பல்வீர்சிங்கை காப்பாற்ற தமிழக அரசு பகீரதம்!

-பீட்டர் துரைராஜ்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதல் தகவல் அறிக்கை போடுவதில் கூட விருப்பமில்லை. பாதிக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் பாதிப்புக்கு ஆளானவர்கள்  மன உளைச்சலையும், நெருக்கடிகளையும் சந்திக்கின்றனர். சார் ஆட்சியர் விசாரணை ஒரு ஜால்ஜாப்பே! -பியூசிஎல் குற்றச்சாட்டு.

”திருநெல்வேலி அம்பாசமுத்திர ‘பல்பிடுங்கி’ காவல் அதிகாரி பல்வீர்சிங் அம்பலப்பட்டது முதலாக தமிழக அரசு நிர்வாகம் நடந்து கொள்வது நம்பிக்கை அளிப்பதாக இல்லை. தமிழக அரசின் நடவடிக்கைகள் பாதிப்புக்கு உள்ளான எளிய மக்களுக்கு சிறிதளவும் நம்பிக்கை தருவதாக இல்லை” என விலாவாரியாக விளக்கினர் மக்கள் சிவில் உரிமை கழக முக்கியஸ்தர்கள்!

அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை தொடர்பாக,  இன்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் வி.சுரேஷ்,  பேரா.சங்கரலிங்கம், அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஜெயராமன், சுய ஆட்சி இயக்கத்தைச் சார்ந்த கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

” திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரம் காவல் சித்திரவதையில் ஈடுபட்ட உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மட்டுமே பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மற்ற காவலர்கள் இடை நீக்கம் செய்யப்படவில்லை.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, லலித குமாரி வழக்கில் 2014 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், நடந்துள்ள  குற்றங்களுக்காக (Cognizable offence) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இதற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும். சிறப்பு விசாரணைக் குழு (special investigation team)  மூலம்  ஒரு மூத்த காவல் அதிகாரியைக் கொண்டு சுயேச்சையான விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

“அம்பாசமுத்திரம் உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதும், அதோடு தொடர்புடைய காவலர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு (Special Investigation Team) மூலம் சுயேச்சையான விசாரணை நடைபெற வேண்டும்.  சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பல் பிடுங்கப்பட்ட, விதைப்பைகள் நசுக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும் நட்ட ஈடும் வழங்க வேண்டும், சாட்சிகளிடம் தாமதமின்றி நீதிமன்ற  வாக்குமூலம் பெற வேண்டும். இந்த சம்பவம் குறித்து நடைபெறும் சார் ஆட்சியர் விசாரணை கைவிடப்பட வேண்டும் ” என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியப் பொதுச் செயலாளர் வி.சுரேஷ் பேசுகையில் “பாதிக்கப்பட்ட சாட்சிகளிடமிருந்து  குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 164 ன் கீழ் தாமதமின்றி நீதிமன்ற சாட்சியத்தை பெற வேண்டும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர், தான் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அடிபட்டு விட்டதாக கூறி இருக்கிறார். இந்த நிலையில் சாட்சிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டியோ, பணம் கொடுத்து ஆசை காட்டியோ நடந்த சம்பவங்களை மறைக்க வாய்ப்புள்ளது. இதற்கு இடமளிக்காத வகையில் விசாரணையை தாமதமின்றி தொடங்க வேண்டும். இப்போது தமிழக அரசு அறிவித்துள்ள சார் ஆட்சியர் விசாரணை, நடந்த சம்பவங்களை மூடி மறைக்க முயல்வதாக இருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்படுபவர்களை திருநெல்வேலிக்கு அப்பால் உள்ள சிறைகளில் வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சாட்சிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் (witness protection program) பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். இத்தகைய சித்திரவதைகள் ஊடகத்தினால் தான் வெளி உலகுக்கு தெரிய வந்தது. அதே போல இந்த வழக்கின் விசாரணையையும் விழிப்போடு பார்க்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. இத்தகைய சம்பவம் நடந்தது ஒரு வாரத்திற்கு முன்பே வெளியில் தெரிந்தது. அப்போதே  காவல்துறை தானாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்திருக்க வேண்டும். இப்படி செய்யத் தவறியதன் மூலம் மேல் அதிகாரிகளும் தவறு இழைத்தவர்கள் ஆகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங்கிற்கு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் காவல்துறையில் நீடிப்பதை அனுமதிக்கக்  கூடாது ” என்றார் வி.சுரேஷ்.

