பொய்,புரட்டு,வேஷம்… குஷ்புவின் புது அரசியல்!

சாவித்திரி கண்ணன்

குஷ்புவின் பொய்கள்…..ஒன்றா, இரண்டா?

பொய்,புரட்டு,வேஷம்…இதுவே அரசியல்!

பணம்,பதவி,அதிகாரம் இதுவே குறிக்கோள்…!

இதுவே இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குஷ்பு நமக்கு தந்துள்ள செய்தியாகும்!

’’நாட்டுக்கு நன்மை செய்வதற்குத் தான் கட்சியில் சேர்ந்துள்ளேன்…’’

’’எனக்கு ஐந்து நாட்கள் தான் சூட்டிங்…மற்ற இருபத்தி ஐந்து நாட்கள் என்னை ஏன் கூட்டத்திற்கு காங்கிரஸார் அழைக்கவில்லை…’’

’’இருக்கும் வரை இருந்த இடத்திற்கு விசுவாசமாக இருந்தேன்…’’

’’என்னைய அவங்க நடிகையா தான் பார்த்தாங்க…அரசியல்வாதியாகப் பார்க்கலை..இதுல இருந்தே அவங்க( காங்கிரஸ்) சிந்தனையை நீங்க புரிஞ்சிக்கலாம்…’’

’’என் பேச்சைக் கேட்க, எனக்காக மக்கள் கூட்டம் கூடும்’’

’’நான் பத்து வருஷமாக அரசியலில் இருக்கேன்…எங்கேயாவது என் கூட என் கணவரைப் பார்த்திருக்கிறீர்களா’’

’’நான் பாஜகவை மோடியைத் திட்டியதெல்லாம் மனசாட்சிக்கு விரோதமாக சொன்னவை’’

’’ஒவ்வொரு தெருவிலும் தாமரையை மலரவைக்க வேண்டும் இது தான் என் லட்சியம்!’’

’’நான் இப்போதும் பெரியாரிஸ்ட் தான்…’’

 அடேங்கப்பா…! ’வாயைத் திறந்தால் பொய்யைத் தவிர வேறொன்றும் பேசுவதில்லை… ’ என ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறார் குஷ்பு! போய்ச் சேர்ந்த இடம் அப்படி!

குஷ்பு என்றால் நறுமணம் என்று பொருள்! அய்யோ…கொடுமை…இவர் சொற்களில் வெளிப்படும் பொய்களின் நாற்றம் குடலை புரட்டுகிறது.

இது வரை அரசியலில் இருந்த பத்தாண்டு காலத்தில் நாட்டுக்குச் செய்த நன்மை என்ன…?  ஒன்றே ஒன்றைச் சொல்லுங்கள்..பார்ப்போம்.அதிகாரத்தால் மட்டுமே நன்மை செய்யமுடியும் என்பதில்லை! அதிகாரத்திற்கு வராமலே பல நன்மைகளைச் செய்த அரசியல்வாதிகளும் உண்டு! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், செல்வம் கூட இல்லாமல் அரசியலில் சேவை செய்தவர்கள் பலரைக் கண்ட நாடு தான் இது. அறிவால், தொண்டால், எண்ணத்தால், நல்ல சொற்களால்..! எந்த விதத்திலேனும் ஒரு மனிதன் பிறருக்கு பயன் தர வாழவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் எப்படியும் உதவலாம். ஆனால், குஷ்புவைப் போன்றவர்கள் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்த உடனேயே அதன் தலைமையோடு தங்களை நெருக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது அதிகார மையத்தோடு நெருக்கமாகிவிடுகிறார்கள்.ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் எந்த ஒரு சினிமா கலைஞராலும் நாடு பெற்ற இழப்புகள் தான் அதிகமே தவிர பலன்கள் என்று எதுவுமேயில்லை.

ஒரு எம்.ஆர்.ராதாவிற்கு கால் தூசு பெறுவீர்களா நீங்களெல்லாம்?

ஒரு இயக்கத்தில் சேர்ந்துவிட்டதும் உங்கள் ஒவ்வொரு அசைவிற்கும் பணம் எதிர்பார்க்கிறீர்கள் நீங்களெல்லாம்! ஆனால், எம்.ஆர்.ராதா பகுத்தறிவுக் கொள்கையை பிரச்சாரம் செய்த போதும் சரி, காமராஜருக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்த போதும் சரி அதை பணம் பெற்றுச் செய்தவரல்ல! அவர் மூட நம்பிக்கை ஒழிப்புக்காக கலைத்துறையிலும் சரி,பொது வெளியிலும் சரி போலி பாவனைகளின்றி இயங்கியவர். எம்ஜிஆருமே கூட  திமுகவிலிருந்த போது தன் சொந்த பணத்தை செலவழித்துச் சென்று தான் பிரச்சாரம் செய்தார். கட்சி பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பண நெருக்கடி என்று தெரிய வந்தால் உடனே பணம் கொடுத்து உதவுவார். அதனால் தான் அவர் தலைவரானார்.

