சர்ச்சைக் கேள்விகள்! சாவித்திரி கண்ணன் பதில்கள்!

-சாவித்திரி கண்ணன்

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

சமீபத்தில் ‘ஸ்டிங்டிக் ஆபரேஷன்’ என்ற பெயரில் யூ டியூபர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அம்பலமாகி உள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

என்னை பொறுத்தவரை இது அதிர்ச்சியும் அல்ல, ஆச்சரியமும் அல்ல! அம்பலப்பட்டவர்கள் மிகக் குறைவு. அம்பலமாகாமல் உலா வருபவர்கள் மிக அதிகம். பல ஊடகப் பெருந்தலைகள் – வெளி உலகில் பெருமதிப்புடன் நடமாடும் பலர் –  இவ்விதம் சோரம் போனவர்களே!

பொதுவாக ஊடகத்துறை உள்ளீடின்றி உளுத்துக் கிடக்கிறது –  உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை !

எப்போது அரசியல் ஆளுமைகள் தங்கள் சொந்த பலத்தை நம்பாமல், ஊடக வெளிச்சத்தில் குளிர்காய விருப்பப்படுவது அதிகமானதோ, அப்போது முதல் ஊடகச் சீர்கேடுகளும் அதிகமாகி விட்டன. அந்த சீர்கேடுகள் அதிகாரபூர்வமாக நிறுவனமயப்படுத்தப்பட்டும் விட்டன. சுருக்கமாகச் சொன்னால், அரசியலின் கீழ்மை, ஊடகத் துறையிலும் பிரதிபலிக்கிறது.

ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர்

அண்ணாமலையின் தமிழக பாஜக தலைவர் பதவி ஆட்டம் காண்கிறதா என்ன..?

அண்ணாமலையின் அரசியல் பயணம் ஆட்டம் காண்கிறதா..? கொண்டாட்டம் தொடர்கிறதா…?  என்பது தமிழக ஆட்சியாளர்களின் பலம். பலவீனத்தில் தான் இருக்கிறது!

ஆருத்திரா கோல்டு விவகாரம் தொடங்கி பல விவகாரங்களில் அண்ணாமலையின் பொருளாதாரக் குற்றங்களை திமுகவினர் அம்பலப்படுத்தினாலே அண்ணாமலையின் ஆட்டம் முடிவுக்கு வரும். ஆனால், அத்தனை ஆதாரங்கள் கிடைத்தும், திமுக அரசு திரானியற்று கிடக்கிறதே..!

கு.தங்கவேல்,விருதாச்சலம்

அவதூறு வழக்கை குற்ற வழக்காக்கி ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்துள்ளது பாஜக அரசு? இது பெரிய அராஜகமாக இருக்கிறதே?

சோம்பிக் கிடந்த காங்கிரசை சுறுசுறுப்பாகிடவும்,

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும்

பாஜக அரசு செய்துள்ள பரோபகாரமாகவே இந்த நிகழ்வை நான் பார்க்கிறேன்.

ம.ஏழுமலை, திருத்துறைப் பூண்டி

அதிமுக ஆட்சியில் பிரச்சனை ஏதும் செய்யாத ஆளுநர்கள் திமுக ஆட்சியில் மட்டும் ஏன் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்கள்..?

அடிமையாக நடந்து கொள்வதில் எந்தவித ஒளியும் மறையும் இன்றி இருந்த அதிமுக ஆட்சியாளர்களை பாஜகவிற்கு பிடித்துப் போனது.

ஆனால், கொத்தடிமையாக நடந்து கொண்டாலுமே கூட, பொதுத் தளத்தில் எதிர்ப்பது போல் திமுக பாசாங்கு  செய்வதால், இவர்களிடம் பரிதாபப்படத் தேவையில்லை, ஆனவரை தலையில் ஏறி மிதிக்கலாம் என செயல்படுகிறார் பாஜகவின் ஏஜெண்டான கவர்னர்.

