பொதுத் துறை வங்கிகளை பலிகடா ஆக்குவதா..?

-சாவித்திரி கண்ணன்

தற்போது நமது நாட்டில் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் இரண்டும் உள்ளன! எந்த வங்கியில் தங்கள் பணத்தை போட்டு வைத்தால் பாதுகாப்பு என மக்கள் நினைக்கிறார்களோ.., அதில் போடுவதற்கான ஒரு வாய்ப்பை இல்லாமலாக்கி, ‘தனியார் வங்கிகள் ஒன்றே சாய்ஸ்’ என பாஜக அரசு பொதுத் துறை வங்கிகளை அழிப்பது சரியா..?

இது நாள் வரை சாதாரண பொது மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, பாங்கிலே நம்ம பணத்தை போட்டு வைத்தா பாதுகாப்பாக இருக்கும் என்பது தான்! அந்த ஒற்றை நம்பிக்கையையும் அழித்தொழிக்கும் வண்ணம் அரசு வங்கிகள் அனைத்தையுமே தனியார் மயமாக்குவது என்ற பாஜக அரசின் நோக்கம் மிக ஆபத்தானது.

வங்கிகளில் அரசு வைத்திருக்கும் பங்கின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4,80,207 கோடி. இந்த வங்கிகளைத் தனியார்மயமாக்கினால் இதற்கு என்ன பாதுகாப்பு?  மக்கள் வைத்திருக்கும் பணமோ இதைவிட பல மடங்காகும். ரிசர்வ் வங்கியின் உரிம விதிமுறைகளின்படி தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளை நடத்த அனுமதியில்லை. ஆனால், பாஜக அரசோ வங்கிகளிடம் கடன் வாங்கி ஏமாற்றிய தொழில் துறை நிறுவனங்களிடமே தற்போதுள்ள அரசு வங்கிகளை தாரை வார்க்கத் துடிக்கிறதே..? தெரிந்தே பாழுங் கிணற்றில் மக்களை தள்ளிவிடுவதா..?

தற்போது உள்ள தனியார் வங்கிகளுக்கோ அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கோ  தனியார் வங்கி ஆரம்பிக்கும் தகுதி கிடையாது. காரணம், வங்கிகளில் முதலீடு செய்யும் அளவு நிதி வசதி இவர்களிடம் கிடையாது. அப்படியிருக்க, ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் வங்கி மோசடி செய்தவனிடம், இருக்கிற பணத்தையும் சேர்த்து எடுத்துக்கோ ராஜா என்று தூக்கி கொடுப்பது அயோக்கியத்தனமின்றி வேறல்ல, அரசுத் துறை வங்கிகளை அழித்தொழித்தல் என்பதை ஒரு வேள்வியாகச் செய்து கொண்டிருக்கிறது பாஜக அரசு!

1935இல் தான் இந்திய ரிசர்வ் வங்கி உருவானது. 1947 காலகட்டம் வரை 900 தனியார் வங்கிகள் திவாலாகியுள்ளன. சுதந்திரத்திற்கு பிறகான 1947 முதல் 1969 வரை 665 தனியார்  வங்கிகள்  நஷ்டடைந்து கடையை மூடின!. இந்த அனைத்து வங்கிகளிலும் டெபாசிட் செய்த மக்கள், தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

1969 இல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகும், 36 தனியார் வங்கிகள் திவால் நிலைக்கு சென்றன. ஆனால், இவை மற்ற அரசு வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் மீட்கப்பட்டன. பாங்க் ஆப் தங்சாவூர் இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. பாங்க் ஆப் தமிழ்நாடு இந்தியன் ஒவர்சீஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த வரிசையில் கொச்சின் வங்கி, குளோபல் டிரஸ்ட் பேங்க் லிமிடெட் போன்ற பல முக்கிய வங்கிகளும் உண்டு! ஆக, தனியார் வங்கிகள் பாதுகாப்பற்றவை என்பது மீண்டும், மீண்டும் நம் அனுபவத்தில் பெற்ற உண்மை மட்டுமல்ல, அப்படி தனியார் வங்கிகள் திவாலாகும் போது அரசு வங்கிகளே தாங்கி பிடித்து அதன் வாடிக்கையாளர்களை காப்பாற்றி உள்ளன! சமீபத்தில் கூட யெஸ் வங்கி திவாலான போது ஸ்டேட் பாங்க் தான் உதவிக்கு வந்தது. இந்தச் சூழலில், அனைத்து அரசு வங்கிகளையும் இல்லாமல் செய்துவிட்டால், பாதிக்கபடும் மக்களை காப்பாற்றக் கூட வாய்ப்பற்ற நிலைமை தான் ஏற்படும்.

தனியார் வங்கிகள் திவாலானால் அவற்றில் மக்களின் சேமிப்பு அதிகபட்சமாக ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும். அரசு வங்கிகளில் மக்களின் வைப்புத்தொகை முழுமையாக பாதுகாக்கப்படும்.

1969-ல் 14  பெரிய வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டன! அப்போது வெறும் 8,187 கிளைகள் தாம் இருந்தன. ஆனால், தற்போதோ சுமார் 1,61,000 கிளைகளாக பெருகியுள்ளன! மக்களிடம் சேமிக்கும் பழக்கமும் வளர்ந்துள்ளது.

