‘டாஸ்மாக் பணம்’ அரசு கஜானாவுக்கு ‘அரோகரா’

டாஸ்மாக் மூலமாக அரசுக்கு கிடைத்து வருவது  முழுமையான தொகையல்ல! உண்மையில் அரசு கஜானவிற்கு வர வேண்டிய சில ஆயிரம் கோடிகள் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார மையத்தால் அபகரிக்கப்படுகிறது! நிதி அமைச்சர் பி.டி.ஆரே, ”டாஸ்மாக் பணம் அரசுக்கு முழுமையாக கிடைப்பதாக சொல்ல முடியாது” என்றதன் பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 27, 2023 அன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி  டாஸ்மாக் வருமானம் முழுமையாக அரசுக்கு வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன், ”முழுமையாக வருகிறதா..?  என்று கேட்டால் என்னால் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், கம்யூட்டர் சிஸ்டம் இல்லை, எல்லா கடைகளுக்கும் கம்யூட்டர் இருந்திருந்தால் – உற்பத்திக்கும், விற்பனைக்கு இடையே ஒரு பாட்டில் காணாமல் போகாத அளவுக்கு கம்யூட்டர் சிஸ்டம் இருந்திருந்தால் – என்னால் பதில் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.

ஏன் நவீன மல்டி கம்யூட்டர் சிஸ்டம் மூலம் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் கணினிமயப்படுத்தி கேஷ் கவுண்டர் – சேல்ஸ் கவுண்டர் என நிர்வாகத்தை முறைப்படுத்தி அனைத்து வாடிக்கையாளருக்கும் பார் கோடிங் பில்லிங் முறை நடைமுறைப்படுத்த தமிழக அரசு விரும்புவதில்லை? என்பதற்கான பதிலில் தான் வில்லங்கமே ஒளிந்துள்ளது.

உண்மையில் சி.ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் கேளராவை போல கம்யூட்டர் சிஸ்டம் வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், அதை பற்றிக் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை தமிழக ஆட்சியாளர்கள்.

நாளொன்றுக்கு சில லட்சங்கள் விற்பனையாகும் நிறுவனங்கள் கூட கணினிமயப்படுத்திய வியாபாரத்தை நடைமுறைப்படுத்தும் போது, தற்போது நாளொன்றுக்கு சுமார் 120 கோடி முதல் 150 கோடி வரை பணபரிவர்த்தனை நடக்கும் மிக பெரிய நிறுவனமான டாஸ்மாக்கில் கணினிமயப்படுத்துவதற்கு என்ன தயக்கம்?

இத்தனைக்கும் மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பம் குறித்தான குறிப்பில், ’தமிழ்நாடு அரசின்  டாஸ்மாக் மதுபாட்டில்கள் மற்றும் வெளிப்புற அட்டைப் பெட்டிகள் மீது பார் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்’ எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அமல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

மது உற்பத்தி ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு  டாஸ்மாக் கிடங்குக்கு வருகிறது. பிறகு கிடங்குகளிலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு வருகிறது. இந்த சரக்கு மேலாண்மையை எளிதாக்க வேண்டும் என்றால், கடைகளில் பில்லிங் செய்யணும்! விற்பனை மற்றும் சரக்கு இறுப்பு  ஆகியவை குறித்த சரியான கணக்கை  முறைப்படுத்தி வெளிப்படையாக பராமரிக்க கணினிமயப்படுத்துதல் மிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இதைச் செய்ய திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலுமே ஆர்வம் காட்டுவதில்லை.

காரணம், கணினிமயப்படுத்திவிட்டால், ‘கோல்மால்’ செய்ய முடியாது! இப்ப பில் போடாம ‘அன்அபிசியல் சேல்ஸ்’ செய்து, அந்த வருமானம் உயர்மட்டத்தில் பல தரப்பிலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ”சரியாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலான பார்களுக்கு விநியோகம் செய்யப்படும் சரக்குகளுக்கு பில்லே தருவதில்லை. 100 ரூபாய்க்கான சரக்கு விற்பனையில் 83 ரூபாய் அரசுக்கு வரியாக தர வேண்டும். பில் இல்லாமல் சரக்கை தந்து விற்கச் சொல்வதால், அந்த 83 ரூபாய் அரசுக்கு போகாது. இந்த வகையில் ஒவ்வொரு நாளுமே சில கோடிகள் வரி ஏய்ப்பால் ஆதாயம் அடைகின்றனர் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்” என்கிறார்கள் ஊழியர்கள்!

இந்தக் காரணத்திற்காகத் தான் டாஸ்மாக் நிர்வாகம் பார் கோடிங் முறைக்கு மாறாக, எலட்ரானிக் பில்லிங் முறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதுவும் கூட 2,500 கருவிகள் மட்டுமே வாங்கப்பட்டு அதுவும் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஆக, டாஸ்மாக் நிறுவனத்தில் மது விற்பனையை நவீனப்படுத்துவதற்கு எந்த கழக அரசும் முனைப்பு காட்டப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால், இந்த உண்மைகளை மறைத்து அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் கடைகளில் அதிகமாக விலையில் விற்பனை செய்பவர்கள் 1,952 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 5 கோடி அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

‘அடடா, உத்தமரான செந்தில் பாலாஜி உரிய விலைக்கு மேலாக விற்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கையை பாய்ச்சி உள்ளாராம்! அதில், அபராதம் 5 கோடி வசூல் ஆகியுள்ளதாம்’ சபாஷ்!

