உலக அளவில் டிஜிட்டல் ஊடக சவால்களை அதிகமாக சந்திப்பது நாம் தான்! உலகில் வேறெந்த நாடுகளையும் விட, இந்தியாவில் தான் இணைய சேவை அதிகமாக முடக்கப்படுகின்றன! இணையதளத்தில் 70,000 செய்தியை அகற்றியுள்ளனர். என்ன காரணம்? யார் சொன்னார்கள் எதுவும் தெரிவதில்லை. இந்த சர்வாதிகாரத்தின் பின்னணி என்ன..?
பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் சமூக ஊடகங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து சென்னையில் தமிழ் ஊடகப்பேரவை நிகழ்வில் பேசினார். ‘உலகிலேயே அதிக அளவில் இணைய சேவை இந்தியாவில்தான் முடக்கப்படுகிறது. உள்துறையா, தகவல் தொழில்நுட்பத்துறையா என யார் இந்த முடிவை எடுத்தார்கள் ? எதனால் எழுத்துக்கள் நீக்கப்பட்டன? என்ற எந்த விவரமும் நமக்குத் தெரியாது. தகவல் நமக்கு கிடைப்பதில் பாரபட்சம் நிலவுகிறது. டிஜிட்டல் யுகம், பொதுமக்களை அதிகாரப்படுத்தவில்லை” என்று அவர் கவலை தெரிவித்தார்.
அவுட் லுக், பிசினஸ் லைன், சன் தொலைக்காட்சி, தி இந்து போன்ற ஊடகங்களில் பணி புரிந்தவர் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன். சுமார் 40 ஆண்டு ஊடக அனுபவஸ்தரான இவர் சக ஊடகத் துறை நண்பர்களிடையே பேசியதாவது;
“நான் 1983 ல் இந்த துறைக்கு வந்த காலங்களில், அச்சு ஊடகங்களுக்கு 70 சத வருமானம் விளம்பரம் மூலமாக கிடைத்தது. அப்போது அச்சு ஊடகங்கள் இலாபம் தருபவையாக இருந்தன. நாளிதழ்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் (deadline) என்ற நேரவரையறை இருந்தது. எனவே பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தவுடன் பேசப்பட்டவை குறித்த தகவல்களை விவாதிக்கவும், சரிபார்க்கவும் நேரம் இருந்தது. ஆனால் இணைய இதழ்களுக்கு நேர எல்லை (deadline) தொடர்ச்சியாக இருப்பதால், தகவல்கள் சரிபார்க்கப்படாமல் கொடுக்கப்படுகின்றன. அச்சு ஊடகங்களில் செய்தி சேகரிக்கச் செல்லும் போது புகைப்படக்காரர், நிருபர் என இருவர் செல்லுவர். தமக்குள் அவர்கள் பேசிக்கொள்வர். ஆனால் இணைய இதழ்களில் பலவேலை (multi tasking) என்று சொல்லி, அதுதான் திறமை என நம்ப வைக்கப்பட்டு பணியாட்கள் குறைக்கப்படுகின்றனர். இக்காலங்களில் பத்திரிகை ஆசிரியர் என்பவர் மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அச்சு ஊடகங்களில் நாற்பது சத செலவு செய்திக்காக செலவிடப்பட்டு வந்தது. நெல்சன் மண்டேலா பதவியேற்ற போது இந்து நாளிதழ் ஒரு சிறப்புச் செய்தியாளரை தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியது. அப்போது தி இந்து நாளிதழில் வெளிநாடுகளில் செய்தி சேகரிக்க 22 செய்தியாளர்கள் இருந்தனர் ஆனால், இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர். 1998 பிறகு தொழிலாளர் துறை தொடர்பான போராட்டங்கள்,சிக்கல் குறித்து செய்தி சேகரித்து எழுத ஒரு பத்திரிகையாளர் இல்லை. எனக்குப் பிறகு தி இந்துவில் Reader’s editor பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்திய விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினை குறித்து தொடர்ந்து எழுதி வந்த சாய்நாத்திற்கு பிறகு Rural affairs editor இடம் காலியாக உள்ளது. எல்லா அச்சு ஊடகங்களிலும் இதுதான் நிலைமை.
