உண்மைகளை மறைத்து, பொய்களை பரப்புவதா கல்வி?

-ஹரி பரந்தாமன்

பள்ளி பாடங்களில் இருந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியை பற்றிய முக்கிய அம்சங்களையும், முகலாய மன்னர் ஆட்சி காலம் போன்ற ஏகப்பட்டவற்றையும் பாஜக அரசின் கீழுள்ள NCERT நீக்கியுள்ளது. இதன் பின்னணி என்ன? உண்மை வரலாற்றை மறைத்து, பொய் வரலாற்றை மாணவர்களுக்கு திணிக்கும் சதிகள் அரங்கேறுவதா..? 

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக மகாத்மா காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது, அவரது கொலையில் இந்து தீவிரவாதிகளின் தொடர்பு போன்றவை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன . அதிலும் காந்தி படுகொலையில் இந்து தீவிரவாதிகளுக்கு இருந்த தொடர்பை வெளிப்படுத்தும் பாடம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

‘மகாத்மா காந்தி மற்றும் தேசியவாத இயக்கம்’ என்ற பாடத்தில் நாதுராம் கோட்சேவை இந்து தீவிரவாத நாளிதழின் ஆசிரியர் என்ற குறிப்பு நீக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் மரணம் ஒரு அபாரமான விளைவை- மத நல்லிணக்கத்தை- உண்டாக்கியது என்பதும் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

‘மகாத்மா காந்தியின் படுகொலையை ஒட்டி ,மத துவேசத்தை பரப்பி வந்த மதவாத அமைப்புகளின் மேல் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்தது என்பதையும், ராஷ்டிரியா சுயம்சேவக் சங்கம் (RSS) அரசால் தடை செய்யப்பட்டது’ என்ற விவரத்தையும் பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.


மகாத்மா காந்தியை பற்றிய பல வரலாற்று செய்திகளை நீக்கியதுடன், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய விரிவான பாடத்தையும் நீக்கி உள்ளது. குஜராத் கலவரம் பற்றி இரண்டு பக்கங்கள் இருந்த பாடம் ,இப்பொழுது இரண்டு வரிகளில் சுருக்கப்பட்டு விட்டது. மொத்தத்தில் குற்றவுணர்ச்சி கொண்ட பாஜக அரசு வரலாற்றை மறைத்தும், திரித்தும் மாணவர்களுக்கு சொல்லப் பார்க்கிறது.

மதக் கலவரங்கள் நிகழ்வதை ஒட்டி தங்களின் பாதுகாப்பிற்காக சிறுபான்மையினர் ஒரே இடத்தில் நகரங்களில் குடியேறும் போக்கு நிகழ்கிறது என்பது பற்றிய விவரங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டது.

தலித் எழுத்தாளர் ஓம் பிரகாஷ் வால்மீகி பற்றிய விவரங்களையும் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கி உள்ளது.

முகலாயர்கள் இந்தியாவில் ஆண்டது பற்றிய விவரங்கள் சரித்திரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாட புத்தகத்தில் இருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகள்) இந்திய வரலாறு – பகுதி II) என்ற பாடம் வரலாற்று புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

12ம் வகுப்பு வரலாறு பாகம்-3 ல் நவீன இந்தியா குறித்த ‘Colonial Cities: Urbanisation, Planning and Architecture’ மற்றும் ‘Understanding Partition: Politics, Memories, Experiences’ ஆகிய 2 பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன

சுற்றுச்சூழல் பற்றிய பாடங்களிலும் பல பகுதிகளை நீக்கி உள்ளது. சுற்றுச்சூழலும் சமுதாயமும் என்ற பாடமே நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்பா பகுதியில் தண்ணீருக்கான தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதையும் , அதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை பற்றி பிரபல பத்திரிகையாளர் பி. சாய்நாத் அவர்கள் எழுதிய ஆய்வுகள் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல்வேறு நீக்கங்களை பாட புத்தகங்களில் செய்துள்ளது மேற் சொன்ன ஒன்றிய அரசின் பாடப் புத்தகங்கள் சம்பந்தமான சம்பந்தமான அமைப்பு.

இவ்வாறு நீக்கப்பட்ட விவரங்களை இந்த அமைப்பு வெளியிடாத செயல் தான் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் அதை தொடர்ந்து மற்றும் பல ஊடகங்களும் வெளியில் கொண்டு வந்ததை ஒட்டி எவ்வாறெல்லாம் பாடப் புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளது என்ற விபரம் உலகுக்குத் தெரிந்தது.

முகலாய மன்னர்களும், வரலாற்றுத் தடயங்களும்!

