மேடை நாடகங்கள் மிக உயிர்ப்பானவை!

-ம.வி.ராசதுரை

லாபம் எதிர்பார்க்கலை. கலை வெளிப்பாட்டிற்கான வாய்ப்பும், மக்களின் கைதட்டல்களும் போதுமானவை! ஜனங்க முன்னால் நடிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் தான் எங்களையும், நாடகக் கலையையும் உயிர்ப்போடு வைத்துள்ளன! பொன்னியின் செல்வன் நாடகத்தை கட்டணமின்றி காணலாம்!

எண்ணற்ற தொலைகாட்சித் தொடர்கள், ஏசி மால்களில் சினிமா, யூ டியூப் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்திலும் மேடை நாடகங்களை விடாமல் நடத்தி வரும் கலைஞர்களுக்கும் பஞ்சமில்லை என்பது வியக்க வைக்கிறது! பொன்னியின் செல்வன் நாடகம் சென்னையில் ஏப்ரல் 16 அன்று மீண்டும் அரங்கேற உள்ளது. பார்வையாளர் கட்டணமின்றி அனைவரையும் அழைக்கிறார், தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆடுதுறை பாஸ்கர்.!!

மணிரத்தினம் இயக்கத்தில்  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

ராஜராஜ சோழனின் இளமைக்கால வாழ்க்கையை கற்பனை கலந்து, பொன்னியின் செல்வன் நாவலாக படைத்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா  இடம் பெறச் செய்து விட்டார் அமரர் கல்கி.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாத கடைசியில் வெளியாக உள்ள சூழலில், பொன்னியின் செல்வன் நாடகத்தை வருகிற  ஏப்ரல் 16 அன்று சென்னை நாரதகான சபாவில் அரங்கேற்றம் செய்ய முடிவு செய்துள்ளது  ஆடுதுறை பாஸ்கர் தலைமையிலான ஸ்ரீ சங்கரநாராயண சபா.

இது பற்றிப் பேசுவதற்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் அவரை சந்தித்தோம்.

அவர் முன்னிலையில் பொன்னியின் செல்வன் நாடகத்தின் ஒத்திகை காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அதைத் தொடர்ந்து, நம்முடைய “அறம் “இதழுக்கு அவர் அளித்த பேட்டி:

“சிறந்த நாடகக் குழு என்று தமிழ்நாடு அரசின் விருது பெற்ற ஆடுதுறை ஸ்ரீ சங்கரநாராயண சபா தற்போது 103 வது ஆண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாடகக் கலைத்துறையில் பயணித்து வரும் நான் இப்போது இதன் தலைவராக உள்ளேன்.

நாங்க 25 பேர் கொண்ட நண்பர்கள் குழு நாடகத்தின் மீது தீரா காதல் கொண்டவர்கள். ஒவ்வொருத்தரும் வாழ்வாதரத்திற்கு ஒரு தொழிலை செய்கிறோம். ஆனாலும், சளைக்காமல் வருடத்திற்கு எட்டு முதல் பத்து நாடகங்களை நடத்திவிடுவோம்.

நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன்பு அட்டகாசமாக நாடகங்களை நடத்தி வந்த குழுக்கள் பல காணாமல் போய்விட்டன. காரணம், அன்னிக்கு இருந்த வரவேற்பு இன்றைக்கு நாடகங்களுக்கு இல்லை என்றாலும், அடுத்தடுத்த தலைமுறையினரையும் நடிக்க வைக்கவும், பார்க்க வைக்கவுமே, நாடகக் கலையை அழியாமல் எடுத்துச் செல்ல விரும்புகிறோம்.

தமிழக அரசின் “கலைச் செல்வம் “விருது பெற்ற டாக்டர் சாம்பசிவம் என்கிற  சாம்பு, நாங்க போடுகின்ற பொன்னியின் செல்வன் உள்ளிட்ட அனைத்து நாடகங்களையும் எழுதியவர். இவரும், இந்த சபாவின் முன்னாள் நிர்வாகி எஸ். பி. சாமி,” ரீ ரெக்கார்டிங்” தொழில்நுட்ப ஜாம்பவான் ஆர். கல்யாணசுந்தரம் ஆகியோரும் இத்துறையில் என்னுடைய குருநாதர்கள் ஆவர்.

பொன்னியின் செல்வன் நாடகத்தை தமிழ்நாட்டின் பெருநகரங்களான மதுரை,கோவை, திருச்சி, ஈரோடு மட்டுமின்றி கும்பகோணம், ஆத்தூர், பெங்களூர் போன்ற பல இடங்களிலும் அரங்கேற்றம் செய்து விட்டோம். இதோடு, ராஜேந்திர சோழன், சாண்டில்யனின் “கடல் புறா ” உள்ளிட்ட வரலாற்று, சமூக  நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் நாடகக் கலை நலிவுற்றுவரும் இந்த சூழலில், பொன்னியின் செல்வனுக்கு ஏற்பட்டுள்ள பெரும் வரவேற்பை பயன்படுத்தி , இந்நாடக நிகழ்வை தமிழ் இயல் இசை நாடகத்தை வளர்க்கும் முத்தமிழ் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக நடத்த முடிவு செய்தோம்.

