ஜனநாயகத்தை சவக்குழிக்குள் தள்ளுவதா…?

-ச.அருணாசலம்

மோடி – அதானியின் கள்ள உறவையும், அதனால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும் ராகுல் தொடர்ந்து கவனப்படுத்தினார். மோடியின் அழுத்தமான மெளனத்திற்குள் ஒரு எரிமலையே இருந்துள்ளது என்பது ராகுலை சிறைக்கனுப்பும் சதியில் அம்பலப்பட்டு உள்ளது! இது அவதூறு வழக்கா? ராகுலை அழித்தொழிக்கும் சூழ்ச்சியா..?

நாடாளுமன்றம் ஆளுங்கட்சியினரால் முடக்கப்படுவது தொடருமா , அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஏற்படுமா என்று அரசியல் நோக்கர்கள் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று சூரத்திலிருந்து ஒரு அம்பு கிளம்பியது .

ராகுல் பேசியது நான்காண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி பேசிய இடம் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம்! அவர் வசித்து வருவதோ புது தில்லியில்! இதனால், பாதிக்கப்பட்டதாக அவதூறு வழக்கு தொடுத்தவரோ குஜராத் மாநிலம் சூரத்தை சார்ந்தவர்.வழக்கு நடந்தது இங்கு தான்!

இத்தகைய சூழல்களை கருத்தில் கொண்டே குற்றப்பிரிவு சி பி சி  202 விசாரணை முறையை வைத்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர் (ராகுல்) விசாரணை நடக்கும் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பால் வசிப்பவராக இருக்கும் பட்சத்தில் சி பி சி 202 ல் குறிப்பிடும் நடைமுறைகளை தீவிரமாக கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பலமுறை உச்சநீதிமன்றம் கீழமர்வு நீதி மன்ற மாஜிஸ்திரேட்டுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதை உறுதிப்படுத்த பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் கூறுகின்றனர் . இது முழுக்க முழுக்க சாயம் பூசப்பட்ட தீர்ப்பாக பலரும் பார்க்கின்றனர் .

சி பி சி 202 ஐ தவிர, இந்திய குற்றவியல் சட்டம் 499 மற்றும் பிரிவு 500 குறித்தும் பல்வேறு கருத்துக்கள் , வாதப்பிரதி வாதங்கள் வழக்கறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன.

அத்தகைய சாட்சி விசாரணையோ, பரந்துபட்ட விசாரணையோ இன்றி முறையான காரணம் ஏதும் அறிவிக்காமல், சம்மன் ஏதும் அனுப்பாமல் ‘விசாரணை’ நடத்தி இந்த “தீர்ப்பை” வழங்கியுள்ளது!

இது கூடவே, அவதூறு என்பது கிரிமினல் குற்றமா?  இல்லையா ? என்ற அடிப்படை கேள்வியும் உள்ளது!

சூரத் சீப் ஜுடீஷியல் மாஜிஸ்டிரேட் திரு. H.H. வர்மா, ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து அவர் செய்தது கிரிமினல் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டாண்டு சிறைத்தண்டனை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடன் புளகாங்கிதம் அடையும் பா ஜ க வினர் அவரை உடனடியாக  நாடாளுமன்ற அவையிலிருந்து அவரது உறுப்பினர் பதவியை பறித்து, வெளியேற்ற வேண்டும் என்று குரல்  எழுப்பி உள்ளனர். இந்த இரண்டாண்டு தண்டனை உறுதியானால், இனி ராகுலால் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலிலேயே நிற்க முடியாது. ஆக, இந்த வழக்கே ராகுலை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த செய்யும் சூழ்ச்சியாகவும் கருத இடமுண்டு.

ஏற்கனவே ராகுல்காந்தி, அதானி – மோடி உறவு பற்றி பல கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். அதற்கு  பதிலளிக்காமல் அவரது பேச்சுக்களை அவை குறிப்பிலிருந்து நீக்கினர், ராகுல் காந்தி லண்டன் பேச்சுக்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்., இந்திய நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசினார் என அவர் மீது அவதூறுகளை வீசி ராகுல் காந்தி கோரிக்கையை கிடப்பில் போட்டனர்.  இவை யாவற்றுக்கும் அதானி விவகாரத்தை யாரும் பேசிவிடக் கூடாது என்ற ஒரே நோக்கம் தான்.