1990 களில் 10 புதிய தனியார் வங்கிகள், 2000 களில் 2 புதிய தனியார் வங்கிகள், 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி மளமளவென்று 22 புதிய தனியார் வங்கிகள் வந்துள்ளன. இந்த வங்கிகளில் வட்டியும் அதிகம்.  சாதாரண மக்கள் கடன் பெறுவதும் அரிது.

சரி, தற்போது தனியார் வங்கியும் உள்ளன! பொதுத் துறை வங்கிகளும் உள்ளன! மத்திய அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் பொதுத்துறை வங்கிகள் மட்டும் தானே நிறைவேற்றுகின்றன. ஜன்தன் கணக்கு, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு – இவற்றை எல்லாம் தனியார் வங்கிகள் சீண்டுவதே இல்லையே! இத்தனை சேவை செய்யும் பொதுத்துறை வங்கிகளை சாவை நோக்கி நகர்த்துவது ஒரு நல்ல அரசாங்கம் செய்யக் கூடிய காரியமா? என்று தான் நாம் கேட்கிறோம்.

 

இந்த பாஜக அரசு பதவி ஏற்றது தொடங்கி 28 பொதுத் துறை வங்கிகளை ‘இணைப்பு’ ( merger) என்ற பெயரில் 12 ஆக குறைத்தது. தற்போது அதையும் ஐந்தாகக் குறைக்க திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன! அதாவது வளர்ச்சி பாதையில், சேவை வழியில் உள்ள வங்கிகளை அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது பாஜக அரசு! அமெரிக்காவிலேயே தனியார் வங்கிகள் தடுமாறுகின்றன. இழுத்து மூடப்படுகின்றன! அப்படி இருக்க, ‘திருடனிடம் சாவியைக் கொடுப்பேன்’, ‘எரியிற கொள்ளியைக் கொண்டு தான் தலையை சொறிவேன்’ என அடங்கா திமிருடன் நாட்டை அழித்து வருகிறது பாஜக அரசு!

அதன் வெளிப்பாடாகத் தான் தற்போது பொதுத் துறை வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் அழிச்சாட்டியம் செய்து வருகிறது பாஜக அரசு. இதனால், வாடிக்கையாளர்களுக்கு இது நாள் வரை நல்ல சேவை செய்து வந்த பொதுத் துறை வங்கிகள் முழுச் சேவையையும் தர இயலாமல் திணறுகின்றன. இதன் மூலம் பொதுத் துறை வங்கிகளின் மீது அதிருப்தியையும், தனியார் வங்கிகளை நோக்கி மக்களை நகர்த்துவதையும் சாமார்த்தியமாகச் செய்கிறது பகல் கொள்ளை பாஜக அரசு!

‘இணைப்பு’ என்ற பெயரில் வங்கிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து நசுக்கி அழிக்காதே!

பொதுத் துறை வங்களிடம் இருக்கும் குறைபாடுகளை தவிர்க்க முடியும். சீர்படுத்த முடியும். தற்போது வாராக் கடன்கள் பொதுத் துறை வங்கிகளீல் அதிகரித்தற்கு காரணமே அதில் அரசியல் தலையீடுகள் தாம்! தவறான நபர்களுக்கு கடன் தர நேர்ந்த நிர்பந்தத்தின் மூலத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பொதுத் துறை வங்கிகளில் இருக்கும் நேர்மையற்ற அதிகாரிகளையும், வேலை செய்யாமல் உள்ளேயே அரசியல் லாபி செய்யும் ஊழியர்கள் ஒரு சிலரையும் களை எடுக்க வேண்டும். சின்சியராக, நேர்மையாக பணியாற்றுபவர்களை மதித்து ஊக்கபடுத்த வேண்டும்.

சாதாரண ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களின் விருப்பம் அரசின் பொதுத் துறை வங்கிகள் தாம்! தனியார் வங்கியா? பொதுத் துறை வங்கியா? என மக்களிடம் கருத்து கணிப்பு வேண்டுமானால் நடத்திப் பாருங்கள், உங்களுக்கு துணிவிருந்தால்! பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கும், நலனுக்கும் எதிரான, ‘வங்கிகள் அனைத்தும் தனியார் மயம்’ என்ற முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும். கட்சிப் பாகுபாடின்றி இதில் அனைவரும் பொது நலன் சார்ந்து ஒன்று சேர வேண்டும்.

தனியார் வங்கிகள் இருந்துவிட்டு போகட்டும். அரசு வங்கிகளும் அப்படியே தொடரட்டும். தங்கள் பணத்தை முதலீடு செய்வது எங்கே என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். நம் பணத்தை எடுத்து தனியாரிடம் தாரை வார்க்கத் துடிக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது? இருக்கிற பொதுத் துறை வங்கிகளை பொசுக்க துடிக்கும் பாஜக அரசின் ஆணவப் போக்கை நசுக்கி முறியடிக்க, ஒன்று திரண்டு போராடுவோம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time