கலைக் கோயிலாகவும், இந்தியாவின் கலைப் பொக்கிஷமாகவும் அடையாளம் காட்டப்பட்ட இடம் தான் கலாஷேத்திரா! நடந்துள்ள நிகழ்வுகளை எல்லாம் அவதானித்து, இந்த இளம் பெண்கள் இதயக் குமுறல்களை எல்லாம் கேட்கும் போது, கலையைக் கற்பதற்கு கற்பை இழக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியானதா..?
கலாஷேத்திராவைப் பற்றி கட்டமைக்கப்பட்ட புனித பிம்பங்கள் அனைத்தும் கலைந்து நொறுங்கியுள்ளது…!
பூக்களெல்லாம் சேர்ந்து புயலாக உருவானது போல, இந்த இளம் பெண்கள் கொந்தளித்து பொதுவெளிக்கு வந்து குமுறுகிறார்கள் என்றால், எத்தனை அழுத்தங்கள் ஏற்ப்பட்டிருக்கும்? எவ்வளவு வலியை பெற்று இருப்பார்கள்? அடங்கி கிடப்பதும், அடி பணிவதும் தவிர வேறென்ன செய்து விட முடியும் இவர்களால்? என்று நினைத்திருந்த கலாஷேத்திரா நிர்வாகம் சற்றே கதிகலங்கிப் போனது.
‘ஒரு உதவிப் பேராசிரியரின் அத்துமீறலால் ஒரு மாணவி கருவுற்று மருத்துவமனை சென்று கலைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது’ என்று கலாஷேத்திராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் என்பவர் டிவிட்டரில் பகிரங்கமாக போட்ட பிறகு தான், இது வெளி உலகிற்கு தெரிய வருகிறது.
ஆனால், அதற்குப் பிறகு நடைபெற்றவை யாவுமே அந்த நிறுவனத்தின் மீதான மரியாதையை மட்டுமல்ல, நம்பகத் தன்மையையே ஆட்டம் காண வைத்துவிட்டன!
டிவிட்டர் போட்டவரை அழித்துவிட வைத்தனர். மகளிர் ஆணையம் டிஜிபிக்கு அனுப்பிய புகாரை வாபஸ் வாங்கியது. புகார் கொடுத்த இரு மாணவிகளை மாற்றிப் பேச வைத்தனர். ஆனால், இவை எதுவும் செல்லுபடியாகவில்லை. அடுத்து வந்த நாட்களில் களத்திற்கு வந்துவிட்டனர் இளம் மாணவிகள்! அதிகார அழுத்தங்களை மீறி நாள்தோறும் சந்தித்த மன அழுத்தமும், அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும் அவர்களுக்கு போராடும் சக்தியைத் தந்தன.
ஆசிரியர் என்ற போர்வையில் காம சேட்டைகளை தந்து கொண்டிருந்த ஸ்ரீ ஹரிபத்மன், சாய், சஞ்சிதலால், ஸ்ரீநாத் என்ற நான்கு பொறுக்கிகளை பாதுகாக்க கலாஷேத்திராவின் ஒட்டுமொத்த மானமும் காற்றில் பறக்க விடப்பட்டன! ‘நிறுவனத்தின் மரியாதையே முக்கியம்’ என்ற நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இன்று வரை கைது செய்யவில்லை.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தப் பெண்கள் பல முறை புகார்கள் தந்தும் கலாஷேத்திராவின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி ஆகியோர் அந்தப் பெண்களை பாதுகாக்க முன்வரவில்லை. குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அழைத்து விசாரித்து கண்டிக்கவும் இல்லை. மாறாக, அந்தப் பெண்களை சீண்டிய ஆசிரியர்களையே பெண்கள் தின விருந்தினர்களாக அழைத்து கெளவுரவப்படுத்தி உள்ளனர். இது இந்த இயக்குனர்களுக்கும், இந்த பொறுக்கி ஆசிரியர்களுக்கும் ஏதோ மறைமுக கூட்டணி உள்ளது என்ற சந்தேகத்தை மாணவிகளிடம் ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக் குறிச்சி, வேங்கை வயல் அம்பாசமுத்திரம் என பல நிகழ்வுகளில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த மாதிரி, ”குற்றம் செய்தவர்கள் யாரானும் தண்டிக்கபடுவார்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட சபையில் தன் சம்பிரதாய பேச்சை பேசினார். ஆனால், எடுத்ததற்கெல்லாம் பொங்கும் அண்ணாமலையும், பாஜகவின் மற்ற தலைவர்களும் கலாஷேத்திரா விவகாரத்தில் கப்சிப்பாகிவிட்டனர்.
