வைக்கத்தில் பெரியாரின் பங்களிப்பு முக்கியமானதா?

-சாவித்திரி கண்ணன்

”வைக்கம் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமில்லை” என ஆர்.எஸ்.எஸ் தூதர்கள் அடிக்கடி பேசி வந்தனர். உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டு நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளன! வைக்கத்தில் பெரியாரின் உண்மையான பங்களிப்பு என்ன?

”வைக்கம் போராட்டத்திற்கும், பெரியாருக்கும் பெரிசா ஒன்னும் சம்பந்தமே இல்லை. அதில் கைதான பலரில் பெரியாரும் ஒருவர். அவ்வளவு தான். அக்காலத்திய நாளிதழ் ஆவணங்களில் அனேகமாக எங்குமே ஈ.வே.ராவின் பெயர் காணப்படவில்லை.. டி.கே. மாதவன் போன்றவர்களின் வரலாறுகளிலும், நினைவுகளிலும் கூட ஈ.வெ.ராவின் பெயர் தனியாக எடுத்துச் சொல்லப்படவில்லை. யங் இந்தியாவின் செய்திகளில் ஓரிடத்தில் கூட பெரியாரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.தமிழ்நாட்டிலே திராவிட அமைப்புகள் தான் தேவையில்லாமல் வைக்கம் வீரர் என பெரியாரை குறித்து கட்டுக் கதை பரப்பி வருகிறார்கள்…”

இப்படி அதிரடியாக பெரியார் குறித்து ஜெயமோகன் 2009 ஆம் ஆண்டு தொடங்கி பலவாறாக எழுதியும் பேசியும் வந்தார். இது தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ‘திராவிடத் துதிபாடிகள் சிலர் தேவையில்லாமல் பெரியாரை வைக்கம் வீரர் அப்படி, இப்படின்னும் பூதாகரப்படுத்திட்டாங்க போல’ என்று வெகுஜனபரப்பில் ஒர் அபிப்ராயமும் உருவானது.

எழுத்தாளர் ஜெயமோகன்

ஆனால், இது உண்மையா..? என்று அறிய புறப்பட்டு, பத்தாண்டு காலம் தீவிர ஆய்வு செய்து பெரியாருக்கும், வைக்கத்திற்கும் உள்ள உண்மையான உறவுகளை வெளிப்படுத்தி உள்ளார் பழ.அதியமான். இதில் பெரியாருக்கும், வைக்கம் போராட்டத்திற்குமான உறவுகளுக்கு சரித்திர நிகழ்வுகளும், ஆவணங்களுமே சாட்சியாகக் காட்டப்பட்டு உள்ளன. இந்த நூல் தற்போது மலையாளத்திலும் வந்துவிட்டது. மற்ற தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. ஒரு வகையில் ஜெயமோகன் ஏற்படுத்திய சீற்றத்தால் தான் இத்தனை வரலாற்று உண்மைகள் தோண்டி எடுக்கப்பட்டு மக்கள் கவனத்திற்கு வந்துள்ளன!

வரலாற்று ஆய்வாளர் பழ. அதியமான்

வைக்கம் போராட்டம் என்பது கேரளாவில் கோட்டையத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் இருந்த சிவன் கோவிலைச் சுற்றியிருந்த தெருவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடப்பதற்காக நடத்திய போராட்டமாகும். கோவிலுக்குள் விடாவிட்டாலும், கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடப்பதற்கு உரிமை கேட்டு நடத்தப்பட்ட போராட்டம்.

இந்தப் போராட்டத்தின் ஆரம்ப காலத் தலைவர்களான டி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோரைக் கைதுசெய்யப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

அதனால் சிறையில் இருந்து ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவமேனன் ஆகியோர் போராட்டத்திற்கு பொறுப்பு ஏற்று நடத்த வரும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் பெரியாருக்கு கடிதங்களைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

வைக்கம் போராட்டம் 1924 மார்ச் முப்பதாம் தேதி துவங்கியது. பெரியார்  ஏப்ரல் 13 ஆம் தேதி வைக்கம் போனார். அவர் அங்கே போய் இறங்கியதும் பெரியாரின் நண்பரான திருவிதாங்கூர் ராஜா அவருக்கு ராஜ வரவேற்பு கொடுத்த போது, அதை பெரியார் தவிர்த்து, ”நான் இங்கே வந்ததே உங்களை எதிர்த்து போராடத் தான்” எனக் கூறிவிடுகிறார்.

இந்த இடத்தில் ஜெயமோகன் எழுதி இருந்தது ஞாபகம் வருகிறது. அப்போது பெரியாருக்கு வயது 45 தான். தமிழ்நாட்டிலேயே அவர் பிரபலமில்லை. என்கிறார். தமிழக காங்கிரசின் தலைவர். கேரள தலைவர்களால் கடிதம் தந்து வரவழைக்கப்பட்டவர், மன்னரின் நண்பர் என்பது பிரபலத்திற்கு முக்கியமில்லையா?

முதல் கட்டமாக 15 நாள் தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராகப் பேசுகிறார் பெரியார். பிறகு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. நுழைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதனால், ஊருக்கு வருகிறார் பெரியார். பிறகு, மே மாதத்தில் மீண்டும் வைக்கத்திற்குப் திரும்புகிற பெரியார், இந்த முறை பெரியார் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் முடிந்த பிறகு மீண்டும் போராடச் செல்கிறார். மீண்டும் கைது செய்யப்பட்டு நான்கு மாத தண்டனை விதிக்கப்படுகிறது. இப்படியாக ஏழு முறை வைக்கத்திற்குச் சென்ற வகையில், 141 நாட்கள் சிறையிலும், போராட்ட களத்திலுமாக இருந்துள்ளார்.