மோடிக்கு எதிராக எவரும் வாயை திறக்கக் கூடாது , திறந்தால் விளைவு விபரீதமாகும்! என்பதை இந்த நாட்டு மக்களுக்கு எத்தனை முறை எச்சரிப்பது…?

ஆட்சியாளர்களின் நீளும் கரங்களும், வளையும் செங்கோலும்! 

ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கின் வரலாற்றை சற்று பாருங்கள்

கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகா மாநிலம் கோலார் தொகுதியில் உரையாற்றிய ராகுல் காந்தி, மோடி ஆட்சியின் அலங்கோலத்தை விமர்சிக்கும் பொழுது “எப்படி எல்லா திருடர்களுடனும்  மோடி என்ற பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது” என வியந்துள்ளார் . ஓடிப் போன வைர மோசடி வியாபாரி நிராவ் மோடி, ஐ பி எல் கிரிக்கெட் மோசடி பேர் வழி லலித் மோடி, ரபேல் விமான முறைகேட்டில் அம்பலப்பட்ட நரேந்திர மோடி ஆகியோரை குறித்தே ராகுல் காந்தி இவ்வாறு விமர்சனம் செய்தார்.

இந்த உரை ஏப்ரல் 13, 2019ல் நடந்தது. ஆனால் குஜராத்தை சார்ந்த முன்னாள் அமைச்சரும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆன பா ஜ க தலைவர் திரு. பூர்னேஷ் மோடி ராகுல் காந்தி மீது கிரிமினல் அவதூறு வழக்கு ஏப்ரல் 16 , 2019 அன்று தொடர்கிறார்.

வழக்கு விசாரணைக்கு வருகிறது, 2021ம் ஆண்டு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.  ராகுல் காந்தி சம்மனை ஏற்று ஜூன் மாதம் 24, 2021ம் ஆண்டு நீதி மன்றத்தில் ஆஜராகிறார் . அப்பொழுது தலைமை மாஜிஸ்திரேட்டாக இருந்தவர் திரு. ஏ.என். தவே ஆவார்.

அவர்முன் ஆஜரான ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தையும் அன்றே பதிவு செய்தார்.

மீண்டும் 2022ல் மார்ச் மாதம் ராகுல் காந்தி சூரத் நீதிமன்றம் வரவேண்டும் என்று திரு.பூர்னேஷ் மோடி கோரிய பொழுது, ‘’அது தேவையில்லாதது’’ என நீதிபதி அதற்கு அனுமதி மறுத்து விசாரணையை தொடங்கினார்.

இந்த விசித்திரமான வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக வழக்கை தொடுத்த திரு பூர்னேஷ் மோடியே வழக்கை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடுகிறார்.

வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க கோரி உயர்நீதி மன்றத்தை நாடிய ‘வாதி ‘ பூர்னேஷ் மோடி, அதில் வெற்றியும் பெறுகிறார் . ஆம், குஜராத் உயர்நீதி மன்றம் மார்ச் 7, 2022 அன்று வழக்கு விசாரணைக்கு தடை ஆணை பிறப்பித்தது!

இதற்கிடையில் எவ்வளவோ அரசியல் நிகழ்வுகள் கடந்த 11 மாதங்களில் இந்தியாவிலும், உலகத்திலும் நடந்தேறின.

இன்டன்பெர்க் ஆய்வறிக்கை வந்தது! ஜனவரி 24, 2023-ல், அதானி சாமராஜ்ஜியம் ஆட்டம் கண்டது, அதானியுடனான மோடியின் கள்ள உறவும் , மோடி அரசின் அதானி ஆதரவு செயல்களும் மக்கள் மனதில் பல கேள்விகளை கிளப்பின.

நாடாளுமன்றத்தில் மோடி – அதானி  உறவு பற்றி பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பினார் . மோடி அரசு ஓடி ஒளிய இடமில்லாததால் அம்பலப்பட்டு நின்றது. இது நடந்தது பிப்ரவரி 11 ந்தேதி நாடாளுமன்றத்தில் மோடி அரசை – அதன் அதானி ஆதரவு செயல்களை எதிர்த்து பேசிய ராகுலின் பேச்சு நாட்டை உலுக்கியது. மோடி அரசு பயத்திலும், சினத்திலும் நடுங்கத் தொடங்கியது.

நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து ராகுலின் பேச்சுக்களில் பல பகுதிகள் (அதானி மோடி பற்றி) நீக்கப்பட்டன. கேட்கப்பட்ட வினாக்களுக்கு அரசிடம் இருந்து பலனில்லை.

வாயை அடைக்க என்ன வழி?

11 மாதங்கள் தூங்கி கொண்டிருந்த அவதூறு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர முயற்சிகள் முடுக்கி விடப்படன. தடை கோரிய பா ஜ கட்சி எம் எல் ஏ. பூர்னேஷ் மோடியே மீண்டும் விசாரணையை துவக்க உயர்நீதி மன்றத்தில் மனு செய்தார்.

பிப்ரவரி 16ந்தேதி உயர்நீதி மன்றத்தில் ‘விசாசரணை தடை’ யை நீக்க கோரி பீர்னேஷ் மனு தாக்கல் செய்கிறார் . தடையை கோரியவரே தடையை நீக்க மனு செய்வதால், தடை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உயர்நீதி மன்றத்தால்.

விசாரணை மீண்டும் பிப்ரவரி 27,2023 அன்று கீழமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. ஆனால், இப்பொழுது நீதிபதி திரு. H.H. வர்மா என்ற புது நீதிபதி வழக்கை விசாரிக்கிறார்.

மார்ச் மாதம் 8ந்தேதி ராகுல் காந்தி தரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. குறிப்பிட்ட அந்த பேச்சு திரு. நரேந்திர மோடியை குறித்துதான் இருந்ததே தவிர, பூர்னேஷ் மோடி பற்றியதல்ல, எனவே அவர் பாதிக்கப்பட்டவராக கூறுவது தவறு என்று வாதிடப்பட்டது. மேலும் இந்த பேச்சு எந்த ஒரு சாதியை பற்றியோ, சமூகத்தை பற்றியோ அல்லது எதிர்த்தோ பேசிய பேச்சல்ல எனவே பூர்னேஷ் மோடி இது குறித்து வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என வாதிடப்பட்டதாக ‘ டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கை குறிப்பு கூறுகிறது. மோடி என்ற பெயருடையவர்களெல்லாம் ஒரே குழுவினர் அல்ல என்றும் வாதிட்டதாக தெரிகிறது.

ராகுலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டம்.

வாதப்பிரதி வாதங்கள் ஒரு வார காலத்தில் முடிந்தது, தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி திரு.வர்மா.  நேற்று வியாழக்கிழமை (23/03/2023) தீர்ப்பு வெளியானது. ராகுல் காந்தி குற்றமிழைத்துவிட்டார் எனவே அவர் குற்றவாளி எனத்தீர்ப்பளித்து அவருக்கு அதிக பட்ச தண்டனையாக இரண்டாண்டு சிறையும் , ரூ.15000/- அபராதமும் விதிக்கப்பட்டது.

அவதூறாகக் கூட கருத முடியாத ஒரு பேச்சை எப்படி கிரிமினல் குற்றமாக்க முடியும்?

அவதூறை கிரிமினல் குற்றமாக்குவது குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வேளையில் நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

நமது விசனமெல்லாம் வழக்குகள் ,நீதிமன்ற செயல்பாடு , அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்கள், இவையாவும் நடுநிலையில் இருக்கிறதா , இல்லையா என்பது பற்றித்தான்!

செஷன்ஸ் நீதிமன்றமோ, உயர்நீதி மன்றமோ ராகுல் காந்திக்கு ‘நியாயம்’ வழங்குமா  இல்லையா என்பது நமக்கு தெரியாது.

ஆளும் கட்சியினர் அதுவரை பொறுத்திருப்பாளர்களா என்பதும் நமக்கு உறுதியாக தெரியாது.

சபாநாயகர் ராகுலின் எம்.பி பதவியை பறிக்க நடவடிக்கை எடுப்பாரா அல்லது சில காலம் பொறுத்திருப்பாரா என்பதும் நமக்கு தெரியாது.

இந்த ‘அநீதி’ யை கண்டித்து எதிர்கட்சிகள் தங்களது ‘தலைக்கனத்தை’ கைவிட்டு ஓரணியில் திரள்வார்களா என்பதும் நமக்கு தெரியாது.

ஆனால், இந்த நாடு ஜனநாயகத்தின் பேரை உச்சரித்துக்கொண்டே, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகாரத்தை அரங்கேற்றுகிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time