தேச பாதுகாப்பு ‘பாச்சா’ இனி பலிக்காது!

-ச.அருணாசலம்

ஆனா, வூனா ‘தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ என்ற பெயரில் அரசியல் ரீதியாக விமர்சனம் வைப்பவர்களை அதிகார இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறது பாஜக அரசு. அதற்கு உச்ச நீதிமன்றமே ஓங்கி குட்டுவைத்துள்ளது கவனிக்கத்தக்கது. ராகுல்காந்தியை சிறைக்குள் தள்ளுவது யாருக்கு அழிவைத் தரும்…?

“அரசிற்கு எதிராக வெளியிடும் கருத்துக்கள் எல்லாம் நாட்டிற்கெதிரான கருத்துக்கள் அல்ல” என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை, ஆளுகின்ற அரசின் குறைபாடுகளை, அத்துமீறல்களை எதிர்ப்பது, எதிர்த்து குரல் கொடுப்பது நாட்டிற்கே எதிரான செயல் அல்ல, ஆளும்கட்சியின் அராஜகங்களை -ஜனநாயகவிரோத நடவடிக்கைகளை- எதிர்க்க முனைவது ஒருநாளும் ஜனநாயக விரோத செயல் அல்ல,’’ என்பதே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சமாகும் .

பல மொழிகளில் வெளியாகும் ‘மீடியா ஒன் ‘ என்ற டி.வி. சானலின் கேரள உரிமத்தை சென்ற ஆண்டு ஒன்றிய அரசு சட்டவிரோதமாக முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் மேற்கூறியவாறு தீர்ப்பளித்துள்ளது.

உறையிலிடப்பட்ட கடிதங்களை நீதிமன்றங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அரசு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை -தனிமனித சுதந்திரம், வாழ்வு மற்றும் தொழில் சார்ந்த உரிமைகளை- தட்டிப் பறிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிற்கு “குட்டு” வைத்துள்ளது.

உளவு அறிக்கைகள் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதல்ல, தேசப்பாதுகாப்பு என்ற காரணத்தை கூறி, இயற்கை நீதியின் அடிப்படை அம்சங்களை மறுதலிப்பதை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக கூறியுள்ளது.

உண்மையில் இந்த தீர்ப்பு ஒரு புதிய நம்பிக்கையை இந்திய அரசியலரங்கில் ஊட்டியுள்ளது .உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் அரசியல் மற்றும் சமூக ஆர்வலருமான திரு. பிரசாந்த பூஷனும் ‘துணிச்சலான தீர்ப்பு இது, இதைப்போன்றே மற்ற வழக்குகளிலும் உச்ச நீதி மன்றம் ஜனநாயகத்தை காக்க துணிந்து தீர்ப்புக்கள் எழுத வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘தேசத்திற்கு ஆபத்து’,

‘ஜனநாயகத்திற்கு ஆபத்து’,

‘அந்நிய சக்திகளின் சதி’,

‘பயங்கரவாதிகளின் சதி’

என்று பல்வேறு காரணங்களை கூறி சாமான்ய மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் நசுக்குகின்ற ஒன்றிய அரசு, எதிர்கட்சிகளின் செயல்பாட்டினையும் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கி வருவதை கடந்த எட்டு வருடங்களாக கண்டு வருகிறோம். தற்போதும் அதானியைக் காப்பாற்ற இதையே செய்கிறது.

ஒன்றுபட்ட எதிர்கட்சி எம்.பிக்களின் ஆவேசம்

ஜனநாயக அத்துமீறல்களைத் தட்டிக்கேட்க உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது கடந்த காலங்களில் குறிப்பாக 2014க்குப்பின் இந்திய மக்களின் அனுபவம் திருப்திகரமாக இல்லை என்ற நிலையை சற்றே மாற்றியுள்ளது இந்த தீர்ப்பு.

எதனால் இந்த மாற்றம்?

தேர்தல் ஆரம்பிக்கு முன்பே எதிர்கட்சிகளை நிர்மூலமாக்கி விட்டால் எதிர்ப்பார் யாருமின்றி வெற்றியை உறுதிப்படுத்தலாம் என்ற கணக்கில் ஆட்டம் போடும் பாரதீய ஜனதா கட்சி தலைமை தனது காய்களை திட்டமிட்டே நகர்த்துகிறது.

தமது சாம, பேத, தான, தண்டங்களை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், மோடி- அமித் ஷா கும்பலானது ஒடிசாவின் நவீன் பட்நாயக்கும், ஆந்திரத்து ஜகன் மோகன் ரெட்டியும் வாய்மூடி மௌனிகளாகிவிட்டது.  மாயாவதி, மம்தா மற்றும் அகிலேஷ் போன்றவர்களை முடக்கிவிட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் , தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பல்வேறு “வழக்குகளில் “மாட்டி மரணப்பிடி போட்டுள்ள மோடி அரசு எஞ்சியிருப்பது யாரென்று நோட்டம் விடுகிறது! ஸ்டாலின் வெளிப்படையாக பாஜக எதிர்ப்பை பேசினாலும், எல்லா வகையிலும் பாஜக அரசுக்கு மறைமுக ஒத்துழைப்பு வழங்குவதால் விட்டு வைத்துள்ளது.