சிறையில் இருந்த மற்ற தலைவர்களான கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் அனைவரும் அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால், பெரியார் அவ்வாறு நடத்தப்படவில்லை.காரணம், அவர் வெகு ஆவேசமான போராட்டக்காரராக களத்தில் விளங்கியதால் அரசாங்கம் பெரியாரை அதிகமாக தண்டிக்க விரும்பி ‘கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதி என அடையாளம் காட்டும் குல்லாய், கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட மரப்பட்டையுடன் பெரியாரை சிறையில் வைத்திருந்தனர். இது குறித்து பெரியார் சிறு முணுமுணுப்பு கூட காட்டாமல், அங்கிருந்த கொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட கைதிகளில் ஒருவராக கடுமையான வேலைகளை செய்தார்.

இது கேள்விப்பட்டு நெகிழ்ந்து ராஜாஜி, ‘தி இந்து’வில் பெரியாரை புகழ்ந்து எழுதியுள்ளார். ‘நவசக்தி’யில் திருவிக எழுதியுள்ளார். ‘யங் இந்தியா’வில் திருவிதாங்கூர் அரசாங்கம் பெரியார் உள்ளே நுழையக் கூடாது என விதித்திருந்த தடையை நீக்கியதைப் பாராட்டி காந்தி எழுதியுள்ளார். வைக்கம் தொடர்பாக ஆய்வு செய்த கேரள வரலாற்று ஆசிரியர்கள் யாருமே பெரியார் பெயரை தவிர்க்கவில்லை. காரணம், தன் மனைவி நாகம்மையுடன் கலந்து கொண்ட வகையில் குடும்பத்துடன் வெளிமாநிலத்திற்கு வந்து சிறைபட்டு போராடிய ஒரே தலைவர் பெரியார் தான்.

”பெரியாரின் பேச்சுக்கள் வைக்கம் சுற்றுவட்டாரத்தில் பாமர மக்களிடையே பெரும் எழுச்சியை உண்டாக்கி உள்ளன. போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு பெரியாரின் பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்தது…” என காவல்துறை ஆவணங்களில் எழுதப்பட்டு உள்ளது என்றால், இதைவிட வேறென்ன சொல்வது?

பல நேரங்களில் காந்தியே வைக்கம் போராட்டம் தொடர்பாக பெரியாருடன் கலந்து பேசியுள்ளார். வைக்கம் போராட்டத்தின் முடிவிலும் காந்தியுடன் இரண்டு நாட்கள் இருந்தார்! பெரியார், வைக்கம் போராட்டத்திற்கு நிதி உதவியும் தந்துள்ளார். தமிழகத்தில் இருந்து சுமார் 50 பேரையும் ஈடுபடுத்தி உள்ளார். பெரியாரைப் போலவே வைக்கம் போராட்டத்திற்காக பாடுபட்ட இரு தமிழக ஆளுமைகள் ஜார்ஜ் ஜோசப், கோவை அய்யாமுத்து ஆகியோரையும் நாம் நினைவில் வைத்து போற்ற வேண்டும்.

நன்றி, மக்கள் அதிகாரம்

உண்மையில் காந்தி கூட, வைக்கம் போராட்டத்தில் ஒரு வருடம் கழித்த களத்திற்கு வருகிறார். தூரத்தில் இருந்து ஆலோசனைகளை மட்டுமே தொடர்ந்து வழங்கி வந்தார். கடைசி பத்து நாட்கள் தான் களத்தில் இருந்தார்.

இவை எல்லாம் பீறிட்டு தற்போது வெளிப்பட்ட நிலையில், ”ஆர்.எஸ்.எஸ் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லிவிட்டேன்’’ என்றா சொல்ல முடியும் ஜெயமோகனால்?

திணறுகிறார். சமாளிக்கிறார்.

”ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தை ‘தொடங்கியதாக’ சொல்வது தவறு! வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈவேரா உரிமைகளை ‘வாங்கிக் கொடுத்ததாக’ எழுதப்பட்டது மிகையானது. வைக்கத்தில் போராட்டத்தை தலைமை தாங்க தலைவர்கள் இல்லை என்பதனால் ஈவேரா அழைக்கப்பட்டதாக  சொல்லப்படுவது தவறு. இவை ஈவேரா அவர்களின் பங்களிப்பை மிகையாக்கிப் பரப்பப்படும் பொய்கள். ஈ.வே.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கெடுத்தார், போராடினார். ஆனால் அவர் அதை தொடங்கவில்லை – நடத்தவில்லை – முடிக்கவில்லை. இதையே நான் சொன்னேன். இப்போதும் இதுவே உண்மை” என்கிறார்.

வைக்கத்தில் பெரியாருக்கு நினைவிடம் உருவாகிவிட்டது. சிலையும் வைத்துள்ளனர். தங்களுக்காக உண்மையாக பாடுபட்ட தலைவனை அந்த மண்ணும், மக்களும் மறக்கவில்லை என்பது தற்போதைய நூற்றாண்டு கொண்டாட்டங்களிலும் உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. உண்மையை ஒரு போதும் அழிக்க முடியாது. மறைக்கவும் முடியாது. தியாகத்தை கொச்சைபடுத்துவோர் தீயினும் கொடியோர் என்பதை நினைவில் கொள்வோம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time