தனக்கு சூட்டிங் இல்லாத நாட்களில் எல்லாம் கட்சி பிரச்சாரத்திற்கு தன்னை அழைத்திருக்க வேண்டும் என்கிறார் குஷ்பு. அதுவும் ஐந்து நாட்கள் தவிர 25 நாட்கள் தனக்கு வேலையில்லை என்கிறார். ஆனால், உண்மையில் பிரச்சாரத்திற்கு அழைத்தால் அவர் வைக்கும் முதல் நிபந்தனையே பணம் தான்! கராத்தே தியாகராஜன் குஷ்புவை பிரச்சாரத்திற்கு அழைத்த போது, ஒரு லட்சம் கேட்டார்.அதற்கு அவர், ‘’நீங்க கட்சிக்காரர் தானே…ஏதோ செலவுக்குக் கேட்டால் தரலாம் ஒரு லட்சம் தரமுடியாது’’ என்று சொல்லவில்லையா?

ராயபுரத்தில் மனோவிற்கு பிரச்சாரம் செய்ய ஓவ்வொரு முறையும் இரண்டு லட்சம் பெறவில்லையா?…கட்சியில் எல்லோராலும் அப்படிக் கொடுக்க முடியுமா? இதை மாதத்தின் 25 நாட்களும் நீங்கள் எதிர்பார்த்தால் எப்படி? கட்சிப் பணி என்பது பிரச்சாரம் மட்டுமல்ல, கட்சி அமைப்புகளைக் கட்டுவதும், கட்சி அமைப்புகளுடன் களப் பணி செய்வதும் தான்!

ஜெயலலிதா கட்சிக்கு வந்து அதைத் தான் செய்தார். அவர் கொள்கை பரப்பு செயலாளராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்ட போது,தினசரி கட்சி அலுவலகம் தவறாமல் வருவார். கட்சி அலுவலகத்தில் ஒவ்வொருவருடனும் நன்கு பேசி ஒவ்வொருவரின் பணிகளையும் புரிந்து கொண்டார். அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டு நிவர்த்தி செய்தார். ஒவ்வொரு மாவட்டம்,ஒன்றியம்,கிளை என அனைத்து மட்டத்திலும் இருந்து தலைமைக் கழகத்திற்கு வரும் கடிதங்களைப் படித்து  குறிப்பெடுத்து,அதற்கான தீர்வுகளைத் தேடினார்.அந்த கள வேலைகள் தான் அவர் ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை மீறி வளரவும் காரணமாயிற்று! மற்றவர்களின் நலனிலும் அக்கரை வைக்கும் போது தான் அங்கே ஒரு அரசியல் தலைவர் அடையாளப்படுகிறார்.

நீங்களெல்லாம் கொலு பொம்மைகளாக வலம் வரவே ஆசைப்படுகிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அசைவிற்கும் பணம் எதிர்பார்க்கிறீர்கள்…பிறகு எப்படி உங்களுக்கு மரியாதையை நீங்கள் எதிர்பார்க்கமுடியும்?. நீங்களே உங்களை நடிகையாக அடையாளப்படுத்தி தான் பணம் டிமாண்ட் பண்றீங்க…! அப்புறம் என்னை அரசியல்வாதியாக மதிக்கலை என்றால் எப்படி?

உங்களுக்காக ஒரே ஒரு பெருந்திரள் மக்கள் கூட்டம் கூடியது என்று ஒரு மீட்டிங் சொல்லுங்கள் பார்க்கலாம்…குஷ்புவிற்கென்று இல்லை..இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலும் சினிமா கலைஞர்களுக்கு கூட்டமே கூடுவதில்லை

ஒரு ஆர்பாட்டத்திற்கு உங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்திய மகிளா காங்கிரஸ் சகோதரி கூறியது என்னவென்றால், வழக்கமாக நாங்கள் ஆர்கனைஸ் செய்த போது வந்த இரு நூறு பேரைத் தவிர குஷ்பு மேடத்திற்காக ஒரு ஐம்பது பேர் கூட கூடுதலாக வரவில்லை. இத்தனைக்கும் நாங்கள் போஸ்டர் ,பேனர் எல்லாம் வைத்தோம். அவங்க வந்த நேரத்துல ரோட்டுல  போய்கிட்டிருந்த சில பேரு நின்னு கொஞ்ச நேரம் பார்த்திட்டுப் போயிட்டாங்க…அவ்வளவு தான்! இது தான் நிலவரம். ஆக, நீங்கள்ளாம் ஒரு கொலு பொம்மை! அதுவும் காஸ்டிலியான பொம்மை என்பதால் ஒரு சுமையாகிப் போயிடுறீங்க…! அதனால், எக்ஸ்ட்ரா லக்கேஜை எப்படா கழற்றிவிடலாம்…அப்படின்னு நினைக்க வைச்சுடுறீங்க…!