தற்போது விளையாட்டு துறைக்கு என செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் ஊடகங்களில் இல்லை. அதற்கு மாற்றாக விளையாட்டு வீரர்களை வைத்து பேச வைக்கின்றனர். அவர் கிரிகெட் வாரியத்தில் ( BCCI) தணிக்கை குழுவில் இருப்பார் அல்லது மைதானக் குழுவில் (Pitch Committee) யில் உறுப்பினராக இருப்பார். இப்படிப்பட்ட நபர்களுக்கு முரண்பட்ட நலன்கள் (conflict of interest) இருக்கும். எனவே சரிவர செய்தி வராது. வெளிநாட்டு பிரச்சினை என்றால், மேனாள் தூதர்களை அழைத்துப் பேச வைக்கின்றனர். பொருளாதாரம் என்றால் மேனாள் வங்கித் தலைவர்களை பேச வைக்கின்றனர். ஏனென்றால் பொருளாதாரம் குறித்த செய்தியாளர் இல்லை. வெளிப்படுத்தும் உரிமை (Right to expression), கேட்கும் உரிமை (Right to listen) இல்லை. இந்தக் காலத்தில் செய்திக்கு செலவழிப்பது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில்நுட்பங்களுக்கு செலவழிப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மூலம் வரும் வருமானத்தில் 85 சதவீதமானது கூகுள், முகநூல், டிவிட்டர் போன்ற சிலிகான் கம்பெனிகளே எடுத்துக் கொள்கின்றன. மீதமிருக்கும் 15 சதம்தான் 180 மொழிகளில் இருக்கும் இணைய இதழ்கள் வருமானமாகப் பெறுகின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கப்பட்டபோது நான்கு மாதங்களாக இணையசேவை முடக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போதெல்லாம் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துண்டிக்கப்பட்டது. மாவட்டவாரியாக இணைய சேவையை துண்டிக்க முடிகிறது.
உலகிலேயே அதிக அளவு இணைய சேவையை துண்டித்த நாடு இந்தியாதான். நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதை, அரசு நினைத்தால் மற்றவர்களை படிக்க முடியாமல் தடுக்க முடியும். இது எனக்கு பயமாக இருக்கிறது. அப்படியானால் தனி நபர் கருத்துரிமைக்கு என்ன ஆவது?
அனல் மின்சாரம், நீர் மின்சாரம், காற்று மின்சாரம் என அனைத்தையும் மின்கம்பியானது பாகுபாடின்றி கடத்தும். ஆனால், டிஜிட்டல் யுகத்தில் இணையதள வசதி அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைப்பதில்லை. உதாரணமாக, டிஜிடல் பரிவர்த்தனையை வசதியானவர்கள் ஆதரிக்கிறார்கள். கூகுளில் தேடினால், அதனை ஆதரிப்பவர்களின் கருத்துதான் முதலில் வரும். அதை எதிர்க்கும் ஜெயரஞ்சன், ரித்திகா கேரா போன்றோரின் கருத்து ஆறாவது அல்லது ஏழாவது பக்கத்தில் வரும். அதுவரை நமக்கு பொறுமையும், நேரமும் இருக்காது.
அச்சு ஊடகத்தில் நாம் தேடிப் படிக்க முடியும். நமது கருத்துப் பத்திரிகை (உதாரணமாக முரசொலி, தீக்கதிர்) என தேர்ந்தெடுத்து படிக்க முடியும். அதனால்தான் காந்தி தனியாக பத்திரிகை ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டில் அரசியல் கட்சிகள் தங்களுக்கான பத்திரிகைகளை நடத்தின.
அச்சு ஊடகத்தில் இப்போது இலாபம் கிடைப்பதில்லை. அதை முதலாளிகள் விரும்பவும் இல்லை. ஏனெனில், மற்றவர்கள் அதில் வராமல் பயப்பட வைக்கிறார்கள்! காப்பரேட் முதலாளிகள் அச்சு ஊடகங்களை நட்டப்படுத்துங்கள் என்கிறார்கள். அது ரிலையன்ஸ், ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு அம்பானி, அதானி போன்றவர்களுக்கு நல்லது.
களத்திற்குச் சென்று நிலைமைகளை சொல்லுவதற்குப் பதிலாக, ஸ்டுடியோவில் அமர்ந்து விவாதிப்பது என வந்து விட்டது. புல்மாவா தாக்குதலில் என்ன நடந்தது என்ற விவரங்கள் தெரிவதற்கு முன்பாகவே அது சரியா தவறா என்ற விவாதங்களில் நாம் இறங்கி விட்டோம். அப்படியானால் நாம் மக்களை எப்படி தெளிவுபடுத்த முடியும்.
பொதுமக்கள் தொலைபேசிக்கு, இணைய சேவைக்கு, பணம் செலுத்த தயாராக உள்ளனர். ஆனால் நாளிதழுக்கு செலவழிக்க தயாராக இல்லை. 1994லில் பிசினிஸ் லைன் செய்தித்தாளின் விலை நான்கு ரூபாய். இப்போது ஆறு ரூபாய். பணவீக்கத்தின்படி பார்த்தால் கூட ரூ.30 இருக்க வேண்டும். நாளிதழ்களின் விளம்பர வருமானம் குறைந்த விட்டது. தி வயர், மின்னம்பலம் போன்ற இணைய இதழ்களுக்கு கூட நிலையான வருமானம் இல்லை.
