ஆளுநர் ரவிக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழகம்!

- சாவித்திரி கண்ணன்

சதா சர்வகாலமும் சனாதனக் கருத்தைப் பேசி, சர்ச்சை செய்யும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.ரவிக்கு எதிராக தற்போது தமிழகமே போர்க் கோலம் பூண்டுள்ளது. தமிழகம் எங்கும் ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள் ..! தற்போதைய பேச்சுக்கான ரியாக்‌ஷன்களைப் பார்த்தால்.., அவரை ‘பேக் அப்’ பண்ணி விரட்டியடிக்கும் காலம் நெருங்குகிறதோ..!

இது நாள் வரை ஆளுனருக்கு எதிராக போராடத் தயங்கிய திமுகவே தன் தயக்கத்தை உடைத்து தைரியமாக கூட்டணிக் கட்சிகளை அணிதிரட்டி வரும் ஏப்ரல் 12 அன்று ஆளுனர் மாளிகை முன் போராட்டக் களம் காண்கிறது. இதில் அனைத்து திமுக கூட்டணி கட்சிகளும் ஒன்றுபட்டு களம் காண்கின்றன. ஆளுனர் மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதைப் பார்க்கும் போது இஷ்டத்திற்கு எதையாவது உளறி வைத்துவிட்டு, ஆளுனரே உதறல் எடுத்தவராகத் தான் பயந்து கிடக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் தற்போது ஒட்டு மொத்த தமிழக மக்களாலும் அதிகம் வெறுக்கப்படும் நபராக ஆளுனர் ஆர்.என்.ரவி உள்ளார்.

 

ஸ்டெர்லைட்டால் தூத்துகுடி எவ்வளவு வாழ முடியாத நரகமா போயிடுச்சுன்னு ஒரு முறை ‘விசிட்’ அடித்து மக்கள் கிட்ட பேசி இருந்தால் கூட, உண்மையை தெரிஞ்சுக்கலாமே!

காற்றே நச்சானது! மக்கள் சுவாசப் பிரச்சினைகளால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தார்கள்! நுரையீரல் பிரச்சினைகளால், கேன்சரால், ரத்தக் கொதிப்பால், நரம்புமண்டல பிரச்சினைகளால் அவதிப்பட்டவர்களும், அகால மரணத்தை தழுவியர்களும் கணக்கில் அடங்காது!

பயிர்கள் எல்லாம் கருகின! தண்ணீரோ குடிக்கத் தகுதி இல்லாமல் போயிற்று!

‘உயிர்வாழத் தகுதியற்ற சுற்றுச் சூழலை உருவாக்கும் ஒரு நச்சு ஆலையால் எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அது தேவையில்லை’ என்பது தான் மக்கள் அனுபவம். அந்தச் சூழலில் வாழும் யாருமே இந்த முடிவைத் தான் எடுக்க முடியும். தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் மக்கள் போராடினார்கள்!

ஆனால், தங்கள் சொந்த மக்களுக்கே எதிராக’ மத்திய அரசாங்கமே கார்பரேட் கம்பெனியின் காவலராக மாறிற்று! வாழும் உரிமைக்காக போராடிய மக்களுக்கு சாவை பரிசாக அளித்தது.

‘ஆன்லைன் ரம்மி தடை மசோதா’வை ஆளுநர் ஓப்புதல் வழங்காமல் மீண்டும், மீண்டும் இழுத்தடிக்கிறார்!

”அந்த ஆன்லைன் நிறுவன முதலாளிகளே அவரை நேரடியாக சந்தித்து பேசினாங்களே! அவங்ககிட்ட துட்டு வாங்கிட்டு தான் 42 பேர் செத்த நிலையிலும், அசைந்து கொடுக்காமல் வாங்கின காசுக்கு விசுவாசம் காட்டறாரா ஆளுனர்?” என மக்கள் திருப்பி கேட்க எவ்வளவு நேரமாகும்.

நீட் விவகாரத்திலும் மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ”தனியார் மருத்துவ கல்லூரிகள் கிட்ட எவ்வளவு வாங்கினன்னு சொல்லுய்யா ஆர்.என்.ரவி?”ன்னு கேட்க மக்களுக்கு எவ்வளவு நேரமாகும்..?

’ஆளுநரே வெளியேறு’ என்ற போராட்டம்.

எங்கேயோ பொறந்து வளர்ந்து மக்கள் வரிப்பணத்துல ஐ.பி.எஸ் ஆபிசராகி, ஓய்வு பெற்று அமைதியாக வாழ்க்கையை கழிக்கும் எத்தனையோ உத்தமர்கள் உள்ள இந்த நாட்டில் பாஜக விசுவாசியாக அரசியலில் நுழைந்து, அதற்கு பரிசாக ஆளுனர் பதவி பெற்று, தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்தும் ஆளுனர், பேசக் கூடாத பேச்சுக்களை பேசிக்கொண்டு, சொல்லத் தகாத பழிகளை மக்கள் மீது சுமத்திக் கொண்டு, யாருடைய கைக்கூலியாக செயல்படுகிறார்..?  என்று தமிழக மக்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனரே!

