கலாம்.

நமது ஜனநாயகம் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றால், நேர்மையான தேர்தலும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் பங்கு கொள்வதற்கு தடையும், தேர்தலில் பணத்தின் ஆதிக்கமும் தடுக்கப்பட வேண்டும்.

ஆரம்ப காலத்தில் குற்றச் செயல் புரிவோர் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பின்புலத்திலிருந்து செயல்பட்டார்கள். ஒரு கட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களே அரசியல்வாதிகளாக மாறி, தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெற்றார்கள்.

குற்றச் செயலுக்காக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் பங்கு கொள்ள இயலாது என்பதே சட்டம். ஆனால், குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தால், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் தேர்தலில் பங்கு பெறுவதற்கு சட்டத்தில் தடை ஏதுமில்லை. நிலுவையில் உள்ள வழக்கு கொலை, கொள்ளை ,பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றச் செயல்கள் புரிந்ததாக இருப்பினும், வழக்கை எதிர்கொள்ளும் குற்றம் சாட்டப்பட்டவர் தேர்தலில் பங்கு பெறலாம். எனவே, அரசியல்வாதிகள் சட்டத்தின் துணை கொண்டு குற்ற வழக்கு முடியாதபடி  பார்த்துக் கொள்வார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழக்கு – ஊழல் செய்ததன் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்தை சேர்த்தார் என்ற வழக்கு-சுமார் 18 ஆண்டுகள் நடந்ததை அறிவோம்.

மஸில் பவரும், மணி பவரும் ஓட்டு வங்கி அரசியலை தீர்மானிக்கிறதா..?

இந்நிலையில் , 2002-ஆம் ஆண்டில் அளித்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,  அவரது குற்றப் பின்னணியை பற்றி எழுத்து மூலமான வாக்குமூலம்  தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு கட்டாய நிபந்தனையை விதித்தது உச்ச நீதிமன்றம். இதனால் குற்றப் பின்னணியை கொண்டவர்களை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என்று உச்ச நீதிமன்றம் நம்பியது.

ஆனால், இந்த தீர்ப்புக்கு பின்னர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மையை பதிவு செய்தாக வேண்டும். அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசம் இன்றி குற்ற பின்னணி உள்ளவர்களை தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக இறக்கின.  மூன்றுக்கும் மேற்பட்ட குற்றப் பின்னணி உள்ளவர்கள் வேட்பாளராக போட்டியிடும் நிகழ்வு , மொத்த தொகுதிகளில்  உள்ள பாதி தொகுதிகளை குற்றப் பின்னணி கொண்டோர் ஆக்கிரமித்தல் போன்றவற்றை ஆய்வுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக பிரதானமான அரசியல் கட்சிகளின் வேட்பாளராக இவர்கள் இருப்பதே உண்மை நிலைமை. எனவே வாக்காளர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதை தவிர வேறு வழியில்லை.


மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குற்றப் பின்னணி பற்றிய விவரங்களை வாக்குமூலமாக அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2002இல் வழங்கிய தீர்ப்பின் மூலம் கூறி இருப்பினும், அந்த விவரங்கள் மிகப்பெரிய அளவில் வாக்காளர்களுக்கு சேர்வதற்கான வழிமுறைகளை சிவில் சொசைட்டியும், சமூக ஆர்வலர்களும் முயற்சிக்க வேண்டும். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இதில் எந்த வித்தியாசமும் இன்றி, குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தல் களத்தில் இறக்குவது பற்றி எந்த வெட்கமும் இல்லை.

2009 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 30 % பேர் குற்ற பின்னணி உள்ளவர்கள். இதில் 14% பேர் கொடூரமான குற்றச் செயல்களுக்கான வழக்குகளை எதிர் கொண்டு இருப்பவர்கள். இது 2014 தேர்தலில் முறையை 34% ஆகவும் 21 % ஆகவும் கூடியது.  2019 தேர்தலில் இது மேலும் கூடி முறையே 43 %  மற்றும்29%  ஆகியது.

