சமகாலத்தின் மையப் பிரச்சினையான பெரு நிறுவனங்களின் கனிம வளக் கொள்ளை, தீவிரவாதம், பழங்குடிகளுக்கு எதிரான போலீஸ் அடக்குமுறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சினிமா தான் விடுதலை. வெற்றி மாறன் இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார்?
கதைக் களத்திற்கான தேர்வு, கதாபாத்திரங்களின் தேர்வு, காட்சிகளின் வழியே விரியும் சினிமா மொழி.. ஆகியவற்றில் வெற்றி மாறன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், கலையின் நோக்கம் தான் முக்கியமானது!
படத்தின் ஆரம்பமே தமிழர் படை வைத்த வெடி குண்டால் ரயில் கவிழ்ந்ததாகக் காட்டப்படுகிறது. அதுவும் இந்தக் காட்சி தேவையின்றி மிக நீளமாக குற்றுயிரும் குலை உயிருமாக அப்பாவி மக்கள் தீவிரவாதிகள் வைத்த வெடி குண்டால் கொல்லப்பட்டதாக அழுத்தமாக நிறுவுகிறது.
இதைத் தொடர்ந்த பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்கள் சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக எழுதுவதாக அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுகின்றனர். மிரட்டப்படுகின்றனர்.
உண்மையிலேயே அந்த தமிழர் படை என்பது எப்படி உருவானது. அந்த கனிம வளத்திற்கு எதிரான மக்களின் முதல் கட்ட சாத்வீக போராட்டம் எப்படி இருந்தது? பின்னர் அவர்கள் அரசை எதிர்க்கும் நிலைக்கு எப்படித் தள்ளப்பட்டனர்? என்ற விபரம் எதுவுமில்லை. மிக முக்கியமாக வரப் போகும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் அரசின் அராஜக நடவடிக்கைகள் தான் மலைவாழ் மக்கள் மத்தியில் புரட்சியாளர்கள் உருவாவதற்கு வழி ஏற்படுத்துகிறது என்ற அடிப்படை புரிதலை இந்தப் படம் உருவாக்கத் தவறிவிட்டது.
பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரக் கூடிய பெரும் தொழிற்சாலை மலை பிரதேசத்தில் நிறுவப்படும் போது அங்குள்ள இயற்கை வளமும், பழங்குடிகளின் வாழ்வாதாரமும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதைப் பற்றி படம் மக்களின் மொழியில் பேசவே இல்லை.
பழங்குடிகளுக்கும் இயற்கைக்குமான பிணைப்பு, வரவுள்ள அந்த நிறுவனத்தால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள்..போன்ற எதையுமே இயக்குனர் காட்சிபடுத்தவில்லை. தமிழ் தீவிரவாதிகளுக்கும், காவல்துறைக்குமான சாகஸச் சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்தியதிலும், காவல்துறையின் கொடூரங்களையும் மிக நீண்ட நேரம் காட்சிப் படுத்துவதில் காட்டும் ஆர்வத்தை கதையின் நோக்கத்தில் காட்டத் தவறிவிட்டார் வெற்றிமாறன். அதுவும் காவல்துறையின் கொடூர அத்துமீறல்களை காட்டும் போது, இளகிய மனம் படைத்த யாருக்கும் அதை பார்க்கும் சக்தி இருக்காது என்பது திண்ணம். என்னைப் பொறுத்த வரை இந்தக் காட்சிகள் அளவுக்கு மீறி காட்டப்படும் போது, திரையரங்கில் இருந்து நமக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்று கூட நினைக்கத் தோன்றியது.
தமிழகத்தில் தமிழரசன் போன்றோரால் நடத்தப்பட்ட தமிழ்த் தேசிய இயக்கம் கூட எந்த காலகட்டத்திலும் இத்தனை துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் கொண்டு செயல்படவில்லை.
‘போலீசாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக வாத்தியார் விஜய் சேதுபதி மக்களுக்கு பாதுகாப்பு தந்தார் என்பதால் மக்கள் ஆதரவை பெற்றார்’ என ஒற்றைக் காரணம் போதுமானதல்ல!
சூரியின் கதாபாத்திர வார்ப்பு உயிர்ப்பானது. மனித நேயமும், நேர்மையும் ஒருங்கே பெற்ற ஒரு இளைஞனின் பாத்திரத்தில் சூரி நடிக்கவில்லை, வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சாடிஸ்ட் மேலதிகாரியாக சேத்தன் பாத்திரமும் நிஜத்தில் பார்ப்பது போன்றே உள்ளது! அவருக்கும் மேலதிகாரியாக வரும் கெளவுதம் மேனன், தலைமை செயலாளர் ராஜிவ் மேனன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாகப் பொருந்தி போகின்றனர்.
விஜய் சேதுபதிக்கு போதுமான வாய்ப்பு தரப்படவில்லை. கிடைத்த வரையில் மிகச் சிறப்பாக தன் பங்களிப்பை தந்துள்ளார். கதாநாயகியாக வரும் பவானிஸ்ரீயும் இயல்பாக நடித்துள்ளார்.
ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த சினிமா எடுக்கப்பட்டு உள்ளது. ஜெயமோகனுக்கு தமிழ் மற்றும் இடதுசாரி போராளி குழுக்களை குறித்த பார்வை உண்மைக்கு நேர் எதிரானது, நேர்மையற்றது என்பது அனைவரும் அறிந்ததே! அந்த சிறுகதையை நான் படித்ததில்லை.
ஆனால், மலை கிராமங்களில் இயற்கைவளச் சுரண்டல் குறித்து சினிமா எடுக்க விரும்பி இருந்தால் வெற்றிமாறன் தேர்வு செய்திருக்க வேண்டியது ‘ஆற்றங்கரை ஓரம்’ என்ற நாவல் தான்! நர்மதை நதியில் மிகப் பெரிய அணை கட்டுவதற்காக அப்புறப்படுத்தப்படும் பழங்குடிகளின் வலிகளையும், அதற்காக பழங்குடிகளை இணைத்து மேதா பட்கர் நடத்திய போராட்டங்களையும் ரத்தமும், சதையுமாக எழுதி இருந்தார் வெ.இறையன்பு. இதற்காக ஒரு மாதகாலம் இறையன்பு அவர்களோடு தங்கி எழுதியதாக அறிந்தேன்.
Also read
இந்தியா முழுமையிலும் தற்போது பழங்குடி மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் முக்கிய பிரச்சினையை பேச முன்வந்துள்ளது இந்தச் சினிமா! யாரும் எடுக்கத் துணியாத கதைக் கருவை எடுத்தற்காக வெற்றி மாறனை பாராட்டலாம். ஆனால், சொல்ல வந்த கருத்தில் தெளிவோ, ஆழமோ இல்லை என்பது தான் கவலையளிக்கிறது. இரண்டாம் பாகத்தில் சொல்லப்படுமா.. பார்க்கலாம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
விடுதலை திரைப்படத்தில் ஒன்றும் இல்லை, அது ஒரு அபத்தம் என்று ஒரு புறமும் படம் ஆகா ஓகோ என்று இன்னொரு புறமும் விமர்சகர்கள் எழுதிக் கொண்டிருக்க தங்களுடைய பார்வை வேறு விதமாக உள்ளது. தங்களுடைய பார்வை நேர்மையானதாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.