நிதிஷ் குமார் என்ற பூனை எந்த நேரத்தில் எங்கே பாயும் என்பதை கணிக்க முடியாத மோடி ஷா கும்பல் எஞ்சியுள்ள ஒரே தேசிய தலைவரான ராகுல் காந்திக்கு குறி வைத்தது. அதுவும் ‘அதானியுடனான பாஜக அரசின் கள்ள உறவை அம்பலப்படுத்துகிறாரே…’ என்ற ஆத்திரம் வேறு சேர்ந்து கொண்டது!


இன்று மோடி-ஷா தலைமையிலான பா ஜ க என்பது, வாஜ்பாய்-அத்வானி கால கட்சியல்ல. மதவெறி ஊட்டப்பட்ட, வீண்பெருமையும் வெறுப்பும் ஒருசேர மண்டிக் கிடக்கும் மதுவை உண்ட மந்திகள் கூட்டமாக பகுத்தறிவற்ற பக்த கோடிகளாக  சங்கப் பரிவாரங்கள் உதவியால் பெருகியுள்ளது.

பொருளாதார சீரழிவோ, வாழ்வாதாரம் பறிபோகுதலோ ஒரு பொருட்டாக இந்த கூட்டத்திற்கு தோன்றாது. அவர்களது வாழ்விடம் சுடுகாடாக மாறினாலும், ஆளுவது காவிக்கொடியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற கூட்டம் தான்  இன்றைய பா ஜ க . மோடி-ஷா கும்பலின் பலம் ,  பலவீனம் எல்லாம் இந்த அடிப்படை கூட்டம் தான்.

இந்திய அரசியல் களம் அனைவருக்கும் பொதுவான ஒரு களமாக இல்லாமல் சுதந்திரமான கருத்துக்கள் மோதும் உயிருள்ள களமாக இல்லாமல் சூதும் வாதும் நிறைந்த இருண்ட கூடாரமாக மாறியுள்ளது. மதத்தை அரசியலில் நுழைத்து வெறுப்பை அறுவடை செய்யும் களமாகி விட்டது.  அதிகாரமும், பணமும் தன்னகத்தே கொண்ட ஆளும் கும்பல் எதிர்கட்சிகளை குழியில் தள்ளுவதையும், முதுகில் குத்துவதையும் வாடிக்கையாக மாற்றி, ‘எதிர்ப்பார் யாருமில்லை’ என்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறது.

இதுவரை ” ப்ப்பு” என்று கேலி பேசி ராகுல் காந்தியை எள்ளி நகையாடிய மோடி கும்பல் இன்று ராகுலைப் பார்த்து பயந்து நடுங்குகிறது. ‘ராகுல் ஒன்றுமறியாத முட்டாளல்ல’ என்பது ஒருபுறமிருக்க, அப்படியொரு பிம்பத்தை கோடி மீடியா மூலம் கட்டமைத்து பிரச்சாரம் செய்த பா ஜ க மக்களை ஏமாற்றியது.

பாரத் ஜோடோ யாத்திரை என்ற மாபெரும் நடைபயணத்தின் மூலம் இந்த மாய பிம்பங்களை சுக்குநூறாக கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி இன்று பாரதிய ஜனதா கட்சிக்கும் , மோடி -ஷா கும்பலுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.


நாடாளுமன்றத்தில் மோடியின் முகத்திரையை கிழித்து மோடி அதானி கள்ள உறவையும் மோடியின் கூடா நட்பையும் அம்பலப்படுத்திய ராகுலின் பேச்சு இந்தியாவில் உள்ள படித்த மக்களிடையே பெரும் சலசலப்பையும் பல கேள்விகளையும் எழுப்பியது.

மோசம் போனதை உணரத் தொடங்கிய இந்திய மக்கள் சுதாரிப்பதற்கு முன் நாம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆளும் கும்பல் திரைமறைவு வேலைகளை தொடங்கியது.

ஆர் எஸ் எஸ்ஸிற்கு எதிராகவும், இந்துத்துவா கொள்கைக்கு எதிராகவும் சமரசம் செய்யாத ஒரே தலைவராக விளங்கும் ராகுல் காந்தி இந்துத்வ கும்பலுக்கு பரம வைரியாக தோன்றியதில் வியப்பில்லை. மற்றவர்களை மிரட்டி, உருட்டி, சிறையிலடைத்து  அல்லது கையூட்டு மூலம் வீழ்த்தும் மோடி கும்பலின் கைவரிசை ராகுலிடம் பலிக்காது என்பதால்,

அவரது பேச்சை அவையிலிருந்து நீக்கியது, பேச சந்தர்ப்பம் மறுப்பது, அவரை தண்டனைக்குள்ளாக்குவது, தண்டிப்பது ஆகிய வேலைகள் ” சொல்லி வைத்தே” நடந்தேறின. அதற்குப் பின் அவையிலிருந்தே அப்புறப்படுத்துதல் தொடர்ந்தது, அடுத்த தேர்தலிலும் -அதாவது 2029 தேர்தலிலும் போட்டியிட தடைவிதிப்பதை நிறைவேற்றி கொண்டது ஆளும் மோடி கும்பல்.