என்.அபிராமி, நங்கநல்லூர், சென்னை

திமுக அரசின் பெரும்பாலான மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுப்பதன் நோக்கம் என்ன..?

‘திமுக அரசு கையாளாகாத அரசு, எவ்வளவு ஏறி மிதித்தாலும், எதிர்க்கத் துணியாத அரசு’ என்பது அண்ணாமலைக்கு மட்டுமல்ல, ஆளுநருக்கும் நன்கு தெரிந்து விட்டது! ஆளுனரின் அராஜகப் போக்கை எதிர்ப்பதில் தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடங்கி வி.சி.க உள்ளிட்ட சிறிய கட்சிகள் வரை அனைத்து கட்சிகளுமே போராட்டக் களம் கண்ட  பிறகும், திமுகவுக்கு இன்று வரை ஆளுநரை எதிர்த்து ஒரு போராட்டம் கூட நடத்தும் துணிச்சல் கூட இல்லை. எனவே, ‘திமுக அரசு ஒரு கோழைத்தனமான அரசு’ என்பதை மக்கள் மனதில் பதிய வைக்கும் வரை, ஆளுநர் தன் அடாவடித்தனத்தை தொடர்வார்.

கோமதிநாயகம், கோவை

‘ஈடு இணையற்ற விளம்பர மோகி’ என்றால், உடனே உங்கள் ஞாபகத்திற்கு வருபவர் யார்?

ஜெ. ராதாகிருஷ்ணன் என்ற நிர்வாக திறமை இல்லாத அரைவேக்காட்டு ஐஏஎஸ் அதிகாரி தான்! அதே சமயம் எந்த துறைக்கு இவரை போட்டாலும், தட்டு முட்டு சாமான்களுக்கு இடையில் நுழைந்த பெருச்சாளியைப் போல தன் இருப்பை தெரியப்படுத்திய வண்ணம் இருப்பார். பத்திரிக்கை துறையில் இருக்கும் ‘பவர்ஃபுல் பார்ப்பன லாபி’க்கு இவரது ‘பப்ளிசிட்டி’யே சிறந்த உதாரணமாகும்.

கு.மஸ்தான், ராணிப்பேட்டை

மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் தகுதியுள்ள மகளிர்க்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் தரப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளாரரே..?

தமிழகத்தில் ஏற்கனவே விதவைப் பென்ஷன், முதியோர் பென்ஷன் பெறும் பெண்கள் உள்ளனர். இந்த மகளிர் உரிமைத் தொகை அவசியமில்லாதது மட்டுமல்ல, மிகச் சுமை தரக்கூடியதாகும்.

என்னதான் தகுதியான பெண்களுக்கு என்றாலும், வசதியுள்ள வீட்டுப் பெண்களும் இதில் ஆதாயம் பெற ஆசைப்படுவார்கள்! ஓட்டு அரசியலில், இந்த அத்துமீறல் தவிர்க்க முடியாமல் அங்கீகரிக்கப்பட்டுவிடும். இதில் இடைத்தரகர்களும் நுழைந்து ஆதாயம் காண்பர்.

எந்த ஒரு இலவசத்தையும் தரத் தொடங்கினால் நிறுத்தவும் முடியாது. இது தமிழக அரசுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரும் சுமையாக தான் போய் முடியும்! இதற்கான சுமையை தாங்க வரிகளை அதிகப்படுத்தி மக்களைத் தான் அரசு வதைக்கும்.

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

அதிமுகவால் கைவிடப்பட்ட ஒ.பி.எஸ்சின் எதிர்காலம் என்னவாகும்..?

அதிமுகவை பலவீனப்படுத்த பாஜகவிற்கும், திமுகவிற்கும் கிடைத்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம்  ஒ.பி.எஸ்! ஆகவே, இவர்களின் தேவையின் பொருட்டு ஓபிஎஸ்க்கு ஒரு முக்கியத்துவம் ஊடகத்தில் இருந்து கொண்டே இருக்கும்.

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time