நம்ம கேள்வி என்னவென்றால், தமிழகத்தின் அனைத்து டாஸ்மாக்கிலும் விதிவிலக்கின்றி அதிக விலைக்கு தான் விற்கபப்டுகிறது எனும் போது, ஏன் 1,952 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதே! அப்படின்னா, இந்த நடவடிக்கைக்கு பிறகு தற்போது நியாய விலையில் விற்பனையாகிறதா? என்றால், அவரிடம் பதில் இருக்காது.

”ஏன் சரக்குகள் கூடுதல் விலைக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தினசரி விற்கிறீர்கள்?’’ என ஊழியர்களிடம் கேட்டால், ”டாஸ்மாக்கில் தலைமை அலுவலக பறக்கும்படை, மண்டல பறக்கும் படை  எல்லாம் உள்ளன! இவை எல்லாம் கையூட்டு வாங்கும் படைகளன்றி, தவறுகளை தட்டிக் கேட்கும் படைகள் அல்ல! உண்மையில் தமிழக டாஸ்மாக்கின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் கூட நிர்ணயிக்கப்பட்ட விலையில் மதுபானங்கள் நியாயமான விலைக்கு யாரும் வாங்கிவிட முடியாது என்பதே யாதார்த்தம்.” என்றனர்.

இது பற்றி நாம் மேலும் விசாரித்ததில், ”கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு  தாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம் என ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.  ”எங்கள் பணிக்கேற்ப நியாயமான, சட்டப்படியான ஊதியம் வழங்கப்படுவதில்லை.  டாஸ்மாக்கில் எந்தவொரு தவறு செய்தாலும், தவறுக்கேற்ப கொடுக்க வேண்டியதை மேலிடத்திற்கு கொடுத்துவிட்டால் தண்டனை கிடையாது. ஆகவே, ”தவறு செய்து ‘சம்திங்கை’ எங்களுக்கு தள்ளிவிடுங்கள்” என அதிகாரிகள் தான் எங்களை ஊக்கப்படுத்துகிறார்கள்!

அப்படி கூடுதல் விலைக்கு விற்பனையாகும் பணம் மாவட்ட மேலாளர், மண்டல மேலாளர், பறக்கும்படை அலுவலர், உள்ளூர் காவல்துறை, கருர் கம்பெனி என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள்  என பல நிலைகளில் மாமூலாக தரப்படுகிறது. இதை எழுதப்படாத விதியாகவே தற்போது நிலை நாட்டிவிட்டனர்.

குறிப்பிட்ட தேதியில் மாமூல் சேரவில்லையென்றால் அந்த கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும்.  இதற்கு மேல் கடையில் பாட்டில்கள் உடைந்து விடுவது, சரக்கு வண்டியில் திருடு போவது, சரக்கு இறக்குக் கூலி, மின்சார கட்டணத்தில் ஒரு பகுதி, கடை வாடகையில் ஒரு பகுதி, காலி அட்டை பெட்டி விற்பனையில் ஏற்படும் குறைவு என பலவிதமான ஏற்பாடுகள் இந்த கூடுதல் விலை விற்பனையில் உள்ளது என்பது அமைச்சருக்கே தெரியுமே’’ என்றனர்.

இது குறித்து சி.ஐ.டியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் திருச் செல்வம் அவர்களிடம் பேசிய போது,

‘பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அதை புடுங்கி தின்னானாம் அனுமாரு’ என்ற பழமொழி டாஸ்மாக்கிற்கு பொருந்தும். ஒரு அனுமாரு இல்ல… பல ரூபத்துல அனுமாருகள் ஊழியர்களிடம் பிடிங்கி தின்னு வருவதை அமைச்சர் செந்தில் பாலாஜி அறியாததல்ல !

கடந்த ஆறுமாத காலமாக டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பாட்டில்கள் அடிப்படையிலும், விற்பனை அடிப்படையிலும் செந்தில் பாலாஜியின் ஆட்கள்  கரூர் கம்பெனி என்ற பெயரில் தினசரி மாமூல் வசூலிக்கும் அட்டூழியத்தை நாங்கள் டிஜி.பி தொடங்கி முதல்வர் வரை புகார் தந்துவிட்டோம். ஆனால், எந்த அசைவுமில்லை.

அமைச்சருக்கு நேரம் எப்போது கிடைக்கும் என்று சொன்னால் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் டாஸ்மாக் செயல்பாடுகள்  குறித்து வெளிப்படையான விவாததிற்கு தொழிற்சங்கங்கள் தயார். அமைச்சர் தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time