என்.சி.இ.ஆர்.டி. பாட நூல்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் நீக்கப்பட்டதற்கு ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், ஜெயதி கோஷ், பார்பரா டி மெட்காஃப் போன்ற இந்திய மற்றும் சர்வதேச புகழ்பெற்ற 250 வரலாற்று அறிஞர்கள் கூட்டறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர்;

வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து அத்தியாயங்கள் மற்றும் அறிக்கைகளை நீக்கும் என்.சி.இ.ஆர்.டி. முடிவைக் கண்டு நாங்கள் திகைத்துப் போயுள்ளோம். 12-ம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் ஒட்டுமொத்த பாகங்களும், மற்ற வகுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளையும் நீக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) செயல் மிகுந்த கவலையளிக்கிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையிலான கண்ணியை துண்டித்துவிட்டு, அந்த இடைவெளியை வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உள் நோக்கங்களுடன் பரப்பப்படும் சாதிய, வகுப்புவாத போலி வரலாறுகள் மூலம் இட்டு நிரப்ப சதி நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்திய துணைக்கண்டம் மற்றும் உலகளாவிய மனித வரலாற்றின் பன்முகத்தன்மையை முடிந்த வரையிலும் மாணவர்களுக்குக் கொடுக்கும் வகையில் இந்த பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. சில பாடப்பிரிவுகளை அல்லது பக்கங்களை நீக்குதல் என்பது கற்பவர்களிடம் இருந்து மதிப்பு வாய்ந்த உள்ளடக்கங்களை பறிப்பது மட்டுமின்றி, நிகழ்கால, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாரிக்கும் கற்பித்தலிலும் பிரச்னைக்குரியதாக மாறியுள்ளது.

தற்போதைய ஆளும் தரப்பின் சித்தாந்தத்துடன் ஒத்துப் போகாத பாடப்பிரிவுகளை என்.சி.இ.ஆர்.டி. நீக்கியிருப்பது, பள்ளிப் பாடப் புத்தகங்களைத் திருத்துவதன் மூலம் பிரிவினைவாத அரசியலை திணிக்கும் முயற்சியை காட்டுகிறது. இந்திய வரலாற்றை ஒருமுகத்தன்மை வாய்ந்த இந்து பாரம்பரியத்தின் நீட்சியாக தவறாகக் கருதும் தற்போதைய மத்திய அரசின் கருத்தியல் செயல்திட்டத்தின் பின்னணியில் என்.சி.இ.ஆர்.டி. செயல்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் சில பாகங்கள் நீக்கப்பட்டதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம். என்.இ.ஆர்.டி. முடிவு பிரிவினைவாத செயல் திட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த கலாச்சாரத்திற்கு எதிரான முடிவு என்பதால் அதை விரைவில் ரத்து செய்ய வேண்டும்’’ என அவர்கள் தெர்வித்துள்ளனர்.

ஒன்றிய அரசின் இந்த அமைப்பின் இயக்குனர், இந்த நீக்கம் பற்றி தகவல் வெளியிடாததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கதை அளக்கிறார்.

2014 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் , தங்கள் திட்டமான இந்து ராஷ்டிரத்தை நிறைவேற்றி வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதி தான் பாட புத்தகத்தில் திருத்தங்கள் செய்வது.

கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக அரசு, .ரோஹித் சக்கர தீர்த்தா தலைமையில் ஒரு குழுவை அமைத்து 2022-இல் பாடப்புத்தகங்களில் திப்பு சுல்தான், ஹைதர் அலி பாடங்களை நீக்கி பல்வேறு மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ‘இந்துராஸ்டர திட்டத்தை’ அடிப்படையாகக் கொண்டது. இதனை எதிர்த்து கடுமையான போராட்டங்களை அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பல அமைப்புகளும் நடத்தினர். இதனால் மாற்றங்களில் சில நிறுத்தி வைக்கப்பட்டன.

அவசர நிலை காலத்தில் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்ட சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை 2020 என்பதன் மூலம் ஒன்றிய அரசு தங்களின் ‘இந்துராஸ்டர கோட்பாட்டை’ திணிக்க பார்க்கிறது. மாநிலங்களுக்கான கல்வி சம்பந்தமான உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. மழலையர் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பாடத்திட்டங்களை தாங்கள் விரும்பும் முறையில் உண்டாக்கி, உண்மைக்கு புறம்பாக சரித்திரத்தை மறைக்கும் முறையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்கும் என்ற சட்டத்தை 2017 அதிமுக அரசு கொண்டு வந்தது. அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. பின்னர், 2021ல் திமுக அரசும் அதே போன்ற சட்டத்தை கொண்டு வந்தது. அதற்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. இதன் மூலம் நீட் தேர்வை தமிழக மாணவர்களின் தலையில் கட்டாயமாக சுமத்தியுள்ளது ஒன்றிய அரசு. மட்டுமன்றி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒற்றை தேர்வு- CUET- என்ற முறையை கொண்டு வந்துள்ளது பல்கலைக்கழகம் மானிய குழு. அதுவும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு.

மேற்சொன்ன மோடி அரசின் நடவடிக்கைகள் ஒரு பாசிச கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது. குறிப்பாக பாசிசம் கல்வியை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். மேலும் பாசிசத்திற்கு ஏற்றது போல கல்வியை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும். அந்த வேலைகளை தீவிரமாக செய்து கொண்டுள்ளது மோடி அரசு. இதை கடுமையாக எதிர்க்க தவறினால் ஜெர்மனியில் ஹிட்லரும் இத்தாலியில் முசோலினியும் செய்த பாசிச படுகொலையை இந்த நாடு எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும் என்றே நினைக்கிறேன்.

கட்டுரையாளர்;ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time