சென்னையின் மிகப்பெரிய நாடக அரங்குகளில் ஒன்று நாரத கான சபா. இங்கு 1100 இருக்கைகள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை! அந்த எண்ணிக்கையும்  தாண்டி வருவோருக்கு சில நாற்காலிகள் போட்டு அமர வைக்க இருக்கிறோம்.

இந்த நாடகத்தில் 35 நடிகர்கள், 25 டெக்னிஷியன்கள் பணியாற்றுகிறோம். செட்டிங்ஸ் மட்டுமே 24 உள்ளன! மாலை 6 மணி அளவில்,ராஜ் விஷுவல் ஆர்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் பொன்னியின் செல்வன் நாடகம் தொடங்குகிறது. முன்னதாக மூன்று மணி அளவில் இருந்தே, தமிழ் இயல் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அறிஞர்கள் உரை , கவியரங்கு, தமிழிசை ,நாட்டுப்புற பாடல்கள், கரகம், பொய்க்கால் குதிரை, பறையாட்டம், மல்லர் கம்பம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆகிய  தமிழ் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சிறப்பு அழைப்பாளர்களாக சில முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாடகக் கலையை புதிய இளம் தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காகவே கட்டணம் வசூலிக்கவில்லை. விருப்பப் படுபவர்கள் தரும் நன்கொடைகளை பெற்று இயங்குகிறோம். தமிழ் நாடகக் கலையை வளர்க்கும் நோக்கத்துடன் தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், சிட்டி யூனியன் வங்கி, கும்பகோணம், தமிழர் வணிக அமைப்புகள் மற்றும் நல் உள்ளங்களுக்கு எங்களின் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மையில் எங்கள் நாடகத்தைப் பார்த்த  கவிஞர் வைரமுத்து, “தொடர்ந்து மூன்று மணி நேரம் தூய தமிழ் சொற்களைக் கேட்டு இன்புற்றேன்” என்றார்.

இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் தொடர்ந்து எங்கள் நாங்கள் நாடங்களை பார்த்து பாராட்டி வருகிறார். இது போன்ற ஊக்கத்தை தமிழக மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடகங்கள் அரங்கு நிறைந்து நடைபெறும் போது, அந்தக் கலை வளர்ந்து புதிய பரிமாணம் பெறும். அத்தகைய சூழலை உருவாக்கித் தரும்படி தமிழக மக்களை சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குனர் ஆடுதுறை பாஸ்கர்

தற்போது, கல்லூரி மாணவ மாணவியர், ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் இளம்பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து எங்க நாடகத்தில் நடிக்கின்றனர். முன்பு சிவசங்கர் என்பவர் எங்களுக்கு நிறைய உதவி வந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. எனினும், எங்களுடன் இணைந்து கலை வளர்க்க தொடர்ந்து பங்களிப்பு செய்து வரும் லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன், புதுவை ஸ்டெல்லா , அருணா கலைமணி, ராணி மனோகரன், தம்பி பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டம் நாடகக் கலைஞர்களை சொல்ல முடியாத துயர நிலைக்கு இட்டுச் சென்றது. கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் சங்கமம் என்ற நிகழ்வை தமிழக அரசு ஏற்பாடு செய்து, கலைஞர்களுக்கு  ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பேராதரவையும் அளித்தது.

மொத்தம் 42 கலை குழுக்களுக்கு குழு ஒன்றுக்கு ஒரு பேருந்து ஒதுக்கிக் கொடுத்து தங்குவதற்கு இடம் கொடுத்து ,அறுசுவை உணவு வழங்கி பேராதரவு நல்கி தமிழக அரசு சிறப்பித்தது. நாங்கள் சென்னையில் எட்டு இடங்களில் சாண்டில்யனின் “கடல்புறா “நாடகத்தை அரங்கேற்றி மகிழ்ந்தோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இதை கண்டு களித்தனர். எங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த கலைஞர்கள் மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைந்தது போல 42 கலைக்குழுவினரும் இன்புற்றனர்‌.

வருங்காலத்தில் சங்கம கலை நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நலிவுற்ற கலைஞர்கள் உத்வேகம் பெறப்போவது உறுதி.

தமிழக அரசு சினிமாவுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. அதேபோல நாடகத்துக்கும் நாடக கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கி ஊக்கம் அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் ஆடுதுறை பாஸ்கர்.

நேர்காணல் :ம.வி.ராசதுரை

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time