2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 30 பேர்கள் கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றத்திற்கான குற்ற வழக்கை எதிர்கொண்டு இருப்பவர்கள்; மேலும் 19 பேர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கான குற்ற வழக்கை எதிர்கொண்டு இருப்பவர்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்ற வழக்குகளை எதிர் கொண்டு இருந்தாலும், அவர்கள் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் ஆனார்கள்; இந்த 22 பேரில் 16 பேர்கள் மிகக் கொடூரமான குற்றச் செயல்களுக்கான குற்ற வழக்குகளை எதிர் கொண்டு இருப்பவர்கள்.

குற்றப் பின்னணி கொண்டோரை அரசியலில் இருந்து அகற்ற மக்கள் போராட்டம்!

இந்தச் சூழலில் தான் உச்ச நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு முதல் மேற்சொன்னபடி ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்து விசாரித்து பல உத்தரவுகளை அளித்து வருகிறது.

தேர்தல் சீர்திருத்தம் பற்றி வாய் கிழிய பேசும் அரசியல் கட்சிகள்-குறிப்பாக முன்னர் மத்தியில் ஆண்டவர்களும் இப்போது ஆள்பவர்களும்-குறைந்தபட்சம் கொடும் குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை எதிர் கொள்பவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிப்பதற்கு வேண்டிய திருத்தத்தை கூட  மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் செய்வதற்கு தயாராக இல்லை.

தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக – குறிப்பாக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் பங்கு கொள்வதற்கு தடை செய்வது சம்பந்தமாக -ஆய்வு செய்து அறிக்கை தருமாறு 2013 நீதிபதி A.P. ஷா(Justice A.P.Shah) தலைமை ஏற்று இருந்த சட்ட கமிஷனிடம் கேட்டது மத்திய அரசு. இவர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்னர் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அந்த சட்ட கமிஷன் குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது சம்பந்தமாக சட்டம் இயற்ற வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளைச் செய்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கும் குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்பவர்கள் தேர்தலில் பங்கு கொள்ள தடை செய்ய வேண்டும் என்பது ஒரு பரிந்துரை. அதிலும் கூட, காவல்துறையின் புலன்விசாரணையில் இருக்கும் கொடும் குற்றம் சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்வோர் தேர்தலில் நிற்பதற்கு தடை இல்லை என்றும் தெளிவுபடுத்தியது.

அதே நேரத்தில், புலன் விசாரணை முடிந்து காவல்துறை உரிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் ,குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் வனையும் போது அக்குற்றச்சாட்டுகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அளிக்கும் விதமாக இருக்கும் பட்சத்தில் மட்டும் தேர்தலில் நிற்கத் தடை செய்யலாம் என்று பரிந்துரைத்தது. அந்த வழக்கு விசாரணையும் 6 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தால், தேர்தலில் பங்கு கொள்ள தடை இல்லை என்று கூறியது. நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை வனைந்த பின்னர் ஒரு ஆண்டிற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றது. ஒரு ஆண்டிற்குள் வழக்கு முடியாமல் இருந்தால் ,சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமையோ, ஊதியமோ, மற்ற எந்தவித சலுகையோ பெறமுடியாத படி அவர்கள் சஸ்பென்ஷனில் வைக்கப்பட வேண்டும்’ என்றது.

ஆனால், இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டம் இயற்ற ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் இப்படி ஒரு சட்டம் வேண்டும் என்று கூறுபவர்களாக இல்லை. அரசியல் குற்றவாளிகளின் கூடாரமாக மாறுவதில் பிரதான கட்சிகள் எதற்கும் ஆட்சேபனை இல்லை.

குற்றப் பின்னணி உள்ளவர்கள்  தேர்தலில் பங்கு கொள்வதற்கு தடை ஏதும் இல்லாத போது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி பீடத்தில் அமர்வதை தடுப்பது மிகச் சவாலான காரியம். விழிப்புடன் உள்ள சிவில் சொசைட்டியும், சமூக ஆர்வலர்களும் தான் இதைச் செய்ய வேண்டும். அவர்களே ஜனநாயகத்தை காப்பவர்கள். நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்!

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time