சென்னையின் மையப் பகுதியில் எந்த கல்வி நிறுவனத்திற்கு நூறு ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் உள்ளது..? எந்த வெளிப்படைத் தன்மையுமற்ற ரகசிய பிரதேசமாக ஒரு கலைக் கல்வி நிறுவனம் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்ட நோக்கம் தான் என்ன?
ஒன்றிய அரசின் மானியங்கள் பல நூறு கோடிகள் இங்கு கொட்டப்படுகின்றன. இவர்களின் மாணவ, மாணவிகள் அட்மிஷனிலோ சிலபஸிலோ, ஆசிரியர் நியமனங்களிலோ அரசாங்கம் தலையிட முடியாது! அப்படிப்பட்ட ஒரு தன்னாட்சி மட்டுமல்ல, தனித்துவமும் கொண்டதாக கலாசேத்திரா திகழ்கிறது. இதனால், இங்கே என்ன நடந்தாலும் அது குறித்து யாருக்கும் தெரியாது, தெரிய வந்தாலும் நடவடிக்கை இராது.
இங்கே கற்றுத் தரும் நாட்டிய வகைகளாகட்டும், இசை எனப்படும் வாய்ப்பாடு, வயலின், புல்லாங்குழல், மிருந்தங்கமாகட்டும் எளிய பாமர மக்களிடம் இருந்து திருடி எடுக்கப்பட்டவை! பாரம்பரியமாக – வழிவழியாக – வந்த மரபினரிடம் இருந்து எடுத்துக் கொண்டு மடைமாற்றம் செய்யப்பட்டவை!
ஆனால், இதற்கான மூல வேரை முற்றிலும் இல்லாது அழித்தொழித்து தாங்களே நாட்டிய கலையின் கலையின் பிதாமகர்கள் என தோற்றம் ஏற்படுத்திவிட்டனர். இதை பற்றி எவ்வளவோ, பேசியும் எழுதியும் இருக்கிறேன். எனினும் மிக சுருக்கமாக சொல்கிறேன்.
சதிர் என்பதாக பல நூற்றாண்டுகள் தேவதாசிகளால் வழிவழி மரபாக வளர்த்தெடுக்கப்பட்ட அற்புதமான நாட்டியக் கலையை தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்து ஒழித்தனர். ஜனநாயக ரீதியாக அதற்கு மாற்று ஏற்பாடு செய்து வளர்த்தெடுக்கத் திட்டமிடப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, அதை அடித்தட்டு மக்களிடம் இருந்து அடியோடு பெயர்த்து தங்கள் வசப்படுத்திக் கொண்டனர் ஆதிக்கசாதியினர்.
பார்ப்பனப் பெண்ணான ருக்மணியின் தந்தை அடையாறு தியாசிபிகள் சொசைட்டியில் வேலை பார்த்து வந்தார். அங்கே அன்னிபெசண்ட் அம்மையாரின் உதவியாளராக 42 வயது ஜார்ஜ் அருண்டேல் என்பவரை 16 வயது ருக்குமணி காதலித்ததாகவும், கைப்பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது! இது என்ன ஏற்பாடோ, இதன் உள்ளுக்குள் நாம் நுணுக்கமாக போக இந்தக் கட்டுரையில் இடமில்லை. ஆனால், இப்படி கிளைத்த உறவால் தான் தியாசிபிகள் சொசைட்டியின் தோட்டத்தில் உருவானது கலாஷேத்திரா! இன்றைக்கு 100 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தை உரிமையாக்கிக் கொண்ட பின்னணி பற்றி சொல்வதற்கும் இந்தக் கட்டுரை அனுமதிக்கவில்லை.