நீங்க பத்து வருடங்கள் அரசியலில் பவனி வந்த போது உங்களோடு எங்குமே வந்திராத சுந்தர்.சி ஏன் பாஜகவில் நீங்கள் சேரப் போகும் போது வந்தார்…? திமுகவில் சேரும் போது வரவில்லை. காங்கிரசில் சேரும் போது வரவில்லை. பாஜகவிற்கு உங்களை அழைத்துச் சென்றவரே அவர் தான் என்பதால் தான் அவர் வந்தார் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? கடந்த ஆறு மாதங்களாக பாஜகவில் நீங்கள் சேரவேண்டும் என்று சுந்தர்.சி தந்த நிர்ப்பந்தத்தால் உங்களுக்கும்,அவருக்கும் பலமுறை வாக்குவாதம் நடந்ததா இல்லையா? உங்கள் டிவிட்டர் எங்கும் பாஜகவிற்கும், சங்கிகள் என்று நீங்கள் கேலி செய்யும் சங்பரிவார்களுக்கு எதிராகவும் நீங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

@khushsundar

You see

ji is the only PM this country has ever seen. Before him india never had one. So we didn’t see specially made aircrafts for PM. And the minute you agree you are a sanghi, you will never see the problems of a farmer, thus #farmersbill2020 is alien to you.

Quote Tweet

அடிப்படையிலேயே பாஜக உங்களுக்கு ஒத்துவராத கட்சி என்பதால் என்னால் பாஜகவைச் சிந்தித்து கூட பார்க்கமுடியாது என பலமுறை சொல்லியுள்ளீர்கள்….! இதுவே உங்கள் இயல்பும் கூட! பிறகு பணம்,பதவி இதை நம்பித் தானே…சமரசத்திற்கு வந்தீர்கள்…!இதுவும் உங்கள் இயல்பு தான்!

இருக்குமிடத்திற்கு விசுவாசமாக இருந்தேன் என்கிறீர்கள்…

அப்படியானால், காங்கிரசில் இருக்கும் போது படு பிற்போக்குத் தனமான பாஜக அரசின் கல்விக் கொள்கையை ஆதரித்து பேசியது ஏன்? அமித்ஷா உடல் நலம் தேற வாழ்த்துச் சொன்னது என்னவாம்? காங்கிரசிலிருந்து கொண்டே பாஜகவிற்கு சிக்னல் காட்டியது தானே! அது தானே உங்களை இன்று அங்கே கொண்டு நிறுத்தியுள்ளது. மனசாட்சிக்கு விரோதமாகத் தான் நான் ஆறாம் தேதி கூட்டத்தில் பாஜகவையும்,மோடியையும் கடுமையாக பேசினேன் என்கிறீர்கள்…அப்படியானால், 19 வயது இளம் தலித் பெண் கொடூரமாகக் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு  கூட உங்களுக்கு கோபம் வராத அளவுக்கு பாஜகவில் சேரும் மோகம் உங்களை ஆட்டுவித்துள்ளது என புரிந்து கொள்ளலாமா?

ஒவ்வொரு தெருவிலும் தாமரையை மலர வைப்பதே என் நோக்கம் எனச் சொல்லியுள்ளீர்கள்…! ஆகத் தெருத்தெருவாக சுற்றி செய்யும் பிரச்சாரத்திற்கான ’அசைன்மெண்ட்’க்கு ரேட்  பேசி விட்டீர்கள் என்று தான் பொருள்! 25 நாட்களுக்குமா? அல்லது முப்பது நாட்களுக்குமா? நீங்க இப்ப எவ்வளவு கேட்டாலும் கொடுக்க முடிந்த கட்சி தான் அது!

கடைசியாக, ’’நான் இப்போதும் பெரியாரிஸ்ட்’’ என்றீர்கள்!

அப்படியானால், ஒரு பெரியாரிஸ்ட் கண்டிப்பாக எதிர்க்க வேண்டியது மதவாத அரசியலைத் தானே! ஒரு பெண்ணியவாதியாக நீங்கள் பெரியாரை ஏற்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனினும்,பெரியாரியவாதிகளை எப்படி ’டீல்’ பண்ணுவது என்பது பாஜகவிற்கு நன்கு தெரியும். நீங்கள் அங்கு ஒடுங்கத் தான் வேண்டும் இல்லையென்றால், ஒடுக்கப்படுவீர்கள்..!

பணம்,பதவி ஆகியவற்றுக்காக இதை ஏற்கும் மன நிலை கொண்டவர் தான் நீங்கள் என்றாலும், அதையும் மீறி, உங்கள் மனம் உங்களைக் குத்தி கிளறி ரணப்படுத்தாமல்விடாது. பணம் தற்போதைய உடனடிப் பிரச்சினைக்குத் தீர்வாகலாம்.ஆனால், அதற்காக நிரந்தர தலைவலியை வாங்கியுள்ளீர்கள் என்பது போகப்போகத் தான் தெரியவரும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time