வாவ்! மோடிக்கேற்ற ஜாடியாகிப் போன ஸ்டாலின்!

-சாவித்திரி கண்ணன்

பாஜக அரசு எள் என்றால், எண்ணெய்யாகி நிற்கிறது திமுக அரசு! ”இயற்கையை அழிக்கும் திட்டம் எதையும் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்” என சொல்லிக் கொண்டே மறைமுகமாக அனைத்துக்கும் ஆதரவு அளித்து வருகிறார் ஸ்டாலின்!  இந்த வகையில் டெல்டாவை தீர்த்துக் கட்டும் மத்திய அரசு திட்டங்கள் வேகம் பெறுகின்றன!

முதல்வர் ஸ்டாலின், விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன் அனைவரும் பொய் பேசுவதில் வித்தகர்களாக உள்ளனர்!

இன்றைய சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்; நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் நகலை மத்திய அமைச்சருக்கு வழங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினேன். நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. நானும் டெல்டாகாரன் தான், நிச்சயம் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டேன். என்கிறார்.

நவம்பர் மாதம் தொடங்கி இந்த நாசகார திட்டத்திற்கு படிப்படியான செயல்பாடுகள் அரங்கேறி வருகின்றன! இறுதியாக, மார்ச் 29 ந்தேதி மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கான அழைப்பாணையை பகிங்கப்படுத்திய பிறகு, ஆறு நாட்கள் அமைதி காத்துள்ளார் ஸ்டாலின். அனைத்து விவசாய அமைப்புகளும், கூட்டணி கட்சிகள் அனைவரும் கொந்தளித்து போராட்டத்தை அறிவித்த பிறகு, பிரதமருக்கு சம்பிரதாயமாக எதிர்ப்பு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் இரட்டை வேடம் குறித்து பல நேரங்களில் விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் சந்தேகம் எழுப்பிய போதும் கூட, தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ”ஆதாரம் இல்லாமல் விவசாயிகள் குற்றம் வருவதாக கூறப்பதை திரும்ப பெறவேண்டும்’’ என்றார்

இதனால் தான் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ‘’திட்டம் டெண்டர் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராட்டும் வரையிலும் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருந்ததை ஏற்க முடியாது.

தமிழ்நாடு ஆட்சி மீது  நம்பிக்கையின்மை  ஏற்படுகிற நிலை விவசாயிகள் மத்தியில் வந்திருக்கிறது. காரணம் வீராணம் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு 2017 அனுமதி கொடுத்து, 2021 வரையிலும் அதிமுக அரசு அனுமதி கொடுக்கவில்லை, 2022 திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்து அங்கு ஆய்வு பணிகள் துவங்கியது தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அதனை தொடர்ந்து வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டம் துவங்கி இருக்கிறதே இதனை தடுத்து நிறுத்த நாங்கள் போராடி தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது’’ என்று சொல்லி உள்ளார் பி.ஆர்.பாண்டியன். இதைவிடக் கடுமையாக பாமக தலைவர் அன்புமணியும் தமிழக அரசை சாடியுள்ளார்.

”தமிழ்நாட்டிலே என்ன தான் நடக்கின்றது? தமிழக அரசு எதுவுமே தெரியாத மாதிரி பாசாங்கு காட்டக் கூடாது. மாநில அரசின் ஒத்துழைப்பு இன்றி மத்திய அரசு இந்த நிலக்கரி டெண்டர் அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு மிக அரிதாகும்” என்கிறார்கள் விபரமானவர்கள்!

தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியது: “காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதி, இப்பகுதியில் நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வு மேற்கொண்டிருப்பது, அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பானது, முரணானது. காவிரி டெல்டாவில் அனைத்து நாட்களிலும் நெல், கரும்பு போன்ற பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிடுவதற்குச் சமமாகும்.

நடக்கும் சம்பவங்களை பார்த்தால், ‘தமிழக அரசின் மீதான விவசாயிகளின் நம்பிக்கை, ஒட்டு மொத்தமாக சிதைந்து விட்டது’ என்றே தோன்றுகிறது.

நிலக்கரிக்காக மத்திய அரசு விவசாயிகளை அழிப்பதற்கான தினவோடு இத்தகு திட்டங்களை அறிவிக்கும் போது தமிழ்நாடு அரசு மிக நயவஞ்சமாக மறைமுக ஒத்துழைப்பு நல்கி வருகிறது. என்பது தெளிவாகிறது

ஏனென்றால், தற்போது கொந்தளிப்பில் உள்ள டெல்டா நிலக்கரி சுரங்க திட்டங்களை பொறுத்த வரை கடந்த நவம்பர் 3 அன்று, இந்த நிலக்கரித் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட இருப்பதை ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இதில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில், 141 நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டிருந்தார். அப்போதே தமிழக அரசு பதறி தடுத்திருக்க வேண்டாமா? ஏன் செய்யவில்லை.