போபால் விஷ வாயு சம்பவம் நடந்த போது 500 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் ஒரே செய்தியை போட்டபோது, ரவிராய் என்ற பத்திரிகையாளர் பாதிக்கப்பட்ட போபாலின் அசோக் நகருக்குச் சென்று புகைப்படம் எடுத்த குழந்தை முகம் தான் இந்தியா டுடே அட்டைப் படமாக வந்தது. சண்டே அப்சர்வர் இதழில் ஆசிரியராக இருந்த வினோத் மேத்தா பம்பாய் ,பிலாவண்டியில் கலவரத்தின் போது, வழக்கமாக காவல்துறைக்குச் (police beat) செல்லும் பத்திரிகையாளரை அனுப்ப வேண்டாம். அவர்கள் காவல்துறை சொல்லுவதையே செய்தியாகத் தருவார்கள். தொடர்பில்லாத நபரை அனுப்புங்கள் என்றார். இப்படி செய்தியை தேடிச் சேகரிப்பது இப்போது குறைந்து விட்டது.
விவாத நேரத்தில் பதில் சொல்ல நேரம் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள். ஒருமுறை மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு முடிந்தவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல இஎம்எஸ். நம்பூதரிபாட் நான்கு நிமிடம் எடுத்துக் கொண்டார்.
காஷ்மீரில் இணைய சேவையை நிறுத்தியதை எதிர்த்து அனுராதா பாஷின் தொடர்ந்த வழக்கில் உங்கள் வாதம் நியாயமானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், நிவாரணம் வழங்க முடியாது. 370 பிரிவை நீக்கியதை எதிர்த்து காஷ்மீரின் நான்கு முன்னாள் முதல்வர்கள் தொடுத்த வழக்கு விசாரணைக்கே இன்னமும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. அப்படியானால், இணையக் கட்டுப்பாடுகளை எப்படி சாதாரண மனிதன் எதிர் கொள்ள முடியும்” என்றார் ஏ.எஸ்.பன்னீர் செல்வன். “ஜெய்பீம் படம் வந்தவுடன், அதில் சித்தரிக்கப்பட்ட நிஜ கதாநாயகியான செங்கேணியை ஒரு யூ டியூப் சேனல்தான் வெளி உலகுக்கு காட்டியது” என்றார் வரவேற்புரை நடத்திய ஜா.செழியன்.
Also read
“நான்கு நாளிதழ்கள், இரண்டு வார இதழ்கள், ஒருசில சிறு பத்திரிகைகளே 1990 வரை ஊடகங்களை கட்டுப்படுத்திய நிலையில் இணைய உலகம் ஜனநாயக வெளியை குரலற்றவர்களுக்கு காட்டியுள்ளது. இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால்” என்று முன்னதாக தனது தலைமை உரையில் குறிப்பிட்டார் சுகதேவ்.
தொடர்ந்து நடந்த கேள்வி அமர்வில் பார்ப்பனர் அல்லாதோரை அர்ச்சகர் பதவியிலிருந்து உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனை எதிர்த்து ஆழமான செய்தி கட்டுரைகள் வந்ததா? இணயைத்தினால் தான் அமெரிக்க அதிபராக டிரம்ப் ஆட்சிக்கு வந்தார். ஆனால், அந்த செய்திகளை பரப்பிய இளைஞர்கள் வருமானத்திற்காக செய்தார்கள். 1987 ல் போபார்ஸ் ஊழலைப் பற்றி இந்து இதழில் ராம் எழுதினார். அதனை எல்லா பத்திரிக்கைகளும் எடுத்து ஒரு பத்தியாவது எழுதின. ஆனால் 2017ல் ரபேல் விமான ஊழலை பத்திரிகைகள் முறையாக புலனாய்வு செய்து போடவில்லை. ஊடகங்கள் தொழில்நுட்பத்திற்கு தான் அதிகம் செலவழிக்கிறார்கள். ஆனால், செய்திக்கு செலவழிக்க மறுக்கிறார்கள்’’ என்றார்.
தொகுப்பு; பீட்டர் துரைராஜ்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் என்று சொல்லிக்கொள் பவைதான், ஊடக சுதந்திரத் தின் கழுத் தை நெறிக்கின்றன. Emergency கால கட்டத்தில் இருந்து இன்றுவரை அது தொடர்கிறது.
ச சபாரத்தினம்
கோவை
The so called journalism and journalist reached the bottom of the level in reporting news in india. We should have some corrective measures to protect our country by making suitable laws . We will welcome the move by the government of India.