வெற்றி பெற்றுவிட்டதாக நிம்மதி பெருமூச்சுவிட்டு தமக்கு தாமே முதுகில் தட்டிக்கொண்ட மோடிக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம், பதவி பறிப்பை எதிர்த்து ராகுலுக்கு பெருகும் ஆதரவை கண்டு கலக்கம் அடையத் தொடங்கி உள்ளது மோடி கும்பல்.

அதுவரை புதிய பிரதமர் என்ற கனவில் இருந்த ஒரு சில தலைவர்களும் தாங்கள் தூக்கம் கலைந்தவர்களாக, தாங்கள் பதவியில் இருப்பதை விட சிறையில் அல்லாமல் வெளியில் நடமாடுவது அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்தவர்களாக ராகுலுக்கு ஆதரவாக களம் கண்டுள்ளனர்.

இந்த அரிய ஒற்றுமை மோடிக்கு தலைவலியை கொடுக்க தொடங்கியுள்ளது,
எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. இந்த அரிய ஒற்றுமை நீதித்துறை நிமிர்ந்து நிற்க உதவியது என்பதில் ஐயமில்லை. 2024க்குப் பின் ஜனநாயகம் இந்த நாட்டில் தொடர நீதி துறையின் பங்கு மிக மிக அவசியமாகிறது. 2014க்குப்பின் வாங்கிய அடிகளை, பட்ட இழுக்குகளை, துடைத்து, ஏறி மிதிக்க எண்ணும் ஆளும் கும்பலை எதிர்கொள்ள நீதி துறைக்கு ‘இது’ தேவைப்படுகிறது எனலாம்.


இந்த ஒற்றுமை இந்திய மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் அதே வேளையில்காங்கிரஸ் தானாகவே பா ஜ க வை வீழ்த்த முடியும் என்ற மனப்பால் குடிக்க கூடாது. ஒற்றுமை இல்லையெனில் ஒவ்வொரு தலைவரும் சிறைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை.

தனி ஆவர்த்தனம் பாடும் மாநில கட்சிகள் பெரிய அண்ணன் போல நடக்காதீர்கள் என காங்கிரசை பார்த்து கூறும் அதே வேளையில் அந்த அறிவுறையை  பின்பற்றி அந்தந்த மாநிலங்களில் உள்ள பிற கட்சிகளிடம் அவ்வாறு நடக்காமல் இருந்தால் அது அனைவருக்கும் நல்லது.

ராஜஸ்தான்,குஜராத்,மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசம், கோவா, கர்நாடகம், அசாம்,உத்தராகண்ட், ஹரியானா ஆகிய பத்து மாநிலங்களில் பாஜ க வை எதிர்கொள்வது காங்கிரஸ் கட்சிதான். இந்த மாநிலங்களின் 200 நாடாளுமன்ற தொகுதிகளையும் வென்றெடுக்க தனது முழு பலத்தை காங்கிரஸ் பிரயோகிக்க வேண்டும் . ஏனைய மாநிலங்களில் கணிசமான வாக்குகள் பரவலாக காங்கிரசு கட்சிக்கு இருந்தாலும் அதை ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஒருமுனைப்படுத்த ஏனைய கட்சிகளுடன் காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும் .

மாநில கட்சிகளும் “கெத்து ” காட்டுவதை விட்டுவிட்டு ஒற்றுமையை பேணினால் தன்மானத்தை காப்பாற்றலாம், எதேச்சதிகாரத்தை வீழ்த்தலாம்!

மோடிக்கு தான் அதிகாரத்தில் இல்லாவிட்டால் தனது “தலை” தப்பாது , உப்பு தின்றவன் கண்டிப்பாக “தண்ணீர்” குடித்தே ஆகவேண்டும் என்ற உண்மை புரிந்தாலும், தன் வலிமை ராகுலை சிறையில் அடைத்தால் பெருகுமா அல்லது வெளியில் விட்டால் பெருகுமா என்று முடிவெடுக்க இயலாமல் தவிப்பது தெரிகிறது.

அமைதியான ஆட்சி மாற்றம் என்பதும் ஒரு பகற் கனவாக மாறக்கூடாது என்ற எண்ணத்தில் எதிர்கட்சிகள் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது.

ஆட்சியை தக்க வைக்க எந்த நிலைக்கும் செல்ல பாஜக தயாராகி கொண்டிருக்கிறது. ஜனநாயகம் வெற்றி பெற தான் எந்த விலையும் கொடுக்க தயார் என ராகுல் சூளுரைத்துள்ள வேளையில், சரியான கொள்கை முடிவுகளுடன் எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன் “களம்” இறங்கினால் விடியல் வரும்.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time