ருக்குமணி அருண்டேல் விவகாரத்திற்கு வருவோம். மைலாப்பூரில் அன்று கொடி கட்டிப் பறந்த கெளரி அம்மாளிடமும், பந்தா நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் தான் சதிர் கற்றார் ருக்குமணி. தான் கற்ற சதிராட்டத்திற்கு அகில இந்திய அங்கீகாரம் வேண்டியே அவர் ‘பரத நாட்டியம்’ என மாற்றிப் பெயரிட்டார்.
அன்றைய தினம் சதிராட்டத்தில் உச்சபட்ச திறமையாளராக மதிக்கப்பட்டவர் பாலசரஸ்வதி அம்மாள்! தேவதாசி மரபில் வந்தவர்! நான்கு வயது குழந்தை பருவத்திலேயே சதிர் பயின்றவர். அவரது ரத்ததிலும், சித்தத்திலும் நாட்டியக் கலை ஊறித் திளைத்து இருந்தது. கலைக்கெனவே தன்னை முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர் பாலசரஸ்வதி. இவரைக் குறித்து பிரபல இயக்குனர் சத்தியஜித் ராய் ஒரு டாக்குமெண்டரி எடுத்திருக்கிறார்! ”பால சரஸ்வதியின் நாட்டிய நுணுக்கத்தையும், நளினத்தையும் கண்ட பிறகு ருக்குமணி தேவியின் நாட்டியத்தை காண்பவர்கள் மயிலுக்கும், வான் கோழிக்கும் உள்ள வேற்றுமையை நிச்சயம் உணர்வார்கள்” என்று அன்றைய எழுத்தாளர் ஒருவர் எழுதி இருக்கிறார்.
தன்னால் பால சரஸ்வதியைப் போல நளினத்தையும், பாவத்தையும் காட்ட முடியாத ருக்குமணி தேவி, பாலசரஸ்வதியின் நாட்டியத்தில் உள்ள சிருங்கார ரசம் என்ற காதலின் உன்னதத்தை ”ஆபாசம்” என்றார். ”அந்த ஆபாசத்தை தவிர்த்து, மெருகேற்றப்பட்டதே பரதக் கலை” என்றார். இந்த வகையில் பாலசரஸ்வதி போன்ற மேதைகளையே மூலையில் உட்கார வைத்துவிட்டு, சதிராட்டத்தை பரதமாக்கி, பார்ப்பனப் பெண்களுக்கான கலையாக மாற்றிவிட்டார்! இவருக்குப் பிறகு வந்த பத்மா சுப்பிரமணியம் போன்றவர்கள் பரத நாட்டியத்தின் பிதாமகர் ‘பரதமுனி’ என்பதாக ஒரு கற்பனை கதாபாத்திரத்தையும் சிருஷ்டித்தார்!
முதலில், ”தாசிகளின் நாட்டியத்தை நாம் ஆடுவதா..?” என கல்கி போன்ற பார்ப்பன விமர்சகர்கள் பேசினாலும், காலப் போக்கில் அதற்கு கிடைத்த மவுசு காரணமாக அதை தமதாக்கிக் கொண்டனர். இசை மரபில் வந்த தேவதாசிகளையும், பாணர்களையும் அந்த மரபில் இருந்தே அப்புறப் படுத்திவிட்டனர். கலாஷேத்திராவிற்குள் எத்தனையோ பார்ப்பன மற்றும் மலையாளிகள் பெயர்களில் குடில்கள் உள்ளன. அதில் ஒரு குடில் கூட கெளரி அம்மாள் பெயரிலோ, மீனாட்சி சுந்தரம் பெயரிலோ இருக்காது.
அதனால் தான் இன்றைய கலாஷேத்திராவில் கற்பவர்களும் சரி, கற்றுத் தரும் ஆசிரியர்களும் சரி 90 சதவிகிதமானவர்கள் பார்ப்பனர்களாகவும், மலையாளிகளாகவும் உள்ளனர். இதற்கு வழங்கப்படும் நிதி, இவர்களின் செயல்திட்டங்கள்.. என எதையும் யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.
இந்த சூழலின் பின்புலத்தில் இருந்து இந்த விவகாரத்தை நாம் பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டு உள்ளது இளம் பெண்கள்! அதிலும் வீட்டின் எதிர்ப்பை மீறி தங்களின் கலை ஆர்வத்திற்காக இங்கே பயில வந்தவர்கள். இங்கே நடக்கும் பிரச்சினையை சொன்னால், தங்கள் வீட்டில் ”வேண்டாம் வீட்டுக்கு வா” என்று சொல்லிவிடுவார்களே…, என்ற அச்சத்தில் ஆனவரை அனுசரித்து போயுள்ளனர்.