மதிமுக தலைவர் வைகோ; 

”ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும்” என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடியவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே, ”ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான்” என்று தீர்ப்பளித்துவிட்டன. இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுனரைக் கண்டித்து காங்கிரசார் நடத்திய போராட்டம்

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்;

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஒரு விசித்திரமான, வித்தியாசமான வரையறையை அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால், ‘மசோதா இறந்துவிட்டது என்று அர்த்தம்’ என்று அவர் கூறியுள்ளார்.

உண்மையில், சரியான காரணமின்றி ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்திவைத்தால் ‘நாடாளுமன்ற ஜனநாயகம் இறந்துவிட்டது’ என்று அர்த்தம். திருப்பி அனுப்பப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆளுநர் வெறும் அரசியலமைப்புச் சட்ட அதிகாரி. அவர் ஒரு குறியீட்டுத் தலைவர். அவருக்கான அதிகாரங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான விஷயங்களில் அவருக்கு அதிகாரம் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட ஆளுநர் கடமைப்பட்டுள்ளார். ஆனால், பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தை மீறி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்;

எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதுடன், நியாயப்படுத்த முயல்வது மிகமிக மோசமான முன்னுதாரணம். சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் வகையில், ஆளுநர் பேசி வருவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.

ஆளுநருக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

அதிமுக தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி;

மக்களின் உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை சொல்வது அழகல்ல. ஆட்சியாளர்கள், மக்களின் உணர்வுகளையும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு முடிந்த நிகழ்வு குறித்து அவர் கருத்து சொல்வது என்பது சற்று வேதனையாக உள்ளது. (பரவாயில்லையே, அதிமுக என்ற பாஜகவிற்கு பயந்தாங்கோலி கட்சி கூட மக்களுக்காக சற்றே வேதனைப்பட்டுள்ளது).

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்;

ஆளுநர் ஆர்.என்.ரவி நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மேலும், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை என்பதிலிருந்து, ”அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட கூடாது” என்பதே அர்த்தம் என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இக்கருத்துக்கள் அரசியல் சாசன வரம்புகளை மீறிய அடாவடித்தனமானது. அவர் உடனே பதவியை ராஜீனாமா செய்துவிட்டு, தமிழகத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்;

மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை.எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மக்களின் மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, ”வெளிநாட்டினர் தூண்டுதலில் நடைபெற்ற போராட்டம்” என்று ஆளுநர் கூறியிருப்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

போராடிய மக்களை, தியாகம் செய்த மக்களை அவமானப்படுத்தும், செயலில் ஆளுநர் ஈடுபட்டுள்ளார். ‘ஆளுநர் ஓர் பொறுப்பற்ற மனிதர்’ என்பது வெளிப்படையாகியுள்ளது. அத்துமீறி செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்து பல மாதங்களாகிவிட்டது. ஆளுநரின் அத்துமீறிய செயலுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து வெளியேற்றிட வேண்டும்.

ஆளுநருக்கு எதிராக மக்கள் நீதி மையத்தினர் போராட்டம்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்;

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் மக்கள் போராட்டம், அரசியல் கட்சி தலையீடு இல்லாமல் மக்களே வெகுண்டெழுந்து தங்கள் உடல் நலன், பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி இறுதியாக ஒரு உச்சத்தை தொடுமளவிற்கான போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில், அரச பயங்கரவாத ஒடுக்கு முறையால் 15 பேர் பலியாகும் நிலை ஏற்பட்டது. இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருக்கிறார். இதில் அயல்நாட்டு சதிகள் இருப்பதாகவும், பணம் வந்ததாகவும் அபாண்டமான வதந்தி பரப்புகிறார். அதிகாரத்தில் இருப்பதால் வாய்க்கு வந்ததை பேசக் கூடாது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்;

‘வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக’ தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத் திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை உமிழ்ந்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை இழிவுப்படுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் மரபியல் குணங்களாக வாய்க்கப் பெற்ற தொல் தேசிய இனத்தின் மக்களான தமிழர்களை பணத்தை வாங்கிக் கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்தியிருப்பது அபத்தத்தின் உச்சமாகும்’’

இந்த வரிசையில் இன்னும் பல அரசியல் மற்றும் அரசியல் சாராத இயக்கங்களும், அதன் தலைவர்களும் ஆளுனர் ரவியைக் கடுமையாக கண்டித்து அறிக்கை தந்துள்ளனர். வருங்காலத்தில் ஆளுனருக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

”ஸ்டெர்லைட் பிரச்சினையில் வெளிநாட்டு பணம் பெற்று மக்கள் போராடினார்கள்’ என்ற ஆளுநரின் கருத்துக்கு என்ன பதில்?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒ.பி.எஸ் மட்டும் தான், மாறாத பாஜக விசுவாசத்துடன் ‘’நோ கமெண்ட்ஸ்’’ எனக் கூறிவிட்டார்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time