அம்பலமானது! ஆர்.என். ரவியின் ஆர்.எஸ்.எஸ் பின்புலம்!

பேராசிரியர் ப.சிவகுமார்

ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்த பின்புலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உருவாக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி இயங்கி வருகிறார் என்பதை ஆங்கில இதழ் அம்பலப்படுத்தி உள்ளது. அந்த வகையில் சனாதன சித்தாந்தத்தை செயல்படுத்தி வரும் ரவிக்கு சட்டமன்றம் இன்று ‘செக்’ வைத்துள்ளது.

சனாதனக் கருத்துக்களை பரப்புதல், சாதாரண பொது ஜனங்களுக்கு எதிராக பேசுதல், செயல்படுதல்..ஆகியவற்றை செய்து சர்வ சதா காலமும் தமிழகத்தை பதட்டத்தில் வைத்துள்ளார் ஆளுனர் ஆர்.என்.ரவி! ஆன்லைன் சூதாட்டத்தை தடை  செய்ய நீதியரசர் சந்துரு போன்ற சட்ட வல்லமை மிக்கவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  சட்டத்தைக் கூட திருப்பி அனுப்புகிறார். எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் உள்ளன!  ஆனால், எதையும் அவர் பொருட்படுத்த தயாரில்லை.

எப்படியோ ஒரு வகையாக தற்போது ஆளுனரை எதிர்த்து செயல்படுவதற்கு ஒரளவேனும் தமிழக அரசு துணிந்துள்ளது! இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் கொண்டு வந்து  (ஏப்.10) நிறைவேற்றியுள்ளது திமுக அரசு.

ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தனித் தீர்மானத்தின் வாசகங்களே ரவியின் அத்துமீறல்களை அம்பலபடுத்தி உள்ளது;

நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில், ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்’’ என முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானத்தில் கூறியுள்ளார்.

நாம் ஆளுநர் ரவியின் மற்றொரு அரசியல் ரீதியான செயல்பாட்டை கவனிக்கிறோமா  எனத் தெரியவில்லை?

இதையும் சட்டமன்றத்தில் விவாதிப்பார்களா..? எனத் தெரியவில்லை?

குடிமைப் பணி ( IAS – IPS – IRS )  அலுவலர்களாக சேர பயிற்சி பெறும்/படிக்கும் மாணவர்களிடையே சில நாட்களுக்கு முன்பு  பேசியுள்ளார் ஆர் எஸ் எஸ் சித்தாந்த பின்புலம் உள்ள ஆளுநர் ரவி.

முதன்மைத் தேர்வு முடித்து நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார் ஆளுநர்.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் இந்த மாணவர்களிடம்  தமிழ்நாடு தொடர்பான பிரச்சினைகள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும் என்பது வழக்கமான ஒன்று.

ஜல்லிக்கட்டு பிரச்சினை, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை , ஸ்டெர்லைட், தேசிய கல்விக் கொள்கை, நீட், விவசாயிகள் பிரச்சினை , பரந்தூர்  விமான நிலைய பிரச்சினை தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உண்டு.

குடிமைப்பணி ஆர்வலர்களிடம் ஆளுநர் ரவி மாநில மக்களுக்கு எதிரான தன்னுடைய அரசியலை விதைக்கிறார்.

ஆளுநர் மாளிகையை அரசியல் களமாக்கி பேசும் ஆர்.என்.ரவி!

”நேர்முகத்தேர்வில் மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்சினை குறித்து கேட்கப்பட்டால், நீங்கள் ஒன்றிய அரசின் பக்கம் சார்ந்து பேச வேண்டும்” என பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி.

மேலும், இந்தி பற்றி கேள்வி கேட்கப்பட்டால் ” நேர்முகத் தேர்வாளர்க்கு திருப்தியளிக்கும் வகையிலான பதிலென்பது மிகுந்த எண்ணிக்கையில் மக்கள் பேசும் ஒரே மொழியாக இந்தி இருப்பதால் குடிமைப்பணியில் சேர்பவர்களுக்கு இந்திபற்றிய பயன் பாட்டறிவு தேவை என பதிலளிக்க வேண்டும்’’ என்கிறார்.

மத்திய  அரசை ஒன்றிய அரசு என திமுக அரசாங்கம் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் குறிப்பிடுவது குறித்து ஆளுநர் ரவி “ஒன்றிய அரசு என குறிப்பிடுவது அரசியல் ரீதியாக சிக்கலானது. உள்ளாட்சி நிர்வாகத்தில் கீழ் மட்ட அளவில் உள்ள நிர்வாக அமைப்பை குறிப்பிடவே ஒன்றியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சிறுமைபடுத்தும் நடவடிக்கை’’ என பேசியுள்ளார் ஆளுநர்.”