மேலும், ‘இது போன்ற கலைகள் கற்றுத் தரும் குருவிடம் மிக்க பணிவை காட்ட வேண்டும். எதிர்த்து கேள்வி கேட்பதோ, மறுப்பதோ கூடாது’ எனவும் சொல்லப்படுவதால் அந்த சந்தர்ப்பத்தை இங்குள்ள ஆண் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவர்களோடு அனுசரித்து போக முடியாத நிலை உள்ள பெண்களை பணிய வைக்க பல்வேறு தண்டனைகள் தருவது, நல்ல வாய்ப்புகளை மறுப்பது, டம்மியாக நடத்துவது, அவமானப் படுத்துவது என்ற உத்தியைக் கையாண்டு, ‘என்னிடம் பணிந்தால் தான் உன்னுடைய நான்கு வருட கேரியரை நீ சிறப்பாக முடிக்க முடியும். அதற்கு பிறகு இரண்டாண்டு மாஸ்டர் டிகிரியானாலும் சரி, டாக்டரேட் வாங்கி பெரிய ஆளாக வேண்டும் என்றாலும் சரி, உன் குருவின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்’ என நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த நிர்பந்தங்களை இன்றைய இளம் பெண்கள் ஏற்க மறுத்துள்ளனர்.
தேசிய மகளிர் அணையத் தலைவி ரேகா சர்மா சரியாக விசாரணை நடத்தவில்லை என்பதை விட விரும்பவில்லை என்பது தான் அவரது நடத்தையின் மூலம் தெரிய வருகிறது. இந்த நிலையில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் விசாரித்துள்ளார்.
இந்தப் பொறுக்கி ஆசிரியர்கள் ஏதோ ஒரிரு பெண்களை அல்ல, நூற்றுக்கு மேற்பட்டோரிடம் தங்கள் வில்லங்கத்தை காட்டியுள்ளனர். அதுவும் நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக சீண்டியுள்ளனர். இவர்களை சீண்டலை மிகுந்த மன வேதனையுடன் அனுபவித்து படித்து வெளியேறிய பெண்களின் எண்ணிக்கை, அங்கே தற்போது போராடும் பெண்களைவிட அதிகம். இந்தப் பெண்களுக்கு இது வாழ்நாளெல்லாம் நினைக்கும் தோறும் வலிதரக் கூடியது. மனதில் நிற்கும் மாறாத வடு. அதுவும் ஒரு புகழ் பெற்ற கலை நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்ட புனித பிம்பத்தின் இருளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையாக மனதை குடைந்து கொண்டிருக்கும் துயரமே அது!
Also read
நாம் இங்கு குறிப்பிட வேண்டியது, தொடர்ச்சியாக பாலியல் சீண்டலை பருவ பெண்களிடம் செய்து கொண்டே இருப்பதன் மூலம் அதில் எதற்கும் ஈடு கொடுக்கக் கூடிய ஒரு சில பெண்களை கண்டடையும் முயற்சியா இது? என்ற சந்தேகம் வலுக்கிறது! ஆக, ‘காமஷேத்திராவின் தலைமை பொறுப்புக்கானவர்களை, கலாஷேத்திராவின் தலைமை பொறுப்பில் நியமித்துவிட்டார்களோ..’ என்று தான் எண்ண வேண்டியுள்ளது. இளம் மாணவிகளின் பாதிப்புக்கான தண்டனை இந்த நிர்வாகிகளுக்கு தரப்படுமா? என்பது தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
காலஷேஸ்த்ரா முழு வரலாறு ஒரு கட்டுரை வெளியிடவும்.
Very irresponsible article based on assumptions.
அருமையான கட்டுரை. அதேபோல் தேவரடியார்களாக இருந்தவர்கள் பிறகு தமிழரல்லாதவர்கள் ஆட்சியில் தேவதாசிகளாக மாற்றப்பட்டதையும் பதிவுசெய்திருக்கவேண்டும்.