இந்த திட்டங்களின்படி, காவிரி படுகையில் ஒரு லட்சத்து 25,000 ஏக்கரில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைக்கப்படவுள்ளன. சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரு நியாயமான அரசாக தமிழக அரசு இருந்திருக்கும் பட்சத்தில் இந்த அனுமதியை மறுத்து இருக்கலாமே! இதற்கும் ஜால்ஜாப்பு சொல்கிறார்கள்!

இது ஆரம்பக்கட்ட ஆய்வு. ஆய்வின் முடிவில் அங்கு உண்மையிலேயே கனிமங்கள் இருப்பது தெரிய வந்தால் மாநில அரசிடம் விண்ணப்பம் செய்வார்கள். மாநில அரசு அனுமதி கொடுத்தால் மட்டுமே அங்கு சுரங்கம் அமைக்க முடியும். இது வீராணம் நிலக்கரி திட்டத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் வீராணம் நிலக்கரி திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நேற்று, ‘நிலக்கரி சுரங்கம் அமைக்கும் நிலத்தை லீசுக்கு எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசு கொடுத்தால் மட்டுமே உள்ளே சென்று சுரங்கம் தோண்டும் பணிகளைச் செய்ய முடியும். எனவே, விவசாயிகள் யாரும் கவலை அடைய வேண்டாம்’ எனச் சமாதானம் சொல்லப்படுகிறது.

இது எப்படி உள்ளதென்றால், ”நாங்கள் உங்களை தற்போதைக்கு அழித் தொழிக்கவில்லை. ஆனால், அப்படி அழித்தொழிக்கும் சாத்தியக் கூறுகளை மட்டுமே ஆராய்கிறோம்” என்பதாகத் தான் உள்ளது. அடுத்தகட்டமாக, ”ஆமாங்க அழித்தொழிப்பு அவசியம் என்று எங்க ஆராய்ச்சி சொல்லுதுங்க. எனவே, பிரச்சினை பண்ணாம ஒத்துழைப்பு நல்குங்க” என்பார்கள்!

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவரால் ஆரம்பக்கட்ட அனுமதி தரப்பட்டவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தற்போதும் கூட திருவாரூரில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தால் போடப்பட்ட குழாயில், 2021ம் ஆண்டு ஏற்பட்ட கசிவால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாயினர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி விவசாயிகள், மத்திய அரசு அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி  போராடினர். அதனால் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது..

ஆனால், தற்போது திமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களில் கைவிடப்பட்ட மீத்தேன் திட்டத்தையே ‘ஹைட்ரோ கார்பன்’ என்ற பெயரில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2020-ல், அதிமுக ஆட்சியில்பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா வேளாண் பகுதி அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் நிம்மதியானார்கள்.

ஆனால், திமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் நாசகார திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துக் கொண்டே இருந்தாலும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும், “விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் இங்கே அனுமதியில்லை” எனச் சொல்லி வந்தாலும், இங்கே எல்லாமே நடந்து கொண்டுள்ளன!

”மன்னார்குடி ஆர்டிஓ வழிகாட்டுதலோடு, பெரியகுடி எண்ணெய் கிணறு தொடர்பான கலந்தாலோசனைக் கூட்ட அறிவிப்பு தமிழக அரசின் ஒப்புதலின்றி, எப்படி வெளியானது”? என்ற கேள்வியை விவசாயிகள் பலமாக எழுப்புகிறார்கள்!

சென்ற ஆண்டு அதிரடியாக நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் பகுதியை, ‘பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக’ அறிவித்ததாக செய்தி வெளியானது. அதனை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராட்டம் நடத்திய பிறகு, வேறு வழியின்றி  ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு, “அவ்வாறு அறிவித்தது தவறானது” என திரும்பப் பெற்றார். ஐயோ பாவம்! ‘முதலமைச்சருக்கு தெரியாமல் எல்லாம் நடந்துவிடுகின்றன’ போலும்!

”காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்குமான முயற்சிகளை ஓஎன்ஜிசி எப்படி மேற்கொள்ள முடியும்?” என்ற கேள்வி அனைவர் மனதையும் உலுக்கி வருகின்றது.

என்.எல்.சி.விவகாரத்தில் என்ன நடந்தது? கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் ஏற்கனவே செயல்பட்டு சுற்றுச் சூழல் பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆனால், தற்போது விரிவுப்படுத்தப்பட உள்ள 3வது சுரங்கத்திற்காக, 12,125 ஏக்கர் உட்பட மொத்தம் 25,000 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் தாம் முழுமூச்சுடன் ஒத்துழைக்கின்றனர்.

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த இரட்டை வேட நாடகம் வெற்றிகரமாக நடக்க முடியும்?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time