“நடந்த சம்பவத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஸ்ரா கர்க், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஆகியோருக்கும் பங்கு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிய காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை !  சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டிய காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினருக்கு ஊர்வலம் போன்றவை மூலம் விழிப்புணர்வு  கொடுப்போம் என்கிறார். பல்வீர் சிங் உடன் சேர்ந்து, 2020 ஆம் ஆண்டில் படித்த சார் ஆட்சியரான முகமது சபீர் ஆலம் – ஐக் கொண்டு விசாரணை நடந்தால் எப்படி உண்மை வெளியே வரும் ! ஒரு மூத்த அதிகாரியைக் கூட தமிழக அரசு விசாரணைக்கு நியமிக்கவில்லை. ஏனெனில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு முதல் தகவல் அறிக்கை போடுவதில் விருப்பமில்லை. விசாரணைக்கு வந்த சாட்சிகளை விசாரிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் சாட்சிகள் தினமும் மன உளைச்சலையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர்” என்றார் அறப்போர் இயக்கத்தைச் சார்ந்த ஜெயராமன்.”

இன்றைய மனித உரிமை ஆணைய விசாரணைக்கு வந்தோர்!

மிகச் சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள், காதல் செய்தவர்களை, இளைஞராக உள்ள ஒரு காவல் அதிகாரி சித்திரவதை செய்திருக்கிறார் என்பது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. ராஜஸ்தானில் காவல்துறை ஆய்வாளராக இருக்கும் தனது மாமா ஒருவரை முன் மாதிரியாக மனதளவில் கொண்டு இத்தகைய குற்றங்களை பல்வீர் சிங் இழைத்துள்ளார். அவர் பணிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை; தகுதிகாண் பருவத்தைக் கூட முடிக்கவில்லை. கடந்த மூன்று மாத காலமாக தனது எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் இது போன்ற  குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தொடர்ந்து செய்து வத்திருக்கிறார். குறிப்பிட்ட சாதியினரை இப்படி சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார் என்றும் செய்திகள் வருகின்றன. எனவே Command responsibility என்பதன் அடிப்படையில் மேல் அதிகாரிகளுக்கும் இதில்  பொறுப்பு உண்டு.  குற்றமிழைத்தவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சித்திரவதைகள், காவல் அதிகாரிகளின் அடிமை மனோபாவத்தையே வெளிக் காட்டுகிறது” என்றார் விவசாயிகள் சங்கத் தலைவரும், சுய ஆட்சி இயக்கத்தைச் சார்ந்தவருமான கே.பாலகிருஷ்ணன்

 

“கையுறை அணிந்து, தினமும் தனது எல்லைக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் காவல்நிலையங்களில் சித்திரவதைகளை பல்வீர் சிங் செய்துள்ளார். எனவே  காவல்நிலைய சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். தாமதமின்றி சிறப்பு புலனாய்வுக்குழு மூலம்  விசாரணை நடத்தி,சம்மந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று முத்தாய்ப்பாக சொல்லி முடித்தார் வி.சுரேஷ்.

பல்வீர்சிங்கால் கொடுமைக்கு ஆளானவர்களில் பாதி பேர் மீது எந்த குற்ற வழக்கும் கிடையாது. சாதாரணமான பொது ஜனங்கள் தான்! அப்படி பாதிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று மனித உரிமை ஆணைய விசரணையில் தங்களை உண்மை சொல்லக் கூடாது என போலீஸ் மிரட்டுவதாகவும், அதனாலேயே பலர் தங்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை சொல்லத் தயங்கி பின்வாங்குவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தினமலர் போன்ற பாஜக ஆதரவு பத்திரிகைகள் பல்வீர் சிங் மிக நல்லவர் என்ற தோற்றத்தை கட்டமைத்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை.ஆனால், குற்றவாளிபல்வீர்சிங்கிற்கு ஆதரவாக போஸ்டர், பேனர் வைப்பதெல்லாம் கூட நடக்கின்றன! தமிழக அரசின் தடுமாற்றத்தையும், தயக்கத்தையும் ஆதிக்க சக்திகள் சாதகமாக எடுத்துக் கொண்டு களமாடுகின்றன.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time