ஐ எஸ் அதிகாரிகளாக வரப் போகிற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி தன் அரசியல் சித்தாந்தப் பார்வையுடன் பேசியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ‘IAS பதவிக்கு ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும், ஆர்எஸ்எஸ் பார்வையுடன் இருக்க வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என சந்தேகம் எழுகிறது.

அதை உறுதிபடுத்தும் வகையில் டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் குறித்து விவரங்களை கேள்விப்படும்போது அதிர்ச்சியாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை அரசு நிர்வாகத்தில் திணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நிலையம்.

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் போன்ற குடிமைப் பணிக்கான பயிற்சி தரும் மைய மொன்றை டெல்லியில் ஆர்எஸ்எஸ் ‘சம்கல்ப்’ என்ற பெயரில் 1986 லிருந்து நடத்தி வருகிறது.  தற்போது இந்த நிறுவனத்திற்கு முக்கிய நகரங்களில் கிளைகளும் உள்ளன! இந்த ‘சங்கல்ப்’  நிறுவனம் குறித்து THE PRINT  இதழில் விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது. ( The Print 16/9/2020)

‘சம்கல்ப்’ நிறுவனத்தில் ஐஏஸ் முதன்மைத் தேர்வில் நேர்முகத்தேர்வுக்குப் பயிற்சி பெற்றவர்கள் பெரும் எண்ணிக்கையில்  ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அண்ணாமலையின் ஐ.பி.எஸ் தேர்வில் கூட, இந்த நிறுவனத்தின் பின்னணி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டாக 2020ஆம் ஆண்டு குடிமைப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 759 பேரில் 466 பேர் ஆர்எஸ்எஸ் நடத்தும் சங்கல்ப் நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். யு பி எஸ் சி குடிமைப் பணித்தேர்வில் ஆர்எஸ்எஸ்  ‘சம்கல்ப்’ நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று ஐஏஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது

2015ல்  1,236  பேரில் சங்கல்ப் மாணவர்கள் 670.

2016 ல் 1,078 பேரில் சங்கல்ப் மாணவர்கள் 648.

2017ல் 1,099 பேரில் சங்கல்ப் மாணவர்கள் 689.

2018ல் 990 பேரில் ஆர்எஸ்எஸ் நடத்தும் சங்கல்ப் நிறுவன மாணவர்கள் 649 பேர்.

சங்கல்ப் நிறுவனம் மூலமாக பயிற்சி பெற்றவர்கள் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெற முடியும்?

இந்த நிறுவனம் தங்கள் ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்திற்கு சுவாமி விவேகானந்தர் படத்தை பயன்படுத்துகின்றனர்.

The Print கட்டுரையைப் படிக்கும் போது, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள்  அரசாங்க நிர்வாகத்தின் உச்ச பதவிகளில் நுழைய ஒரு வாயிலாக ‘சம்கல்ப்’ பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது என்றே தோன்றுகிறது..

ஐஏஎஸ், ஐபிஎஸ் மட்டுமல்ல, துணைவேந்தர் நியமனங்கள் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் நியமனங்கள் எல்லாவற்றிலும் பாஜக தெளிவாக மத சித்தாந்தத்துடன் செயல்படுகிறது.

கல்விப் புலத்தை / நிர்வாக மையங்களை இலக்காக வைத்து, ஆர் எஸ் எஸ் செயல்படுவதை கவனிக்க வேண்டும். ஆளுநர் ரவி  ஐஏஎஸ் பணியில் ஆர்வமுடைய மாணவர்களிடம் உரையாடல் நடத்துவதன் பின்னணியில் உள்ள அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி மூளைச் சலவை செய்து, உயர் பதவிகளில் உட்கார வைக்கப்படுபவர்கள் மக்களின் பிரச்சினைகளின் யதார்தத்தையே புரிந்து கொள்ள முடியாத வறட்டு சித்தாந்தவாதியாக மக்களை அடக்கி ஆளவும், தண்டிக்கவுமே விரும்புவார்கள். உதாரணத்திற்கு பல்பிடுங்கி ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சிங்கை எடுத்துக் கொள்ளுங்கள்! இந்த மாதிரி ஆட்கள் பரவலாக அரசு நிர்வாகத்தில் வந்தால் நாடு என்னாவது?

கட்டுரையாளர்; ப.சிவகுமார்

பேராசிரியர், கல்விச் செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time